கடவுளும் சைத்தானும்…

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்து கொண்டிருந்தன.  அப்போது நான் அதிகம் இணையத்திலேயே எழுதிக் கொண்டிருந்தேன்.  கடிதம் எழுதி நேரிலும் சந்தித்த பல  நண்பர்களில் ஒருவர் தயாநிதி.  இப்போது அவரோடு எந்தத் தொடர்பும் இல்லை.  அவரோடு மட்டும் அல்ல.  முக்கால்வாசிப் பேரோடு தொடர்பு இல்லை.

கடவுளும் நானும் என்ற தொகுப்பைப் போல் கடவுளும் சைத்தானும் என்ற தலைப்பிலும்  என்னுடைய ஒரு கட்டுரைத் தொகுப்பு உள்ளது.  ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரும்.  அதில் உள்ள ஒரு கட்டுரையை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  மேற்படி கட்டுரை 25.10.2010 இல் எழுதப்பட்டது என்பதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டு வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 

தயாவின் கடிதத்தில் தெரியும் ஒரு பரவச உணர்வு பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். சில தினங்களுக்கு முன்பாக உயிர்மை அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். மனுஷ்யபுத்திரனும் நானும் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தோம். எனக்கு அவரிடம் சில விஷயங்களைப் பற்றி பேச வேண்டும். ஆனால் அவர் பக்கத்தில் ஆட்கள் இருந்தார்கள்.

அப்போது எக்ஸ்க்யூஸ் மி என்ற இனிய குரலில் ஒரு பெண் உள்ளே வந்தார். வயதை அனுமானிக்க முடியவில்லை. 22 இருக்கலாம். நானும் எத்தனையோ பேரை அழகி அழகி என்று எழுதி இருக்கிறேன். ஆனால் அத்தனை பேரும் இந்தப் பெண்ணுக்கு முன்னால் உறை போடக் காணாது. சிற்பத்தைப் போன்ற உருவம்.  இப்படி ஒரு அழகை என் வாழ்க்கையில் கண்டதில்லை. வந்த பெண் என்னைப் பார்த்து ஹாய் சார் என்றார். பிரிட்டிஷ் உச்சரிப்பு. அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது என்று மட்டுமே புரிந்து கொண்டேன். அவரை எனக்கு முன்பின் தெரியாது. பிறகு மனுஷ்யபுத்திரனிடம் “சாருவின் எல்லா புத்தகங்களுக்கும் வேண்டும்” என்றார்.

அடியேனின் 27 புத்தகங்களும் வந்தன.

இவ்வளவையும் எடுத்துக் கொண்டு போவது கஷ்டம் என்று சொல்லிவிட்டு கதைகளை மட்டும் தனியே எடுத்து வைத்தார். மற்ற புத்தகங்களை நான் சொல்லும்போது லண்டனுக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்லி எல்லா புத்தகங்களுக்கும் பணத்தை கொடுத்தார்.

மனுஷ்யபுத்திரனின் மனதில் ஓடிய எண்ணங்களை அப்படியே என்னால் படிக்க முடிந்தது.  ஒரு பக்கம் புத்தகங்கள் விற்பனையாவதால் சந்தோஷம்… மறுபக்கம்… சரி அடுத்தவர் மனதை படிப்பது அத்துமீறிய செயல் என்பதால் விட்டுவிடுகிறேன்.

அவர் சென்றதும் மனுஷ்யபுத்திரனிடம் என்னங்க இது என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.  “ஸ்டன்னிங் பியூட்டி” என்றார்.

பிறகு, என்னை  வாசிக்கும் வாசகர்கள் பெரும்பாலும் பிற எழுத்தாளர்களை வாசிப்பதில்லை என்ற விஷயத்தைப் பற்றி மனுஷ்யபுத்திரனும் நானும் விவாதித்தோம்.

