லத்தீன் அமெரிக்க சினிமா – 1

லத்தீன் அமெரிக்க சினிமா என்ற புத்தகம் 1985-இல் வெளிவந்தது.  அதிலிருந்து ஒன்றிரண்டு அத்தியாயங்கள் இங்கே.  இந்தக் கட்டுரைகளை நான் 1982 வாக்கில் எழுதியதாக ஞாபகம்.

எல் சால்வடார்

EL Salvador: Another Vietnam (1981)

&

EL Salvador: The Decision to win (1981)

 

மேற்கண்ட இரண்டு படங்களும் Tete Vasoncelles-இன் தலைமையின் கீழ் Glenn Silber என்ற அமெரிக்கரும், எல் சால்வதோரைச் சேர்ந்த Cero a la Izquierda என்பவரும் சேர்ந்து படமாக்கியவை. இரண்டும் டாக்குமென்டரி படங்களாக இருந்தும், முழுநீள அரசியல் படங்களைப் போல் உருவாக்கப்பட்டிருந்தன. சால்வடாரில் நடந்து கொண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சிகள் அவ்வப்படியே படமாக்கப்பட்டிருக்கின்றன.

கம்யூனிசத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கா சால்வடாரில் செய்யும் அட்டூழியங்கள் –

சால்வடாரின் காட்டுமிராண்டித்தனமான ராணுவ ஆட்சிக்கு அமெரிக்கா செய்யும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் – Farabundo Marti Front For National Liberation (FMLN) என்ற பெயர் கொண்ட மக்கள் விடுதலைப் போராட்ட முன்னணியினரும், விவசாயிகளும், மாணவர்களும் திட்டமிட்டுக் கொல்லப்படும் நிகழ்ச்சிகள் –

மத குருமார்களும், கன்னிகா ஸ்திரீகளும் படுகொலை செய்யப்படுதல் –

விவசாயிகளும், மாணவர்களு, பெண்களும் தெருவில் நின்று போர்புரியும் காட்சிகள் –

அனைத்தும் உயிரைப் பணயம் வைத்து படமாக்கப் பட்டிருக்கின்றன.

அமெரிக்க அதிகாரிகளின் பேச்சு, அமெரிக்காவை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தும் மந்திரிகளின் பேச்சு – இவை ஒரு பக்கமும்; FMLN போராடிகள், கொரில்லா வீரர்கள், பெண்கள், மாணவர்கள் – இவர்களின் பேட்டிகளும் அடுத்தடுத்து நம்முன் வைக்கப்படுகிறது (Juxtaposed). இந்தப் பேச்சுக்களிலிருந்து க்யூபாவிலிருந்து தான் புரட்சி சால்வடாரின் மீது திணிக்கப்படுகிறது என்பது அமெரிக்காவின் ஒரு பொய் என்று தெரிகிறது.

ஒரு பேட்டியாளர் சால்வடாரின் அதிபரான நெப்போலியன் டுவார்ட்டேயிடம் (Napoleun Duarte) அரசின் அடக்கு முறை பற்றிக் கேட்கிறார். டுவர்டேயோ அமைதி பற்றி விரிவான  பதில் ஒன்றைக் கூறுகிறார். தான் இயற்றியுள்ள நிலச் சீர்திருத்தச் சட்டங்களைப் பற்றி விளக்குகிறார். இங்கு காமிரா அவருடைய முகத்தை மட்டுமே நெருக்கத்தில் காட்டுகிறது. அடுத்து, காமிரா இன்னும் நெருங்கி அவருடைய கண்களை மட்டுமே காட்டுகிறது.

உடனே அடுத்ததாக ராணுவத்தினர் தெருவில் ஒரு சிறுவனை அடித்துக் கொல்லும் காட்சி காட்டப்படுகிறது. இதையடுத்து பச்சைப் பசேல் என்று நம் கேரளாவை ஒத்த நிலப்பரப்பை ஒரு சில கணங்கள் காட்டிச் செல்கிறது காமிரா.

அடுத்த காட்சியில் விவசாயிகள் படுகொலை, டுவார்ட்டேயின் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் இந்த அளவிலேயே செயல்படுத்தப் படுகின்றன.

ராணுவ மந்திரியின் பேட்டியில் அவர் சொல்கிறார்: “அரசாங்கம் வன்முறையை விரும்பவில்லை. மக்கள் வன்முறையை விரும்பவில்லை. ஆக யார் வன்முறையை விரும்புகிறார்கள்? அரசாங்கத்தின் எதிரிகளும், ராணுவத்தின் எதிரிகளும், மக்களின் எதிரிகளும் தான்”

ஆனால் உண்மையில் சால்வடாரை ஆட்சி செலுத்துவது அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு சிறு குழுதான். நாட்டின் அறுபது சதவிகித நிலம் இந்த பத்து, பதினைந்து ஆட்களுடைய குடும்பங்களின் கையில்தான் இருக்கிறது. அந்த பத்து, பதினைந்து குடும்பங்கள் தான் தங்கள் சொந்த நலனுக்காக, கம்யூனிசத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கா செய்யும் அட்டூழியங்களுக்குத் துணை போய்க்கொண்டிருக்கின்றன.

மக்கள் எழுச்சியானது அமெரிக்க ராணுவ உதவியுடன் எடுக்கப்படும் நிகழ்ச்சிகளெல்லாம் மிகுந்த அபாயத்துக்கிடையில் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கிராமத்தைச் சூழ்ந்து கொண்ட ராணுவம் நிராயுதபாணியான மக்களை சுட்டுக் கொல்வதன் மூலம் மக்களிடையே ஒரு பீதி உணர்வை உண்டாக்க முயல்கிறது. ஆனாலும் இவையெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டு சில இடங்கள் விடுதலையடைந்த பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. அங்கெல்லாம் வழக்கமான அன்றாட வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது. பால் பண்ணைகள் மிக ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டு அனைவருக்கும் பால் விநியோகம் செய்யப்படுகிறது; குண்டுகளுக்கும் துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையிலும் திருமணங்கள் செய்விக்கப்படுகின்றன; கரும்பு உருக்கும் வேலை துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘உற்பத்தித் தளங்கள்’ (Production Camps) என்று அழைக்கப்படும் இவையும், இதற்கான செயல்பாடுகளும் புரட்சியின் ஒரு அங்கமாகவே அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. FMLN போராடிகளுள் மருத்துவர்களாயிருப்பவர்கள் அந்தந்த கிராம மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள்; சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்விப் பயிற்சி அளிக்கப்படுகிறது – ஒரு வகுப்பறைக் காட்சி சற்று விரிவாகவே படமாக்கப் பட்டிருக்கிறது… வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தத்தம் பக்கத்தில் வைத்திருக்கும் தங்கள் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். ஒரு சிலர் கால் பந்தாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  திடீரென்று மேலே ஹெலிகாப்டரின் சத்தம் கேட்க, உடனே ஆட்டம் நிறுத்தப்படுகிறது. விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தத்தம் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு  பதுங்கிக் கொள்கிறார்கள். ஹெலிகாப்டர் சென்று மறைந்ததும் மீண்டும் ஆட்டம் பழையபடி தொடர்கிறது; Radio Venceremos என்ற தற்காலிக வானொலி நிலையம் துவக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப் படுகின்றன; நிகாராகுவாவில் தங்கள் தோழர்களான சான்டினிஸ்டாக்களின் வெற்றியை ஊர்வலமாகச் சென்றுகொண்டாடுகிறார்கள். இடது சாரிகளின் பால் அனுதாபம் கொண்ட ரொமரோ (Romero) என்ற புகழ்பெற்ற பாதிரியாரின் பேட்டி தரப்படுகிறது.

மற்றொரு பேட்டியில் ஒரு FMLN போராட்ட வீரர் கூறுகிறார்: “இந்த உலகமே எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களுக்கு அவர்களின் இரக்கம்  தேவையில்லையென்று அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். ஏனென்றால் இறுதி வெற்றி எங்களுக்குத் தான் என்பது எங்களுக்குத் தெரியும்”

இறுதியாக சால்வடாரில் அமெரிக்க அட்டூழியத்தை எதிர்த்து அமெரிக்காவில் நடக்கும் ஓர் எதிர்ப்பு ஊர்வலத்துடன் படம் முடிகிறது.

***

 

பொலிவியா

 

உலகத்தின் மிக உயரமான ஒரு நாடு பொலிவியா. இதன் தலைநகரமான லா பாஸ் [ La Paz] தான் உலகத்தின் மிக உயரமான தலைநகரம் (13,500 அடி). இதனாலேயே கடுங்குளிர் காற்றினால் அடிக்கடி தாக்கப்படும் இந்த நாடு அங்கு வாழ்கிற மக்களாலேயே தாங்க முடியாததொரு சீதோஷ்ண நிலையைக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் மலையுச்சிகளில் வாழும் மக்களின் ஆயுட்காலம் முப்பத்து இரண்டுதான். ஒரு இருபத்தைந்து வயது பெண்ணின் முகம் குளிரினால் பாதிப்புற்று  எழுபது வயது கிழவியின் முகத்தைப் போல் சுருக்கங்களையும், கோடுகளையும் கொண்டிருக்கிறது. Altitude Sickness என்று சொல்லப்படுகிற உடல் உபாதையினால் (தூக்கமின்மை, பசியின்மை, மயக்கம், மூச்சு விடுதலில் சிரமம் போன்றன) இங்குள்ள மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுபற்றி தன்னுடைய Inside South America என்ற நூலில் ஜான் குந்தர் இப்படி எழுதுகிறார். “நீங்கள் இங்கு மூன்று மாதங்கள் வாழ்ந்தால் கூட ஒரு மனிதன் சிரிப்பதை நீங்கள் பார்த்து விட முடியாது”

1820இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து சுமார் இருநூறு புரட்சிகளையும், ஆட்சி மாற்றங்களையும் கண்டிருக்கிற பொலிவியாவில் 1951இல் நடந்த தேர்தலில் தேசியப் புரட்சி இயக்கம் என்ற கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் அந்தக் கட்சி ஆட்சிக்கு வருவதை ராணுவம் தடுத்தது. பின்னர் ஒரு ஆண்டுக்காலத்திற்கு ராணுவ ஆட்சி நடைபெற்றது. பிறகு 1952இல் ஏப்ரல் 9-ஆம் தேதியன்று ‘பெரும் புரட்சி’ என்று சொல்லப்படுகிற புரட்சியின் மூலம் தேசியப் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த Paz Estenssoro ஆட்சிக்கு வந்தார். பனிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கொடும் சர்வாதிகாரியாக,கொலைகாரனாக மாறிய Barrientos அப்போது விமானப் படையில் ஒரு அதிகாரியாக இருந்தான். பெரும் புரட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாரியன்டோஸ் அர்ஜென்டினாவுக்குப் போய் அங்கிருந்த பாஸை விமானத்தின் மூலம் அழைத்து வந்தான். அந்த விமானம் லா பாஸில் சுடப்பட்ட போதும் கூட, தன் திறமையினால் மட்டுமே பாஸை உயிருடன் அவனால் அழைத்து வர முடிந்தது. ஆனால் இந்த இருவருமே பின்னால் சர்வாதிகாரிகளாக மாறியது பொலிவிய வரலாற்றில் ஆச்சரியமான ஒன்றல்ல.

1952 இலிருந்து 1956 வரை பாஸ் ஆட்சியில் இருந்தார். பொலிவிய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் அதிபராயிருக்கும் ஒருவர் தொடர்ந்து  அடுத்த நான்காண்டுக் காலத்தில் அதிபராயிருக்க முடியாது என்பதால் பாஸ் தனது நண்பர் ஸைலஸை (Hernan Siles Zuago) பதவியில் அமர்த்திவிட்டு 1956இலிருந்து 1960 வரை லண்டனில் பொலிவியாவின் தூதராக இருந்தார். பின் மறுபடியும் 1960 இலிருந்து 64வரை பாஸ் பொலிவிய அதிபராக மாறினார். இதற்கிடையில் நாட்டின் பொருளாதாரம், அரசியல்  எல்லாவற்றிலும் குழப்பம் மிகுந்து எங்கு பார்த்தாலும் ஊழல் பெருகியது. மக்களின் வாழ்க்கைத் தரம் கேவலமான ஒரு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பிறகு 1964இல் மறுபடியும் நடந்த தேர்தலிலும் பாஸே மீண்டும் ஆட்சிக்கு வந்தார். (எதிர்கட்சிகள் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை). தானே தொடர்ந்து அடுத்த பதவிக் காலத்திலும் ஆட்சிக்கு வருவதை அனுமதிக்குமாறு அரசியல் சட்டத்தைத் திருத்தினார். ஆனால் ராணுவம் இதை அனுமதிக்கவில்லை. எனவே சூழ்நிலையின் கட்டாயத்தினால் ராணுவ ஜெனரல் பரியன் டோஸை துணை அதிபராகச் சேர்த்துக் கொண்டார். ஆனாலும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பாரியன் டோஸ் 1964 நவம்பரில் ராணுவ நடவடிக்கையின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். இதற்குப் பிறகு தேசியப் புரட்சி இயக்கம் உடைந்தது.

Courage of the People (1971)

85 நிமிடங்கள்

இயக்குநர்: Jorge Sanjines

பொலிவியாவில், டிசம்பர் 1942-இல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களையும், பெண்கள், குழந்தைகள் உட்பட அவர்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் அரசாங்கம் தனது துருப்புக்களைக் கொண்டு சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியை ‘கடவி படுகொலை’ (Vatavi Massacre) என்று பெயர் பெற்ற சம்பவத்தை – அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம்.

மலைகளுக்கிடையில் தெரியும் ஒரு கரும்புள்ளியுடன் படம் துவங்குகிறது. கொஞ்சம் நேரமாக ஆக அந்தக்கரும்புள்ளி ஒரு ஊர்வலமாக நமக்குத் தெரிகிறது. இன்னொரு பக்கம் பெருந்துப்பாக்கிகளுடன் அரசுத் துருப்பு. ஊர்வலம் நெருங்கியதும் நிராயுதபாணியாக கோஷமிட்டு வரும் அந்த மக்களை அரசுத்துருப்புக்கள் சுட்டுத் தள்ளுகின்றன.

இதையடுத்து கடவியின் தகரச் சுரங்கங்கள் காட்டப்படுகின்றன. இங்கு அறிவிப்பாளரின் குரல் சில விபரங்களை நமக்குத் தருகிறது.

பொலிவியாவின் இந்த கடவி சுரங்கம் தான் உலகின் மிகப் பெரிய தகரச் சுரங்கம். நாட்டின் வரவு செலவுத் திட்டத்தின் எண்பது சதவிகிதம் தகரத்தின் மூலம் தான் கிடைத்து வருகிறது. உலகம் முழுவதற்கும் தேவையான தகரத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து சதவிகிதத்தை பொலிவியாவின் இருபதாயிரம் தகரச் சுரங்கத் தொழிலாளர்கள் தான் உற்பத்தி செய்கிறார்கள். இவை அறிவிக்கப்படும் பொழுதே காமிரா அந்தச் சுரங்கத் தொழிற்சாலைகளிலிருந்து அதன் தொழிலாளர் குடியிருப்புகளைக் காட்டுகிறது. நமது நாட்டின் மிக மோசமான சேரிகளை ஒத்திருக்கிறது அவை. இப்போது மீண்டும் அறிவிப்பாளரின் குரல்: “இந்த மக்களில் எழுபத்து நான்கு சதவிகிதத்தினர் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குழந்தைகளில் ஐம்பது சதவிகிதம் பிறப்பிலேயே செத்துப் போகின்றன. . .”

பின்னர் வருவது அந்த சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம். இப்படத்தின் நடிகர்கள் அந்த சுரங்கத்  தொழிலாளர்களேதான். தொழிலாளர்கள் தினமும் பத்திலிருந்து பனிரண்டு மணிநேரம் உழைக்கிறார்கள். விடுமுறை எதுவும் கிடையாது. லாபத்தை அதிகரிக்கும் பொருட்டு, முதலாளிகள் வேலை நேரத்தை அதிகமாக்கி, தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் கூலியைக் குறைக்கிறார்கள், [1] உண்மையில் தொழிலாளர்கள் சுரங்கத்தின் சுவர்களிலிருந்து உலோகத்தைத் தங்கள் விரல்களால் சுரண்டி எடுக்க வேண்டியிருக்கிறது. அதைவிடக் கொடுமை கிடைக்கும் சொற்பமான கூலிக் காசில் எதுவும் வாங்க முடிவதில்லை. அரசாங்க விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் வாங்கக் கிடைப்பதில்லை. தொடர்ந்து பட்டினிச் சாவுகல். அப்போதுதான் அந்தத் தொழிலாளர் குடும்பங்களின் பெண்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அந்த அரசாங்க விநியோக ஸ்தலங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களை ஏதேனும் செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறார்கள். “எங்கள் கணவன்மார்கள் பனிரண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு கைகளில் ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது கூட அவர்களுக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு எதுவும் இருப்பதில்லை. வெறும் பன்னையும் டீயையும் மட்டுமே சாப்பிட்டு உயிரோடு இருந்து வருகிறோம்” என்கிறார்கள். அதற்கு அவர்களுக்குக் கிடைக்கும் பதில் “எங்களிடம் பொருள் இல்லை; அரசாங்கம் அனுப்பவில்லை” என்பதுதான். இந்தப் பெண்களுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரிவதில்லை. “நம்முடைய ஆண்களெல்லாம் இவ்வளவு கோழைகளாக இருக்கிறார்களே!” என்று சொல்கிறாள் ஒருத்தி. “நாங்கள் கோழைகளல்ல… எங்களிடம் ஆயுதம் கிடையாது… தலைவர்களெல்லாம் ஜெயிலில் இருக்கிறார்கள்… இந்த நிலையில் எங்களால் என்ன செய்ய முடியும்?” என்கிறான் ஒருவன். பெண்கள் சமாதானம் கொள்வதாயில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கடைகளுக்கு வரும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று போராட்டத்தைத் துவக்குகிறார்கள். ஏழாவது நாள் தொழிற்சாலை நிர்வாகி ஒருவன் அவர்களிடம் வருகிறான். நாகரிகமாக ‘வணக்கம்’ சொல்லிவிட்டு அவர்களின் பிரச்சினை எதுவென்று வினவுகிறான். அவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு அவன் “அதற்கு இதுவா வழி? தகரத்தின் விலை உலக மார்க்கெட்டில் விழுந்து விட்டது…. அதனால் எங்களுக்கு ஏராளமான நஷ்டம்” என்று விளக்கமாக எடுத்துரைக்க முயல்கிறான். யாரும் அதற்குமேல் அவனைப் பேச விடுவதில்லை. உடனே அவன் சினங்கொண்டு கத்துகிறான். “நீங்களெல்லாம் கலகம் பண்ணவே வந்திருக்கிறீர்கள்… நான் உங்களுக்கு வணக்கம் சொன்னேன். நீங்கள் பதில் வணக்கம் கூட செய்யவில்லை… இதுதான் நாகரிகமா?” என்று இவன் கத்த, அவர்களும் பேசிக்கொண்டே போகிறார்கள். உடனே அவன் “இது கொரில்லாக்களின் சதி வேலை. நீங்களெல்லாம் அவர்களின் கையாட்கள் – என்று பெரிய குரலில் கத்துகிறான். அப்போது ஒரு கிழவி தன் கையிலுள்ள டப்பாவை ஆட்டி அந்தச் சத்தத்தின் மூலம் அவனைப் பேச விடாமல் தடுக்கப் பார்க்கிறாள். உடனே அத்தனைபேரும் தங்கள் டப்பாக்களை ஆட்ட, அது ஒரு பெரும் மழை பொழிவதைப் போன்ற சத்தத்தை உண்டாக்குகிறது. அவனால் பேச முடியாமல், வெளியேறி விடுகிறான்.

1. உதாரணமாக, உலகத்தில் ஏழாவது பெரிய பணக்காரன் என்ற இடத்தைப் பிடித்தான் Patino என்ற சுரங்க முதலாளி. இவன் ஒரு சமயத்தில் பத்தொன்பது ஆண்டுகள் பொலிவியாவுக்கே வராமல் ஐரோப்பிய நாடுகளில் பொலிவியாவின் பிரதிநிதியாக இருந்திருக்கிறான். அவனுடைய வருடாந்திர வருமானம் பொலிவியாவின் பட்ஜெட்டை விட அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால் [2] 1952க்குப் பிறகு MNR (National Revolutionary Movement) வீழ்ச்சியடைந்த காலகட்டம் வரை – Paz Estenssoraவின் ஆட்சியிலும் இந்தத் தொழிலாளர்களின் வாழ்நிலையில் அதிக மாறுதல் ஏற்பட்டு விடவில்லை. இவர்களுக்கும் அரசாங்கத்தினரால் ஆயுதங்கள் அளிக்கப்பட்டன என்பது தவிர வேறு எவ்வித மேம்பாட்டையும் இவர்கள் அடையவில்லை. பின்னர் 1964இல் Barrientos, Alfredo Ovando Candia போன்ற ராணுவ அதிகாரிகளால் ஏற்பட்ட அரசு மாற்றங்களுக்குப் பிறகும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

1952இல் தான் பொலிவியாவின் பெரும் புரட்சி என்று அழைக்கப்படுகிற, MNR தலைமையிலான புரட்சி ஏற்பட்டது. இந்த ஆண்டில் தான் சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்டன.

சந்தேகத்தின் பேரில் சில தொழிலாளர்கள் நிர்வாகத்தினரால் ரகசியமாகக் கடத்திச் செல்லப்படுகிறார்கள். தனது நண்பர்கள் திடீரென்று காணாமல் போய்விடவே ஒருவன் நிர்வாகத்தினரிடம் வந்து கேட்கிறான், “போலீசில் போய் புகார் செய். இல்லாவிட்டால் தொழிலாளர் துறையில் போய் விசாரி” என்பது அவர்களின் பதிலாயிருக்கிறது. இவன் விடுவதாயில்லை. இருவருக்கும் வாக்குவாதம் பலக்கிறது. அவன் “முட்டாள் இந்தியனே… வெளியே போடா முதலில் “ என்று கத்துகிறான். இவனும் பதிலுக்கு “தேவடியாள் மகனே….” என்று திட்டிவிட்டு வந்து விடுகிறான். அன்று இரவு அவனை பலாத்காரமாக நாலைந்து பேர் இழுத்துச் செல்கிறார்கள். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு சாட்டையால் அடிக்கிறார்கள்.

அடுத்து 1942 கடவி படுகொலையில் தன் குடும்பத்தாரை இழந்த சிலர் – அவர்களைப் பற்றின விபரங்கள் – அவர்களின் பேட்டிகள் தரப்படுகின்றன. மீண்டும் படம் தொடர்கிறது. சில தொழிலாளர் குடும்பங்களில் இருந்த இளைஞர்கல் சே குவேராவின் புரட்சிக் குழுவில் சேர்கிறார்கள். (படத்தில் சே குவேரா பற்றி பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது).

 

Picture couresy: bolivia

http://www.ocec.eu/cinemacomparativecinema/index.php/en/36-n-9-eng/469-interview-sanjines-eng

தொடர்ந்து மாணவர்கள் கலகங்கள் (1967) பற்றிய குறிப்புகள், பேட்டிகள் வருகின்றன. ஒரு சட்டக் கல்லூரி மாணவன் மிக விரிவாகப் பேசுகிறான். அமெரிக்க உதவியுடன் இயங்கும் பாசிச அரசு பற்றியும், சே குவேராவின் தலைமையில் போராடிவரும் கொரில்லாக்களைப் பற்றியும் பேசுகிறான்.

இறுதிக் காட்சியில் ராணுவமும், போலீசும் கடவி போராடிகளைச் சுட்டுத் தீர்க்கிறது.

இதில் ஒரு முக்கியமான காட்சி: துப்பாக்கிச் சூட்டின் பொழுது ஒரு ராணுவ வீரன் சுடாமலேயே இருந்து கொண்டிருக்க, அவனுடைய அதிகாரி “சுடுகிறாயா இல்லையா? இல்லாவிட்டால் நீ தீர்ந்து விடுவாய்” என்கிறான். இவன் “நான் இந்த ஊரைச் சேர்ந்தவன் என் மனிதர்களையே என்னால் சுட முடியவில்லை” என்று சொல்லவும் அதிகாரி “இந்திய நாயே” என்று திட்டி அவனைச் சுட்டுத் தள்ளுகிறான்.

எந்தெந்த ஆண்டுகளில் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் – நூற்றுக் கணக்கில் – என்ற விபரமும், அதற்குக் காரணமாயிருந்தவர்களின் புகைப்படங்களும் வருட வாரியாகக் காண்பிக்கப்படுகிறது.

“இத்தனை படுகொலைகளுக்கும் காரணமாயிருந்த இவர்களை நாங்கள் மறக்க மாட்டோம்” என்ற அறிவிப்புடன் படம் முடிகிறது.

 

Blood of the Condor 1969

இயக்குநர்: Jorge Sanjines

உண்மையான நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் ஹோர்ஹே சான்ஹீனஸின் மிக முக்கியமான படைப்பு.

கெச்சுவா (Quechua) இந்தியர்கள் என்ற மலைவாசிகள் வாழும் பகுதிக்கு – குவெச்சுவா இனம் தென்னமெரிக்காவின் பெரியதொரு இந்திய இனம் – மருத்துவ உதவிகள் செய்யும் பொருட்டு ஒரு அமெரிக்கக் குழு வருகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய ஒரு பகுதி இது. இங்கு ஒரு மகப்பேறு மருத்துவமனை அமைக்கப்படுகிறது. பேறு காலத்தில் அவர்கள் அறியாமலேயே அவர்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இனப் பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் போகிறார்கள் என்பதை அறிகிற அந்த மலைவாசிகள் தங்கள் இனம் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள். தெய்வக் குற்றமோ எனப் பயந்து தெய்வங்களுக்கும், பூமி தேவிக்கும் பிரார்த்தனைகள் செய்கிறார்கள். குழல்களால் ‘தெய்வீக இசை’யை வாசிக்கிறார்கள். ஆனால் இதனால் எல்லாம் பயனிருப்பதில்லை.

“அவர்கள் நம் பெண்களின் கருப்பையில் சாவை வைப்பதற்கு வந்தவர்கள்” என்று சொல்கிறான் கிராமத் தலைவன். மருத்துவமனை கொளுத்தப் படுகிறது. அந்நியர்கள் காயடிக்கப்படுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து போலீஸ் வருகிறது. கிராமத்தலைவனும், அவனைச் சார்ந்தவர்களும் இழுத்துச் செல்லப்பட்டு சுடப்படுகிறார்கள். அவர்களை ஓட விட்டுச் சுடுகிறான் தலைமை போலீஸ். கிராமத் தலைவன் மட்டும் சாகாமல் பிழைத்துக் கொள்ள, அவனை எடுத்து வருகிறாள் அவன் மனைவி.

கத்தோலிக்க மதத்தில் சேர்ந்து நகரத்தில் வசிக்கிறான் அவனுடைய தம்பி. இவனுடைய நகர வாழ்வு பற்றி ஒரு காட்சி: கால்பந்து ஆடிக்கொண்டிருக்கும் போது இவனுடைய கால் இன்னொருவன் மீது தவறிப் போய் மிதிக்க அவன் இவனை “இந்திய நாயே” என்று திட்டுகிறான். இவனுடைய நகர வாழ்வு பற்றி நமக்குத் தரப்படும் விபரம் இவ்வளவு தான். இவனுக்கு சகோதரனின் நிலை தெரிவிக்கப்படுகிறது. உடனே அங்கு கிளம்பிப் போய் அவனை நகர மருத்துவமனைக்கு எடுத்து வருகிறான். ரத்தம் செலுத்தவும், மருந்துகள் வாங்கவும் ஐந்நூறு பெசோக்கள் தேவைப்படும் என்று சொல்கிறார் மருத்துவர். இவனிடம் உள்ளதோ இருபது பெசோக்கள். அதுகூட அவன் தன் ஒரே க் அட்டிலை விற்றுக் கிடைத்த பணம். என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு மிகவும் தெரிந்த ஒரு ஹோட்டல் உரிமையாளரான பெண்மணியிடம் போய்க் கேட்கிறான். பணம் என்பதைக் கேட்டதுமே அவள் முகம் சுருங்கி விடுகிறது. இந்த விடுதியை நடத்திக் கொண்டு செல்வதில் தனக்கு எத்தனை பணத்தட்டுப்பாடு இருக்கிறது என்பதை அவள் விரிவாக விளக்குகிறாள். விரக்தியுடன் செய்வதறியாது இவன் மருத்துவ மனைக்குத் திரும்பி வரும்போது கடைத் தெருவில் ஒரு யுவதியின் கையில் தொங்கும்  டம்பப்பையும் அதிலிருந்து அவள் பணத்தை எடுத்து எடுத்து அழகுச் சாதனப் பொருட்கள் வாங்குவதும் இவன் கவனத்தைக் கவர்கிறது. அதிலிருக்கும் பணத்தை எடுக்கப் பெருமுயற்சி செய்கிறான். முடியவில்லை.

“ரத்தம் செலுத்தி, மருந்தும் கொடுக்காவிட்டால் உன் கணவன் இறந்து விடுவான்” என்று மருத்துவர் கிராமத் தலைவனின் மனைவியிடம் சொல்கிறார். இவளுக்கு அவருடைய மொழி புரிவதில்லை – பொலிவியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் கூட ஸ்பானிஷ் மொழி பேசுவதில்லை – பக்கத்துப் படுக்கையிலிருக்கும் சிறுவனுக்கு குவெச்சுவா மொழி தெரிந்திருப்பதால் அவன் மருத்துவர் கூறியதை குவெச்சுவாவில் இவளுக்குச் சொல்கிறான். இவர்களின் செய்வதறியாத நிலையை அறிந்து அந்த மருத்துவர் தலைமை மருத்துவரிடம் போய் தான் அனுப்பியதாகச் சொன்னால் உதவுவார் என்று சொல்லி அனுப்புகிறார். தம்பி ஓடி ஓடி அந்த தலைமை மருத்துவர் வீட்டுக்குச் செல்கிறான். ஆனால் வீட்டின் வெளியே நிற்கும் காவலாளி அவனை உள்ளே விடுவதில்லை. “வீட்டின் உள்ளே பெரியதொரு விருந்து நடந்து கொண்டிருக்கிறது. இவனை மருத்துவர் இப்போது பார்க்க முடியாது” என்று சொல்ல இவன் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைகிறான். விருந்தினர்கள் முன்னே இந்த அவலட்சணமாக இந்தியன் நுழைந்தது தலைமை மருத்துவருக்கு அவமானமாகப் போய் விடுகிறது. காவலாளியால் அடித்துத் துரத்தப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கே வருகிறான். அங்கு சகோதரன் இறந்து கிடக்கிறான்.

வேதனையுடனும் துக்கத்துடனும் நிற்கும் இவனிடம் ஒரு பாதிரி சிலுவைக் குறி காட்டுகிறார். இவன் அவரை நிமிர்ந்து  பார்க்கிறான். பதிலுக்கு சிலுவைக் குறி காட்டுவதில்லை அவன்.

இதை அடுத்து வெண் திரையில் பத்துப் பதினைந்து துப்பாக்கிகளை உயர்த்திய கைகள் – படம் முடிகிறது.

”லா பாஸிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ஒரு மைல் மீது (4500 மீட்டர் உயரம்)  அமைந்திருந்த கிராமத்தில் தான் The Blood of the Condor (Yawar Malku) படத்தை எடுத்தோம். 24 கிலோ மீட்டர் தூரம் கோவேறு கழுதையின் முதுகில் பயணம் செய்தே கிராமத்தை அடைய வேண்டியிருந்தது”  என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் ஹோர்ஹே ஸான்ஹீனஸ்.  மேலும் அதே பேட்டியில் அவர்:

பாரியன்டோஸ் அரசின் கடைசி நாளன்றுதான் நாங்கள் படத்தை முடித்திருந்தோம். படப்பிடிப்பு முடிவதற்கும் பாரியன்டோஸ் இறப்பதற்கும் சரியாக இருந்தது. அது பொலிவியா முழுவதற்குமே ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சிதான்; ஏனென்றால் பாரியன்டோஸ் அரசின் கீழ் நாங்கள் அப்படத்தை திரையிட்டிருக்கவே முடியாது. தொடர்ந்து அரசாட்சிக்கு வந்த ஸாலினாஸ் ஒரு மிதவாதி. அப்படியும் படம் தடை செய்யப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்காரர்கள் உடனடியாக அமெரிக்க தூதரகத்திற்கு செய்தியனுப்பி அவர்களுடைய ஆலோசனையைக் கேட்டார்கள். படத்தின் முதல் காட்சிக்கு நண்பர்களை அழைத்திருந்தோம் அவர்கள் தியேட்டருக்கு வந்து கண்டது படம் தடை செய்யப்பட்டு விட்டது என்ற நோட்டீஸைத்தான். அங்கு குழுமியிருந்த மாணவர்கள், பத்திரிகையாளர்கள், அறிவு ஜீவிகள் அனைவரும் எங்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்து அந்த இடத்திலிருந்து அமெரிக்க தூதரகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றோம். ஆர்ப்பாட்டத்தை போலீஸ் கண்ணீர்ப் புகை, தண்ணீர்ப் பீச்சாங்குழல்கள் மூலமாகக் கலைத்தனர். ஆனால் மோதல்களுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லாச் சுவர்களின் மீதும் “Yawar Mallku” (வல்லூறின் ரத்தம்) என்று எழுதிவிட்டனர். இந்த நிகழ்ச்சிகள் படத்தைப் பற்றிய ஒரு பொதுவான ஆர்வத்தை உடனடியாகக் கிளம்பியது. வலதுசாரி செய்தி நிறுவனம் கூட தடையிஐ நீக்கச் சொல்லிற்று. தணிக்கை 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. கடைசியில் The Blood of the Condor மிகப் பரந்த விநியோகத்தைப் பெற்றது. அதுவே தடை செய்யப்படாமலிருந்தால் அவ்வளவு தூரம் விநியோகிக்கப் பட்டிருக்கவே முடியாது.

சினிமா ஒரு வலுவான ஆயுதமாக முடியும் என்பதற்கு ஒரு ஆணித் தரமான எடுத்துக்காட்டாக இப்படம் அமைந்ததில் தான் வெற்றியே அடங்கியிருக்கிறது என்பது எமது தீர்மானம். இப்படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு மூன்றே நாட்களில் அமைதிப் படையினர் காயடிக்கும் இயக்கத்தை நிறுத்திவிட்டனர். பின்னர் ‘டாரஸ்’ அரசின் கீழ் அடிப்படையின் உறுப்பினர்கள் அனைவரும் பொலிவியாவை விட்டே வெளியேற்றப்பட்டனர்.

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai