பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 3 முன்வெளியீட்டுத் திட்டம்

பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 3 முன்வெளியீட்டுத் திட்டத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் hard bound அட்டையில் புத்தகம் கிடைக்கும். Hard bound அட்டை போட்ட புத்தகத்தின் விலை 550 ரூ. கூட போகலாம். அது பதிப்பகத்தின் கையில் இல்லை; அச்சகத்தின் கையில் உள்ளது. சாதா அட்டை போட்ட நூல் 350 ரூ. முன்பதிவு செய்ய 250 ரூ அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை தான் முன்பதிவு செய்ய முடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை காமெண்ட் பகுதியில் கொடுத்திருக்கிறேன்.

தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க வேண்டும் என்றால் மகா பாவம் பண்ணியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த இழிவும் அவலமும் சாத்தியமே இல்லை. பக்கத்து மாநிலத்தைப் பாருங்கள். கேரளத்தில் ஒரு எழுத்தாளருக்கு மாநில அரசு ஒரு பரிசு கொடுத்தது. உடனே முதலமைச்சர் என்ன பண்ணினார்? அந்த எழுத்தாளர் வசிக்கும் ஊருக்குப் போனார். போன உடனேயும் பார்க்க முடியவில்லை. எழுத்தாளரின் வீட்டு முன்னே நீண்ட வரிசை. முதல்வரும் அந்த வரிசையில் நிற்கிறார். அவருடைய முறை வந்ததும் விருதை எழுத்தாளரிடம் கொடுக்கிறார். தமிழ்நாட்டில் எழுத்தாளருக்கு மரியாதையே இல்லை என்று எழுதினால், ‘ஏன், யானையில் வைத்து ஊர்வலம் விட வேண்டுமா?’ என்று கேட்கிறார்கள். அதெல்லாம் வேண்டாம். ஒரு தேசத்தின் மனசாட்சி எழுத்தாளன்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், அது போதும்.

கேரளத்தை விடுங்கள். கர்நாடகத்தை எடுத்துக்கொள்வோம். எந்தக் கன்னடியரிடம் பேசினாலும் எஸ்.எல். பைரப்பாவின் பர்வம் என்ற நாவலைப் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்கிறார்கள். பர்வம் என்பது மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். இந்த பைரப்பா சமீபத்தில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாவல். பெயர் உத்தர காண்டம். சென்ற வாரம் வெளியான அந்த நாவலை வெளியான அன்றே வாங்க கர்னாடகா முழுவதும் புத்தகக் கடைகளில் நீண்ட வரிசை. முதல் பதிப்பு ஒரு பத்தாயிரம் பிரதி போட்டிருக்கலாம். சில மணி நேரங்களிலேயே அத்தனையும் விற்றுத் தீர்ந்துவிட்டதால் அன்றைய தினமே இரண்டாம் பதிப்பை அச்சடிக்க ஆரம்பித்தார்கள். மறுநாளே இரண்டாம் பதிப்பு வெளிவந்து அதுவும் விற்றுத் தீர்ந்தது. உடனே மூன்றாம் பதிப்பு. மறுநாள் அதுவும் காலி. மூன்றே தினங்களில் மூன்று பதிப்பு.

பைரப்பா என்று அல்ல; எல்லா கன்னட எழுத்தாளர்களுக்குமே இந்த மரியாதைதான். யூ.ஆர். அனந்தமூர்த்தி தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அளவுக்குக் கர்னாடகத்தில் பிரபலம். அவர் ஒரு வார்த்தை சொன்னால் மறுநாள் அது பத்திரிகையில் தலைப்புச் செய்தி. அதை விடுங்கள், அவர் சொல்வதை சென்னையில் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் கூட முதல் பக்கத்தில் வெளியிட்டன. அவர் இறந்த போது ஒரு நாள் அரசு விடுமுறை அறிவித்தது கர்னாடக அரசு. மட்டுமல்லாமல், ஒரு வார காலம் மொத்த மாநிலமே துக்கம் அனுஷ்டித்தது. கொண்டாடுவது மட்டும் அல்ல; தாக்குவதாக இருந்தாலும் எழுத்தாளர் மீதுதான் முதல் அடி விழுகிறது. உதாரணமாக, 2015 ஆகஸ்ட் 30 அன்று கால்புர்கி துப்பாக்கியால் அவர் வீட்டிலேயே கொல்லப்பட்டார். காரணம், கடவுள் இல்லை என்று சொன்னதோடு மட்டும் அல்ல; சிறுவயதில் கடவுள் சிலைகளின் மீது சிறுநீர் கழித்ததை விவரமாக எழுதினார். அவரைத் தொடர்ந்து கே.எஸ். பகவான் என்ற எழுத்தாளருக்கும் கொலை மிரட்டல் வந்தது. சுருக்கமாக இதுதான்:

தமிழ்நாட்டைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எழுத்தாளர்கள்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். பாராட்டப்படுவதும் அவர்கள்தான்; தாக்கப்படுவதும் அவர்கள்தான்.
ஆனால் தமிழ்நாட்டில்?
பொதுமக்களுக்குப் பொழுதுபோக்கை வழங்கிக்கொண்டிருக்கும் கேளிக்கையாளர்கள்தான் – அதாவது சினிமாக்காரர்கள்தான் – எப்போதும் எந்த நேரத்திலும் எந்தப் போராட்டத்திலும் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு ஊடகங்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. மக்கள் யாரைக் கொண்டாடுகிறார்களோ, மக்களுக்கு யாரை அடையாளம் தெரிகிறதோ அவர்களைத்தான் ஊடகங்கள் முன்னிலைப்படுத்தும்.

மேலே உள்ளவற்றை நாடோடியின் நாட்குறிப்புகளில் எழுதியிருக்கிறேன். இந்த நிலையை என் வாசகர்களாவது மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. வட்டம் ரொம்பவும் பெரியது. இன்றைக்கும் 2500 பேர் அமரக் கூடிய காமராஜர் அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடத்தினால் அரங்கம் நிரம்பி விடக் கூடிய நிலையில்தான் இருக்கிறேன். இதற்காக சூப்பர் ஸ்டார்களையெல்லாம் அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

முகநூலிலும் 29000 பேர் என் எழுத்தைப் படிக்கிறார்கள். சாருஆன்லைனைப் படிப்போர் எண்ணிக்கை 60,000 பேர். ஆனாலும் முன்வெளியீட்டுத் திட்டம் என்று போட்டால் 200 பேர் தான் பணம் அனுப்பிப் பதிவு செய்கிறார்கள். அதிலும் விலை 250 ரூபாய்தான். அதுவும் என் வாழ்நாளின் மிக முக்கியமான புத்தகம் என்கிறேன். ஆனாலும் கொள்வார் இல்லை. பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்துக்கு 500 பேர் முன்பதிவு செய்தால் நூலின் அட்டையை hard bound-இல் கொண்டு வரலாம் என்று எழுதினேன். அதற்கு ஒரு பத்து பேர் முன்பதிவு செய்திருந்தார்கள். ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டால் கொடுக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதே தொகையை என் புத்தகம் வாங்க செலவு செய்யுங்கள் என்றால் ம்ஹும், சத்தமே இல்லை. இதற்கிடையில் ஓட்டலில் சாப்பிட்டு முடித்து விட்டு பில் கொடுப்பதற்கு மட்டும் நான் முந்தி நீ முந்தி என்று அக்குறும்பு செய்யும் நண்பர்களின் கதை தனிக் கதை. சரி, இப்படி ஓட்டல் பில்லைக் கொடுப்பதற்காக முந்தும் நண்பர்களாவது ஆயிரம் ரூபாய்க்கு நாலு பிரதிகளை வாங்கி வையுங்களேன்.

வஞ்சிரம் மீனின் விலை இன்னமும் கிலோ 1400 ரூபாய். ஆனால் 250 ரூபாய்க்குப் புத்தகம் வாங்க சுணக்கம். முகநூலில் followers 30,000. என்ன கணக்கு என்றே புரியவில்லை. ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது. யாருக்கும் புத்தகத்துக்காக செலவழிக்க இஷ்டமில்லை. அவ்வளவுதான். இனிமேல் இது பற்றி எழுத மாட்டேன்.
பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சான்று தருகிறேன்.
நாள் 31 ஆகஸ்ட் 1896. பூனாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் விஷ்ணு கேஷவ் வாலிங்க்கர் என்ற ஒரு பிராமணப் பேராசிரியர் கிறித்தவராக மதமாற்றம் செய்யப்படுகிறார். அடுத்த காட்சியில் பேராசிரியர் வீட்டுக்கு தாமோதர் சாப்பேகர், பாலகிருஷ்ண சாப்பேகர் என்ற இரண்டு சகோதரர்கள் செல்கிறார்கள். பேராசிரியர் கிறிஸ்தவ மதத்தின் நன்மைகள் பற்றிச் சொல்லி அவர்கள் இருவரையும் ஆண்ட்ரூஸ் பாதிரியாரிடம் அழைத்துப் போவதாகக் கூறுகிறார். அப்போது வெளியே பெரிய பஜன் சத்தம் கேட்கிறது.
“இந்து மதமே இப்படித்தான். கிருஷ்ணரின் ஜன்ம தினத்தைக் கொண்டாடுகிறார்களாம். பாருங்கள். பக்தி என்ற பெயரில் வெற்றுக் கூச்சல், ஆரவாரம். கிருஷ்ணனுக்கு 16,108 மனைவிகள். அப்படியும் அவனுக்குப் போதவில்லை. பால்காரிகளுடன் சல்லாபம் செய்கிறான். இந்துக் கடவுள்களெல்லாம் காமாந்தகாரர்கள்,” என்கிறார் மதம் மாறிய விஷ்ணு கேஷவ்.

“இந்து மதத்தைப் பழித்ததற்காக மன்னிப்புக் கேள்,” என்கிறார்கள் சாப்பேகர் சகோதரர்கள். அவர் மறுக்கவே அவர் மண்டையில் பலமாகத் தாக்கிவிட்டு வெளியேறுகிறார்கள்.

அடுத்த காட்சியில் வன்முறையை வன்முறையால் தீர்ப்பது பற்றி விவாதிக்கிறார்கள் சாப்பேகர் சகோதரர்கள். “முதலில் மொகலாயப் படையெடுப்புகளாலும் பின்னர் சிறுமதி படைத்த ஆங்கிலேயர்களாலும் நம் நாடு சீரழிக்கப்பட்டுவிட்டது. இதற்காக பிராமணர்களாகிய நாம் ஆயுதம் ஏந்தவும் தயங்கக் கூடாது. தேவையானால் பிரிட்டிஷ் ராணுவத்தில்கூட சேரலாம்,” என்கிறார் சாப்பேகர் சகோதரர்களில் மூத்தவரான தாமோதர்.
எல்லோரும் ராணுவத்தில் சேர முயற்சிக்கிறார்கள். அந்தக் காட்சி இப்படிப் போகிறது:

“நீங்களெல்லாம் பிராமணர்கள் ஆயிற்றே? ராணுவத்தில் பஜனை செய்வார்கள் என்றா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? அங்கே சண்டை அல்லவா போட வேண்டும்?”
“சண்டை போடுவோம். பேஷ்வா ராஜ்ஜியத்துக்காக சண்டை போட்டவர்கள்தானே பிராமணர்கள்?”
“சரி, பேஷ்வாக்களின் ராஜ்ஜியத்தை அழித்தது யார்?”
“அது பிராமணர்கள் அல்ல. நாங்கள் பிரிட்டிஷ் ராணுவத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடந்துகொள்வோம்.”
“பிரிட்டிஷ் ராணுவத்தில் பிராமண ரெஜிமெண்ட் இல்லையே?”
“அப்படி ஒன்றை உருவாக்கிவிடுங்களேன்.”
“அதெல்லாம் முடியாது. சண்டை என்றால் விளையாட்டு என்று நினைத்தீர்களா? பேசாமல் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உஞ்ச விருத்தி செய்யப் போங்கள். கிளம்புங்கள் இங்கிருந்து…”
வீட்டில் சகோதரர்கள் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தந்தை வருகிறார்.
“ஏன் பரஞ்ச்பாய் வீட்டுத் திருமணத்துக்கு வரவில்லை?”
“நாங்கள் அந்தத் திருமணத்தை எதிர்க்கிறோம். அந்தப் பெண்ணுக்குப் பதினாலு வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அது நம்முடைய மதத்துக்கும் சாஸ்திரங்களுக்கும் விரோதமானது.”
“மதத்தையும் சாஸ்திரங்களையும் பற்றி உங்களிடமிருந்து நான் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அடிதடியும் ரௌடித்தனமும்தான் மதமா?”
1897 மே மாதம் பம்பாய் மாகாணத்தில் பிளேக் நோய் பரவியது. மக்களுக்கு சில நாள் காய்ச்சல் இருக்கும். பிறகு இறந்துவிடுவார்கள். சாப்பேகர் சகோதரர்களின் தந்தை ஊரை விட்டுச் சென்றுவிடலாம் என்கிறார். “திலகரின் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது; நாங்கள் வரவில்லை,” என்று மறுத்துவிடுகிறார்கள் சகோதரர்கள். “நீங்கள் வரவில்லையே என்றுதான் திலகர் காத்துக்கொண்டிருக்கிறாரா? சரி, யாரும் போக வேண்டாம்; நாங்களும் இங்கேயே இருந்துவிடுகிறோம்,” என்கிறார் தந்தை. உண்மையில் அவருக்கும் போக்கிடம் கிடையாது. சென்ற முறை போனபோதே அவருடைய சகோதரர் வீட்டில் சரியான வரவேற்பு இல்லை.

பிளேக் நோயைக் கண்டு கடும் பீதியடையும் பிரிட்டிஷ் அரசு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ராண்ட் என்ற அதிகாரியை நியமிக்கிறது. ஒரு சர்வாதிகாரிக்கு உரிய அந்தஸ்தும் அதிகாரமும் ராண்டுக்குக் கொடுக்கப்படுகிறது. ராண்டின் பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஒவ்வொரு வீடாகப் புகுந்து பிளேக் நோயாளிகளைப் பிடித்துக்கொண்டு போய் தனி மருத்துவமனையில் போடுகிறார்கள். பிரேதங்களுக்கு சாஸ்திர ரீதியான சடங்குகளைச் செய்ய முடியவில்லை. தடுக்கும் பெண்களுக்கு அடி விழுகிறது. வீடுகளில் பிளேக் நோயைத் தடுக்கும் மருந்தை அடிக்கும்போது பூஜையறையெல்லாம் சின்னாபின்னமாக்கப்படுகின்றன. குத்து விளக்குகளும் தெய்வங்களின் படங்களும் தெருக்களில் வீசியெறியப்படுகின்றன. மக்களின் எதிர்ப்பையும் பத்திரிகைகளின் எதிர்ப்பையும் ராண்ட் கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை.

சாப்பேகர் (Chapekar) சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட தாமோதர், பாலகிருஷ்ணன், வாசுதேவ் மூவரும் பூனாவைச் சேர்ந்த கொங்கணி பிராமணர்கள். பிறந்த ஆண்டுகள் முறையே 1870, 1873, 1879. தந்தை புரோகிதர். குடும்பச் சூழல் காரணமாக சாப்பேகர் சகோதரர்கள் அப்போதைய காலகட்டத்தின் சமூக சீர்திருத்தங்களை ஏற்காத பிற்போக்கு சிந்தனைகளைக் கொண்டவர்களாக இருந்தனர். பிரிட்டிஷாரின் தூண்டுதலில் சீர்திருத்தவாதிகளும் இஸ்லாமியரும் இந்து மதத்துக்குக் கேடு விளைவிப்பதாக நம்பினார்கள். அவ்வித முயற்சிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயாராகி, ‘சாப்பேகர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். மகாராஷ்டிராவில் தற்போது நிலவும் மதச் சாயம் பூசப்பட்ட விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களையும், சிவாஜி பெயரிலான இந்துத்துவ அரசியலையும் ஆரம்பித்து வைத்தவர்கள் இந்தச் சகோதரர்களே ஆவர். ஆனால் திலகர் காலத்து சுதந்திரப் போராட்டத்தில் இது போன்ற ஆயிரக் கணக்கான இளைஞர்கள் செய்த உயிர்த் தியாகம் வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அந்த இளைஞர்கள் செய்த மகத்தான உயிர்த் தியாகமும் வீர வரலாறும் முழுமையாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது.
பிளேகினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்தது பூனா. மனிதர்கள் பிளேகினால் செத்து வீழ்ந்துகொண்டிருந்த அதே வேளையில்தான் பிரிட்டிஷ் மகாராணியின் வைர விழா ஏற்பாடுகளும் பூனாவில் நடந்துகொண்டிருந்தன. சாப்பேகர் சகோதரர்களில் மூத்தவரான தாமோதர், ராண்டைக் கொன்றுவிடுவதென்று முடிவு செய்து அதை ராண்டுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கிறார். ஆனாலும் ராண்ட் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பிரதிநிதியான தன் மீது யார் கை வைக்க முடியும் என்பது அவர் நம்பிக்கை.

22 ஜூன் 1897 அன்று இரவு கவர்னர் மாளிகையில் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது ராண்டும் அவரது உதவியாளரான லெஃப்டினண்ட் Ayerst-உம் சாப்பேகர் சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள். இது நடந்த இடம் புனேவில் உள்ள கணேஷ்கிண்ட் ரோடு. (இன்றைய பூனாவாசிகளுக்கும் கணேஷ்கிண்ட் வாசிகளுக்கும் இந்த வரலாறு தெரியுமா?) சாப்பேகர் சகோதரர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு 20,000 ரூபாய் தருவதாக பிரிட்டிஷ் அரசு அறிவிக்கிறது. 120 ஆண்டுகளுக்கு முன்பு இது எவ்வளவு பெரிய தொகை என்பதை யூகித்துப் பாருங்கள்.
ராண்ட் கொல்லப்பட்ட பிறகு திலகரைச் சந்திக்கும் புதிய கலெக்டர் அவரிடம், “நீங்கள் குற்றமற்றவர் என்று தெரியும். ஆனாலும் உங்களைக் கைது செய்ய வேண்டியிருக்கிறது. உங்களைக் கைது செய்தால் நிஜக் குற்றவாளிகள் வந்து சரணடைந்துவிடுவார்கள். மேலும், ‘கேசரி’ பத்திரிகையில் நீங்கள் எழுதும் உணர்ச்சிகரமான கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் இளைஞர்களைத் தூண்டிவிடுகின்றன. நான் உங்களைக் கைது செய்யாமல் இருக்க வேண்டுமானால் கொலைகாரர்கள் யார் என்று சொல்லுங்கள்,” என்கிறார்.

இதற்கு, “கொலைகாரர்கள் யார் என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் உங்களிடம் நான் சொல்ல மாட்டேன். நான் என்ன உங்களுடைய உளவாளியா?” என்று தெளிவான ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார் திலகர். (இதெல்லாம் உண்மையாகவே நடந்த சம்பவங்கள். திலகர் தீவிரவாதி என்றாலும் அவரது பரந்துபட்ட அறிவின் மீது வெள்ளையருக்குப் பெரும் மதிப்பு இருந்தது.)
கடைசியில் 20,000 ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு சாப்பேகர் கிளப்பைச் சேர்ந்த திராவிட் சகோதரர்கள் என்ற இருவர் பிரிட்டிஷாரிடம் தாமோதர் சகோதரர்களையும் மற்ற அனைவரையும் காட்டிக் கொடுக்கிறார்கள்.

தாமோதர் சாப்பேகர் பிடிபடுகிறார். அப்போது அவரை சிறையில் சந்திக்கும் புதிய கலெக்டர் அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறார். “ஏன் நீ எப்போதும் இறுக்கமாகவே இருக்கிறாய்? நீ மட்டும் அல்ல; பொதுவாக இந்தியர்களே புன்முறுவல் செய்வதில்லை, ஏன்?”
1898 மார்ச் 2-ஆம் தேதி தாமோதருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தாமோதர் எரவாடா சிறையில் தூக்குத் தண்டனைக்காகக் காத்திருந்தபோது அதே சிறையில் இன்னொரு செல்லில் இருந்தார் பாலகங்காதர திலகர். அவரைச் சந்தித்து தனக்கு ஒரு பகவத் கீதை நூல் வேண்டுமென்றும், தன்னுடைய உடல் இந்து முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் தாமோதர். கீதையைக் கையில் வைத்தபடிதான் தூக்குமேடை ஏறினார். திலகரின் வேண்டுகோளுக்கு இணங்க தாமோதரின் உடல் இந்து முறைப்படியே தகனம் செய்யப்பட்டது.

ராண்டின் கொலையில் சம்பந்தப்பட்ட தாமோதரின் தம்பியான பாலகிருஷ்ணன் பூனாவிலிருந்து தப்பி ஹைதராபாத் மாகாணத்தில் போய் தலைமறைவானார். அப்போது ஒரு சமயம் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்தார் திலகர். பின்னர் ஜனவரி 1899-இல் பாலகிருஷ்ணன் பிடிபட்டார். பணத்துக்கு ஆசைப்பட்டு திராவிட் சகோதரர்கள்தான் பாலகிருஷ்ணாவின் இருப்பிடத்தையும் காட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்கிறார் தாமோதரின் கடைசித் தம்பியான வாசுதேவ். பிறகு பாலகிருஷ்ணனும் வாசுதேவும் பிடிபட்டு எரவாடா சிறையிலேயே இருவரும் தூக்கிலிடப் படுகிறார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் மூன்று பிள்ளைகளையும் தூக்கில் சாகக் கொடுத்த வயதான தந்தை திரை முழுதும் தெரிகிறார். அந்தத் தருணத்தில், ராண்ட் கொல்லப்பட்ட போது தன் மகன்களைப் பற்றி விசாரிக்க வந்த பிரிட்டிஷ் அதிகாரியிடம், “இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவையும் நான் நேசிக்கிறேன்; அவை எல்லாவற்றிலும் நானே தெரிகிறேன். அந்த வகையில் நீயும் என் நேசத்துக்குரியவன்தான். நீயும் என் நண்பன்தான்,” என்று சொன்ன அந்தத் தந்தையின் வார்த்தைகள் என் மனதில் மீண்டும் தோன்றின. இந்தச் சம்பவங்கள் நடந்தபோது இந்தியாவில் மகாத்மாவின் அகிம்சைப் போராட்டம் பற்றிப் பெரிய அளவில் தெரிந்திருக்கவில்லை; ஆனால் இப்போது 120 ஆண்டுகள் கழித்து சினிமா என்ற கால எந்திரத்தில் பயணித்து சாப்பேகர், திலகர் காலத்துக்குப் போகும்போது அகிம்சை எத்தகைய வலுவானதொரு போராட்ட ஆயுதம் என்றே இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

1979-இல் எடுக்கப்பட்ட, சர்வதேச அளவில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ‘22 ஆகஸ்ட் 1897’ என்ற இந்த மராத்தி படம் என் சினிமா வாழ்வில் மறக்க முடியாத ஒரு திரைக் காவியம். தமிழ்நாட்டில் எத்தனையோ தேச பக்தர்கள் சுதந்திரப் போராட்டத்துக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். திருப்பூர் குமரன் ஒரு உதாரணம். ஆனால் அவர்கள் யாரைப் பற்றியும் இந்தப் படத்தைப் போல் தமிழில் ஒரு படம் எடுக்கப்பட்டதில்லை. ஆனால் அதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை. ‘22 ஆகஸ்ட் 1897’ போன்ற படங்களுக்கான சினிமா மொழி தமிழ் சினிமாவில் இதுவரை உருவாகவில்லை. உதாரணமாக, இந்தப் படத்தில் பின்னணி இசையே கிடையாது. வெறும் இயற்கையான ஒலிகள் மட்டுமே உண்டு.

இதெல்லாம் என்ன, வேறு ஏதோ பத்திரிகைக்காக எழுதப்பட்ட கட்டுரை பழுப்பு நிறப் பக்கங்களில் சேர்ந்துவிட்டதா என நினைக்க வேண்டாம். சி.சு. செல்லப்பாவுக்கும் இந்த மராத்தி படத்துக்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் உண்டு.

நாவலில் பால கங்காதர் திலகரைப் பற்றிய பகுதியில் ஒரு வாக்கியம் வருகிறது. “பூனா பிளேக் கால அதிக்ரமங்களுக்காக தாமோதர சபேட்கர் சகோதரர்களின் துப்பாக்கிக்கு முதல் பலி ஆனார்கள் ராண்ட், அயெர்ஸ்ட் என்ற இரண்டு வெள்ளை அதிகாரிகள்.” இதற்கு மேல் விபரங்கள் இல்லை. இதில் சபேட்கர் என்பது பிழை; சாப்பேகர் என்பதே சரி. ‘சுதந்திர தாகம்’ என்ற மகத்தான வரலாற்று ஆவணத்தில் வரும் இந்த ஒரே ஒரு வாக்கியம்தான் ‘22 ஆகஸ்ட் 1897’ என்ற மராத்திய திரைக் காவியத்தை நான் திரும்பிப் பார்த்ததற்குக் காரணமாக அமைந்தது. இந்த ஒரே ஒரு வாக்கியத்தை வைத்துக்கொண்டு 200 பக்க நாவல் ஒன்றை ஒருவரால் எழுதிவிட முடியும். இப்படியாக ‘சுதந்திர தாகம்’ நாவலின் 2,000 பக்கங்களிலும் பல ஆயிரக்கணக்கான கண்ணிகள் நிறைந்துள்ளன.

https://tinyurl.com/pazhuppu3