இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு

நேற்று ரெய்ன் ட்ரீ மொட்டை மாடியில் சில நண்பர்களுடன் அரட்டை.  அப்போது ஒரு நண்பர் ஜெயமோகனின் வெண்முரசு தனக்குப் பிடித்தமான படைப்பு என்று சொன்ன போது அதிர்ச்சி அடைந்தேன்.  ஏனென்றால், அவர் பின்நவீனத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்.  விளிம்பு நிலைப் பகுதி பற்றி எந்த வித ‘இலக்கியப்’ பூச்சுகளும் இல்லாமல் எழுதுபவர்.  விளிம்பு நிலை மாந்தர் பற்றி எக்கச்சக்கமான ரொமாண்டிக் ஜிகினாக்களுடன் எழுதிய ஆள் ஜி. நாகராஜன் என்று மதிப்பீடு செய்கிறேன்.  அந்த அர்த்தத்தில் இதைச் சொல்கிறேன்.  நண்பரிடம் அவ்வித பூச்சுகள் எதுவும் இல்லை.  அப்படிப்பட்டவர் வெண்முரசு பற்றி அவ்வாறு சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் என்பது வெறும் ஒரு எழுத்து முறை அல்ல; அது நவீனத்துவத்தையே ஒட்டு மொத்தமாக அழித்து இலக்கியத்தை 200 ஆண்டுகளுக்குப் பின்னே கொண்டு செல்லும் பிற்போக்குத்தனம் என்று என் முந்தைய குறிப்பில் எழுதியிருந்தேன் அல்லவா?  அதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.  சமீபத்தில் ஒரு தலித் எழுத்தாளரின் நாவல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது.  மிகவும் பிரபலமானவர்.  அவர் பெயர் இங்கே தேவையில்லை.  அனாவசியமாக எதைப் பற்றியும் எதிர்மறையாக எழுதுவதை நிறுத்தி விட்டேன்.  அந்த நாவலை என்னால் பத்து பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை.  ஏனென்றால், விளிம்பு நிலை மனிதர் பற்றி கோணங்கி ஸ்டைலில் எழுதியிருந்தார் அவர்.  அந்த நாவலை ஜெயமோகனும் கோணங்கியும் வெகுவாக சிலாகித்திருந்தனர்.  ஆனால் என்னால் பத்து பக்கத்தைத் தாண்ட முடியவில்லை.  விளிம்பு நிலை மனிதருக்குப் பூணூல் மாட்டி விடும் வேலை அது.  விளிம்பு நிலை மனிதரின் வாழ்வை கோணங்கியின் கவித்துவ மொழியில் எழுதுவது தலித் கலாச்சாரத்தை முற்றாக அழித்து அவர்களின் மீது பிராமண அழகியலைத் திணித்தல்.  தென்னமெரிக்கப் பூர்வகுடிகளின் மொழியை, கலாச்சாரத்தை, கடவுளை அழித்து அவர்களை ஐரோப்பியராக மாற்றினர் ஐரோப்பியர்.  பூர்வகுடிகளின் ஆயிரக் கணக்கான மொழிகளும் ஆயிரக் கணக்கான வழிபாட்டு முறைகளும் கலாச்சாரமும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டு அவர்களுக்கு சிலுவையும் ஸ்பானிஷும் போர்த்துகீசும் கொடுக்கப்பட்டது.  அதேதான் ஜெயமோகனின் நூறு சிம்மாசனங்கள் கதையிலும் நடந்தது.  அதனால்தான் அந்தக் கதை இந்துத்துவ அஜெண்டா என்றேன்.  மேலே குறிப்பிட்ட தலித் எழுத்தாளரின் நாவலிலும் அதேதான் நடந்தது.

விளிம்பு நிலை மாந்தரின் வாழ்வு அவர்களின் மொழியிலே தான் சொல்லப்பட வேண்டும்.  அப்படிச் சொல்லும் நாவல் தமிழ்ப் பிரபாவின் பேட்டை என்று நினைக்கிறேன்.  படித்துக் கொண்டிருக்கிறேன்.  படித்த வரை மிகவும் பிடித்திருந்தது.  படித்து முடித்து விட்டு அது பற்றி விரிவாக எழுதுவேன். அந்த நாவல் இலக்கியத்தில் சேராது என ஜெ. எழுதியிருப்பதாக அறிந்தேன்.  அதனால்தான் தைரியமாக அதைப் படிக்க எடுத்தேன்.  நம்பிக்கை வீண் போகவில்லை.  நாவல் நன்றாகவே போகிறது.