கலைஞனாக வாழ்தல் குறித்து…

என் மீதும் என் எழுத்தின் மீதும் பேரன்பு கொண்ட நண்பர்களுக்கு சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.  தலைக்கு மேல் கிடக்கிறது வேலை.  இருந்தாலும் உங்கள் மீது கொண்ட தீரா அன்பினால் இதை எழுதுவதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சனிக்கிழமை இரவு ஏழெட்டு நண்பர்கள் அறைக்கு வந்தார்கள்.  அதில் ஒருவர் ஸ்பெயின் போய் விட்டு வந்திருந்தார்.  பேசி முடித்த போது காலை ஐந்தரை.  தூங்கி எழுந்து கொள்ளும் போது மதியம் இரண்டு.  அவந்திகா பதறி விட்டாள்.  என் நண்பருக்கு போன் போட்டு நான்கு முறை பேசியிருக்கிறாள்.  கார்த்திக்கிடம் பேசியிருக்கிறாள்.  ஆனால் நான் எழுந்தவுடனேயே அடித்துப் பிடித்துக் கொண்டு அவந்திகாவிடம் பேசினேன் என்றாலும் நாலைந்து மணி நேர பயம் பயம்தானே?  நான் மனோவின் வீட்டில் தங்கியிருந்தேன்.  மாடியில் தனி அறை.  மனோவுக்கு போன் செய்திருந்தால் தெரிந்திருக்கும்.  மனோ எண் அவந்திகாவுக்குத் தெரியாது. 

நண்பர் சொன்னார், நீங்கள் வழக்கமாகச் செல்வது போல் பத்து மணிக்குத் தூங்கப் போகிறேன்; நாமெல்லாம் நாளை பகலில் சந்தித்துப் பேசலாம் என்று நண்பர்களிடம் சொல்லி விட்டுத் தூங்கியிருக்கலாம் அல்லவா? அவர்கள் என்ன உங்கள் பேச்சைத் தட்டவா போகிறார்கள்?  இதே கேள்வியை அக்ஷரம் பிசகாமல் அவந்திகாவும் கேட்டாள்.  என் வாழ்வில் எந்தக் காலத்திலும் அப்படி என்னால் சொல்ல முடியாது என்பதனால்தான் இந்தக் கடிதத்தை இப்போது எல்லா வேலையையும் தள்ளி வைத்து விட்டு எழுதுகிறேன்.  இன்னொரு நண்பர் சொன்னார், இப்படியெல்லாம் இந்த வயதிலும் ஒழுங்கீனமாக வாழ்ந்தால் உங்கள் உயிருக்கு ஹானி வந்து விடும் என்று அஞ்சுகிறேன்.

கலைஞர்களால் வேறு விதமாக வாழ முடியாது.  வாழ முயற்சித்தால் கலை அவர்களிடமிருந்து விலகி ஓடி விடும்.  ஏ.ஆர். ரஹ்மான் இரவு முழுவதும் கண் விழித்துத்தான் தன் படைப்புகளை உருவாக்கி விட்டு பகலில் உறங்குகிறார்.  ராஜா தூங்குவது மூன்று மணி நேரமோ என்னமோ.  ஓவியர்கள் முழு எக்ஸெண்ட்ரிக்.  அவர்களின் எக்ஸெண்ட்ரிசிடியை உங்களால் தாங்கவே முடியாது.  அதன் உச்ச பட்சம்தான் காதை அறுத்துக் கொடுத்த வான்கோ. 

மௌனி தொடர்ந்து இடைவெளியே இல்லாமல் மூன்று தினங்கள் – மூன்று இரவு மூன்று பகல் – பேசுவாராம்.  அவர் வீட்டில்.  இடையிடையே வெற்றிலையும் புகையிலையும்.  பட்டை சாராயமும்.  அவரைப் பார்க்கச் செல்பவர்கள் அத்தனை பேரும் பழக்கவழக்கங்களில் தயிர்வடைகள்; ஜெயகாந்தனைத் தவிர.  அப்போது மௌனி மட்டுமே பெரும் கலகக்காரனாக இருந்திருக்கிறார்.  பட்டை சாராயம் அடிப்பது கலகம் அல்ல; மூன்று தினம் இடைவெளியே இல்லாமல் பேசுவது கலகம்.  அவருடைய ஒரு உரையாடலின் பதிவை நான் வெங்கட் சாமிநாதன் மூலம் கேட்டிருக்கிறேன்.  கீர்க்கேகார்டின் (Søren Kierkegaard) புத்தகங்களைப் படிப்பது போல் இருந்தது அவர் பேச்சு.  நான் கேட்டது ஒன்பது மணி நேரப் பதிவு.  அதை வெங்கட் சாமிநாதன் எழுதிக் கொண்டிருந்தார்.  மௌனியை விட அதிக நேரம் நண்பர்களிடையே பேசுபவர் ஜெயமோகன்.  எஸ்.ரா. கேட்கவே வேண்டாம்.  மேடையிலேயே ஐந்து மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் பேசுகிறார்.  25 ஆண்டுகளுக்கு முன்பாக நானும் எஸ்.ரா.வும் வாரம் இரண்டு முறையாவது சந்தித்து இரவு பகலாகப் பேசிக் கொண்டிருப்போம்.  இரண்டு பேரிடமுமே டீ குடிக்கக் கூட காசு இருக்காது.  யாராவது நண்பர்கள் வந்துதான் வாங்கிக் கொடுப்பார்கள். 

