சென்ற 2014 தேர்தலில் மோடியை நான் தீவிரமாக ஆதரித்தவன் என்பதை மறந்து விடாமல் பின்வரும் விஷயங்களை வாசியுங்கள். அப்போது மோடியை ஆதரித்ததற்காக மிகக் கேவலமான வசைகளை வாங்கிக் கட்டிக் கொண்டவன் நான். அது கூடப் பரவாயில்லை. மோடி எதிர்ப்பாளர்கள் என் நண்பர்களை மிரட்டி எனக்குக் கிடைத்த உதவியை நிறுத்தி என் வயிற்றில் அடித்தார்கள். துக்ளக்கிலிருந்து விடை பெறும்போது சோ சொன்னார், ”உங்கள் கட்டுரைகளுக்கு பெருத்த வரவேற்பு இருந்தது; உங்கள் கட்டுரை வர ஆரம்பித்த பிறகு துக்ளக்கை பெண்கள் கூட படிக்க ஆரம்பித்து விட்டார்கள்; ஆனாலும் நிறுத்த வேண்டியிருக்கிறது.” மேலும் சொன்னார், “கட்டுரைக்கு நானூறு ரூபாய் என்பது ரொம்பக் கம்மி. தவறாக நினைக்க வேண்டாம்; எங்களால் அவ்வளவுதான் முடியும்.” அப்போதுதான் நான் வாயைத் திறந்தேன். ”இதுவரை உங்களிடம் சொல்லவில்லை; சொல்லாமலே இருந்து விடுவோம் என்றுதான் நினைத்தேன். இப்போது நீங்கள் பணம் பற்றிப் பேசுவதால் சொல்கிறேன். துக்ளக்கில் என் கட்டுரை வர ஆரம்பத்ததிலிருந்து என் தளத்துக்கு வரும் விளம்பரம் நின்று விட்டது; என் மாத வருமானமே அதுதான். அந்தப் பணம்தான் என் வீட்டு வாடகைக்கானது; அதையே நான் பொருட்படுத்தவில்லை.” இன்னொரு நண்பர் (அவர் பாராளுமன்ற உறுப்பினர்) “என் கட்சி மேலிடம் உன் மீது கோபமாக இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள். தனியாக வெளியே போகாதே” என்றார். அவரும் நானும் ஒருமையில் பேசிக் கொள்வது வழக்கம். நெருங்கிய நண்பர். அவரிடம் நான் சொன்னேன். ”இதோ பார். மணி ரத்னத்தின் அண்ணன் இமையமலைக்குப் போயிருந்த போது சிறுநீர் கழிக்கப் போனவர் பனி காரணமாக பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விட்டார். விழுந்த இடம் அதல பாதாளம். எனக்குத் தெரிந்து பலர் தும்மும் போது இறந்திருக்கிறார்கள். இன்றுதான் என் மரணம் என்று எழுதப்பட்டிருந்தால் அதை எந்த செக்யூரிட்டியாலும் தடுக்க முடியாது; மயிரே போச்சு போ.” துக்ளக்கில் என் கட்டுரைகளின் கடுமை அதிகமாகத்தான் ஆனது. ஜெயலலிதா வெற்றி பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அதிமுகவுக்கு இத்தனை சீட் வரும்; திமுகவுக்கு இத்தனை சீட் வரும் என்று துக்ளக்கில் எழுதினேன். என்ன சார் இது; தீவிர அதிமுக மாதிரி எழுதியிருக்கீங்க என்று கேட்டார் சோ. சிரித்துக் கொண்டேன். ஆனால் நான் எழுதியபடிதான் முடிவுகள் இருந்தன. அதை எடுத்துக் கொண்டு போய் ஜெ.வைப் பார்த்திருந்தால் கையில் மூணு கோடி கிடைத்திருக்கும். (என் பரிச்சயக்காரர் ஒருவருக்கு அப்படிக் கிடைத்தது.) ஆனால் அதற்குப் பிறகு அந்தப் பெண்மணியை புரட்சித் தலைவி என்றல்லவா சொல்ல வேண்டும்? மூணு கோடிக்கு ஆத்மாவை அடகு வைப்பதா? ஜெ. ஜெயித்ததும் ஜெ.வை விமர்சித்து எழுத ஆரம்பித்து விட்டேன்.
இப்போது மோடியை எதிர்ப்பதால் என்னை பிராமணத் துவேஷி என்கிறார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன். எப்போதும் ஒரே கொள்கையில் இருப்பவன் அல்ல நான். ஒவ்வொரு பிரச்சினையையும் எப்படி அணுக வேண்டுமோ அப்படித்தான் அணுக முயற்சிக்கிறேன். சமீபத்திய என்னுடைய ஆர்ட்ரெவ்யூ ஏஷியா கட்டுரையைப் படித்தால் ஒரு இந்துத்துவா மாதிரி இருக்கும். ஏனென்றால், இந்தியாவில் கிறித்தவப் பாதிரிகளின் மதமாற்றச் செயல்பாடுகள் பற்றி எழுதியிருக்கிறேன்.
இவ்வளவு நீண்ட முன்னுரை எதற்கு என்றால் –
என் நண்பர்களின் பேச்சுக்கெல்லாம் நான் ஆமாஞ்சாமிதான் போடுகிறேன். ஏனென்றால், அவர்கள் அனைவரும் பிராமணர்கள்; மோடி ஆதரவாளர்கள்; தீவிர இந்துத்துவா சித்தாந்தத்தைப் பேசுபவர்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். கடந்த வாரம் நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஸ்ரீசூர்ணம் அணிந்த – 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மிகச் சத்தமாக போனில் பின்வருமாறு பேசிக்கொண்டிருந்தார்.
”அந்தப் பற நாய் அங்க செக்யூரிட்டியா இருக்கிறவரை நான் அங்கே கால் வைக்க மாட்டேன்…”
இதையே இரண்டு மூன்று தடவை சொன்னார். மிகச் சத்தமாக. எல்லோரும் கேட்டுக்கொண்டுதான் நடந்து கொண்டிருந்தார்கள். நானும் கேட்டுக் கொண்டுதான் நடந்தேன். இப்படி அமெரிக்காவில் ஒரு பொதுப் பூங்காவில் சொல்ல முடியுமா? ”அந்த நீக்ரோ நாய் இருக்கும் வரை…” சிறையில் தள்ளி விட மாட்டார்களா? அதனால்தான் இந்தியாவில் சாதீயம் புரையோடிப் போயிருக்கிறது என்கிறேன்.
என் நண்பர்கள் யாருமே சாதி பார்ப்பவர்கள் கிடையாது. அவர்களின் புதல்வர்கள் ஒரு கிறித்தவரையோ முஸ்லீமையோ மணந்து கொண்டால் அது குறித்து அவர்கள் ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் இல்லை. மதச் சார்பற்றவர்கள். தனிப்பட்ட ஒழுக்கத்தில் மகாத்மா போன்றவர்கள். அதாவது அறம் சார்ந்த மனிதர்கள். அதனால்தான் மகாத்மாக்கள் என்றேன். உதாரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன். ஆனால் இந்தியாவின் சமூகவியல், சாதீயம் என்று வந்தால் தீவிரமான இந்துத்துவாவாகி விடுகிறார்கள். அதனாலேயே அவர்கள் சொல்வதற்கெல்லாம் நான் ஆமாஞ்சாமி போட்டு விட்டு வந்து விடுகிறேன். பேசலாம். பேசினால் எனக்கு நெஞ்சு வலி வந்து விடுகிறது. அதனால் பேசுவதில்லை. ஆமாஞ்சாமியோடு சரி. மேலும், பேசி என்ன ஆகப் போகிறது? யாரையாவது வாதத்தில் வென்று அவரை நம் கட்சிக்குக் கொண்டு வந்து விட முடியும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? அப்படி நான் பார்த்ததே இல்லை. நீங்கள் மோடி ஆதரவாளர்; நான் எதிர்ப்பாளன். நாம் இருவரும் பத்து மணி நேரம் பேசி, விவாதித்து ஒருவரை ஒருவர் மாற்றி விட முடியுமா? எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை – தகுந்த ஆதாரங்களும் வலுவான காரணங்களும் இருந்தால் – நான் என் கட்சியை விட்டு விட எப்போதுமே தயாராக இருப்பேன். உடும்புப் பிடி என்ற பேச்சுக்கே என்னிடம் இடம் இல்லை.
இத்தனையும் எதற்குச் சொல்கிறேன் என்றால், நேற்று ராகவன் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்பினார். ராகவன் வாட்ஸப் வைத்திருக்கவில்லை. சமீபத்தில் அவர் அமெரிக்கா போய் வந்ததால் வாட்ஸப்பைப் பயன்படுத்துகிறார். இன்னும் ஒரு வாரத்தில் அதிலிருந்து வெளியே வந்து விடுவேன் என்றார். ஏனென்றால், ஐம்பது க்ரூப்பிலிருந்து தொடர்ந்து மெஸேஜுகளாக வந்து கொன்று விடும் என்றார். எல்லாம் குடும்ப க்ரூப். நண்பர் க்ரூப். இப்படி. நானெல்லாம் க்ரூப்பில் சேர்த்தால் அதிலிருந்து உடனடியாக விலகி விடுவேன். போலீஸ் தயவு வேண்டும் என்பதால் ஒரு கமிஷனரின் க்ரூப்பில் இருக்கிறேன். இன்னொன்று, வேண்டாம்… அது ரகசியம். மற்றபடி வாட்ஸப் எனக்கு ரொம்ப உபயோகமாகவே இருக்கிறது. சரி, ராகவனின் மெஸேஜ். அது திருமாவளவனின் பேச்சு அடங்கிய விடியோ. அதை நான் கேட்கவில்லை. திருமாவின் பேச்சைக் கேட்பதில் எனக்கு ஆர்வமில்லை; நேரமும் இல்லை. ஆனால் இன்று ராமசேஷன், ராகவன், நான் மூவரும் காஃபி குடிக்கும் போது அந்தப் பேச்சு பற்றி ராகவன் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதில் எனக்கு ஒரு சதவீதம் கூட உடன்பாடில்லை. ஆனாலும் பேசினால், விவாதித்தால் நெஞ்சு வலி வரும் என்பதால் வழக்கம்போல் ஆமாஞ்சாமி போட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பேச்சு திருமாவின் தொகுதி பற்றி திருமா பேசியது. வாக்கு எண்ணும் போது தொடர்ந்து தோல்வியிலேயே இருந்தாலும் இஸ்லாமியப் பெருமக்கள் மற்றும் கிறிஸ்தத் தோழர்கள் வசிக்கும் பகுதிகள் (அந்தப் பெயர்களை சரியாகக் குறிப்பிட்டார் ராகவன்) வந்த போது மொத்தம் மொத்தமாக அத்தனை வாக்குகளும் எனக்கே வந்தன; அதன் பிறகு நான் கவலையே படவில்லை. இதுதான் திருமாவின் பேச்சு. இதைக் கடுமையாக ஆட்சேபித்தார் ராகவன். ஏய்யா, உனக்கு ஓட்டுப் போட்டா பெருமக்கள்; மோடிக்கு ஓட்டுப் போட்டா சாதா மக்களா? உடனே ராமசேஷன் சொன்னார், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு திமுக போகாதது தப்பு; அவர்களின் புத்தியைக் காமித்து விட்டார்கள். உனக்குப் பிடிக்காவிட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நீ எப்படி அவமானப்படுத்தலாம்?
அதற்கு மேல் என்னால் ஆமாஞ்சாமி போட முடியவில்லை. நான் தொடர்ந்து ஆமாஞ்சாமி போட்டே வாழ்வது பற்றிச் சொல்லி விட்டு (இருவருக்கும் அதில் கொஞ்சம் அதிர்ச்சிதான்!) என் மறுப்பை ஓரிரு வாக்கியங்களில் சொன்னேன். மோடியை நாங்கள் ஹிட்லரைப் போல் பார்க்கிறோம். ஹிட்லரும் மக்களின் பெருத்த ஆதரவோடு ஆட்சிக்கு வந்தவன் தான். ஹிட்லரின் காலத்திலும் ஜெர்மன் தேசம் நன்றாகவே முன்னேறியது. இன்னொரு உதாரணம், பினோசெத் காலத்தில் முன்னேற்றம் அடைந்த சீலே. பெரும் முன்னேற்றம் அது. ஃபாஸிஸ ஆட்சியில் தேசம் முன்னேற்றப் பாதையில்தான் செல்லும். தங்கக் கூண்டில் சிறைப்பட்டிருப்பது போன்றது அது. மோடியின் சாதனை என்னவென்றால், மதவாதத்தைத் தூண்டி விட்டதுதான். இந்த நிலையில் எப்படி மோடியின் வெற்றியை நாங்கள் கொண்டாட முடியும்? இது திமுக அதிகமு பிரச்சினை இல்லை. அல்லது, காங்கிரஸா ஜனதாவா என்ற பிரச்சினை இல்லை. மதவாதமா ஊழலா என்பதுதான் பிரச்சினை. ஊழல் வேண்டும் என்று எவன் சொல்லுவான்? ஆனால் மத ரீதியான ஃபாஸிஸ ஆட்சியா ஊழலா என்றால் ஊழல்தானே நம் தேர்ந்தெடுப்பாக இருக்க முடியும்?
