அம்புயாதனத்துக் காளி – பிரபு கங்காதரன்

அம்புயாதனத்துக் காளி.  என் நண்பர் பிரபு கங்காதரன் எழுதிய கவிதைத் தொகுப்பு.  ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு.  சென்னை புத்தக விழாவில் அரங்கம் எண் 696 & 697.  தமிழில் முதல் முதலாக தாந்த்ரீகப் பாலியல் கவிதையாகப் பொங்கிப் பிரவாகம் எடுத்திருக்கிறது.  கவிதையில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூடப் படிக்க ஏதுவான கவிதைகள்.  இதைப் படிக்காவிட்டால் நீங்கள் ஒரு அற்புதத்தை அனுபவம் காணத் தவறி விட்டீர்கள் என்று அர்த்தம்.   இந்தத் தொகுப்பு பற்றி தேவ சுப்பையா எழுதிய முகநூல் குறிப்பை இங்கே தருகிறேன்:

எனக்கு ஒரு தம்பி இருக்கான். அந்தப் படுவா காளின்ற தலைப்புல நிறைய கவிதைகள பேஸ்புக்ல எழுதிகிட்டே இருந்தான். எழுதணும்னு நினைச்சு ஒக்காந்து எழுதினான்னா ச்சுமம ராவா வந்து விழுந்துகிட்டே இருக்கும் வார்த்தைகள். என்ன ஒண்ணு கொஞ்சம் சோம்பேறி. நாகூர் நினைவுகள்னு இரண்டோ இல்ல மூணோ பாகங்கள் பேஸ்புக்ல எழுதினான். மிரண்டு போய்ட்டேன். துக்கடா பசங்க எல்லாம் பேனாவத் தூக்கிக்கிட்டு நானும் எழுத்தாளன்டான்னு திரியுறானுவோ, இவன் என்னடா இப்படி போட்டு சாத்தி எடுக்குறானேன்னு ஆச்சர்யம்.

போனப் போட்டு எழுதுடா தம்பின்னு சொன்னா சரிண்ணேன்னு நம்மாலாம் என்ன எழுதி அப்டின்னு மழுப்ப வேற செய்வான். சங்கிலி அறுத்தா யானையோட பலம் என்னனு கட்டிக்கிடக்குற யானைக்கு எப்டி தெரியும்னு அடிக்கடி நினைச்சுப்பேன். ஒரு நாள் இந்த சங்கிலில ஆசா பிளேடு போட்டு அறுக்குற வாய்ப்பு கிடைச்சது, லேசா சங்கிலிய அறுத்து யானைய கழட்டி விட்டாச்சு.

மதங்கொண்ட யானை கடைத்தெருவுக்குள்ள நுழையுற மேறி தம்பி பிரபு கங்காதரனோட அம்புயாதனத்துக்காளின்ற புத்தகம் இந்த புக் ஃபேர்ல ரிலீஸ் ஆகுது. காமம்னாலே தலைதெறிச்சு ஓடிப் போய் பத்துத் தெருக்கு அந்தாண்ட நின்னுகிட்டு அதைப் பத்திப் பேசினாலே தப்புன்ற மாதிரிதான் நம்ம சொசைட்டி இருக்கு ஆனா பாருங்க இப்டி ஒழுக்கப்பாடம் எடுக்கற பயலுவதான் எல்லா சேட்டையும் பண்ணுவானுவ வெளில அம்பி மாதிரி சுத்துவானுவ…

காட்டாறு மாதிரி தமிழ்பிராவகத்தோட முரட்டுக் காமத்தத் தன்னோட காளின்ற புத்தகம் மூலம் தம்பி பிரபு பேசி இருக்கான். அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம். முக்கியமா பிரபுவோட மொழி அதை அவன் கையாண்டிருக்க விதம் அட்டகாசம். படத்தோட அட்டைப்படம் கலை நயத்தோட அருமையா வந்து இருக்கு அதோட இல்லாம எங்க ஆசான் சாரு பட்டை தீட்டி தோழர் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தோட முன்னுரையோட

ஜெகஜ்ஜாலமாய் வந்திறங்கி விட்டாள் அம்புயாதனத்துக் காளி. வாழ்த்துகள்டா தம்பி Prabu Gangatharan

காளி-தேவா சுப்பையா…