An aficionado’s contemplation |
Dear charu,
Myself Arjun , huge fan of your mind. I have been recently reading Simone de Beauvoir and Llosa’s A Fish in the Water , which made me constantly revisit your thoughts and oeuvre , so I wanted to know whether the aforementioned writers had drawn your literary inclinations , if so how had they impacted your writing?
Along with that I’d also like to know what kind of fountain pen (with nib and ink specifications)do you use to write your novels , as most of the great authors cherish their writing instruments , I’d like to know this great piece of trivia about what kind of writing instrument do you prefer?
Beloved Reader,
M.Arjun.
டியர் அர்ஜுன்,
ஸிமோன் தெ போவாவை நான் படித்ததில்லை. அவருடைய பார்ட்னரான ஜான் பால் சார்த்தரைப் படித்திருக்கிறேன். படித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. ஒரு பத்தாண்டுக் காலம் அவர் எழுத்தில் வாழ்ந்திருக்கிறேன். பிறகு மிஷல் ஃபூக்கோவைப் படித்த பிறகு சார்த்தரின் போதாமை விளங்கியது. பெண்ணியவாதிகளில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் – என் எழுத்தை பாதித்தவர்கள் என மூவரைச் சொல்லலாம். கேத்தி ஆக்கர், Cunt என்ற பெயரில் பத்திரிகை நடத்திய – The Madwoman’s Underclothes என்ற அட்டகாசமான புத்தகத்தை எழுதிய Germaine Greer மற்றும் Hélène Cixous.
A Fish in the Water நூலை Granta 36-ஆவது இதழில் (1991) படித்திருக்கிறேன். யோசா எழுதிய அரிதான கட்டுரைத் தொகுப்பு. பொதுவாக அவர் புனைகதைகளே எழுதுவார் இல்லையா? க்ராண்ட்டாவில் அது A Fish Out of Water என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது. அதன் ஆரம்பமே புந்த்தா ஸால் (Punta Sal) என்ற ஊரைப் பற்றிய பிரஸ்தாபத்தோடுதான் துவங்கும். பெரூவின் வடக்கே பசிஃபிக் பெருங்கடல் ஓரத்தில் இருக்கும் ஒரு கடற்கரைக் கிராமம் அது. இப்போது அது பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. லீமாவிலிருந்து 1200 கி.மீ. தூரம். லீமாவில் வசிப்பவர்களே புந்த்தா ஸால் போயிருப்பார்களா என்று தெரியவில்லை. சென்னையில் வசிக்கும் எத்தனை பேர் கோவா போயிருப்பார்கள்? அதே கதைதான். என்னுடைய பெரூ பயணத்தில் புந்த்தா ஸால் இருக்காது என்றே நினைக்கிறேன்.
அதையும் சேர்க்கலாம். Customised tour என்பதால் எத்தனை ஊர்களை வேண்டுமானாலும் சேர்க்கலாம். காசுக்கேற்ற பணியாரம். இப்போதே பயணத் திட்டத்துக்கு ஏழெட்டு லட்சம் ஆகிறது. நான் பார்க்க வேண்டிய ஊர்களையெல்லாம் சேர்த்தால் 25 லகரம் வேண்டும். என் பயணத்தில் பொலிவியாவின் கொச்சபாம்பாவையும் La Higueraவையும் சேர்க்கவில்லை. சே குவேராவின் கடைசி நாட்கள் La Higuera என்ற அந்த சிறிய கிராமத்தில்தான் முடிந்தது. இப்போது உலக அளவில் பிரபலமான சுற்றுலா இடம் அது. புரட்சி செய்வதற்காக சே கொச்சபாம்பாவிலிருந்துதான் கிளம்பி லா இகேரா வரை சென்றார். பயணித்தாரோ அந்தப் பாதை சே பாதை (Che Guevara trail) என்று அழைக்கப்படுகிறது. சே பற்றித் தெரியாதவர்களுக்கு அது முட்புதர்களும் கட்டாந்தரையுமான ஒரு மாட்டுவண்டிப் பாதை. ஆனால் சே’வை அறிந்தவர்களுக்கு அது புரட்சியை நோக்கிய பாதை.
சா. கந்தசாமியின் தமிழில் சுயசரித்திரங்கள் என்ற புத்தகத்தைப் பற்றி சாகித்ய அகாதமியில் பேசினேன் அல்லவா? அதுதான் என் உரைகளிலேயே ஆகச் சிறந்ததாகக் கருதுகிறேன். ஏனென்றால், அந்த உரை முழுக்கவும் என்னுடைய findings and interpretations-ஆல் ஆகியிருந்தது. இதைக் கண்டுகொண்ட ஒரே ஆள் அராத்துதான். மறுநாள் அவரது முகநூல் பதிவில் இதை எழுதியிருந்தார். ஆனால் அந்தப் பேச்சு நன்றாக இல்லை என்று தன் நண்பர்கள் சொன்னதாக கந்தசாமி என்னிடம் சொன்னார். கருத்துக்கள் மாறுபடலாம். ஒருத்தருக்கு ஆகச் சிறந்த நாவலாகத் தோன்றும் ராஸ லீலா மற்றொருவருக்குக் குப்பை என்று தோன்றலாம். ஆனால் சச்சின் டெண்டூல்கர் முன்னூறு ரன் அடித்த அன்று அவரிடம் உங்கள் ஆட்டம் சரியில்லை என்று சொன்னால் அவர் என்ன நினைக்கக் கூடும். அதையேதான் கந்தசாமி அப்படிச் சொன்னபோது நானும் நினைத்தேன். வேறு என்ன சொல்ல? கந்தசாமியின் சாயாவனத்தைப் படிக்காதவர்கள் தமிழர்களே இல்லை; அவர்களுக்குத் தமிழ் தெரிந்தும் பிரயோஜனம் இல்லை என்று பேசினேன். கந்தசாமியின் நண்பர்களுக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை. What a pity! போகட்டும். பெரூ பற்றிய பேச்சில் இது எதற்கு? காரணம் இருக்கிறது. அன்றைய தினம் என் பேச்சு முழுக்க findings and interpretations ஆகவே இருந்தது என்று சொன்னேன். உதாரணமாக, ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள் பற்றி கந்தசாமியின் நூலில் ஒரு கட்டுரை உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை ஃப்ரெஞ்ச் கவர்னர் துய்ப்ளேவிடம் துபாஷியாக வேலை செய்தவர். அதைப் பற்றிய தன் அனுபவங்கள் அனைத்தையும் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார் ஆனந்தரங்கம் பிள்ளை. 1709-ஆம் ஆண்டு பிறந்து 1761-ஆம் ஆண்டு மறைந்தவர் அவர். 1736-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் – தான் சாகும் வரை – நாட்குறிப்பு எழுதியிருக்கிறார் ஆனந்தரங்கம் பிள்ளை. இந்த நாட்குறிப்புகளிலிருந்து துய்ப்ளே பற்றியும் க்ளைவ் பற்றியும் பல அந்தரங்கமான செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. இந்தக் குறிப்புகளை அடிப்படையாக வைத்து துய்ப்ளே பற்றியும் க்ளைவ் பற்றியும் இரண்டு நாவல்களை எழுத முடியும். ஏனென்றால், இரண்டு பேரின் இறுதிக் காலமும் மிகத் துயரமானவை. துய்ப்ளேவின் தோல்விக்கு மிகப் பெரிய காரணம், அவன் அரசியல் விவகாரங்களில் தன் மனைவியின் பேச்சைக் கேட்டான். அவளோ அடிப்படையில் கெட்டவள். லஞ்சப் பேர்வழி. (ஆனந்தரங்கம் எழுதுகிறார்.) துய்ப்ளே பற்றி நாவல் எழுதினால் அது படு சுவாரசியமாக இருக்கும். ஏனென்றால், துய்ப்ளேவின் மனைவியான ஜானின் (Jeanne) தந்தை மட்டுமே ஃப்ரெஞ்சுக்காரர். தாய் இத்தாலி மற்றும் போர்த்துக்கீசிய கலப்பு இனம். மெட்றாஸில் பிறந்து புதுச்சேரியில் வளர்ந்தவள். துய்ப்ளே பற்றிய நாவல் எழுதுவதற்கு இரண்டு விஷயங்கள் என்னைத் தூண்டுகின்றன. ஒன்று, துய்ப்ளேயின் காதல். ஜான் தன் பதின்மூன்றாவது வயதில் வின்சென்ஸ் என்பவனை மணந்து கொண்டாள். அப்போது வின்சென்ஸின் வயது 40. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வின்சென்ஸ் தன் அறுபதாவது வயதில் இறந்தார். பிறகு – அதாவது இருபத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு – தான் காதலித்த ஜீனை மணந்து கொண்டார் துய்ப்ளே. அப்போது ஜானின் வயது 35. துய்ப்ளே ஜானை மணந்து கொண்ட ஆண்டு 1741. இதெல்லாம் கூட முக்கியமில்லை. ஜான் வின்சென்ஸ் மூலம் பதினோரு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இப்படியாக துய்ப்ளே தான் காதலித்த பெண்ணை அவளுடைய முதல் திருமணம் நடந்து 20 ஆண்டுகள் அவள் தன் முதல் கணவனோடு வாழ்ந்து அவனோடு பதினோரு குழந்தைகள் பெற்று, கணவன் அறுபதாவது வயதில் இறந்த பிறகு – அதற்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் கழிந்து அந்தப் பெண்ணின் 35-ஆவது மணக்கிறான் துய்ப்ளே. அப்போது துய்ப்ளேவின் வயது 44. அது அவனுடைய முதல் திருமணம்!
ஜான் புதுச்சேரி மக்களிடையே தீய முறையில் பிரபலமாக இருந்தாள். ஜோன்னா பேகம் என்று புதுச்சேரி மக்கள் அவளை அழைத்தனர். பின்னாளில் வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியர்களைப் பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் என்ன சொன்னாரோ அதே கருத்துதான் ஜானுக்கும் இருந்தது. அதனால் புதுச்சேரியின் இந்துக் கோவில்களில் மலத்தைக் கரைத்து சன்னிதியில் உள்ள சிலைகளின் மீது ஊற்ற தன் ஆட்களின் மூலம் ஏற்பாடு செய்தாள். அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் புதுச்சேரியில் நடந்தன. எல்லாவற்றுக்கும் ஜான் தான் காரணமாக இருந்தாள். இதையெல்லாம் பற்றித் துல்லியமாக விவரிக்கிறார் ஆனந்தரங்கம் பிள்ளை. ஆனாலும் துய்ப்ளேயின் உதவியாளன் என்றபடியால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டியிருக்கிறதே என்றும் வேதனைப்பட்டு எழுதுகிறார் ஆனந்தரங்கம் பிள்ளை. அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் அதை எதிர்த்து மக்கள் கோவில் வாசலில் திரண்டு கோஷம் போட்டார்கள். அப்படி கோஷம் போடுபவர்களையெல்லாம் சுட்டுக் கொல்லுங்கள் என்று உத்தரவிடுகிறான் துய்ப்ளே.
துய்ப்ளேவுடன் ஜானுக்கு ஒரே ஒரு குழந்தையே பிறந்தது. அதுவும் பிறந்த அன்றே இறந்தது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளைப் படிக்கும்போது துய்ப்ளேயின் ஆட்சியே ஜானின் ஆட்சியாகத்தான் இருந்தது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. ஜானின் முடிவுகளே துய்ப்ளேயின் முடிவுகளாக அறிவிக்கப்பட்டன. அவளுக்கு இந்திய அரசர்கள் மீதும் தீராத வெறுப்பு இருந்ததால் அதுவே பல உடன்படிக்கைகளைச் செய்ய முடியாமல் தடையாக இருந்தது. துய்ப்ளே மட்டும் மனைவி பேச்சைக் கேட்காமல் தன் விருப்பப்படி நடந்திருந்தால் இந்தியா முழுமையும் ஃப்ரெஞ்ச் அரசின் கீழ் வந்திருக்கும். இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். துய்ப்ளே இந்திய சாம்ராஜ்யத்தின் சாவியை மெட்றாஸில் தேடித் தோற்றான். க்ளைவோ அதை மிகச் சரியான இடத்தில் தேடினான். அந்த இடம் கல்கத்தா. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் கால் ஊன்ற அதுதான் முதல் காரணமாக இருந்தது.
இப்போது நம்முடைய நாவலுக்கான இடத்துக்கு வருவோம். வேலண்டைன்ஸ் டேவுக்கான கட்டுரை ஒன்றில் சுஜாதா ஒரு உண்மைக் கதையைச் சொல்லியிருப்பார். ஒருத்தன் ஒரு பெண்ணைக் காதலித்தான். அவளோ வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்டாள். ஆறு குழந்தைகள் பிறந்தன. அவளுக்கும் 45 வயது ஆனது. ஒருநாள் அவள் கணவன் இறந்தான். பிறகு அவளை முன்பு காதலித்தவன் மணந்து கொண்டான். காதலின் வலிமை இது. இதை சுஜாதா ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சொன்ன போது அவர் சொன்னாராம். அந்தக் காதலன் ஒரு நார்மல் மனிதன் அல்ல என்று. அதாவது, அப்நார்மல். அப்படித்தான் இருந்திருக்கிறான் துய்ப்ளே.
அவனுடைய இறுதி நாட்களும் நாவலுக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்தன. சாப்பிட ப்ரெட் கூட இல்லாமல் பாரிஸ் நகரில் பட்டினி கிடந்து செத்திருக்கிறான் துய்ப்ளே. ஏனென்றால், அவன் தோற்றவன். அதனால் அவனை ஃப்ரெஞ்ச் அரசாங்கம் கைவிட்டு விட்டது.
வரலாற்றில் தோற்பவன் எப்போதுமே adventurer ஆகக் கருதப்படுவான். வென்றவன் ஹீரோ. க்ளைவ் ஹீரோ. இதை நீங்கள் சே குவேராவின் வாழ்விலும் பொருத்திப் பார்க்கலாம். சே ஒரு adventurer. ஃபிடல் ஹீரோ.
துய்ப்ளே போலவே க்ளைவின் இறுதிக் காலமும் துயரமானதாகவே இருந்தது. ஏராளமான சொத்துக்களை இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துக் கொண்டு போனான் க்ளைவ். அது பற்றி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆட்சேபணை செய்யப்பட்டது. ஊரெல்லாம் அவதூறு கிளம்பியது. ஏனென்றால், அது க்ளைவ் அடித்த கொள்ளையோடு போகவில்லை. 1769-இலிருந்து 1773 வரையிலான வங்காளப் பஞ்சத்தின் போது வங்காளத்தின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பட்டினியால் செத்தது. அப்போதைய வங்காளத்தின் ஜனத்தொகை மூன்று கோடி. ஐந்து ஆண்டுகளில் பட்டினியால் செத்தவர்கள் ஒரு கோடி. அந்த ஐந்தாண்டுக் காலத்தில் க்ளைவ் இங்கே இந்தியாவில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் க்ளைவ் எடுத்த முடிவுகள்தான் அந்தப் பஞ்சத்துக்குக் காரணமாக இருந்தன. இது இங்கிலாந்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போது க்ளைவ் சொன்ன வாசகம் அப்போது ரொம்பப் பிரபலம். Take my property; not my honour. கடைசியில் பாராளுமன்றம் அவனை திருட்டுக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது என்றாலும் போன மானம் போனதுதான். தீராத மன உளைச்சலின் காரணமாக க்ளைவ் தன் 49-ஆவது வயதில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்தான். அப்படி இல்லை; அளவுக்கதிகமான அபீனை உண்டு செத்தான் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
***
உங்கள் கடிதத்தில் நான் உபயோகிக்கும் ஃபவுண்டன் பேனா பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு மிஷ்கின் ஒரு பேனா கொடுத்தார். Visconti என்று பெயர். தந்தத்தில் செய்தது போல் இருந்ததால் என்ன விலை என்று கேட்டேன். 25000 ரூ. என்றார். ஆனால் இதை ஃபவுண்டன் பேனாவில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை. ரீஃபில் போடும் வகை. ரொம்ப நாளாக ரீஃபில் தீர்ந்து போய் உபயோகிக்க முடியாமல் இருந்தேன். போன வாரம்தான் எக்ஸ்ப்ரஸ் அவென்யூ போய் அங்கே உள்ள Penn கடையில் ரீஃபில் போட்டேன். இப்படி ஐந்தாறு பேனா வைத்திருக்கிறேன். நான் ஒரு பேனா பிரியன். Faber-Castell, வில்லியம் பென் ஆகிய பிராண்டுகளின் ஃபவுண்டன் பேனாக்களையும் பயன்படுத்துகிறேன். இரண்டுமே பச்சை மை. இவற்றோடு சிவப்பு நிற Ferrariயும் வைத்திருக்கிறேன். ஆனால் அது ரீஃபில் டைப். ஆனால் இன்னமும் என்னுடைய கனவுப் பேனாவை வாங்க முடியவில்லை. அது Lapis Bard Windsor Black ஃபவுண்டன் பேனா. எப்போதாவது நிறைய காசு வந்தால் வாங்க வேண்டும்.
இப்போதெல்லாம் பேனாவில் எழுதுவதில்லை. கையெழுத்துப் போடுவதோடு சரி. ராஸ லீலாவை பேனாவில்தான் எழுதினேன். அதாவது ராஸ லீலா வரை. ஸீரோ டிகிரியின் கையெழுத்துப் படி இயக்குனர் ராஜேஷ்வரிடம் உள்ளது. அவரைப் பார்த்தால் கேட்டு வாங்க வேண்டும். பொக்கிஷத்தைப் போல் பாதுகாக்கிறேன் என்று ஒருமுறை சொன்னார்.
மற்றபடி குறிப்புகள் எடுப்பதெல்லாம் பேனாவில்தான். அதுதான் சுலபமாக இருக்கிறது.
சாரு
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai