தி.ஜானகிராமன், அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், சி.சு. செல்லப்பா, க.நா.சு. பற்றியெல்லாம் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். ஆனால் தஞ்சை ப்ரகாஷின் இடம் என்பது யாருமே நெருங்க முடியாதது. அதாவது, ஜெயமோகன் அவரை போர்னோ எழுத்தாளர் என்கிறார். ஓ, தஞ்சை ப்ரகாஷ் கதையெல்லாம் எழுதுவாரா எனக்குத் தெரியாதே என்று தஞ்சை ப்ரகாஷின் 50 ஆண்டுக் கால நண்பர் வெங்கட் சாமிநாதன் ப்ரகாஷ் இறந்த பிற்பாடு எழுதுகிறார். (வெ.சா. பொய் சொல்லவில்லை; அதுவரை அவருக்கு நிஜமாகவே தெரிந்திருக்கவில்லை.) இப்படியாக சமகால எழுத்தாளர்களால் போர்னோ எழுத்தாளர் என்றும் ஓ எழுதுவாரா என்றும் ஒதுக்கி வைக்கப்பட்டவர். ஒரே வார்த்தையில் சொன்னால் தஞ்சை ப்ரகாஷ் என்னுடைய மறு உரு. பொறா ஷோக்கு என்ற ஒரே கதையைப் படித்தீர்களானால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும். ஒரே ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். 70 வயதுக் கிழவருக்குத் தன் 16 வயது மகளை மணமுடித்து வைப்பாள் அம்மாக்காரி. அந்த சமூகத்தில் 70 வயதெல்லாம் ஒரு வயதே இல்லை. ஆனாலும் கிழவருக்கு உடல் உறவு கொள்வதில் தயக்கம். மனம் படியவில்லை என்பதால் உடல் ஒத்துழைக்கவில்லை. இப்படியே சில நாட்கள் போய்க் கொண்டிருக்க ஒருநாள் அம்மாக்காரி அந்தக் கிழவனோடு உறவு கொண்டு அவரை உயிர்ப்பித்து பிறகு தன் மகளை அழைத்து இப்போ போடி உள்ளே என்று அறைக்குள் அனுப்புகிறாள். இது மட்டும் அல்ல; அந்தக் கிழவர் புறாக்களுக்கு தான்யம் ஊட்டும் இடமெல்லாம் உலக இலக்கியம். தான்யத்தைத் தன் வாயில் வைத்துப் புறா உண்ணக் கொடுப்பார்.
தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகளை ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இப்போது ஆங்கிலத்தில் கொண்டு வந்திருக்கிறது. உங்களுக்கு ஆங்கில நூல்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ, என் வார்த்தைக்காக அந்த நூலின் பிரதி ஒன்றை வாங்கி வையுங்கள். இது என் அன்புக் கட்டளை. புத்தகத்தின் தலைப்பு Boundless & Bare. இந்த நூலைப் பற்றி வரப் போகும் ArtReview Asia பத்திரிகையில் எழுதலாம் என்று இருக்கிறேன். பொதுவாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் புத்தகங்கள் பற்றி நான் எதுவும் எழுதுவதில்லை. ஆனால் தஞ்சை ப்ரகாஷின் இந்தச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு விதிவிலக்கு. மொழிபெயர்ப்பில் இரண்டு கதைகளைப் படித்துப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால், மொழிபெயர்ப்பு என்றே தெரியவில்லை. தஞ்சை ப்ரகாஷே ஆங்கிலத்தில் எழுதியது போல் இருந்தது. நான் படித்த பிரதியில் மொழிபெயர்ப்பாளர் பெயர் போடவில்லை. மொழிபெயர்ப்பாளருக்கும், அதை எடிட் செய்த காயத்ரிக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும்.
புத்தகத்தை வாங்க ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கைத் தொடர்பு கொள்ளுங்கள்.