தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் முதல் படங்கள் மகத்தான வெற்றியைப் பெற்று, அதற்கடுத்த படங்கள் தோல்வி அடைவதன் காரணம் பற்றி பலமுறை யோசித்திருக்கிறேன். முதல் படங்களில், அந்த இயக்குனர்கள் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி அனுபவரீதியாக எடுப்பதால் அந்தக் கதையும் சொல்லும் விதமும் நிஜமாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைதானே இருக்கிறது? அதை முதல் படத்தில் சொல்லி விட்ட பிறகு மீண்டும் சொல்ல எதுவுமில்லாமல் வெளிநாட்டுப் படங்களைத் தழுவி எடுக்க முயற்சித்துத் தோல்வி அடைகிறார்கள். அப்படி ஆகாமல் இருப்பதற்கு இலக்கியம் கை கொடுக்கும்.
சினிமாவை செழுமைப்படுத்துவதற்கு இலக்கியம் பலவிதங்களில் பயன்படுகிறது. உதாரணமாக, போர்ஹேஸின் (Jorges Louis Borges) எழுத்துக்களைப் படித்திராவிட்டால் கிறிஸ்டோஃபர் நோலானால் ’இன்செப்ஷன்’ என்ற படத்தை எடுத்திருக்க முடியாது. இலக்கியத்தினால் சினிமாவுக்குக் கிடைக்கக் கூடிய மற்றொரு பரிமாணம் என்னவென்றால், பல நூறு பேரின் கதைகளை எழுதுகிறான் எழுத்தாளன். இயக்குனர் அந்த விளைநிலத்தில் போய் தனக்குத் தேவையானதை அறுவடை செய்து கொள்ளலாம். அதுதான் இலக்கியத்தின் மிகப் பெரிய பயன்பாடு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ் சினிமா, இலக்கியத்தை விட்டுத் தூரமாகவே நிற்கிறது.
உலக அளவில் எத்தனையோ மகத்தான நாவல்களை மிகச் சிறந்த சினிமாவாக உருவாக்கியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர், விக்தோர் யூகோ, டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, ஜேன் ஆஸ்டின் என்று பல மேற்கத்திய எழுத்தாளர்களின் படைப்புகள் சினிமாவாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதில் எனக்குப் பிடித்த மூன்று படங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1875-இல் துவங்கி 1877 வரை ’ரஷ்யன் மெஸெஞ்சர்’ என்ற பத்திரிகையில் டால்ஸ்டாய் தொடர்கதையாக எழுதிய நாவல் அன்னா கரேனினா. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் அதைத் திரைப்படமாக உருவாக்கியிருந்தாலும் அவற்றில் ஆகச் சிறந்ததாகக் கருதப்படுவது க்ளேரன்ஸ் ப்ரௌன் இயக்கத்தில் 1935-இல் வெளிவந்த அன்னா கரேனினா தான். அதில் ஸ்வீடிஷ் நடிகை கிரேட்டா கார்போ அன்னாவாக நடித்தார். நடித்தார் என்பதை விட அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்தார் என்று சொல்வதே பொருந்தும். அன்னா கரேனினாவின் கதை இன்றளவும் உலகப் புகழ் பெற்று விளங்குவதன் காரணம், ஆண் பெண் உறவில் ஏற்படும் விநோதமான சிடுக்குகளும், அவை காலதேச வர்த்தமானங்களையெல்லாம் தாண்டி எல்லோருக்கும் பொருந்தி வரக் கூடியதாக இருப்பதும்தான். ”சந்தோஷமான குடும்பங்கள் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கின்றன; ஆனால் சந்தோஷமில்லாத குடும்பம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான துயரத்தில் இருக்கிறது” என்ற மிகப் புகழ்பெற்ற வாசகத்துடன் துவங்குகிறது நாவல். ஜார் மன்னனிடம் அதிகாரியாகப் பணியாற்றும் கரேனின் என்பவரின் மனைவி அன்னா. செர்கி என்று ஒரு மகன். கரேனின் எப்போதும் சிடுசிடுப்பான ஆள். மென்மையான உணர்வுகளோ காதலோ இல்லாத ஒரு ஜடம். ஆனால் தன்னுடைய அரசாங்க வேலை, கௌரவம் ஆகியவற்றில் மட்டும் விசேஷமான அக்கறை கொண்டவர்.
இந்த நிலையில் அன்னாவுக்கும் வரோன்ஸ்கி என்ற ராணுவ அதிகாரிக்கும் காதல் உண்டாகிறது. ஊரார் மத்தியிலும் அந்த விஷயம் பரவி எல்லோரும் அது பற்றி வம்பு பேசுகிறார்கள். அந்த நிலையில் ஒருநாள் கரேனின், அன்னாவிடம் இனிமேல் அந்த உறவைத் தொடர வேண்டாம் என்று கண்டித்துப் பேசுகிறார். அன்னாவுக்கும் அவருக்கும் அது குறித்த வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, எனக்கு இப்போது ஒரு முக்கியமான அரசு வேலை இருக்கிறது என்று எழுந்து போய் விடுகிறார். ஒரு முக்கியமான வாழ்க்கைப் பிரச்சினையைப் பற்றிப் பேசும் போது கூட உணர்ச்சியே இல்லாத ஜடமாக எழுந்து போகிறார் கரேனின்.
பல திருமண உறவுகளில் பெண்கள் தாங்கள் ஒரு வேலைக்காரியாகத்தான் வாழ்வதாக உணர்கிறார்கள். என்னுடைய ஒரு நாவலுக்காகக் கள ஆய்வு செய்த போது ஒரு பெண், அந்தக் குடும்பத்தில் தான் ஒரு கால்மிதியாகவே பயன்படுவதாகக் கூறினார். அதேதான் அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய மேட்டுக்குடிக் குடும்பத்திலும் நடக்கிறது. ஒருமுறை அன்னா மாஸ்கோ சென்று விட்டுத் தன் வீட்டுக்குத் திரும்புகிறாள். கரேனினிடம் ”நான் இல்லாமல் செர்கி எப்படி இருக்கிறான்?” என்று கேட்கும் போது அவர், “அவன் முன்பை விட ரொம்ப சந்தோஷமாக இருக்கிறான்” என்கிறார். ஆனால் அவள் செர்கியிடம் கேட்கும் போது அவன் ’அம்மா இல்லாமல் தனக்கு எதுவுமே பிடிக்கவில்லை’ என்றும், அம்மா எப்போது வருவாள் என்று ஒவ்வொரு நிமிடமும் காத்திருந்ததாகவும் சொல்கிறான். தன் மகன் என்ன நினைக்கிறான் என்பது கூடத் தெரியாத முட்டாள் தகப்பன் என்று அந்தக் காட்சி நமக்கு உணர்த்துகிறது.
கரேனின் கண்டித்ததையும் மீறி அன்னா-வரேன்ஸ்கி காதல் தொடர்ந்ததால், கரேனின் அவளை இனிமேல் தன் வீட்டுப் பக்கம் வரக் கூடாது என்றும், அவள் உயிரோடு இருக்கும் வரை செர்கியைப் பார்க்கக் கூடாது என்றும் தடை போட்டு விடுகிறார். இதற்கிடையில் வரேன்ஸ்கியை ராணுவத் தலைமை போருக்கு அழைக்கிறது. கிளம்பும் சமயத்தில் அன்னாவிடம் வரேன்ஸ்கி மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். ”எனக்குக் கடமைதான் முக்கியம்” என்று கரேனின் அவளிடம் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகளைச் சொல்கிறான். அன்பாக அவளிடம் ஒரு வார்த்தை சொல்லாமலே கிளம்பி விடுகிறான். கடைசியில் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள் அன்னா.
ஒரு மேலோட்டமான பார்வையில், மேட்டுக்குடி சீமாட்டிகள் தங்கள் அலுப்பைப் போக்கிக் கொள்ள பிற ஆடவர்களின் மீது ஈடுபாடு கொள்ளும் ஒரு சாதாரண கதையாகத் தெரியும் அன்னா கரேனினாவை ஒரு காவியமாக எழுதியவர் டால்ஸ்டாய். அந்தக் காவியத்தை அப்பழுக்கற்ற திரைக்காவியமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் க்ளேரன்ஸ் பிரௌன்.
2012-இல் இயக்குனர் ஜோ ரைட்டும் அன்னா கரேனினாவைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார். ஜேன் ஆஸ்டனின் ப்ரைட் அண்ட் பிரஜடிஸ், ஐயான் மக்கீவனின் அடோன்மெண்ட் ஆகிய நாவல்களை அற்புதமாகத் திரைப்படமாக்கிவர் ஜோ ரைட். அவருடைய அன்னா கரேனினாதான் 1935-இல் வெளிவந்த அன்னா கரேனினாவுக்கு நிகராக நிற்கக் கூடியதாக இருக்கிறது. திரைப்படத்தைப் பாடமாகப் பயிலும் மாணவர்கள் இந்த இரண்டு படங்களையும் பார்த்து ஒப்பிட்டால் சினிமா ரசனையை வளர்த்துக் கொள்ளலாம்.
***
ரஷ்ய எழுத்தாளர் போரிஸ் பாஸ்டர்நாக் 1957-இல் எழுதிய நாவல் டாக்டர் ஷிவாகோ. 1903-இலிருந்து 1917-இன் ரஷ்யப் புரட்சி மற்றும் 1922 வரை நீடித்த உள்நாட்டுப் போர் வரை நாவலின் கதை நீள்கிறது. ரஷ்யப் புரட்சி குறித்த விமர்சனங்களும் நாவலில் இருப்பதால் ரஷ்யாவில் இதன் பிரசுரம் சாத்தியமாகாததால் நாவலின் பிரதி இத்தாலிக்குக் கடத்தப்பட்டு அங்கேதான் பிரசுரம் ஆனது. பிரசுரமான அடுத்த ஆண்டே பாஸ்டர்நாக்குக்கு நோபல் விருது வழங்கப்பட்டது. ஆனால் ரஷ்ய அரசு பாஸ்டர்நாக்கை பலவந்தப்படுத்தி, அந்தப் பரிசை நிராகரிக்கச் செய்தது. பின்னர் 1988-இல் பாஸ்டர்நாக்கின் வாரிசுகளே அந்த நோபல் பரிசைப் பெற்றனர். இத்தனை பிரசித்தி பெற்ற டாக்டர் ஷிவாகோ என்ற நாவலை டேவிட் லீன் இயக்கினார்.
உலக சினிமாவில் டேவிட் லீனுக்கு இணையாக ஒன்றிரண்டு பேரை மட்டுமே சொல்லலாம். அந்த அளவுக்கு, சினிமாவில் ’சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியவர்’. அவர் இயக்கிய The Bridge on the River Kwai (1957), Lawrence of Arabia (1962), Doctor Zhivago (1965) ஆகிய மூன்றுமே உலக சினிமாவின் மகத்தான படைப்புகள். இவை தவிர சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களான Great Expectations (1946), Oliver Twist (1948) ஆகியவற்றையும் கூட படமாக்கியிருக்கிறார் டேவிட் லீன். முதலில் குறிப்பிட்ட அவரது மூன்று படங்களையும் பார்த்தால்தான் ’சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியவர்’ என்ற பதத்தைப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, உலகின் தலைசிறந்த பத்து படங்களில் ஒன்றாகக் கருதப்படும் டாக்டர் ஷிவாகோ, முதலாம் உலக யுத்தத்துக்கும் முன்னதாக நடக்கிறது. உலக