நான் பலமுறை சொல்லியும் எழுதியும் நண்பர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நானோ வெறுமனே வாய்வார்த்தையாகச் சொல்பவன் அல்ல. எனவே மீண்டும் நினைவூட்டுகிறேன். புத்தகங்களுக்காகக் கொடுக்கப்படும் ராயல்டி பணம் என்னுடைய சோப்பு செலவுக்குக் கூட காணாது. பதிப்பகங்களும் பெரிதாகப் பணம் ஈட்டுவதாகத் தெரியவில்லை. ஆனாலும் பதிப்பகங்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதையெல்லாம் ஏதோ passion என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் புத்தக வெளியீட்டு விழாவுக்காக தினந்தோறுமே அழைப்பு வருகிறது. நான் ஏற்கனவே எழுதினேன், அப்படி அழைப்பவர்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் 10,000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினால் நான் வருகிறேன் என்று. அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி தான். எந்தப் பயனும் இல்லை. நேற்று பாருங்கள். Behind Woods என்ற அமைப்புக்காக இரண்டு மணி நேரம் பேட்டி கொடுத்தேன். இலவசம்தான். ’இதற்கெல்லாமா காசு கேட்பார்கள்? உங்களுக்கு விளம்பரம் இல்லையா?’ என்பார்கள் நண்பர்கள். அது சரி. என்னுடைய இரண்டு மணி நேரம் இலவசமாகக் கிடைப்பது இல்லையே? இந்த எண்ணமெல்லாம் மனசில் ஓடினாலும் இரண்டு மணி நேரம் செலவழித்து அந்தப் பேட்டியைக் கொடுக்கத்தான் செய்தேன்.
ஆனால் புத்தக வெளியீட்டுக்கும் அப்படி வர இயலாது. ஊரெல்லாம் கொண்டாடுகிற அப்துல் கலாமே அவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு கூட்டத்துக்கும் சந்திப்புக்கும் ஒரு விலை வைத்திருந்தார். பணமாக வாங்க மாட்டார். அவருடைய புத்தகத்தில் 500 பிரதி வாங்க வேண்டும். ஒரு லட்சம் ரூபாய். வைரமுத்துவும் அப்படித்தான். ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் 50000 இலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வாங்குகிறார்கள்.
எனவே, நான் வர வேண்டுமானால் 10,000 ரூபாய்க்கு ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் என் புத்தகங்களை வாங்குங்கள். இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். அந்தப் பதிப்பகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் என் நண்பர்கள். அவ்வளவுதான். இப்போது கெட்ட வார்த்தை என்ற என் புத்தகம் வர இருக்கிறது. 340 ரூபாய் புத்தகம் 275 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதை ஒரு 50 பிரதி வாங்கினால் உங்கள் நிகழ்ச்சிக்குப் பேச வருகிறேன். இல்லாவிட்டால் என் கணக்கில் 5000 ரூபாய் சேர்த்து விடுங்கள். வருகிறேன். இந்த இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் அன்றைய தினம் நான் வெளியூர் போய் விடுவேன். 40 வருஷ காலம் ”ஓசி ஓ…” போதும்யா. ஆளை விடுங்கள்.