24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி? 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித்து வருகிறேன். அதில் மூன்று சின்ன குட்டி. நேற்று இரவு உணவு போட மறந்து போனேன். காலையில் எழுந்து வாக்கிங் கிளம்பின போது எட்டு பூனைகளும் என் கால்களைச் சுற்றிக் கொண்டன. வீட்டைப் பூட்டி சாவியை உள்ளே எறிந்து விட்டேன். மணி அப்போது ஆறு. எக்காரணம் கொண்டும் அவந்திகாவை உறக்கத்திலிருந்து எழுப்ப முடியாது. அவள் தினமுமே இரண்டு மணிக்குப் படுத்து எட்டுக்கு எழுந்து கொள்பவள். என் இதயம் நொறுங்கி விட்டது. நான் திரும்பி வந்து ஒன்பது மணிக்கே உணவு அளித்தேன்.
எழுதுவதும் பிழை திருத்தம் செய்வதும் செக்கிழுப்பது போன்ற கடின வேலைகள். இத்தனை பிரச்சினையையும் தீர்க்கக் கூடிய மாமருந்தாக என் வாழ்வில் இருந்தவை இரண்டு. இப்போது இரண்டும் என்னை வீட்டு அகன்று விட்டதால் சமயங்களில் மண்டை பிளந்து விடுவதைப் போல் – மூளைக்குள் பத்து இருபது பூச்சிகள் புகுந்து விட்டது போல் தெறிக்கும். தலை வலி அல்ல. உள்ளே ஆத்மாவுக்குள் குடையும். பைத்தியம் பிடித்து விடுவது போல் இருக்கும்.
அப்போது எனக்கு ஆறுதல் தரும் மூன்றாவது ஒன்றைக் கண்டு பிடித்தேன். முன்பு இருந்த மருந்துகளைப் போன்றது அல்ல இது. ஆனாலும் ஓரளவுக்கு நிவாரணம் தரும். அது நெட்ஃப்ளிக்ஸில் த்ரில்லர்களைப் பார்ப்பது. அடிக்ட் ஆகிப் பார்த்தது game of thrones, breaking bad போன்றவை. Fauda, Lost எல்லாம் பத்து எபிஸோடிலேயே சலிப்பூட்ட ஆரம்பித்து விடும். ஆனால் நேற்றிலிருந்து பார்க்க ஆரம்பித்திருக்கும் Sacred Stories-க்கு ஈடு இணை இல்லை. அனுராக் காஷ்யப். நவாஸுத்தீன் சித்திக். வெறும் த்ரில்லர் மட்டும் இல்லை. இன்றைய இந்தியாவின் அரசியல் வரலாறும் உண்டு. அரசியல் வரலாறு என்றால் மோடியைத் திட்டுவது மட்டுமே இல்லை. ராஜீவ் காந்தியை ஒரு இடத்தில் pussy என்று திட்டுகிறார் நவாஸுத்தீன். கதை சொல்லி அவர் தான்.
ராதிகா ஆப்தே முக்கியப் பாத்திரம். ஆனால் அந்தக் காலத்து விஜயகுமாரி மாதிரி இருக்கிறார். கழுத்தையும் முகத்தையும் தவிர வேறு எதுவும் ம்ஹும். RAW அதிகாரி. ஆனாலும் மற்ற பெண்களோடு நவாஸுத்தீன் கொட்டம் அடிக்கிறார். நேரடியான உடலுறவுக் காட்சிகளும் உண்டு என்பதால் குடும்பத்தோடு பார்க்க முடியாது. நெட்ஃப்ளிக்ஸில் சென்ஸார் கிடையாது போல. யாராவது ஸ்பான்ஸர் செய்தால் என்னிடம் இப்படிப் பல கதைகள் உள்ளன. நான் மும்பையில் இருந்திருக்க வேண்டும்.
பின்குறிப்பு: இந்த சீரியல் பற்றி பிரபு என்னிடம் சொல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது.