k.pop – love shot

கே.பாப் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கொரியன் பாப்பையே கே.பாப் என்கிறார்கள். வேகம், கூர்மை, துள்ள வைக்கும் தன்மை, இளமை – இது எல்லாம்தான் கே.பாப்பின் பொதுத் தன்மைகள். லவ் ஷாட் ஒரு புகழ்பெற்ற கே.பாப் ஸாங். அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் அங்கே உள்ள பப்புகளுக்குப் போயிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், குழந்தை குட்டிகளோடு வாழும் உங்களால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் உங்கள் மகளுக்கோ மகனுக்கோ 18 வயது ஆகியிருந்தால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஏனென்றால், அவர்களின் பள்ளிக்கூட நண்பர்கள் பப்புக்குப் போயிருப்பார்கள். நம் தமிழ்க் குழந்தைகளை அவர்கள் என்னதான் அமெரிக்கக் கல்ச்சரில் ஊறியிருந்தாலும் – என்னதான் தமிழையே மறந்திருந்தாலும் – பப்புக்கெல்லாம் போகும் சுதந்திரத்தைத் தமிழ்ப் பெற்றோராகிய நீங்கள் கொடுத்திருக்க மாட்டீர்கள். அதனால்தான் சொல்கிறேன். அந்தக் குழந்தைகளின் தோழிகளுக்கும் தோழர்களுக்கும் தெரிந்திருக்கும். கே.பாப். அதனால்தான் அடிக்கடி சொல்கிறேன், நான் பேச வேண்டியது, பேச முடிவது பதின்பருவத்தினருடன் தான்.


அமெரிக்க இளைஞர்களைப் பற்றி யோசிக்கும் போது இன்னொரு விஷயமும் ஞாபகம் வருகிறது.   அமெரிக்காவில் க்ளமிடியா (Chlamydia )என்று ஒரு நோய் பரவிக் கொண்டிருக்கிறது.  இது அந்தக் காலத்து வெனீரியல் டிஸீஸ் போன்றது.  கிருமித் தொற்று.  ஆனால் அந்த அளவுக்கு ஆபத்து இல்லை என்றே சொல்ல வேண்டும்.  எய்ட்ஸ் போல் உயிர்க் கொல்லி எல்லாம் இல்லை.  ஆரம்ப நிலையில் ஜலதோஷத்தைப் போல் சரி பண்ணி விடலாம்.  முற்றின நிலை என்றால் கருத் தரிக்காது.  ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறது.  இன்னொரு சிக்கல் என்னவென்றால், இது வெனீரியல் நோய் மாதிரி அருவருப்பான, தொந்தரவான பிரச்சினைகளையெல்லாம் தராது.  இருக்கும் இடம் தெரியாமல் அது பாட்டுக்கு அமைதியாக இருந்து கொண்டிருக்கும்.  தெரியவே தெரியாது.  அறிகுறிகள் என்ன தெரியுமா?  சிறுநீர் போகும் போது எரியும்.  (அது உடல் உஷ்ணமாகும் போது கூட தெரியும் அறிகுறி அல்லவா?  அதுதான் சிக்கல்.)  செக்ஸ் பண்ணும் போது ஜனன உறுப்புகள் வலிக்கும்.  பெண்களுக்கு அடி வயிற்றில் வலிக்கும்.  மாத விலக்கு (இதற்கு இப்படிப்பட்ட பெண்ணடிமைத்தனமான வார்த்தை தவிர வேறு ‘நல்ல’ வார்த்தை இல்லையா?) இல்லாத சமயங்களிலும் ரத்தப் போக்கு இருக்கும்.  ஆண்களுக்குக் கொட்டை வீங்கும்.  இது அமெரிக்காவில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறப் போகிறது என்பதற்கு நான் சொல்லும் புள்ளி விபரத்தைப் பாருங்கள்:  அமெரிக்காவின் மக்கள் தொகை 33 கோடி.  இதில் 18 லட்சம் பேருக்கு க்ளமிடியா உள்ளது.  எத்தனை சதவிகிதம் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளலாம். 

கட்டுப்பாடற்ற செக்ஸ் தான் இந்த நோய்க்குக் காரணம் என்பது வெளிப்படை.  செக்ஸ் விஷயத்தில் நான் கட்டுப்பெட்டி அல்ல.  செக்ஸ் விடுதலை வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவன் நான்.  ஆனால் விலங்குகள் கூட கட்டுப்பாடற்ற செக்ஸ் கொள்வதில்லை.  கண்டபடியெல்லாம் விலங்குகள் செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை.  பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  மனம் ஒன்றுபடாமல் செக்ஸில் ஈடுபட்டால் இப்படிப்பட்ட பிரச்சினைகளையெல்லாம் சமாளிக்கத்தான் வேண்டும்.

எங்கிருந்து எங்கோ வந்து விட்டேன்.  கே.பாப்பின் புகழ்பெற்ற பாடல் இது.  லவ் ஷாட்.