புனைவும் வாழ்வும்

நன்றி: புதிய தலைமுறை, 14 ஜூன் 2018

தங்களின் சுயசரிதையைத்தான் ஸீரோ டிகிரி முதல் எக்ஸைல் வரை எழுதியிருக்கிறீர்கள். கோணல் பக்கங்கள் மாதிரியான கட்டுரைப் புத்தகங்களிலும் அப்பட்டமாக உதிரி உதிரியாக உங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். காந்தியின் சத்திய சோதனை மாதிரி உங்கள் சுயசரிதையை நேரடியாகவே எழுதினால் என்ன?

யாழினி பார்வதம், சென்னை

ஓர் எழுத்தாளர் தன் வாழ்வையம் புனைவையும் கலந்ததான் எழுத முடியும். இதை நான் மட்டுமே முதல் முதலாகச் செய்யவில்லை. நமது முன்னோடிகளான க.நா.சு., சி.சு. செல்லப்பா, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற பலரும் தங்கள் வாழ்வையும் புனைவையும் கலந்துதான் எழுதினார்கள். தி. ஜானகிராமனின் எழுத்தில் சுயசரிதத் தன்மை அதிகம் உண்டு என்று கருதுகிறேன். அதன் காரணமாக அவரது குடும்பத்தாரால் இளம் வயதில் பல இன்னல்களுக்கு ஆட்பட்டிருக்கிறார் தி.ஜா., என்று அவர் காலத்து எழுத்தாளர்கள் மூலம் அறிகிறோம். ஆனால், தன் வாழ்வை புனைவு கலந்து எழுதுவது மட்டுமே சுயசரிதை எழுதுவதற்கான தகுதியாகி விடாது.

சுயசரிதை எழுதுவதற்கு ஒரு சாகசமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும் அல்லது கோடிக் கணக்கான மக்களைத் தன் திறமையின் மூலம் ஈர்த்திருக்க வேண்டும். என்னைக் கேட்டால் சமூகத்தின் மிக அடித்தளத்தில் இருந்து ஊர் அறிந்த நடிகர்களாக மாறியவர்கள் சுயசரிதை எழுதலாம். ஆனால், அவர்களால் எழுத முடியாது. ஏனென்றால், நம்முடைய வாழ்க்கை என்பது நம்மோடு முடிந்து விடுவது இல்லையே? மற்றவர்களின் வாழ்க்கையும் அதில் இணைந்திருக்கிறதே? அப்படி எழுதினால் மற்றவர்களின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் சொல்லி விடுவதாகுமே? எனவே, என்னைப் பொறுத்தவரை புனைவும் வாழ்வும் கலந்த எழுத்தே போதும்.