குற்றங்கள் நடுவே பிறந்த ஞானி

ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் ஞானி என்றும் கிரிமினல் என்றும் அழைக்கப்பட்ட ஜான் ஜெனே, 1910-ஆம் ஆண்டு பாரிஸில் 21 வயது பாலியல் தொழிலாளி ஒருவருக்குப் பிறந்தார். அவர் ஏழு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தாய் இறந்துபோனதால் அரசாங்கத்தின் அனாதை இல்லங்களில் வளர்ந்தார். அப்பா யார் என்று தெரியாது. அனாதை இல்லத்திலிருந்த சிசுவை ஒரு தச்சர் குடும்பம் தத்தெடுத்தது வேறு ஓர் ஊருக்கு எடுத்துச் சென்றது.

பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த ஜெனே, வெளியே எல்லா ‘கெட்ட பழக்கங்’களையும் கற்றிருந்தார். பள்ளிக்குச் சரியாகப் போகாமல் சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டார். அப்போது அவருடைய வளர்ப்புத் தாயும் இறந்து போகவே வயதான மற்றொரு தம்பதியினர் ஜெனேயை வளர்க்கச் சம்மதித்தனர். ஆனால் அங்கே அவர் இரண்டு ஆண்டுகள்தான் தங்கினார். துஷ்டச் செயல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்தன. பள்ளிக்குச் செல்லாமல் திருட்டு வேலைகளில் ஈடுபடுவதோடு இன்னொன்றும் சேர்ந்துகொண்டது. பெண் உடைகளை அணிந்துகொண்டு இரவுகளில் வெளியே சுற்ற ஆரம்பித்தார். ஒரு சமயம் வீட்டிலிருந்து பெரும் தொகையைத் திருடிக்கொண்டு ஓடியபோது போலீஸில் சிக்கி, சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஜெனேயின் வயது 15. இந்தச் சிறைதான் மிஷல் ஃபூக்கோ தன்னுடைய ‘டிசிப்ளின் அண்ட் பனிஷ்’ நூலில் சிறை பற்றி எழுத மேற்கொண்ட ஆய்வுக்கு முன்னுதாரணமாக விளங்கியது.

ஜெனேயின் அடுத்த மூன்று ஆண்டுகள் அந்தச் சிறையில் கழிந்தன. அந்தச் சிறுவர்கள் போருக்கு அனுப்பப்படுவதற்காகவே வளர்க்கப்பட்டார்கள் என்றாலும் ஜெனே தன்னளவில் மிகத் தீவிரமாகப் படித்துக்கொண்டே இருந்தார். தன்பாலின உறவு, திருட்டு போன்ற எல்லா சட்ட விரோத நடவடிக்கைகளுக்குமான பரிச்சயமும் அந்தச் சிறையில்தான் அவருக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு ஜெனே ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டார். மொராக்கோ, அல்ஜீரியா, சிரியா ஆகிய நாடுகளில் ஏழு ஆண்டுகள் ராணுவ சேவைசெய்தார். பிறகு அவரது தன்பாலின உறவு நடவடிக்கைகளால் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு, பாலியல் தொழிலாளராகவும் பாலியல் தரகராகவும் சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டபடியும் போலி பாஸ்போர்ட்டுகளில் ஐரோப்பா முழுவதும் சுற்றி அலைந்தார்.

இப்படி அவர் சிறையில் இருந்தபோது கைதிகளிடம் காகிதப்பை செய்வதற்காகக் கொடுக்கப்படும் காகிதத்தில் ஜெனே ‘Our Lady of the Flowers’ என்ற தனது முதல் நாவலை எழுதினார். எழுதிய ஆண்டு 1942. இதைப் பார்த்துவிட்ட சிறைக் காவலாளி ஜெனேயிடமிருந்த காகிதங்களை வாங்கிக் கிழித்து எறிந்துவிட்டார். அதனால் அந்த நாவலை மீண்டும் இரண்டாம் முறையாக அதே சிறையில் எழுதி முடித்தார். அந்த நாவல் ஆபாசம் என்று கருதப்பட்டதால் ரகசியமாகவே வாசிக்கப்பட்டது.

இதற்கிடையில் சிறையிலும் வெளியிலுமாகவே அவருடைய வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் அப்போது ஃப்ரான்ஸில் பிரபலமாக இருந்த ஜான் கக்தூவின் (Jean Cocteau) நட்பு ஜெனேவுக்குக் கிடைத்தது. எல்லோரும் அவருடைய குற்றச் செயல்களைப் பற்றிப் பேசியபோது, ஜெனேயின் எழுத்தில் தெரிந்த மிக உயர்வான இலக்கியத்தையும் மேதமையையும் பார்த்து வியந்தார் கக்தூ.

ஜெனேயின் நாவல் வெளியீட்டு விழா ஒன்றில் ஒரு சீமாட்டி அவரிடம், “எங்களுக்கு உங்கள் எழுத்து வேண்டும். அதனால் தயவுசெய்து உங்கள் தொழிலைத் (திருட்டு) தொடருங்கள்” என்று சொல்ல, தான் பிரபலமாகிவிட்டதால் தன் தொழிலைச் செய்ய முடியாமல் பிரச்சினையாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். 1943-இல் ஒருமுறை ஜெனேயின் மீது இருந்த ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளால் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கக்கூடிய நிலையில் கக்தூவே நீதிமன்றம் சென்று, “ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி ஜெனே; இவர் நம் காலத்தின் ரேம்போ (Arthur Ribaud)” என்று சொல்லி, “ரேம்போவை எப்படி நாம் கைதுசெய்ய முடியும்?” என்று கேட்டார்.

21 வயதிலேயே கவிதை எழுதுவதை நிறுத்திவிட்ட ஆர்தர் ரேம்போ ஃப்ரெஞ்ச் மொழியின் கவிதைக் கடவுளாகக் கருதப்படுபவர். இதே கேள்வியை வேறொரு சந்தர்ப்பத்தில் ஷார்ல் து காலும் கேட்டார். அல்ஜீரியாவுக்கும் ஃப்ரான்ஸுக்கும் போர் நடந்துகொண்டிருந்தபோது ஜான்-பால் சார்த்தர் அல்ஜீரியாவுக்கு சாதகமாகப் பேசியபோது ஃப்ரான்ஸில் எல்லோரும், “தேசத் துரோகி சார்த்தரைக் கைதுசெய்யுங்கள்” என்று ஷார்ல் து காலிடம் சொன்னபோது அவர் சொன்னார்: “வால்டேரை நாம் எப்படிக் கைதுசெய்ய முடியும்?”

பிறகு திரும்பவும் ஜெனே அடுக்கடுக்கான குற்றங்களைச் செய்ததால் 1949-இல் அவர்மீது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் பாப்லோ பிகாஸோ, ஜான்-பால் சார்த்தர், ஸிமோன் தி போவா போன்றவர்களுடன் கக்தூவும் சேர்ந்து ஃப்ரெஞ்ச் அதிபருக்கு ஜெனே பற்றி எழுதினார். மிக முக்கியமான அந்த அறிவுஜீவிகளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஜெனேயின் மீதான எல்லா தண்டனைகளையும் ரத்துசெய்தார் அதிபர். அப்போது விடுதலையான ஜெனே அதன் பிறகு சிறைக்குச் செல்லவே இல்லை.

ஃப்ரெஞ்ச் சமூகத்தின் அறிவுஜீவிகளால் கொண்டாடப்பட்டாலும் அவரது எழுத்தில் இருந்த பாலியல் தன்மையால் சமூகத்தில் ஜெனே தீண்டத்தகாத ஒருவர் என்றே கருதப்பட்டார்; அவருடைய நூல்களும் ரகசியமாகவே விநியோகிக்கப்பட்டன.

அந்த நேரத்தில்தான் சார்த்தர் “ஜெனேயைத் திருடன் என்று அடையாளம் காணாதீர்கள்; அவர் ஒரு ஞானி” என்று சொல்லி ‘புனித ஜெனே’ (செய்ண்ட் ஜெனே) என்ற, ஜெனேவைப் பற்றிய பெரிய நூல் ஒன்றை எழுதினார். ஆனால், ஜெனே அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுப் பல ஆண்டுகள் எதுவுமே எழுதவில்லை. “சார்த்தர் என்னை நிர்வாணப்படுத்திவிட்டார். அந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் படியைப் படித்ததும் அதை எரித்துவிடலாம் என்றே நினைத்தேன். ஆனால் அது இன்னொருவரின் படைப்பு என்பதால் செய்யவில்லை” என்று குறிப்பிட்டார் ஜெனே.

