ஜெய்ப்பூர் இலக்கிய விழா

நாளை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்குச் செல்கிறேன். அழையா விருந்தாளியாக. அப்படிச் செல்வதால் எனக்கு 60000 ரூ. செலவு. நுழைவுக் கட்டணமே ஒரு நாளைக்கு 5000 ரூ. இலவசமாகவும் போகலாம். ஆனால் delegate pass என்றால் 5000 ரூ. கட்டணம். டெலகேட் பாஸ் இருந்தால்தான் எழுத்தாளர்களை நெருங்க முடியும். இல்லாவிட்டால் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கை தான் பார்க்க முடியும். சென்ற ஆண்டு இந்தச் செலவை இரண்டு நண்பர்கள் ஏற்றார்கள். இந்த ஆண்டு ஒரு நண்பன் வேலையை விட்டு விட்டு வந்து என்னிடமே காசு கேட்கிறான். இன்னொருத்தன் முகநூலில் ஏடாகூடமாக போஸ்ட் போட்டுக் கொண்டிருந்ததால் ப்ளாக் பண்ணி விட்டேன். ப்ளாக் பண்ணி விட்டுப் பணம் கேட்கலாமா, சீச்சீ.

ஜெய்ப்பூரில் தனியாகத்தான் இருப்பேன். யாரேனும் நண்பர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளலாம். charu.nivedita.india@gmail.com

இத்தனை செலவு செய்து கொண்டு நான் ஏன் போக வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். Germaine Greer என்று ஒரு பெண். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் பெண்ணியக் கருத்தரங்குகளில் ஜெர்மன் க்ரேர் எழுதிய Madwoman’s Underclothes என்ற புத்தகத்தில் CUNT என்ற கட்டுரையின் சில பகுதிகளைப் படித்துக் காண்பித்து அடி வாங்கியிருக்கிறேன். இதை ஜெர்மன் க்ரேரிடம் நான் சொல்ல வேண்டாமா? ஆம், ஜெர்மன் க்ரேர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வருகிறார். 40 ஆண்டுப் பழமையான – என்னை அடிவாங்க வைத்த அந்தப் புத்தகத்தில் அவர் கையெழுத்தை நான் வாங்க வேண்டாமா? மேலும் ஜெர்மன் க்ரேர் பற்றி ஸீரோ டிகிரியிலும் எழுதியிருக்கிறேன்.