மேலும், 5000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்திலிருந்து ஒரு தலைவன் வெற்றி பெறுகிறான்; அதிலும் ஆரம்பக் கட்டத்தில் ஏழெட்டு எண்ணிக்கையில் பின் தங்கி அதற்குப் பிறகு முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகளால் வெற்றி பெறுகிறான் என்றால் அதை ஒரு பிராமணன் அல்லவா கொண்டாட வேண்டும்? எந்த பிராமணன் அதைக் கொண்டாடுகிறானோ அவனையே நான் சாதி வெறியிலிருந்து விடுபட்டவனாகக் கொள்வேன். ஸ்ரீராமானுஜர் அப்படி இருந்தார். தன் குருவுக்கு – சாதியில் கடைசியில் இருந்தவர் – அன்னமிட்ட தன் மனைவி அவர் அமர்ந்த இடத்தை சுத்திகரிப்பதைப் பார்த்து சந்நியாசம் மேற்கொண்டவர். தலித்துகளின் தோளில் கை போட்டுக் கொண்டு நடந்தவர். இந்த விஷயத்தில் – எல்லா உயிரிலும் பிரம்மத்தையே பார்க்க வேண்டும் என்று சொன்ன ஆதி சங்கரரே தோற்று விட்டார்; சண்டாளனே தூரமாகப் போ என்று சொன்னார் அல்லவா? பிறகுதானே அந்தச் சண்டாளன் சிவ பெருமான் என்று சொன்னார்கள்?
திருமாவளவனின் அரசியலில் எனக்குக் கருத்து முரண்பாடுகள் உண்டு. ஆனால் ஒரு கட்சித் தலைவர் இத்தனை அடக்கமானவராகவும் பண்பானவராகவும் இருந்து நான் பார்த்ததில்லை. அசோகமித்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஒரே அரசியல் தலைவர். அத்தகைய ஒருவர் இன்னும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அல்லவா பாராளுமன்றத்துக்குச் சென்றிருக்க வேண்டும்? எந்தெந்தத் திருடர்களும் தேசத் துரோகிகளும் பாராளுமன்றத்துக்கு லட்சக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போது திருமா இன்னும் எத்தனை கொண்டாட்டமான முறையில் சென்றிருக்க வேண்டும்?
இதுவரை என் வாழ்வில் தலித்துகளைப் புரிந்து கொண்ட – புரிந்து கொள்ள முயற்சி செய்த பிராமணர்களாக மூவரை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஸ்ரீராமானுஜர். பாரதி. மற்றும் எழுத்தாளரான என் நண்பர் ஒருவர். வேறு யாரும் அது பற்றிய முயற்சி கூட செய்வதற்கு இஷ்டப்படாதவர்களாக இருக்கிறார்கள். பற நாய் என்று நாகேஸ்வர ராவ் பூங்காவில் நூறு பேருக்கு முன்னால் சொன்ன ஸ்ரீசூர்ணக்காரரைப் பற்றி என் நண்பரிடம் சொன்னேன். அடப் போங்க சார். எங்க அப்பா கூடத்தான் எத்தனையோ தடவை அப்படி என்னைத் திட்டியிருக்கிறார் என்றார்.
இன்னும் 500 ஆண்டுகளில் கூட இந்தியாவில் சாதிப் பாகுபாடுகள் மறைய சாத்தியம் இல்லை.
என்னைத் திட்டி மெயில் அனுப்ப விலாசம்: charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai