மெதூஸாவின் மதுக்கோப்பை – முன்பதிவுத் திட்டம்

https://www.youtube.com/watch?v=RR-qivi9xeI

மேலே உள்ள இணைப்பு மெதூஸாவின் மதுக்கோப்பை என்ற என்னுடைய புதிய புத்தகம் பற்றி நான் பேசிய காணொளி.  இதுவரை ரெண்டாயிரத்து சொச்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  இதுவே ஏதாவது சினிமா விவகாரம் என்றால் மூணு நாளில் மூணு லட்சம் தாண்டும்.  உங்கள் புத்தகங்களிலேயே நீங்கள் அதிக சிரமம் எடுத்து எழுதிய நூல் எது என்று கேட்டால் பழுப்பு நிறப் பக்கங்கள் 3 என்று சொல்வேன்.  ஆனால் உங்கள் புத்தகங்களிலேயே உங்களுக்கு அதிகம் பிடித்த புத்தகம் எது என்று கேட்டால் மெதூஸாவின் மதுக்கோப்பை தான்.  ஏனென்றால் –

என் எழுத்தை என் உயிரை விட அதிக முக்கியமாகக் கருதுகிறேன்.  என் தந்தை செத்தாலும் சரி, எழுதி முடித்து விட்டு வருகிறேன் என்றுதான் சொல்வேன்.  நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் விட எழுத்தே முக்கியம் என வாழ்பவன் நான்.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு வந்து கடும் நெஞ்சு வலியுடன், வியர்வையில் தொப்பலாக நனைந்த சட்டையுடன் மருத்துவமனைக்குச் செல்லும் போதும் காயத்ரியிடம், “ஒருவேளை இப்போது இறந்து போனால் இன்னும் ஆறு மாதத்தில் எக்ஸைல் மொழிபெயர்ப்பை முடித்து விடு; இல்லாவிட்டால் ஆவியாக வந்து உன்னைத் துன்புறுத்துவேன்” என்றுதான் சொன்னேன்.

முந்தாநாளும் எப்போதும் போல்தான் படுத்தேன்.  இரவு ஒரு மணி அளவில் கடும் ஆஞ்ஜைனா.  தாடையில் கடும் வலி.  நெஞ்சம் கடுமையாகத் துடித்தது.  Monit 20 போட்டால் ஆஞ்ஜைனா போய் விடும்.  ஆனால் அந்த மாதிரி வலி மாதிரி தெரியவில்லை.  மேலும், கடந்த இரண்டு மாதங்களாக ஆஞ்ஜைனாவே வருவதில்லை.  காரணம், முன்பு ஒருமுறை எழுதியிருந்தேன் அல்லவா, கை வைத்தியமாக வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஒரு மருந்து இருக்கிறது.  அதை உட்கொண்டால் இதயத்தில் இருக்கும் அடைப்புகள் கூட இல்லாமல் போய் விடுவதாகக் கூறுகிறார்கள்.  அது எப்படியோ, அதைச் சாப்பிட்டால் எனக்கு நெஞ்சு வலி, தாடை வலி என்ற ஆஞ்ஜைனா வருவதில்லை.  வருவதே இல்லை.  அது ஒரு miracle concoction.  ஸீரோ டிகிரியில் என் நூல்கள் 1500 ரூபாய்க்கு வாங்கினால் அது என்ன என்று சொல்கிறேன்.

அந்தக் கரைசலை நான் 15 தினங்களாக உட்கொள்ளவில்லை.  நேரமில்லை.  பொதுவாக வெளியூர் போனால் கூட பாட்டிலில் போட்டு நிரப்பிக் கொண்டு தான் போவேன்.  நேரம் கிடைக்காததால் அதைச் செய்யவில்லை.  உஸ்பெக் போகும் போதும் கொண்டு போகவில்லை.  சரி, ஒரு பூண்டைக் கடித்துக் கொண்டு ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.  அதற்கும் ஆஞ்ஜைனாவை விரட்டும் தன்மை உண்டு.  ஆனால் தாஷ்கண்ட்டில் தேன் கிடைக்கவில்லை.  அதாவது, அங்கே போதுமான அளவுக்குக் கடைகளே இல்லை.  அது பற்றிப் பயணக் கட்டுரையில் எழுதுகிறேன்.

ஆக, கரைசலே சாப்பிடாமல் 15 நாள். அவந்திகாவிடம் சொல்லியிருந்தால் செய்து கொடுத்திருப்பாள்.  அவள் கொஞ்சம் செமினார் வேலையில் மும்முரமாக இருந்ததால் சொல்லவில்லை.  முந்தாநாள் மோனிட் 20-ஐப் போட்டும் பயனில்லை.  கடும் வியர்வை.  கடும் வலி.  அவந்திகாவை எழுப்பி ஆட்டோ பிடித்து வரச் சொன்னேன்.  ஆட்டோ கிடைக்கவில்லை.  அதற்குள்ளேயே ராம்ஜியிடம் விஷயம் சொல்லி விட்டேன்.  இதோ பத்து நிமிடத்தில் அங்கே இருப்பேன் என்றார்.  அவர் வசிப்பது பெஸண்ட் நகர்.  ஸ்ரீராம் வெளியூர் போயிருந்ததால் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை.  அப்புறம்தான் தெரிந்தது, வூபருக்கு ஃபோன் செய்தால் உடனே வருவார்களே என்று.  போன் செய்தேன்.  வூபர் வருவதற்குள் ராம்ஜி வந்து விட்டார்.  சொன்னது போல் பத்தே நிமிடம்.  விரட்டிக் கொண்டு வந்திருப்பார்.  காவேரிக்குப் போனோம். நாடித் துடிப்பு 180 இருந்தது.  100 தான் இருக்க வேண்டும்.   ஏதோ Adenosyl என்ற மருந்தை செலுத்தினார்கள்.  ஒரே நிமிடத்தில் 100க்கு வந்து விட்டது நாடித் துடிப்பு.  வலியும் மேஜிக் மாதிரி போய் விட்டது.  அலோபதியைத் திட்டுபவர்கள் இதை கவனிக்க வேண்டும்.  நான் பிழைத்து விட்டேன்.  ஆடைகளை மாற்ற வேண்டும்.  நர்ஸ் கேட்டார், இன்னர்ஸ் அணிந்திருக்கிறார்களா சார்.  அதெல்லாம் பழக்கமே இல்லையே அம்மா என்றேன்.  உடனே சிரித்து விட்டார்.

அப்புறம் இதய நோயாளிகளின் அறையில் எனக்கு ஒரு படுக்கை தரப்பட்டது.  இரவு ஒன்றரை மணி.   காலையில் பத்து மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஃப்ரெஞ்ச் துறையில் அரை மணி நேரம் நான் உரையாற்ற வேண்டும்.  சினிமாவில் வருவது போல் தப்பிப் போய் பேசி விட்டுத் திரும்ப வந்து படுத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  என்ன ஆனாலும் சரி, பேசித்தான் ஆக வேண்டும்.  முக்கியமான  ஃப்ரெஞ்ச்  பேராசிரியர்கள் கூடும் செமினார்.  ராம்ஜியிடம் நான் பேசப் போகும் உரையின் தட்டச்சு வடிவத்தைக் கொடுத்தேன்.  இத்தனை பிரச்சினைக்கிடையிலும் அந்தக் காகிதங்களை கவனமாகப் பிடித்துக் கொண்டே இருந்தேன்.  நான் செல்ல முடியாமல் போனால் இதை காயத்ரியிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள் என்றேன்.  இந்தப் பேச்சை நான் ஒரு மாதமாகத் தயாரித்திருந்தேன்.

நள்ளிரவு இரண்டு மணி.  காலையில் வருகிறேன் என்று சொல்லி ராம்ஜி கிளம்பினார்.  காகிதம் பத்திரம் என்றேன்.  சிறுநீர் வந்தது.  நர்ஸிடம் சொன்னேன்.  ஒரு குவளையைக் கொடுத்தார்.  என்னால் கட்டிலில் உட்கார்ந்தபடி சிறுநீர் கழிப்பது கடினம்; சாத்தியமே இல்லை என்றேன். ஏனென்றால், என் ஆண்குறி கோவைக்காய் அளவுதான் இருக்கும்.  அதை வைத்துக் கொண்டு horizontal-ஆக உட்கார்ந்து சிறுநீர் கழிக்க முடியாது.  இவ்வளவு சிறிசாக இருப்பவர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டாம்.  சைஸுக்கும் ஆண்மைக்கும் சம்பந்தம் இல்லை.  மேலும், கிரேக்க சிலைகளைப் பார்த்தால் அவை எல்லாமே மிகச் சிறிய ஆணுறுப்புடன் காணப்படுவதையே பார்க்கலாம்.  அந்தக் காலத்தில் சிற்பிகளிடம் ஒரு எண்ணம் இருந்தது; சிந்தனையாளர்களுக்கு ஆண் உறுப்பு சிறிதாக இருக்கும் என்று.  மீண்டும் சொல்கிறேன், சைஸுக்கும் ஆண்மைக்கும் சம்பந்தம் இல்லை.  ஆக, எப்படி கட்டிலில் அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிப்பது? கட்டிலின் ஓரத்தில் கால்களைக் கீழே விட்டபடி அமர்ந்து வேண்டுமென்றால் சிறுநீர் கழிக்கலாம்.   என் உடலில் பிணைக்கப்பட்டுள்ள ஒயர்களைக் கழற்ற முடியாதே என்றார் நர்ஸ்.  வேறு வழியே இல்லை என்றேன்.  பிறகு ஒரு பக்க ஒயர்கள் கழற்றப்பட்டு கால்களைக் கீழே விட்டபடி குவளையில் சிறுநீர் கழித்தேன்.  பிறகு தூக்க மருந்து கொடுக்கப்பட்டு உறங்கினேன்.  ஆறு மணிக்கே விழிப்பு வந்து விட்டது.  சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆனால்தானே பத்து மணி செமினாருக்குப் போக வேண்டும்.

போக முடியாது என்றார் டாக்டர்.  போகாவிட்டால் ஹார்ட் அட்டாக் வந்து விடும் என்பதைத் தர்க்க ரீதியாக விளக்கினேன்.  நான் எழுத்தாளன் என்றதும் மிகவும் பரிவுடன் என்னை கவனித்த அந்தப் பெண் மருத்துவர் என் தந்தைக்கு உங்களைத் தெரிந்திருக்கும் என்றார்.   லெக்சர் கொடுத்து விட்டு வந்து ரீ-அட்மிட் ஆகி விடுவீர்களா, நம்பலாமா என்று கேட்டார்.  ஏனென்றால், ஆஞ்ஜியோகிராம் செய்து பார்க்க வேண்டும் என்று முடிவாகி இருந்தது.

எட்டு மணிக்கு வந்தார்கள் காயத்ரியும் ராம்ஜியும்.  வந்த உடனேயே லெக்சருக்கு வேறு ஆள் ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டேன் என்றார் காயத்ரி.  அடுத்த நிமிடமே ஆச்சா போச்சா என்று ஆர்ப்பாட்டம் போட்டு – எல்லாம் உணர்ச்சிவசப்படாமல், மெதுவாகத்தான் – டிஸ்சார்ஜ் ஆகி, லெக்சர் கொடுக்காவிட்டால்தான் பாதிக்கப்படுவேன் என்று சொல்லி அந்த மாற்று ஏற்பாட்டை ரத்து செய்தேன்.  டிஸ்சார்ஜ் ஆகும் போது காலைக்கடன் கழிக்க கழிப்பறை சென்றேன்.  அதுவரை அடக்கி வைத்திருந்தேன்.  டிஸ்சார்ஜ் ஆவதற்குள் சொன்னால் அதற்கு ஒரு டப்பா கொடுப்பார்கள்; படுக்கையிலேயே அதை வைத்துப் போக வேண்டும்.  அந்த ஒரு கொடுமைக்காகவே உடம்புக்கு எதுவும் வராமல் பார்த்துக் கொள்கிறேன் நான்.

ஒன்பதரைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து முகச்சவரம் மட்டும் பண்ணி விட்டு,  குளிக்காமலேயே பல்கலைக்கழகம் கிளம்பினேன்.  கீநோட் அட்ரெஸ்.  பேசிக் கொண்டிருக்கும் போது எதிரே அமர்ந்திருந்த காயத்ரியைப் பார்த்தேன்.  வலது கையால் அவர் கழுத்தை சீவிக் காண்பித்தார்.  ஓஹோ, செம கழுத்தறுப்பா என்று நினைத்தபடி பேசி முடிக்கும் வரை அவர் பக்கமே திரும்பவில்லை.  காயத்ரியிடமிருந்து பாராட்டு பெறுவது ரொம்பக் கஷ்டம்.  விமர்சனம் ரொம்ப சுலபமாக வரும்.  பேசி முடித்த பிறகுதான் தெரிந்தது, அந்தக் கழுத்தறுப்பு சைகையின் அர்த்தம், நேரம் முடிந்து விட்டது என்றாம்.

உடனேயே என் மருத்துவர் சிவகடாட்சத்தைப் பார்த்தோம்.  ஆஞ்ஜியோகிராம் தேவையில்லை என்றார். ஏற்கனவே அதைச் செய்திருக்கிறோம்.  50 சதவிகித பிளாக் உள்ளது.  இனிமேல் ஆஞ்சியோ வலி வராமல் இருக்க இரண்டு மாத்திரைகள் கொடுத்தார்.  உடல்நலனில் கவனமாக இருக்கும் எனக்கு எப்படி palpitation வந்தது என்று கேட்டேன்.  இன்னும் காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றார்.  அதிகம் காஃபி குடிப்பதால் கூட வரலாமாம்.  யோசித்தேன்.  உஸ்பெக்கில் பேரழகிகள் படுக்க அழைத்தபோது கூட மறுத்து விட்டு, வெறுமனே அரை நிமிடம் நடனம் ஆடினேன்.  அப்புறம் எப்படி?  பதினைந்து நாள் கரைசல் மருந்தைக் குடிக்காததுதான்.  இரண்டு விஷயங்களைப் புதிதாகச் செய்திருந்தேன்.  நண்பர்களோடு சேர்ந்து கொண்டு பத்து கி.மீ. நடப்பது; ஜிம்மில் பயிற்சி செய்வது – இரண்டையும் உடனடியாக நிறுத்தச் சொன்னார் டாக்டர்.  இன்னொரு விஷயத்தைச் சொல்லவில்லை.  இரண்டு மாதமாகத் தொடர்ந்து blue balls தொல்லை இருந்து வந்தது.  மனதை ஒருமுகப்படுத்தி வேலையின் பக்கம் செலுத்தினாலும் அது பாட்டுக்கு ஒரு பக்கம் segregate ஆகி வலித்துக் கொண்டிருந்ததால், ரெண்டு நாட்களுக்கு முன்னர் ஒரே தடவையில் ரெண்டு முறை அதை வெளியேற்றினேன்.  அது கூட காரணமாக இருக்கலாம்.  ப்ளூபால்ஸ் வலி வந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் பாடு.

சரி, எப்படியோ பிழைத்து விட்டேன்.  மதியம் சாப்பிட்டு விட்டு, நண்பன் அனுராக் காஷ்யப் நடித்த இமைக்கா நொடிகள் படத்துக்குப் போனோம்.  அனுராக் பின்னி எடுத்திருந்தார்.  அட்டகாசமான நடிப்பு.  மற்றபடி படம் கொலைவெறி போர்.  அனுராகிடம் பேசி வாழ்த்து சொன்னேன்.

இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், இப்படி உயிரையும் மதிக்காமல் மெட்றாஸ் பல்கலைக்கழகத்தின் ஃப்ரெஞ்ச் துறையில் நான் என்ன பேசினேன் என்பதன் விளக்கமான பதிப்புதான் மெதுஸாவின் மதுக்கோப்பை.  முன்பதிவு செய்யுங்கள்.  புத்தகம் தயார்.  மிகக் கெட்டியான, தரமான அட்டை.  முன்பதிவில் 250 ரூபாய்க்குக் கிடைக்கும்.  முன்பதிவு செப்டம்பர் 10 வரை மட்டுமே.  11க்குப் பிறகு நூலின் விலை 350 ரூபாய்.  முந்துங்கள்.

பின்குறிப்பு: வீட்டுக்குத் திரும்பியதும் அவந்திகா அந்த concoction-ஐச் செய்து வைத்திருந்தாள்.  இப்போது அதைச் சாப்பிட்டு வருகிறேன்.

முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

https://tinyurl.com/medusacharu

தொலைபேசி எண்: 99624 45000