யுத்தம் சார்ந்த நிகழ்வுகளும், ரஷ்ய உள்நாட்டுப் போரும் படத்தில் வருகின்றன. இதையெல்லாம் அப்படி அப்படியே திரையில் கொண்டு வந்தார் டேவிட் லீன். லட்சக் கணக்கான பேர் கலந்து கொள்ளும் போர்க் காட்சிகள், போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைத்தெருக்கள் என்று அனைத்தையும் அச்சு அசலாகக் கண்முன் நிறுத்த வேண்டும். அதில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடி டேவிட் லீன் தான். மேலும், சினிமாவில் ஆர்ட் டைரக்ஷன் என்ற துறைக்கு லீன் ஒரு பிதாமகர் என்றே சொல்லலாம். முதலாம் உலக யுத்தத்துக்கு முந்தைய மாஸ்கோவை அவர் ஸ்பெய்னிலும் கனடாவிலும் புதிதாக நிர்மாணம் செய்திருக்கிறார். அதெல்லாம் நம்ப முடியாத காட்சிகளாக நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. மூன்று மணி இருபது நிமிடங்கள் நேரம் ஓடும் இந்த பிரம்மாண்டமான படத்தின் ஆரம்பக் காட்சியில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் அணி வகுத்துச் செல்வது, அந்த ஊர்வலத்தின் மேலே தெரியும் சிவப்பு நட்சத்திரம், நிராயுதபாணிகளாக ஊர்வலம் சென்று கொண்டிருக்கும் மாணவர்களை ஜார் மன்னனின் குதிரைவீரர்கள் வாட்களால் குத்திக் கொல்வது, ஷிவாகோவும் லாராவும் ஆயிரக் கணக்கான மைல் விஸ்தீரணமுள்ள பனிப்பாலையில் குதிரை வண்டியில் செல்வது, லட்சக் கணக்கான போர் வீரர்களின் பேரணி, ராணுவத் துருப்புக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் பனி வனத்தில் நடக்கும் சண்டை என்று படத்தில் மறக்க முடியாத காட்சிகள் ஏராளம்.
ஆறு அகாடமி விருதுகளை வாங்கியிருக்கும் இப்படத்தில் டாக்டர் ஷிவாகோவாக ஓமர் ஷெரீப் நடித்திருக்கிறார். டேவிட் லீனின் ’லாரன்ஸ் ஆஃப் அரேபியா’வில் நடித்தவரும் ஓமர் ஷரீப்தான். ஷிவாகோ ஒரு டாக்டர், அதே சமயம் ஒரு கவிஞன். அவனுக்கு தோன்யா என்ற மனைவி இருந்தும் லாரா என்ற பெண்ணின் மீது காதல் ஏற்படுகிறது என்ற ஒரு சாதாரணமான காதல் கதையை வைத்துக் கொண்டு உலக யுத்தம், ரஷ்யப் புரட்சி, உள்நாட்டுப் போர், சமூக முரண்பாடுகள் என்ற ஏராளமான கதைகளைப் பின்னியிருக்கிறார் லீன். ஆரம்பக் காட்சியில் குழந்தைகள், பெண்கள் மீதெல்லாம் குதிரை வீரர்கள் ஆயுதங்களோடு பாயும் போது மாணவர் தலைவன் தன்னுடைய பூர்ஷ்வா தோழியிடம் சொல்கிறான்: ”மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் மாபெரும் அலங்கார விடுதிகளில் அமர்ந்து வெள்ளிக் கிண்ணங்களில் ஒயினை ஊற்றிக் குடித்துக் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் இன்னொரு பக்கம் பெண்களும் குழந்தைகளும் ஒரு துண்டு ரொட்டி கிடைக்காமல் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த ஊர்வலம்.”
டாக்டர் ஷிவாகோ உலக சினிமாவின் மறக்க முடியாத காவியங்களில் ஒன்றாக இருப்பதற்கு மற்றொரு காரணம், பீத்தோவனின் ஐந்தாம் சிம்ஃபனி எப்படி இந்தப் பிரபஞ்சம் உள்ளளவும் இருக்குமோ அதே போன்ற பல காட்சிகளை இப்படத்தில் சிருஷ்டித்திருக்கிறார் டேவிட் லீன். அதில் ஒன்று, ஷிவாகோவும் லாராவும் ஒரு மாபெரும் பனிப்பாலையின் நடுவே உள்ள பனி வீட்டுக்குள் செல்வது (பார்க்க: புகைப்படம்). அப்போது பின்னணியில் கேட்கும் இசை (லாராவின் தீம்), உலக சினிமா ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாத ஒன்றாகும்.
***
ஜே.ஜி. பல்லார்ட் (1930 – 2009) உலகப் புகழ் பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர். உலக இலக்கியத்தில் காஃப்காவுக்கு என்ன இடம் இருக்கிறதோ அதே போன்ற இடத்தைப் பெற்றவர் பல்லார்ட். காஃப்காவின் மூலமாகத்தான் ஆங்கில அகராதியில் Kafkaesque என்ற வார்த்தை புகுந்தது. அதேபோல் ஆங்கில அகராதிக்கு Ballardian என்ற வார்த்தையை வழங்கியவர் பல்லார்ட். இவருடைய கதைகளை ஒருமுறை படித்ததோடு தூக்கிப் போட்டு விட முடியாது. மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கக் கூடிய நுண்ணிய இலக்கிய ரசனைத் துகள்களைக் கொண்டவை அவை. இங்கிலாந்தைச் சேர்ந்த பல்லார்டின் தந்தை சீனாவின் ஷாங்காய் நகரில் ஒரு பெரும் உத்தியோகத்தில் இருந்தார். அப்போது 1937-இலிருந்து 1945 வரை நடந்த ஜப்பான் சீனா போரின் போது ஷாங்காயும் ஜப்பான் ராணுவத்தினரின் ஆதிக்கத்தில் வந்தது. பல்லார்டின் கதை நடப்பது அந்தக் காலக்கட்டத்தில்தான். பல்லார்டுக்கு அப்போது 13 வயது. போரின் போது ஷாங்காய் நகரை ஜப்பானிய ராணுவம் பிடித்து விடுகிறது. நகரவாசிகள் ஊரை விட்டுக் கிளம்புகிறார்கள். ஊரில் இருந்த ஐரோப்பியர்களும் – குறிப்பாக பிரிட்டிஷ்காரர்கள் – கும்பல் கும்பலாக ஓடுகிறார்கள். அந்தக் காட்சிகளெல்லாம் எப்படிப் படமாக்கப்பட்டது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
ஜெம்மி கிரஹாமின் (நாவலிலும் சினிமாவிலும் பல்லார்டின் பெயர்) பெற்றோரும் ஓடுகிறார்கள். ஜெம்மிக்கு சிறு பிராயத்திலிருந்தே விமானம் என்றால் அதிதீவிர விருப்பம். கையில் எப்போதும் ஒரு பொம்மை விமானத்தை வைத்திருப்பான். ஆயிரக் கணக்கான பேர் போரின் பீதியில் ஊரை விட்டு ஓடும் போது பெற்றோருடன் இருக்கும் ஜெம்மியின் பொம்மை விமானம் கீழே விழுந்து விடுகிறது. அதை எடுப்பதற்காக அவன் முயற்சி செய்யும் போது பெற்றோரிடமிருந்து பிரிந்து விடுகிறான். வெறும் ஜப்பானிய ராணுவத்தினரும், சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்ட மக்களும் வாழும் ஊரில் தனியாக விடப் படுகிறான் ஜெம்மி. கொஞ்ச நாள் தன் வீட்டிலேயே (வீடு என்பது ஒரு பேருக்குத்தான்; உண்மையில் அது ஒரு அரண்மனை) மீதியிருக்கும் உணவுப் பொருட்களைத் தின்று காலத்தைக் கழிக்கிறான். உணவுப் பொருள் தீர்ந்த பிறகு வெளியே வந்து சில அமெரிக்கர்களிடம் மாட்டிக் கொள்கிறான். அவர்கள் அவன் மூலம் ஏதாவது காசு பண்ண முடியுமா என்று பார்க்கிறார்கள். போரின் தாக்கத்தினால் ஊரே கிட்டத்தட்ட ஒரு வதை முகாம் மாதிரி ஆகி விடுகிறது. ஊர் மக்கள் யாவரும் ஜப்பானிய ராணுவ அதிகாரியால் முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். ஜெம்மிக்கு அடைக்கலம் கொடுத்த அமெரிக்கர்கள் அவனுடைய பற்களில் ஏதேனும் தங்கப்பல் இருக்கிறதா என்று அவனை சோதிக்கிறார்கள். சீனர்களிடம் கொண்டு போய் அவனை விற்கப் பார்க்கிறார்கள். ”இந்தச் சிறுவன் ஒரு தம்பிடி பெற மாட்டான்” என்று சீனர்கள் அவனை வாங்கிக் கொள்ள மறுத்து விடுகிறார்கள். இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மொத்தம் இரண்டு ஆண்டுகள் பல்லார்ட் – அதாவது, ஜெம்மி கிரஹாம் – அந்த முகாம்களில் வாழ்கிறான். அதுதான் ’சூரியனின் சாம்ராஜ்ஜியம்’ நாவலின் கதை. பல்லார்ட் அனுபவித்த சொந்தக் கதை.
அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 1987-இல் உருவாக்கிய ’சூரியனின் சாம்ராஜ்ஜியம்’ என்ற திரைப்படம். ஸ்பீல்பெர்க் தனது படங்களில் உருவாக்கும் பிரம்மாண்டத்தினாலும், அசாத்தியமான தொழில்நுட்பத் திறமையினாலும் மட்டுமே நான் இந்தத் திரைப்படத்தைக் கொண்டாடவில்லை. மாறாக, இது நமக்கு ஒரு தரிசனத்தைத் தருகிறது. போர்ச் சூழல் என்பது மிகவும் கொடூரமானது. ஜப்பானிய ராணுவத்தினர் ஷாங்காய் நகரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் துப்பாக்கிகளுக்கு இலக்காக அவர்களிடம் அடிமைகளாகக் கிடக்கும் ஷாங்காய் நகரவாசிகள். ஆனால் ஒரு கோணத்தில் பார்த்தால் இரண்டு பேருமே பரிதாபத்துக்குரியவர்கள்தான். எந்த நிமிடத்திலும் ஜப்பானியருக்கு எதிரணியில் உள்ள ராணுவம் ஷாங்காயைப் பிடித்து விடக் கூடும். அங்கே உள்ள அத்தனை ஜப்பானியரும் கொல்லப்படலாம். அவர்களால் தங்களின் மனைவி மக்களை நிரந்தரமாகப் பார்க்க முடியாமல் போகலாம். ஆக, இரண்டு பக்கமுமே மரணத்தின் விளிம்பில் வாழ்பவர்கள்தான். ஒரே வித்தியாசம், ஒன்று வெற்றியடைந்த கூட்டம்; ஆயுதம் தரித்த கூட்டம். இன்னொன்று, அகதிக் கூட்டம்; பசியாலும் பட்டினியாலும் செத்துக் கொண்டிருக்கும் கூட்டம். ஆனால் ஜெம்மி கிரஹாம் தன்னுடைய ஒரே ஒரு சாகசத்தினால் அந்த முகாம் வாழ்க்கையைக் கொண்டாட்ட வெளியாக மாற்றுகிறான். எல்லோருக்கும் உருளைக்கிழங்கு வழங்குவதற்காக பெரிய அண்டாவில் உருளைக்கிழங்கைக் கொண்டு வருகிறான் ஜப்பானிய சிப்பாய்; அப்போது நாள் கணக்கில் பட்டினி கிடக்கும் அகதிக் கூட்டம் அடித்துப் பிடித்துக் கொண்டு பாய்கிறது. வெறுப்பாகிப் போன சிப்பாய், அந்த அண்டாவைக் கடும் எரிச்சலுடன் அவர்கள் மீது தள்ளிக் கவிழ்த்து விடுகிறான். அவித்த உருளைக்கிழங்குகள் சேற்றில் விழுந்து ஓடுகின்றன. அடிபிடிக் கூட்டத்தில் எல்லோருடைய கால்களுக்கிடையே புகுந்து நுழைந்து ஐந்தாறு கிழங்குகளை எடுத்து விடும் ஜெம்மி, அவற்றில் ஒன்றை மட்டும் தன்னிடம் வைத்துக் கொண்டு மீதியை நோயாளிகளுக்கும் நடக்க முடியாதவர்களுக்கும் தருகிறான். ஆக, ஒரு வேதனையை, துக்கத்தை, துயரத்தை அடுத்தவர் மீதான அன்பினால் விளையாட்டாக மாற்றுகிறான். மேலும், பல நல்ல மனிதர்கள் செய்வது போல், ‘நான் இவர்கள் மீது அன்பு செலுத்தப் போகிறேன்’ என்று அறிவித்து விட்டுச் செய்யவில்லை. மழை எப்படிப் பொழிகிறதோ அதேபோல் வெகு இயல்பாகச் செய்கிறான். ஜப்பானிய ராணுவ அதிகாரி கொடூரமாக மற்றவர்களைச் சித்ரவதை செய்கிறான். ஒரு கட்டத்தில் அந்த அதிகாரியே ஜெம்மி செய்த ஒரு காரியத்தால் கண் கலங்கி விடுகிறான். போரில் ஜப்பானியர் தோற்றுக் கொண்டிருக்கும் நேரம். ஜப்பானிய வீரர்கள் பலர் தற்கொலைப் படையாக மாறி விமானத்தில் ஏறுகிறார்கள். விமானத்தில் வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு போய் ஒரு இடத்தில் விழச் செய்து வெடிக்க வேண்டும். ஒவ்வொரு சிப்பாய் அப்படிப் போகும் போதும் அதிகாரி அவனோடு ஒரு குவளை மது அருந்தி விடை கொடுப்பார். வீரர்கள் ஜப்பானிய தேசிய கீதத்தை இசைப்பார்கள். அப்போது ஒருமுறை, அவர்கள் அப்படி தேசிய கீதத்தை இசைக்கும் போது ஒரு பிரிட்டிஷ் சிறுவனான ஜெம்மி கிரஹாம் அவர்களோடு சேர்ந்து பாடுகிறான். அவனுடைய கீச்சுக்குரல் மட்டும் தனியாகக் கேட்கிறது. அந்த வீரர்கள் அழத் தொடங்குகிறார்கள். அதிகாரியின் கண்கள் கலங்குகின்றன. போரில் தோற்று ஷாங்காயை விட்டு நீங்கும் போது அந்த அதிகாரி ஜெம்மியைப் பார்த்து, உடைந்த ஆங்கிலத்தில், “Boy, you are a difficult boy” என்று சொல்லி விட்டுப் போகிறான். அன்பு அத்தனை விசேஷமானது. ஒரு பிசாசைப் போல் நடந்து கொள்ளும் அந்த அதிகாரியைக் கூட அசைத்து விடுகிறது ஜெம்மியின் அன்பு. இங்கே தமிழிலும் இதர மொழிகளிலும் அன்பை போதித்து பல படங்கள் வருகின்றன. அவற்றுக்கும் சூரியனின் ராஜ்ஜியத்துக்கும் உள்ள பெரிய வித்தியாசம், ஜெம்மி அந்தக் கொலைகாரப் பிராந்தியத்தை ஒரு விளையாட்டுத் திடலாக மாற்றுகிறான் என்பதுதான்.
இப்படியாகத்தான் இலக்கியத்திலிருந்து சினிமா உருவாக வேண்டும்.
(இரண்டு ஆண்டுகளுக்கு முன் தினமலர் தீபாவளி மலரில் வெளிவந்த கட்டுரை)