அதன் பிறகு ஜெனே, அரசியல் செயல்பாட்டாளராக மாறினார். அமெரிக்காவின் கரும் சிறுத்தைகளோடும் பாலஸ்தீனியப் போராளிகளோடும் மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னை இணைத்துக்கொண்டார். ஜோர்டானில் இருந்த பாலஸ்தீனிய அகதி முகாம்களில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தபோது யாசர் அரஃபாத்தைச் சந்தித்தார். ஒருமுறை பாலஸ்தீனிய அகதி முகாம்களில் 3000 பேர் படுகொலை செய்யப்பட்டபோது பெய்ரூட்டில் இருந்த ஜெனே முகாமுக்கு வந்து பார்த்து அதுபற்றி ‘ஃபோர் அவர்ஸ் இன் ஷாடிலா’ என்ற சிறு நூலை எழுதினார்.

பின்னர் அவர் மொராக்கோவிலேயே வாழத் தொடங்கினார். அவர் தன் தாய்நாடான ஃப்ரான்ஸை வெறுத்தார் என்றே சொல்லலாம். ஐரோப்பியச் சமூகம் தன்னைக் கலாச்சார ரீதியாகப் புரிந்துகொள்ளாமல் சிறையில் அடைத்துவிட்டது என்று அவர் கருதினார். ஏனென்றால், தன்பாலின உறவு ஃப்ரான்ஸில் அப்போது குற்றம். ஆனால், மொராக்கோ அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் வில்லியம் பர்ரோஸ் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் மொராக்கோவைத் தங்கள் புகலிடமாக அமைத்துக்கொண்டனர்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கடும் குற்றமாகக் காணப்பட்ட தன்பாலின உறவு மொராக்கோவில் சட்டரீதியாகக் குற்றமாக இருந்தாலும் நடைமுறையில் அதை சகித்துக் கொள்ளும் சமூகமாகவே இருந்தது. “நீங்கள் ஏன் தன்பாலின உறவாளராக இருக்கிறீர்கள் என்று கேட்பது ’உங்கள் கண் ஏன் பச்சையாக இருக்கிறது?’ என்று கேட்பது போல் உள்ளது” என்றார் ஜெனே ஒருமுறை. பாலஸ்தீனிய விடுதலை இயக்கம்கூட அவரைக் கவர்ந்ததற்கு ‘புலனின்ப ஈர்ப்பு’தான் (சென்ஷுவல் அட்ராக்‌ஷன்) காரணம் என்றார்.

1970-களிலிருந்து துவங்கி 1986-இல் இறக்கும்வரை ஜெனே ஃப்ரான்ஸில் வசிக்கவில்லை. மொராக்கோவில் ஒரு சில நெருங்கிய நண்பர்களோடும் ஒரு ஆண் காதலரோடும் அவர் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் – சுமார் இருபது ஆண்டுகளாக – அவர் எதுவும் எழுதவில்லை. 1983-இல் தன்னுடைய பாலஸ்தீனிய அனுபவங்களை ‘ப்ரிசனர் ஆஃப் லவ்’ என்ற புத்தகமாக எழுத ஆரம்பித்தார். 1986-இல் அந்தப் புத்தகத்தின் பிரதியைச் சரிபார்ப்பதற்காக பாரிஸ் போயிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தடுக்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார்.

ஜெனே தன் உடலை மொராக்கோவில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்ததால் அவரது மொராக்கோ நண்பர்கள் அவர் உடலை மொராக்கோவுக்கு எடுத்துச் சென்றபோது சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களைப் பார்த்து, “இது மொராக்கோ தொழிலாளியின் உடலா?” என்று கேட்டபோது அவர்கள் பெருமையுடன் “ஆமாம்” என்று சொன்னார்களாம். ஜெனேயின் உடல் வட அட்லாண்டிக் சமுத்திரக் கரையில் உள்ள லராய்ச் (Larache) என்ற ஊரின் கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழ் இந்துவில் வெளிவந்த கட்டுரை

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai

***