மௌனமும் பேச்சும்…

நேற்று ஜெயமோகனோடு பேசினேன். கோவை விழாவுக்கு அழைத்தேன். வருவதாக உறுதி அளித்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் கருத்து முரண்பாடுகள் என்று சொல்ல மாட்டேன். அவர் வட துருவம்; நான் தென் துருவம். இருவரும் இரண்டு வெவ்வேறு கருத்தியல்களையும் அழகியல் கோட்பாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இது எங்கள் இருவருக்குமே தெரியும். இருந்தாலும் அது எங்கள் நட்பை ஒரு போதும் பங்கம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கு ரத்த உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை. அதாவது, யாரோடும் தொடர்பிலேயே இல்லை. எல்லா உறவுகளும் நட்புகளும் எழுத்து மூலமாகக் கிடைத்ததுதான். என் சக எழுத்தாளர்களில் என்னுடன் உணர்வுபூர்வமாக நெருக்கமாக இருப்பவர்களில் முதலில் இருப்பவர் ஜெயமோகன். உதாரணமாக, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது ஜெ.வின் அண்ணன் ஜெயமோகனுக்கு ஃபோன் செய்து, உன் ஃப்ரெண்ட் சாரு நிவேதிதாவுக்கு ஹார்ட் அட்டாக்டா, நீயும் போய் செக் பண்ணிக்கோ என்று சொன்னதும், பிறகு ஜெயமோகன் போய் சோதனை செய்து கொண்டபோது எல்லாமே நார்மலாக இருந்ததும் நமக்குத் தெரியும் இல்லையா? (அதுசரி, இவரால்தானே மத்தவன் அப்நார்மல் ஆவுறான் என்று என் நண்பர்களிடம் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தேன்!!!)

என்னுடைய மரணத்தை இரண்டு பேரால் எதிர்கொள்ளவோ, எளிதில் கடந்து செல்லவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறேன். அந்த இரண்டு பேரில் ஒருவர் ஜெயமோகன்.

கோவை விழாவுக்கு நண்பர்கள் எல்லோரையும் அழைக்கிறேன். விழா என்பது என்ன? ஒரு எழுத்தாளனை நேரில் சந்திப்பதுதானே? ஜெ.விடம் சொன்னேன். ”ஒவ்வொரு முறையும் கூட்டங்களில் பார்த்து ஹலோ சொல்லி விட்டுப் பிரிந்து விடுகிறோம். இந்த முறை சற்று சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கலாம்.” ஜெயமோகனிடம் பழகியவர்களுக்குத் தெரியும். ஆள் நேர்ப்பேச்சில் சூரி. ஆழமாகவும் இருக்கும்; அதே சமயம் வயிறு புண்ணாகும் அளவுக்கு சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். நான் அதிலும் அவருக்கு நேர் எதிர். பேசவே மாட்டேன். பேசினாலும் சீரியஸாகவே இருக்கும்.  சமயங்களில் offensive-ஆகவும் போய் விடும்.  இப்போதெல்லாம் மோடி பற்றி ஆதரவாகப் பேசினால் சூடாகி விடுகிறேன்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஆமாஞ்சாமி.  என் எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் நான் ஒரு மோசமான உரையாடல்காரன் என்றே என் அனுமானம். 

சமீபத்தில் ஒரு உரையாடல்.  நானும் ராம்ஜியும் காயத்ரி வீட்டுக்குப் போயிருந்தோம். காயத்ரி உள்ளுக்குள் வேலையாக இருந்தாள்.  ராம்ஜியும் நானும் பதினைந்து நிமிடம் எதுவும் பேசாமலேயே உட்கார்ந்திருந்தோம்.  அப்போது அங்கே வந்த காயத்ரி “என்ன இது, ரெண்டு பேரும் முறைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க; என்ன ஆச்சு, சண்டையா?” என்று கேட்டாள்.  அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே.  பிறகு மறுபடியும் வேலையாக உள்ளுக்குள் போய் விட்டாள்.  பிறகு நான் ‘இப்படியே உட்கார்ந்திருந்தால் மீண்டும் காயத்ரி தப்பாக நினைக்கக் கூடும்’ என்று எண்ணி “என்ன ராம்ஜி, ஷேவ் பண்ணிட்டா மாதிரி இருக்கு?” என்று கேட்டேன்.  ஏனென்றால், அவரது அழகிய தக்காளிக் கன்னத்தில் ஒரு சின்ன குரு வந்து அதை அவர் கிள்ளி விட்டு விட்டதால் பெரிதானதால் சில தினங்களாக சவரம் செய்யாமல் சிறிய அளவு தாடி வைத்திருந்தார்.  அது பற்றி விசாரித்தேன். “இல்லை சார்; முழுசாக ஷேவ் செய்யவில்லை; ட்ரிம் பண்ணினேன்” என்றார்.  பிறகு ட்ரிம்மர் மெஷின் பற்றிய என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொண்டேன்.  அதற்கு மேல் தாடி பற்றிப் பேச எதுவும் இல்லாததால் நீண்ட மௌனம்.  ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் வந்த காயத்ரி “என்ன இது, இன்னமும் ரெண்டு பேரும் முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்றாள்.  “இல்லையே, மயிர் பற்றிப் பேசினோமே?” என்றார் ராம்ஜி. 

மிஷல் ஃபூக்கோவைப் பார்க்க அவர் வீட்டுக்கு வந்த அவரது நெருங்கிய நண்பர் – முதல் நாள் மதியம் வந்தவர் மறுநாள் மதியம் வரை எதுவுமே பேசாமல் கிளம்பிப் போனது பற்றி ஃபூக்கோ பல பக்கங்கள் (!!!) எழுதியிருக்கிறார்.  மௌனமும் ஒரு உரையாடல்தான்.  எனக்கு.  ஆனால் ஜெயமோகன் சுவாரசியமான பேச்சாளர்.   கோவையில் சந்திப்போம்.