village rockstars

வேளச்சேரியில் உள்ள பிவிஆர் மால் என்ற இடத்தில் மாலை 7.20 காட்சி மட்டுமே ஓடும் அஸ்ஸாமியப் படமான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற படத்தை நேற்று பார்த்தேன். அராத்து முகநூலில் எழுதியிருந்ததைப் படித்திருக்காவிட்டால் இப்படி ஒரு படம் வந்திருப்பதே எனக்குத் தெரிந்திருக்காது. முகநூலை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்று அடிக்கடி எனக்குத் தோன்றும். உலகத்தோடு எனக்கு இருக்கும் ஒரே தொடர்பு முகநூல் மட்டும்தான். அதையும் விட்டு விட்டால் இப்படிப்பட்ட காவியங்களையும் விட்டு விடுவேன். எனக்கு ஒரு போன் போட்டு இன்ன படத்தைப் பாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ஒரு தோழி இன்னும் கிடைக்கவில்லை.

மேற்குத் தொடர்ச்சி மலை என்ற படத்தைப் பற்றி எல்லோருமே ஆகா ஓகோ என்று கூவினார்கள். என்னால் இடைவேளை வரை கூட அந்தப் படத்தைப் பார்க்க முடியவில்லை. காரணம், அந்தப் படத்தில் Pleasure of the text என்பது இல்லவே இல்லை. அந்தப் படம் ஏன் ஒரு நல்ல படம் இல்லை என்று வில்லேஜ் ராக்ஸ்டார்ஸைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படத்திலும் கொடூரமான வறுமைதான் காண்பிக்கப்படுகிறது. குழந்தைகள் வெறும் வெள்ளைச் சோற்றை அதில் ஊற்றிக் கொள்ள குழம்பு கூட இல்லாமல் உப்பைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுகின்றன. குழம்பு ஊற்றும்மா என்றால் அவள் அதைக் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட வறுமையைப் பார்க்கும் போது கூட நமக்கு அலுப்புத் தட்டாமல் இடைவேளை எப்போது வரும், தப்பி ஓடலாம் என்றெல்லாம் தோன்றாமல் இருக்கிறதே ஏன்? சொல்கிறேன். படத்தில் வரும் 13 வயதுச் சிறுமி ஒரு ஆடு வளர்க்கிறாள். அதை அவள் கொஞ்சும் போதெல்லாம் நாம் சொர்க்கத்தைக் காண்கிறோம்.

ஒரு இடத்தில் அந்தச் சிறுமியைக் கொஞ்சுகிறது. அது போன்ற ஒரு காட்சியை என் சினிமா வாழ்விலேயே கண்டதில்லை. சிறுவர்கள் மரத்தை வெட்டி அதில் பொம்மை கிதார் செய்கிறார்கள். அதையே சுரண்டி சுரண்டி வாசிக்கிறார்கள். ஒரு பெரியவர் அந்தச் சிறுவர்கள் எல்லாரையும் குச்சியால் அடித்து விரட்டுகிறார். எல்லா குட்டிகளும் தெறித்து ஓடுகின்றன. பார்வையாளர்கள் சிரித்து மாய்கிறார்கள்.

சிறுவர்களுக்கு உணவு இல்லை. ஊரே வெள்ளக்காடாகிறது. ஆனாலும் சிறுவர்கள் மரத்தின் மேல் ஏறி வானரங்களைப் போல் கிளைகளோடு கிளைகளாக படுத்துக் கிடக்கின்றன. இப்படி நூறு காட்சிகள்.

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் ஒரு திரைக்காவியம். க்ளாஸிக்.