உடல் நலம்

அலோபதி மருத்துவத்துக்கு நான் எதிரி அல்ல.  இந்தக் காலகட்டத்தின் மோசமான வாழ்க்கை முறையினால் ஏற்படும் மிகப் பல நோய்களுக்கு அலோபதியே சரியான, உடனடியான தீர்வை அளிக்கிறது.  என் நண்பர் ஒருவருக்கு மயக்கம் வந்தது.  சோதனை செய்ததில் சர்க்கரை அளவு எண்ணூறோ ஆயிரமோ போய் விட்டது.  கொஞ்சம் தாமதித்திருந்தால் கோமாவுக்குப் போயிருப்பார்.  உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து மூன்றே தினங்களில் சரியான அளவுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.  இது அலோபதியால் மட்டுமே சாத்தியம்.

ஆனால் எல்லா உடல் பிரச்சினைகளுக்கும் அலோபதி தீர்வு அல்ல.  உதாரணமாக, ஜலதோஷம், உடல் வலி, மூலம்.  ஒரு நண்பருக்குத் தோலில் அரிப்பு.  சாதாரண அரிப்பு அல்ல.  சொறிந்து சொறிந்து தோலிலிருந்து ரத்தம் வரும்.  தூங்கவும் முடியாது.  சொறிந்த இடமெல்லாம் தடித்துப் போய் விடும்.  எந்த அலோபதி மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை.  பல தோல் நிபுணர்களைப் பார்த்தார்.

எனக்குத் தெரிந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரின் போன் நம்பரைக் கொடுத்து மருத்துவரிடமும் இன்னார் என் நண்பர் பேசுவார் என்று சொன்னேன்.  நண்பர் தன் உடம்பில் அரிப்பு வந்த பகுதிகளைப் படம் எடுத்து வாட்ஸப்பில் அனுப்பினார்.  காரணம், மருத்துவர் நாகர்கோவிலில் இருக்கிறார்.  பிறகு நண்பருக்கு மருந்து எழுதிக் கொடுத்தார்.  நானும் அத்தோடு அதை மறந்து விட்டேன்.  பிறகு ஒரு ஆறு மாதம் கழித்து அந்த மருத்துவரோடு பேசிய போது உங்கள் நண்பருக்கு சரியாகி விட்டதா என்று கேட்டார்.  ஆஹா, அப்போதுதான் அந்த விஷயமே எனக்கு ஞாபகம் வந்தது.  நண்பரைத் தொடர்பு கொண்டேன்.  அவர் சொன்னார்.  மருந்து எடுத்துக் கொண்ட ஒரே மாதத்தில் அரிப்பு 75 சதவிகிதம் குறைந்தது.  இரண்டாவது மாதம்.  முழுசும் போய் விட்டது.  ஆஹா, இதை நீங்கள் என்னிடமும் மருத்துவரிடமும் சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்க நினைத்தேன்.  நெருங்கிய நண்பர்.  கேட்கவில்லை.

ஒரு பார்க் நண்பர்.  காலில் ஆணி.  நடக்கவே முடியவில்லை.   நடைப் பயிற்சியில் தீவிர ஆர்வம் உள்ளவர்.  அந்த நாகர்கோவில் மருத்துவரையே தொடர்பு கொண்டேன்.  மருந்து கொடுத்தார்.  நான் அத்தோடு அதை மறந்தேன்.  பிறகு சில மாதங்கள் கழித்து மருத்துவரோடு பேசிய போது உங்கள் நண்பருக்குக் கால் ஆணி சரியாகி விட்டதா என்று கேட்டார்.  ஆஹா, மறந்தேன், கேட்கிறேன் என்றேன்.  மறுநாளே நண்பரின் காலரைப் பிடித்துக் கேட்டேன். ஒரே மாதத்தில் சரியாகி விட்டதே என்றார்.  சொல்ல வேண்டாமா அதை என்று நண்பரைக் கடிந்து கொண்டேன்.

இதுதான் மனித இயல்பு.

விஷயத்துக்கு வருகிறேன்.  அந்த மருத்துவர் பெயர் சுப்ரஜா.  ஆயுர்வேதத்தில் எம்பிபிஸ்ஸுக்கு சமமான BAMS முடித்து, அதற்கு மேல் எம்.டி.யும் முடித்தவர்.  தோல் வியாதி பற்றிப் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல மருத்துவ சஞ்சிகைகளில் அவர் ஆய்வுகள் வெளிவந்துள்ளன.  அதை விட முக்கியமான விபரம், இவரைத் தேடி கேரளத்திலிருந்தெல்லாம் வருகிறார்கள்.  மருத்துவத்தை ஒரு மானுட சேவையைப் போல் செய்து கொண்டிருக்கும் இவரது மருத்துவ அறிவைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  ஒரு நண்பர் தூக்கமே வராமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.  டாக்டர் சுப்ரஜாவை அணுகினேன்.  அதற்கும் ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து.  இப்போது செம தூக்கம் போடுகிறார் நண்பர்.   இதுவே அலோபதி தூக்க மாத்திரை என்றால் ஏராளமான பக்க விளைவுகள்.  ஒன்றைச் சரி செய்தால் ஒன்பது உறுப்பு கோளாறாகி விடும்.  ஆயுர்வேதத்தில் அப்படி நடக்காது.

மானுட சேவை என்ற வார்த்தையைப் பார்த்ததும் ஆஹா இலவசமா என்று கேட்காதீர்கள்.  பல மருத்துவர்கள் ஆயிரக் கணக்கில் வாங்குகிறார்கள்.  என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஆள் (Allopathy) நாடி பார்க்க 800 வாங்குகிறார்.  டாக்டர் சுப்ரஜா அப்படிப்பட்டவர் இல்லை என்பதற்காகச் சொல்ல வந்தேன்.  எதையும் இலவசமாகப் பெறாதீர்கள்.  அதிலும் உங்கள் தேக ஆரோக்கியம் சம்பந்தமானவற்றை.

தொடர்புக்கு:

Dr Supraja BAMS MD

5th Veda Ayurveda Clinic

42/1,Eshankan Vilai,

Parakkai Road Junction

Kottar,Nagercoil-629002

MOBILE : 8870687134

Consulting hours 4.30 to 8.00 pm

 

MOBILE consulting for outstation people