அராத்துவின் புதிய நாவல் பொண்டாட்டி பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல இருக்கிறது. டால்ஸ்டாய், வ்ளதிமீர் நபகோவ் போன்ற மேதைகள் ஆண் பெண் உறவுச் சிக்கலை பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். சமகால இலக்கியத்தில் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இன்றைய வாழ்க்கையில் ஆண் பெண் உறவு எப்படி இருக்கிறது, எவ்வளவு சிக்கலாகவும் சிடுக்குகள் மிகுந்தும் இருக்கிறது என்று உலக இலக்கியத்தில் பொண்டாட்டி நாவல் அளவுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஆக உலக அளவிலேயே இன்றைய பெண் பற்றிய முதல் பதிவு பொண்டாட்டி நாவல் தான். என் கூற்றை நம்பாதவர்கள் வேறு நாவல் பெயரைச் சொல்லலாம். அந்த வகையில் பொண்டாட்டி நாவலை ஹங்கேரிய மொழியில் மொழிபெயர்த்தால் கூட அந்த தேசத்துப் பெண்களால் இந்த நாவலைத் தங்களோடு அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அராத்து பாவ்லோ கொய்லோ சேட்டன் பகத் அளவுக்குப் பிரபலமாவார்… பொண்டாட்டி ஒரு தீவிரமான இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அதன் content எல்லோராலும் வாசிக்கப்படக் கூடியதாக உள்ளது.