ராட்சசன்

திரைக்கதையில் ராட்சசன் போல் சுத்தமாக இருந்த ஒரு தமிழ் சினிமாவைப் பார்த்ததில்லை என்ற அர்த்தத்தில் ராஜேஷ் எழுதியிருந்த பதிவைப் பார்த்து விட்டு, நேற்று ராட்சசன் போனேன். இயக்குனர் ராம்குமார்.

நான் கொரியன் த்ரில்லர் படங்களையும் அடிதடி சண்டைப் படங்களையும் மிக விரும்பிப் பார்ப்பவன். சொல்லப்போனால் என் ஒரே பொழுதுபோக்கு அதுதான். கிட்டத்தட்ட எல்லா கொரியன் படங்களையும் பார்த்து விட்டதால் இப்போது ஹாலிவுட் சீரியல்களைப் பார்க்கிறேன். ஆனால் கேம் ஆஃப் த்ரான்ஸ் அளவுக்கு விறுவிறுப்பான சீரியல்கள் கம்மிதான். Breaking bad, narcos எல்லாம் பிரமாதம்.

இப்படியாக நான் ஒரு த்ரில்லர் விரும்பியாக இருக்கும் அனுபவத்தில் சொன்னால், I saw the devil அளவுக்குப் பிரமாதமான ஒரு த்ரில்லரைப் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு த்ரில்லர் படம் தமிழில் எடுக்கப்படும் சாத்தியம் உண்டா என்றெல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

இப்போது I saw the devil மாதிரி ஒரு த்ரில்லர் தமிழில் வந்து விட்டது. இரண்டரை மணி நேரப் படத்தில் ஒரு நொடி கூட சோர்வாகவோ அலுப்பாகவோ இல்லை. வழக்கமான பாடல்கள், காமெடி, டூயட் போன்ற கண்றாவிகளும் இல்லை. படத்தின் மர்ம முடிச்சுகள் மிகக் கச்சிதம். இயக்குனர் ராம்குமார் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பெண் அனாயாசமாக நடித்திருக்கிறார். வாத்தியாராக நடித்திருக்கும் மனிதரின் முகத்தைப் பார்த்தாலே வில்லத்தனம் தெரிகிறது. மகாநதியின் துலுக்காணம் ஞாபகம் வந்தது.

படத்தில் nuances அதிகம். ஒரே ஒரு nuance மக்களுக்குப் புரிந்திருக்காது. அதை இயக்குனர் கொஞ்சம் அதிக நொடிகள் கேமராவில் காண்பித்திருக்கலாம். ராதா ரவி சாகும் போது ஹீரோவுக்கு சமிக்ஞை கொடுப்பதற்காக ரத்தக் கறை படிந்த தன் கையைத் தரையில் வைத்து அழுத்தியிருப்பார். அப்படி அழுத்தும் போது ஆறு விரல்கள் வருவது போல் இன்னொரு விரலை எக்ஸ்ட்ராவாகப் பதிந்திருப்பார். அதைப் பார்த்து கொலையாளிக்கு ஆறு விரல்கள் இருக்கும் என்பதை ஹீரோ யூகிப்பார். இது டான் ப்ரௌனின் டாவின்ஸி கோடில் வருகிறது. இதே போல் ஆறு விரல் என்று சமிக்ஞை கொடுப்பது. இது காப்பி இல்லையா என்றார் ராகவன். சாமி, டாவின்ஸி கோடிலிருந்து எடுப்பதெல்லாம் பெரிய விஷயம். சப் டெக்ஸ்ட் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட nuances தான் ஒரு படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கின்றன என்றேன். அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் புரிய வைத்திருக்கலாம்.

அற்புதமான முதல் தரமான த்ரில்லர். ராம்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.