“ஜெயகாந்தனுக்கும் உங்களுக்கும்தான் இப்படி ஒரு cult ஸ்டேட்டஸ் ஏற்பட்டிருக்கிறது” என்றார் மனுஷ். தன் கோபத்தை இப்படித்தான் ஒருவர் வெளிப்படுத்த முடியும் என்று புரிந்து கொண்டேன். பிறகு அது பற்றி யோசித்தேன். ஜெயகாந்தன் ஒரு இருண்ட உலகை காண்பித்தவர். நான் அப்படி அல்ல என்று உங்களுக்குத் தெரியும்.

சுஜாதாவுக்குப் பலதரப்பட்ட மட்டங்களில் வாசகர்கள் இருந்தார்கள்.  அவர்கள் சுஜாதாவைத் தவிர வேறு யாரையும் படிக்கமாட்டார்கள். இப்போது சுஜாதாவின் வாசகர்கள் பலர் என் எழுத்தின் பக்கம் வருவதைக் காண்கிறேன்.

வயாகரா பற்றித் தமிழில் எழுதிய இரண்டு எழுத்தாளர்கள் சுஜாதாவும் அடியேனும்தான். அடியேனுடையது காமரூப கதைகள் நாவலில் காணக்கிடைக்கிறது.

சுஜாதாவின் வயாகரா கதை ரொம்பப் புகழ் பெற்றது.

ஒரு ஆள் தன் காதலியிடம் சொதப்பி விடக்கூடாது என்ற பயத்தில் ஒரே அடியாக ஐந்து வயாகராவை போட்டுவிட்டான். 5 வயாகரா போட்டால் நேரடி மோட்சம்தான் என்பதால் ஆள் காலி. ஆனால் அவனுடைய சவப்பெட்டியை மட்டும் மூட முடியவில்லை.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்ற இந்த கட்டுரையைப் படிப்பவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றும் – மகாராஜாவைப் போல் வாழ்கிறான் இவன் என்று. தப்பில்லை. பல தருணங்களில் அப்படித்தான் வாழ்கிறேன். ஆனால் எல்லா தினங்களும் அப்படி இருப்பதில்லை. ஒருநாள் மகாராஜா. மறுநாள் பிச்சைக்காரன்.

சமீபத்தில் நடந்த ஒரு விஷயம். காலையில் ஓட்ஸ் கஞ்சி. மதியம் கொஞ்சம் கேரட்டும் தக்காளிப்பழமும்.  அவந்திகா ஊரில் இல்லை. எனக்கு  சமைக்க முடியாதபடி வேலை. மாலை 4 மணிக்குக் கொலைப்பசி. கையில் ஐம்பது ரூபாய் இருந்தது. நேராக ஜசிஜசிஜ சென்றேன். நம்பினால் நம்புங்கள். இல்லாவிட்டால் உங்கள் இஷ்டம். 53 பைசாதான் என் கணக்கில் இருந்தது. என் பாக்கெட்டில் இருந்தது 50 ரூபாய்.  அந்த ஐம்பது ரூபாயோடு  ராயர் கஃபே சென்றேன். பயந்து பயந்து ஒரு மைசூர் போண்டாவும், ஒரு அடையும் சாப்பிட்டேன்.  அற்புத ருசியும் சென்னையிலேயே கம்மி விலையும் கொண்ட உணவு விடுதி அது. இருந்தாலும் பயம். காபியைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். எனக்கு ராயர் காபி என்றால் உயிர் என்று ராயருக்கு தெரியும். பலமுறை வற்புறுத்தி தருகிறேன், தருகிறேன் என்றார். நேரமாகிவிட்டது என்று பொய் சொல்லிவிட்டு 50ஐ நீட்டினேன். 32 ரூபாய் திருப்பிக் கொடுத்தார். சே, காபி குடித்திருக்கலாம். ஆனால் இப்போது கேட்க முடியாது. அடக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

கட்டுரையைத் தட்டச்சு செய்து உதவிய பிரபு ஆண்டனிக்கு நன்றி.

***

இனி சாருஆன்லைன் இணையதளத்தில் தொடர்ந்து எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai