புரியாத விஷயம்…

கோவையில் நடக்கும் கண்ணதாசன் விருது வழங்கும் விழாவுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.  15, 16, 17 ஆகிய மூன்று தினங்களும் கோவையில் விஜய் பார்க் இன் ஓட்டலில்தான் தங்கியிருப்பேன்.  அதற்கு முன்னால் ஒருசில வார்த்தைகள்.

சமீபத்தில் நண்பர்களுடன் சவேரா மூங்கில பாருக்குப் போயிருந்தேன்.  முன்பெல்லாம் அது என் வாசஸ்தலங்களில் ஒன்று.  மதியம் போனால் இரவு பதினோரு மணிக்குத்தான் கிளம்புவேன்.  இப்போது மதுவை நிறுத்திய பிறகு அந்த பாருக்கு பத்தடி முன்னால் உள்ள மால்குடி உணவகத்தோடு நிறுத்திக் கொள்வது.  மூங்கில் பாருக்கு உள்ளே போய் பல ஆண்டுகள் ஆகின்றன.  அன்றைய தினம் நான்கு நண்பர்கள் சென்றோம்.  இரண்டு பேர் கொஞ்சம் பியர் அருந்தினார்கள்.  நானும் மற்றொரு நண்பரும் நிறைய நொறுக்குத் தீனி சாப்பிட்டோம்.  அப்போது அங்கே ஒரு நண்பர் என்னைப் பார்த்துப் பேசினார்.  என்ன ஒரு அன்பு!  அன்பைப் பொழிந்து தள்ளி விட்டார்.  ஏதாவது குடியுங்கள்; நான் செலவை ஏற்றுக் கொள்கிறேன்.  ஏதாவது குடியுங்கள்; நான் செலவை ஏற்றுக் கொள்கிறேன். இப்படி சொல்லிக் கொண்டே இருந்தார்.  நானோ இரவில் அநேகமாக பழம் பட்டுமே சாப்பிடுவேன்.  குடியையும் நிறுத்தியாயிற்று.  அவரது வேண்டுகோளை என்னால் அன்று நிறைவேற்ற முடியவில்லை.  ஆனால் ஒரு விஷயம் ரொம்பவும் உறுத்திக்கொண்டே இருந்தது.  இதுவரை அவர் சாருஆன்லைனுக்கு சந்தா என்று எதுவும் அனுப்பியதில்லை.  இதுதான் எனக்கு எரிச்சலூட்டுகிறது.  நேரில் பார்த்தால் அன்பைப் பொழிகிறீர்கள்.  பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்ய ஆர்வப்படுகிறீர்கள்.  ஆனால் சந்தா கட்ட வேண்டும் என்றால் ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்புவதற்குக் கூட தயாராக இல்லை.  இது என்ன மனநிலை என்றே எனக்குப் புரியவில்லை.  சுத்தமாகப் புரியவில்லை.  சீனியிடம்தான் கேட்க வேண்டும்.  மனித மனங்களைப் படிப்பதில் அவர் வல்லவர்.  அன்றைய தினம் மூங்கில் பாரில் அவரும் இருந்தார். 

எனக்கு ரொம்ப ரொம்ப வேண்டப்பட்டவர்.  எனக்கு மிக மிக மிக மிகக் கடன்பட்டவர். நான் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலைமையில் – 15 ஆண்டுகளுக்கு முன்னால் – மூன்று லட்ச ரூபாய் அவருக்குக் கொடுத்தேன். இப்போது நல்ல வேலையில் இருக்கிறார். மாத வருமானம் மூன்று லட்சம். ஒருநாள் அவரிடம் “எனக்கு மாதாமாதம் மாத்திரைச் செலவே பத்தாயிரம் ஆகிறது; மாதம் ஐந்தாயிரம் அனுப்ப முயற்சி செய்யுங்கள்” என்று சொன்னேன். சொன்னது ஏழு ஆண்டுகளுக்கு முன்னால்.  அப்போது அவருக்கு எந்த கமிட்மெண்ட்டும் இல்லை.  என் இதயத்தில் 50 சதவிகித அடைப்பு இருப்பதால் அவ்வளவு செலவு மிகுந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது.  கேட்டுக் கொண்டார்.  அனுப்புகிறேன் என்றும் சொல்லவில்லை; அனுப்ப முடியாது என்றும் சொல்லவில்லை.  இன்று வரை அனுப்பவில்லை.  அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.  எனக்கு மாதம் ஐந்தாயிரம் அனுப்ப குறைந்தது ஐந்து பேர் இருக்கிறார்கள்.  ஆனால் எது இடிக்கிறது என்றால், அவர் என் மீது வைத்திருக்கும் பேரன்பு.  அன்பைப் பொழிவார்.  திக்குமுக்காட வைப்பார். சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.  அவருடைய அன்பில் துளிக்கூட பொய் இல்லை.  நிஜமாகவே அவர் என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்.  அது எனக்கு அனுபவபூர்வமாகவே தெரியும்.  ஆனால் அந்த அன்பினால் எனக்குத் துளிக்கூட காரியம் ஆகாது. 

ஏற்கனவே ஒரு உதாரணம் எழுதியிருந்தேன் அல்லவா?  என் நண்பர் ஒருவர் ஊனமுற்ற பெண் குழந்தைகளுக்கான அனாதை இல்லம் வைத்திருக்கிறார்.  மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கும் அவருடைய மகன் அவரிடம் ஒருநாள் ஆலோசனை சொன்னான்:  இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் இன்னும் போஷாக்கான உணவு கொடுங்கள்; இப்போது தினமும் கொடுக்கும் முட்டையோடு வாரம் இரண்டு முறை மீனும் கொடுக்கலாம் என்றானாம்.  இவர் அந்த அனாதை இல்லத்தை நடத்துவதற்காக தெருத் தெருவாக மடிப்பிச்சை ஏந்துகிறார்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?  இலவசமாக ஆலோசனை  சொல்வதற்கு மட்டும் வந்து விடுகிறார்கள்.  இந்தச் சம்பவம் எனக்கு மிகவும் வக்கிரமாகவும் அயோக்கியத்தனமாகவும் தோன்றியது.  அந்த விஷயம் என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது.  இவன் மட்டும் மாதம் ஐந்து லட்சம் சம்பளத்தை வாங்கி வீடு வீடாகக் கட்டிக் கொண்டே போவான்.  இவன் அப்பன் தெருத் தெருவாக மடிப்பிச்சை ஏந்தி அனாதை ஆசிரமம் நடத்துவான்.  அதற்கு இந்தக் கபோதிப் பயல் இலவச ஆலோசனை தருவான். அதுவும் எப்படி?  குழந்தைகளுக்கு மீன் வாங்கிப் போடுங்கள்; மட்டன் வாங்கிப் போடுங்கள் என்று.

திரும்பவும் சொல்கிறேன்.  இதை ”சாரு திட்டுகிறார்” என்று புரிந்து கொள்ளாதீர்கள்.  என் மீது வெற்று அன்பு செலுத்தாதீர்கள்.  பாரில் பார்க்கும் போது பத்தாயிரம் ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும் நீங்கள் சாரு ஆன்லைன் படிக்க ஏன் ஓரிரு ஆயிரங்களை அனுப்பக் கூடாது?  நான் சொல்வது ரொம்ப ரொம்ப எளிமையான விஷயம்.  நான் எல்லோரிடமும் பணம் எதிர்பார்க்கவில்லை.  முடிந்தவர்கள் அனுப்புங்கள் என்று மட்டுமே சொல்கிறேன். அதற்கு மேல் அது பற்றி நான் சிந்திப்பதே இல்லை.  என் சிந்தனையில் பணம் என்ற அற்ப விஷயத்துக்கு இடமே இல்லை. ஆனால்    பணம் அனுப்ப முடியாதவர்கள் நேரில் பார்க்கும் போது பத்தாயிரம் ரூபாய் கூட செலவு செய்யத் தயாராகி என் மேல் அன்பைப் பொழியாதீர்கள் என்று மட்டுமே சொல்கிறேன். 

கோவையிலிருந்து இரண்டு நண்பர்கள் மட்டுமே எனக்கு சந்தா அனுப்புகிறார்கள்.  நீண்ட கால நண்பர்கள்.  அவர்களைத் தவிர வேறு யாரையும் என்னால்  தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்க இயலாது.  விழாவுக்கு வாருங்கள்.  பார்த்துக் கொள்ளலாம்.  ஆனால் தனிப்பட்ட சந்திப்பு இயலாது.  ஒரே ஒரு விலக்கு கொடுக்கலாம்.  நேரில் சந்திக்கும் போது சந்தாவைச் செலுத்தலாம்.  இதில் எந்தக் கூச்சமும் கொள்ள அவசியம் இல்லை.  பணத்தை ஒரு பண்டமாற்று வஸ்துவாக மட்டுமே பாருங்கள்.  ராஸ லீலா கலெக்டிபிளுக்கும் நீங்கள் பணம் கொடுக்கலாம்.  இந்தப் பணம் அனைத்தும் என் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.  பெரூ – பொலிவியா – சீலேவிலிருந்து திரும்பி வந்து நானும் ராகவனும் ஃப்ரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், லண்டன் ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கிறோம்.  முக்கியக் காரணம், சுவிஸ்ஸில் உள்ள சில்ஸ் மரியா என்ற ஊரைப் பார்க்க வேண்டும்.  நீட்ஷே வாழ்ந்த ஊர் அது.  ஆயிரம் பேர் வசிக்கும் கிராமம்.  அநேகமாக செப்டம்பரில் கிளம்புவோம்.  (பாரிஸ் வந்தால் உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ள முடியுமா சுகன்?  இரண்டு பேர் என்பதால் கேட்கிறேன்.  நான் மட்டும் என்றால் உங்களிடம் கேட்காமலே உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பேன்.)  அதற்கு அடுத்து ஃபெப்ருவரியில் ப்ரஸீல் கார்னிவலுக்கு நானும் ராகவனும் செல்ல இருக்கிறோம்.  இதற்கெல்லாம் பணம் வேண்டும்.  நான் தென்னமெரிக்கா போகிறேன் என்றதும் “லெக்சர் கொடுக்கச் செல்கிறீர்களா அப்பா?” என்று கேட்டாள் என் மருமகள்.  மராத்திப் பெண் என்பதால் அவளுக்கு  எழுத்தாளர் என்றால் ஒரு சச்சின் மாதிரி, பச்சன் மாதிரி அர்த்தமாகும்.  ம்.  இல்லம்மா, சும்மா சுத்திப் பாக்கப் போறேன் என்றேன்.  வேறு என்ன சொல்வது?  பணி நிமித்தமாக உலகைச் சுற்றிக் கொண்டிருக்கும் அவளுக்கும் அவள் கணவனுக்கும் இந்த விஷயங்களெல்லாம் புரிய சாத்தியம் இல்லை. 

தக்ஷிணா மூர்த்தி என்று ஒரு வாசகர்.  தச்சராகப் பணி புரிகிறார்.  இந்தியாவில் இது போன்ற உடல் உழைப்பை நல்க வேண்டிய பணிகளின் சமூக அந்தஸ்தும் அதற்குக் கிடைக்கும் வருமானமும் உங்களுக்கே தெரியும்.   அவர் சாருஆன்லைனுக்கு மாதாமாதம் சந்தா கட்டுகிறார்.  ராஸ லீலா கலெக்டிபிளுக்கு 10000 ரூபாய் கொடுத்தார்.  5000 போதும் என்றேன்.  கட்டாயப்படுத்திக் கொடுத்து விட்டார்.  வீட்டில் கிச்சனில் உள்ள மரச்சட்டங்கள் உடைந்து விட்டன.  அதைப் புதிதாகப் போட்டார்.  2000 ரூபாய்க்கான வேலை.  இரண்டுக்கு இரண்டு அளவுள்ள மூன்று மரக் கதவுகள்.   அவர் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  2000ஐத் தொடவே இல்லை.  பிறகு கட்டாயப்படுத்தி 1000 ரூபாயை அவர் பாக்கெட்டில் திணித்தாள் அவந்திகா.  வீட்டுக்குப் போய் மின்னஞ்சல் செய்தார், உங்களிடமிருந்து பணம் வாங்கியது மனதை ரொம்பக் கஷ்டப்படுத்தியது.  என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது.  அசோகமித்திரனிடமிருந்து என்னால் காசு வாங்க முடியுமா?  என் உயிர் மூச்சை அளித்தவர் அல்லவா அவர்? 

மூர்த்தியுடன்

ஆனால் பண வசதி கொண்ட எத்தனையோ பேர் சந்தா அனுப்புவது பற்றிக் கவலையே படுவதில்லை.  வேண்டாம்.  அதே சமயத்தில் காரியத்துக்கு உதவாத உங்கள் அன்பும் வேண்டாம் என்கிறேன்.  சந்திப்புகளும் வேண்டாம்.  நான் சொல்வது தவறா சொல்லுங்கள்…

மற்றொரு முக்கியமான விஷயம்.  ஒரு நண்பர் 6-ஆம் தேதி அன்று 6000 ரூ. அனுப்பியிருக்கிறார்.  அவருக்கு நான் ஒரு ராஸ லீலா கலெக்டிபிள் காப்பி கொடுக்க விரும்புகிறேன்.  அவர் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.  charu.nivedita.india@gmail.com

தக்ஷிணாமூர்த்தி எனக்கு எழுதிய பல கடிதங்களில் இது ஒன்று:

பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் பாகம் படிக்க ஆரம்பிக்கும்போதே என்ன இன்னும் லா.ச.ரா. பத்தி  எழுதாம இருக்காரேனு நினச்சேன்.  மூணு வருடங்களுக்கு முன்னால் லா. ச. ரா.  சிறுகதை மூணு தொகுதியும் வாங்கிப் படிச்சிருக்கேன். எனக்கு என்ன சொல்றதுனே தெரியல்ல.  அடிக்கடி பின் அட்டையை திருப்பி அவர் போட்டோவ பார்த்துப்பேன். இப்படிக் கூட எழுத்தால் நம்பள கதிகலங்க வைக்க முடியுமானு பிரமிச்சிப் போயிருக்கேன். பத்தி எரிகிற காட்டுக்கு நடுவில் உட்கார்ந்து படிக்கிற மாதிரி இருக்கும் சில கதைகள்.  சில கதையோ மனச அப்படியே குளுறடிக்கும். ஒரு சில கதை படிச்சிட்டு அய்யோ ஏன் இந்த மாதிரி முடிச்சிட்டீங்கன்னு அழுதிருக்கேன். சார் செல்போனில் டைப் பண்ண முடியல்ல… ஆனால் உங்க கிட்ட  என் மனசில நினக்றத சொல்லியாகனும்னு ஒரு வெறி.  எல்லாப் பிழையும் மன்னிக்கவும். லா. ச. ரா. பத்தி நீங்க எழுதினதப் படிக்கும்போது செம சந்தோஷமான இருந்துச்சு. எனக்கு அவர ரொம்ப புடிச்சிருக்கு. உங்கள ரொம்ப ரொம்பப் புட்சிருக்கு. 

(மூர்த்தியிடம் கணினியோ மடிக் கணினியோ கிடையாது.  எல்லாம் ஃபோனில்தான்.  அதைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்.) 

***

 

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai