மெதூஸாவின் மதுக்கோப்பை வெளிவந்து விட்டது…

ஃப்ரெஞ்ச் பெண்ணியவாதியான ஹெலன் சிஸூ காந்தி பற்றி ஐந்து மணி நேரம் நிகழ்த்தப்படக் கூடிய நாடகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தியர்கள் பார்த்து, படித்து, விவாதிக்கப்பட வேண்டிய இந்த நாடகம் பற்றி இந்தியாவில் இதுவரை ஒரு வார்த்தை கூட யாரும் பேசியதாகத் தெரியவில்லை. மெதூஸாவின் மதுக்கோப்பையில் இந்த நாடகம் பற்றி விரிவாக அறிமுகப்படுத்தியிருக்கிறேன். மெதூஸாவின் மதுக்கோப்பை கெட்டி அட்டையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கடைகளில் 350 ரூ. இப்போது ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் இன்னும் சில நாட்களுக்கு 250 ரூபாய்க்குக் கிடைக்கும். புத்தகம் வெளிவந்து விட்டது. பணம் அனுப்பினால் புத்தகம் உடனே அனுப்பப்படும். விபரம் காமெண்ட் பாக்ஸில் கொடுத்திருக்கிறேன்.

ஃப்ராய்டின் சூன்யக்காரி மெதூஸாவை நிராகரித்து 1975-இல் ஹெலன் சிஸூ எழுதிய மெதூஸாவின் சிரிப்பு என்ற கட்டுரை பற்றிப் பார்த்தோம். பின்னர் 1987-இல் L’Indiade ou l’Inde de leurs rêves (The Indiad or India of Their Dreams) என்ற நாடகத்தை எழுதினார் சிஸூ. (நம்முடைய ஃப்ரெஞ்ச் இலக்கிய வாசிப்பை ஜான் ஜெனே, ஆல்பர் கம்யுவோடு நிறுத்திவிட்டது நாம் செய்த மிகப் பெரிய தவறு.) இந்த ஐந்து மணி நேர நாடகம் 1937-இலிருந்து 1948 வரை இந்தியாவில் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சம்பவங்களைப் பேசுகிறது. நேரு, ஆஸாத், பட்டேல், பாதுஷா கான், சரோஜினி நாயுடு போன்ற காங்கிரஸ் தலைவர்கள் முஸ்லீம் லீகுடன் நடத்திய பேச்சு வார்த்தை, காங்கிரஸ் கட்சி மதச் சார்பற்ற ஒருங்கிணைந்த இந்தியாவைக் கேட்க, முகம்மது அலி ஜின்னா இந்தியாவிலிருந்து பிரிந்த இஸ்லாமிய நாட்டைக் கேட்கும் வரலாற்று நிகழ்வுகள், இந்து முஸ்லீம் கலவரம் போன்ற பல விஷயங்கள் நாடகத்தில் இடம் பெறுகின்றன. இந்த நாடகத்தில் காந்தி ஒரு பிரதான பாத்திரம். ஒரு காட்சியில் காந்தி தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட தலித்துகளின் பாதங்களைக் கழுவுகிறார். (ஐரோப்பிய சூழலில் இது போன்ற காட்சிகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் இந்தியா பற்றி எழுதப்பட்ட இந்த நாடகம் தமிழில் இதுவரை பேசப்பட்டதே இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.) காந்தியின் படுகொலையோடு நாடகம் முடிகிறது.

மெதூஸாவின் சிரிப்புக்கும் ‘இந்தியா’ நாடகத்துக்கும் என்ன சம்பந்தம்? பிரபஞ்ச அன்பு. ஃப்ராய்டிடம் நாம் கண்ட துர்த்தேவதையான மெதூஸா சிஸூவிடம் புன்னகைக்கும் தேவதையாக மாறியது போல் மனித வெறுப்பே முற்றிலுமாக ஆக்ரமித்திருந்த சுதந்திரத்துக்கு முந்தைய பத்தாண்டுகளை காந்தியின் பிரபஞ்ச அன்பு வெல்ல முயற்சித்தது எப்படி என்பதுதான் சிஸூவின் ‘இந்தியா’ நாடகத்தின் அடிப்படை.

அதே சமயம் காந்தியின் பிரபஞ்ச அன்பு அன்றாட வாழ்வில் தோல்வியடையும் தருணத்தையும் நாடகம் காட்சிப்படுத்துகிறது. நாடகத்தில் வரும் விவசாயி ராஜ்குமாரின் அண்டை வீட்டுக்காரன் அவனைத் துன்புறுத்திக்கொண்டிருக்கிறான். ராஜ்குமார் எந்த எதிர்வினையும் புரிவதில்லை. காந்தியின் அகிம்ஸையையே பின்பற்றி காந்தியின் வருகைக்காகக் காத்திருக்கிறான். காந்தி வரவில்லை. மதக் கலவரம் தீவிரமடையும் தருணத்தில் ராஜ்குமாரின் வீட்டையும் மனைவியையும் மகளையும் பறித்துக்கொள்கிறான் அண்டை வீட்டுக்காரன். அப்போது வேறு வழியில்லாமல் ராஜ்குமார் அண்டை வீட்டுக்காரனின் மகனைக் குத்திக் கொல்கிறான். மதக் கலவரம், காங்கிரஸ் – முஸ்லீம் லீக் கட்சிகளின் அவரவருக்கான நியாயங்கள், மக்கள் போராட்டம் எல்லாமே நாடகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. நாடகத்தில் மூன்று பிரம்மாண்டமான ஊர்வலக் காட்சிகளும் வருகின்றன. கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி கதறி அழும் காட்சியும் வசனமும் ஐரோப்பியப் பார்வையாளர்களை ஸ்தம்பிக்க வைத்தது.

“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்
நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்
அறுபத்திரண்டு ஆண்டுகள் நீ எனக்குத் தாய்ப்பால் கொடுத்தாய்
நான் உனக்குத் தாய்ப்பால் கொடுத்தேன்
நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்
என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டாயே, என் தாயே…
வெறுப்பூட்டும் விதிக்குப் பிறந்த நான் என்னை நினைத்துக் கதறிக் கொண்டே மரணத்தைக் கடந்து செல்கிறேன்
உன்னை அமைதியுறச் செய்யும் அக்கினியின் கொழுந்துகள், என் ஆன்மாவைக் கடுங்குளிரில் நடுங்கச் செய்கின்றன.”

(இந்தக் கடைசி வரியை வேறு மாதிரி மொழிபெயர்க்கலாம்.)

“எரியும் உன் தகன நெருப்பின் குளிரில் நடுங்குகிறது என் ஆத்மா”.

கிட்டத்தட்ட ஒரு தமிழ்க்கிழவியின் ஒப்பாரிப் பாடலை ஒத்த அந்த வசனத்தில் ஒரு ஃப்ரெஞ்ச் பெண்ணியவாதியான ஹெலன் சிஸு இந்திய வாழ்வின் ஆன்மாவையே தொட்டுவிட்டார் என்பது என்னைத் திகைக்கச் செய்தது.

நாடகத்தின் மற்றொரு முக்கிய தருணம், இந்துக்களால் நிரம்பியுள்ள காங்கிரஸ் கட்சியால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என்று நினைக்கிறார் ஜின்னா. அப்போது ஹரிதாஸி என்ற வங்க யாத்ரீகப் பெண் ஜின்னாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதத்தின் முடிவில் சிஸு எழுதுகிறார்: “என் தாய்க்கு நிகரான ஒரு பசு மிதித்து கோழிக் குஞ்சு இறந்ததில்லை.”

இந்த நாடகத்தைப் பார்வையாளர்கள் வெறும் நாடகமாக மட்டுமே பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார் சிஸு. “எங்கள் நடிகர்களைப் போலவே நீங்களும் இதில் பாத்திரங்கள்தான். நொடிக்கு நொடி, காட்சிக்குக் காட்சி எங்கள் நடிகர்கள் இந்த நாடகத்தில் ஒரு metamorphosis-க்கு உள்ளாகிறார்கள். அதே மாற்றம் உங்களுக்கும் ஏற்படும். நாடகத்தின் ஒத்திகையிலிருந்தே நீங்கள் இந்த நாடகத்தைப் பார்வையிடலாம்.”

நாடகத்தின் போதே நடிகர்கள் பார்வையாளர்களுடன் பேசினார்கள்; உரையாடினார்கள்; எதிர்வினை செய்தார்கள். ஏனென்றால், இந்த நாடகத்தைப் பொறுத்தவரை அவர்கள் பார்வையாளர்கள் அல்ல; பங்கேற்பாளர்கள். வங்க யாத்ரீகரான ஹரிதாஸி நேரடியாக பார்வையாளர்களிடம் பேசுகிறாள். அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிறாள். அவர்களும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளச் செய்கிறாள். கடைசியில், உங்கள் கண் முன்னே இந்தியாவைக் காண்பிக்கப் போகிறேன் என்கிறாள். அந்த வகையில் இந்நாடகத்தின் பார்வையாளர்களை ‘இந்திய வாழ்க்கையைக் காண வந்த மேற்கத்தியப் பயணிகள்’ என்று வர்ணிக்கலாம்.

https://tinyurl.com/medusacharu
தொலைபேசி எண்: 99624 45000