புத்தக விழா – 2

சென்னை புத்தக விழா இன்று தொடங்கி விடும். என் நண்பர்கள் ராம்ஜியும் காயத்ரியும் ஆரம்பித்த ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் எழுத்து பிரசுரம் பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 696 & 697. வலமிருந்து பார்த்தால் முதல் வரிசையிலேயே இருக்கும். இடமிருந்து பார்த்தால் கடைசி வரிசை. வரிசையின் இடது பக்கம் 696 & 697. கண்டு பிடிக்க சுலபம்தான். அரங்கு எண்களை ஞாபகம் வைத்துக் கொள்வதும் சுலபம்தான். எனக்குப் பிடித்த, நான் அடிக்கடி குறிப்பிட்டு வந்த Hermit of the 69th Street. அதில் வரும் 69. அதை அடுத்து 6 மற்றும் 7.

இந்தப் புத்தக விழாவின் ஹைலைட் என்று நான் பார்ப்பது அராத்துவின் பொண்டாட்டி நாவல். முதல் நாளே ஏற்காட்டில் 50 பிரதிகள் விற்று விட்டன. முன்பதிவில் 100 பிரதி. நானும் அராத்துவும் ஏற்காட்டிலிருந்து இறங்கி சேலம் வந்து சேர்ந்த போது சாலையில் ஒருவர் காரை நிறுத்தி என் கைகளைக் குலுக்கி, பொண்டாட்டி நாவல் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார். ப்ரமோஷன் என்றால் இப்படி இருக்க வேண்டும். யாரோ ஒரு வழிப்போக்கர் அவர். எனவே மூன்று மாதத்தில் பொண்டாட்டி 2000 பிரதிகள் விற்கும். இந்தப் புத்தக விழாவில் மட்டும் 1500 பிரதிகள் போகும்.

அடுத்த ஹைலைட் ஸ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த அதே கதை; மீண்டும் ஒருமுறை. 40 ஆண்டுகளுக்கு முன்பு சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு தான் என்னை ஒத்த பல எழுத்தாளர்களுக்கு அப்போது ஆதர்சமாக விளங்கியது. எங்களை உருவாக்கிய நூல்களில் அது ஒன்று என்று சொல்லலாம். அதில் எம். கோவிந்தன் எழுதிய பாம்பு என்ற கதையை ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறக்க இயலாது. அதே போன்ற ஒரு தொகுப்பு ஸ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த அதே கதை; மீண்டும் ஒரு முறை. யு.பி. ஜெயராஜ், வி.கெ.என். போன்ற அதிகம் அறியப்படாத ஜாம்பவான்களின் கதைகள் தொகுப்பில் உண்டு. நான் மலையாளத்தில் அறிமுகம் ஆனபோது என் எழுத்து வி.கெ.என். போல் உள்ளது என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லோருமே. ஆர்வம் தாங்க முடியாமல் என் தோழி மீராவிடம் வி.கெ.என். கதைகளை எனக்கு மொழிபெயர்த்து சொல்லச் சொன்னதுண்டு. ஸ்ரீபதி பத்மநாபாவின் அதே கதை: மீண்டும் ஒருமுறை தொகுப்பை நீங்கள் வாங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இன்னும் சில நாட்களில் வெளிவரும்.

மூன்றாவது ஹைலைட். எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும். பல ஆண்டுகளாகக் கிடைக்காமல் இருந்த என் முதல் நாவல்.

நான்காவது: ஒளியின் பெருஞ்சலனம். உலக சினிமா பற்றிய என் கட்டுரைகள். இதில் நான் எழுதிய பல படங்கள் பற்றி ஆங்கிலத்தில் கூட விவாதங்கள் நடந்ததில்லை. ஒரு மதிப்புரை கூட வந்ததில்லை என்பது இந்நூலின் சிறப்பு.

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்னுடையது அல்ல. என் நண்பர்களுடையது. அடுத்த ஆண்டுக்குள் வாசகர் வட்டம் என்ற பெயரில் நானே ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். என் நூல்கள் எதுவும் அதில் வராது. அதெல்லாம் தொடர்ந்து எழுத்து பிரசுரம்தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு வாசகர் வட்டம் என்று ஒரு பதிப்பகம் இருந்தது. க்ரியா நூல்கள் கூட வாசகர் வட்ட நூல்களின் முன்பு நிற்க முடியாது. அப்படிப்பட்ட தரத்தில்தான் புத்தகங்கள் கொண்டு வருவேன். ரொம்ப elite ஆக இருக்கும். எல்லாமே hard bound. ஆண்டுக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் வரும். எஸ். சண்முகம் திருவல்லிக்கேணி பற்றி எழுதிக் கொண்டிருக்கும் நாவல் முதல் வெளியீடாக வரும்.