கொண்டாட்டம்

நண்பன் ஒருவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக மேடவாக்கம் சென்றிருந்தேன்.  முந்தாநாள் இரவு ஒன்பது மணிக்கு மைலாப்பூரிலிருந்து கிளம்பினேன்.  கூகுள் மேப் மூலம் இடத்தை அடைந்த போது பத்து மணி.  ஆனால் கார் போய் நின்ற இடம் என் தங்கை வீடு.  அதிர்ந்தே போய் விட்டேன்.  ஏழெட்டு ஆண்டுகளாயிற்று தங்கை வீட்டுக்குப் போய்.  பார்த்தால் தங்கைக்கு மனக்குழப்பம் ஆகிவிடும்.  அண்ணன் இன்னும் அப்படியே இருக்காங்களே என்று பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கும்.  நல்லவேளை, இரவு பத்து மணி ஆகியிருந்ததால் வாசலில் யாரும் இல்லை.  ஒரு தீவிரமான அபத்த நாடகத்தில் நான் ஒரு பாத்திரமாகி விட்டது போல் இருந்தது.

அப்புறம்தான் விஷயம் தெரிந்தது.  தங்கை வீட்டுக்குப் பக்கத்தில் நான் செல்ல வேண்டிய இடத்தைப் போல் பெயர் கொண்ட ஒரு விடுதி இருந்தது.  அந்த இடம் மேடவாக்கம் அல்ல. கௌரிவாக்கம்.  அதிலும் கௌரிவாக்கத்தின் உள்ளே போனால் வரும் வேங்கைவாசல்.  காரைத் திருப்பிச் செலுத்தி மேடவாக்கத்தில் குறிப்பிட்ட இடத்தைப் பத்து பத்துக்கு அடைந்தேன்.

பார்ட்டி ஆரம்பமாகியிருந்தது.  என்னைப் போன்ற துறவிக்கு என்ன பார்ட்டி?  ஏற்கனவே நண்பர் ராமுக்கு போன் செய்து மாலையில் சந்திக்கிறோம்தானே என்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தேன்.  மது அருந்தாத கோஷ்டி சேர்க்க வேண்டுமே?  ராம் இப்போது அடிப்பதில்லை சார் என்று சொல்லியிருந்ததால் உற்சாகமானேன்.  ராம் இல்லை.  ஆனால் பவா இருந்தார்.  பவாவோடு வஞ்சிரம் மீன், கேரட், வெள்ளரி எல்லாம் சாப்பிட்டேன்.  பிறகு பேரழகி சுமதியோடும் சுமதியின் பாவாவோடும் சேர்ந்து கொண்டேன்.

பதினோரு மணி வாக்கில் பாரதிராஜாவும், ராமும் வந்தார்கள். அப்புறம் அரை மணி நேரம் கழித்து மனுஷ்ய புத்திரன் வந்தார்.  அவரைப் பார்த்ததும் நைஸாக நழுவி வேறு இடத்துக்குப் போய் விட்டேன்.  அதற்குப் பிறகு அவர் இருக்கும் பக்கமே போகவில்லை.  மனுஷ்ய புத்திரனுடனேயே எப்போதும் காணப்படும் தேவதையை அன்றைய தினம் காணோம் என்பதையும் ஒரு பக்கம் மனம் குறித்துக் கொண்டது.

மனுஷ்ய புத்திரனின் ஒரு கவிதை வாசிக்கப்பட்டது.  ஸீரோ டிகிரியிலிருந்து ஒரு பகுதியை பவா வாசித்தார்.  பிறகு அதே பத்தியை நானும் வாசித்தேன்.  பனிரண்டு மணிக்கு கேக் வெட்டப்பட்டது.  நடிகர் உதயநிதியும் பிறந்த நாள் கொண்டாடும் நண்பரும் கேக் வெட்டினார்கள்.

இரு நண்பா, டான்ஸ் ஆடலாம் என்றார் நண்பர்.  சரக்கு அடிக்காமல் என்னால் டான்ஸ் ஆட முடியாது.  எனவே என் வாழ்விலிருந்து சரக்கு போன போதே டான்ஸும் போய் விட்டது.  அதனால் பனிரண்டரைக்குக் கிளம்பி விட்டேன். அன்றைய தினம் பலரும் டான்ஸ் ஆடினார்கள் என்றும் அதில் ஒரே ஒருத்தர் தான் பட்டையைக் கிளப்பி விட்டார் என்றும் மறுநாள் பல நண்பர்கள் சொன்னார்கள்.  விடியோவும் எடுக்கக் கூடாது, புகைப்படமும் எடுக்கக் கூடாது என்று எச்சரித்து விட்டுத்தான் ஆடினார் என்றும் அறிந்தேன்.  அவர் ஆடுவார்.  அதில் எனக்கு ஆச்சரியம் இல்லை.  நடிப்பு அவருக்குக் கை வந்த கலை.  ஆனால் நடிக்கவில்லை.  நடித்திருந்தால் நிச்சயமாக கமல், ரஜினி உயரம் சென்றிருப்பார்.

வீட்டுக்குத் திரும்பியதும் உறங்க முடியவில்லை.  20 ஆண்டுகள் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகிய நண்பன் பக்கத்தில் இருந்தும் அவனோடு பேசாமல் வந்தது இதயத்தைப் பிழிந்தது.  அவனாவது நம்மை அழைத்திருக்கலாமே என்றும் தோன்றியது.  அப்படி என்ன எங்களுக்குள் பிரச்சினை?  அவன் என்னைத் திட்டுவது என்ன புதிதா?  மன உளைச்சல் ஏற்பட்டால் என்னைத் திட்டுவான்.  நானும் ஏதாவது அவனைத் தூண்டி விட்டிருப்பேன்.  மறுநாள் –அதாவது நேற்று மதியத்துக்கு மேல் கிளம்பி – நேராக – முன்னாலேயே அப்பாய்ண்ட்மெண்ட் வாங்காமல் போனது அதுதான் முதல் முறை – அவன் அலுவலகத்துக்குப் போய் விட்டேன்.

ஹமீதைப் பார்க்கும் போது ஏதாவது தின்பண்டம் வாங்கிப் போவது என் வழக்கம்.  அவனுக்கு சம்ஸா பிடிக்கும் என்று நினைத்து கிராண்ட் ஸ்வீட்ஸ் கடையில் போய் கேட்டேன்.  அக்ரஹாரத்தில் பிரியாணி கிடைக்குமா என்ன?  முறுக்கு இருக்கு என்றார்கள்.  முறுக்கும் வெல்லச் சீடையும் வாங்கிக் கொண்டேன்.

முறுக்கைப் பார்த்ததும் ”ஐயோ, என் வீக்னஸ் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?  யார் சொன்னது?” என்று கேட்டான். ”ஓஹோ, அப்போ சம்ஸா?”  “அது என்னைப் பற்றிய பல கட்டுக்கதைகளில் ஒன்று.”

“ஆமாம், என்னைப் பார்த்தும் பார்க்காதது போல் திரும்பிக் கொண்டது ஏன்?  அவ்வளவு நேரம் இருந்தும் ஏன் என்னிடம் பேசவில்லை?  அந்தப் பஞ்சாயத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் வந்தேன்” என்றேன்.  எத்தனை காலம் உன்னோடு பழகி இருக்கிறேன், ஹமீது?  இதைக் கூடவா கற்றுக் கொண்டிருக்க மாட்டேன்?

உடனே ஹமீது “அப்படியா?  சாரி சாரி… நீங்கள்தான் நான் வந்ததும் அப்பால் போய் விட்டீர்கள் என்று சொன்னார் சுமதி” என்றார்.  (இருக்கட்டும் சுமதி, கவனித்துக் கொள்கிறேன்!)

ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.

பின்குறிப்பு:  என்னைக் கொலை செய்யப்போவதாக முகநூலில் மிரட்டிய நண்பர்களுக்கும் முறுக்கு வாங்கி வைத்திருக்கிறேன். ஏனென்றால், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஒரு காதல் தோல்வியினால் மனம் மிக உடைந்து பல தற்கொலை முயற்சிகளுக்கு முயன்று, அம்முயற்சிகளிலும் தோற்று நடைப்பிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைக் கொலை செய்து இந்தத் துன்பத்திலிருந்து யாரேனும் என்னைக் காப்பாற்றினால் அவர்களுக்கு நான் நன்றிதானே சொல்ல முடியும்?

image1(4) image1(5)