தமிழின் சமகால எழுத்து…

என் நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார், தமிழின் சமகால எழுத்தை தான் படிப்பதில்லை என்று.  ஏனென்றால், என்னுடைய சக எழுத்தாளர்கள் யாரும் என்னைப் படிப்பதாக/படித்ததாகத் தெரியவில்லை.  அப்படியிருக்கும் போது நான் ஏன் அவர்களைப் படிக்க வேண்டும்?  இதே கேள்வி எனக்குள்ளும் அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கிறது.  தன் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி என்னைக் கேட்பவர்கள் என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்களையோ, ராஸ லீலாவையோ, எக்ஸைலையோ, காமரூப கதைகளையோ படித்திருக்கிறார்களா?  இல்லையெனில் நான் ஏன் அவர்கள் எழுதுவதைப் படிக்க வேண்டும்?  மேலும், நான் தமிழ் ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் புழங்கிக் கொண்டிருப்பவன்.  இந்தியா ஆங்கில எழுத்தாளர்களைக் கடுமையாகச் சாடிக் கொண்டிருப்பவன்.  விக்ரம் சேட்டைப் படிக்காமல் நான் எப்படி அவரை விமர்சிக்க முடியும்?  வி.எஸ். நைப்பால் சமீபத்தில் காலமானார்.  சிறுவயதில் அவருடைய india: a wounded civilization மற்றும் an area of darkness என்ற நூல்களைப் படித்திருக்கிறேன்.  ஆனால் ஒரு வட இந்திய எழுத்தாளர் என்னோடு உரையாடிக் கொண்டிருந்த போது, “நீங்கள் வி.எஸ். நைப்பாலைப் போலவே பேசுகிறீர்கள்” என்று சொன்னபோது நைப்பாலின் எ ஹௌஸ் ஃபர் மிஸ்டர் பிஸ்வாஸ் நாவலைப் படித்ததில்லையே என்று விசனப்பட்டேன்.  இப்போது அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், இளைஞர் ஒருவரின் சிறுகதைத் தொகுதி ஒன்றை இப்போது படித்தேன்.   ஒரு கதை கூடத் தேறாது.  நண்பர் ஆ. மாதவன், தி.ஜா, தி.ஜ.ர., அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா., சார்வாகன், செல்லப்பா, க.நா.சு., வண்ணநிலவன் என்று யாரையுமே படித்ததில்லை என்று தொகுப்பைப் படிக்கும் போது நன்றாகவே தெரிந்தது.  ஒரு டென்னிஸ் ஆடுவதற்குக் கூட தினம் இரண்டு மணி நேரப் பயிற்சி தேவைப்படுகிறது.  டென்னிஸ் ஆடுவதால் சமூகத்திற்கு என்ன பயன்?  ஆடும் நபர் ஆரோக்கியமாக இருக்கலாம்.  அப்படி இருக்கும் போது ஒரு சமூகச் செயல்பாடான எழுத்தை எப்படி இவர்கள் இத்தனை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்?