தி.ஜானகிராமனுக்குக் கல்யாணம் ஆன புதுசு.  அவர் பாட்டுக்குப் போய் அவர் குருநாதர் கு.ப.ரா.வோடு இரவு பூராவும் பேசி விட்டு வீட்டுக்குப் பால்காரர் வரும்போது போவாராம்.  என் மனைவி என்னை விவாகரத்து செய்யாதது பெரிய விஷயம் என்று எழுதுகிறார் தி.ஜா.  ஒரு நடுத்தர வர்க்க குமாஸ்தாவைப் போல் வாழ்ந்த லா.ச.ரா. இன்னொரு விதம்.  நடுராத்திரியில் எழுந்து மகன் சப்தரிஷியை எழுப்பி எழுது, நான் டிக்டேட் செய்கிறேன் என்பார்.  புதுமைப்பித்தனும் நாட்கணக்கில் நண்பர்களிடையே உரையாடியவர்.  ந. சிதம்பர சுப்ரமணியம், சி.செ. செல்லப்பா, க.நா.சு. எல்லோருமே நாட்கணக்கில் இடைவெளியே இல்லாமல் பேசியவர்கள்தான்.  அவர்கள் குடிப்பவர்கள் அல்ல.  புகையிலையோடு வெற்றிலை போடுபவர்கள்.  ஒரு எழுத்தாளன் கூட “இரவு சென்று வாருங்கள் நண்பர்களே, நாளை பகலில் பேசிக் கொள்வோம்” என்று சொன்னவன் இல்லை.  சொன்னால் அவனால் எழுத முடியாது.  அவன் எழுத்து அவனை விட்டு ஓடி விடும்.  ஒரு குமாஸ்தாவோ ஒரு மென்பொருள் சி.இ.ஓ.தான் அப்படிச் சொல்ல முடியும். 

எழுத்தாளர்களில் நான் மட்டுமே ஓரளவு ராணுவ ஒழுங்கோடு – ஏன், ஒரு குமாஸ்தா மாதிரி வாழ்பவன்.  இரவு பத்து மணிக்கு உறக்கம்.  காலை நான்கு மணிக்கு எழுந்து பூண்டு-எலுமிச்சை-தேன் – ஆப்பிள் சைடர் வினிகர்- இஞ்சி கலந்த கன்காக்‌ஷனைக் குடித்து விட்டு தியானம், பிராணாயாமம் எல்லாம் செய்து விட்டு ஒரு மணி நேரம் வாக்கிங்கும் சென்று கொண்டிருக்கும் ஆள் நான்.  இந்த ஒழுங்கை நான் சீலேயில் கூட கடைப் பிடித்தேன்.  அங்கே ஒரு மணி நேர நடை இல்லை.  தினமுமே 15 கி.மீ. நடக்க வேண்டியிருந்தது.  ஆனால் இரண்டு வேளையும் தியானம் செய்தேன்.  இந்த ஒழுங்கை இரண்டு மாதத்தில் ஒரு முறை மீற வேண்டியிருந்தால் ”மேலே டிக்கட் போட்டு விடுவார் கடவுள்” என்று அஞ்சினால் அந்த விதியை யாரால் என்ன செய்ய முடியும்?  என் அப்பன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான் என்றே நம்புகிறேன்.  நீங்களும் நம்புங்கள்.  காந்தி நூறு ஆண்டுகள் வாழ்வேன் என்று சொன்னார்.  வாழ்ந்திருப்பார் கொலைகாரனின் தோட்டா பாயாதிருந்தால்.  அது போல் என்னால் 85 வயது வரை இதே வேகத்தில் எழுத முடியும் என்று நம்புகிறேன்.  கடவுளின் கருணையும் உங்கள் அன்பும் பிரார்த்தனையும் இருந்தால். 

சென்ற வியாழன் மாலை சமஸ் போன் செய்து சீலே பற்றிய கட்டுரை வேண்டும் என்றார்.  இரண்டு நாளில் தருகிறேன் என்றேன்.  இல்லை, ஞாயிறு பதிப்பு, அதனால் நாளை மாலை வேண்டும் என்றார்.  வியாழன் இரவு வழக்கம் போல் பத்து மணிக்குப் படுக்கைக்குப் போனால் சீலே கட்டுரை வரிவரியாக மனதில் ஓடுகிறது.  பனிரண்டு மணிக்கு எழுந்து ஒரு மணிக்குள் அத்தனை பெரிய கட்டுரையை எழுதி முடித்தேன். ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை.  யாரோ டிக்டேட் பண்ணியது போல் இருந்தது.  இத்தனைக்கும் அதில் ஸால்வதோர் அயெந்தேவின் கடைசிப் பேச்சு வேறு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.  கனமழை பொழிவதைப் போல் மொழிபெயர்த்தேன்.  காலையில் சமஸ் பார்த்து விட்டு அதிர்ந்து போனார்.  இது அசாதாரணம் இல்லையா?  இப்படி அசாதாரணமாக வாழ்பவர்கள் அசாதாரணமாகத்தான் இருப்பார்கள்.  அவர்களால் ”நாளை காலை பேசுவோம்; வாருங்கள்” என்று எக்காலத்திலும் சொல்ல இயலாது.

ஜெயமோகன் தர்மபுரியில் வசித்த போது நானும் சில நண்பர்களும் அவரைப் பார்க்கப் போனோம்.  மாலை ஐந்து மணி.  காலை பத்து மணி வரை இடைவெளியே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்.  இதெல்லாம் சாதாரணமாம்.  நண்பர் சொன்னார்.  அவரோடு மூன்று தினங்கள் பேசியிருக்கிறார்.  நண்பர் மிரண்டு போய் என் ஊருக்குக் கிளம்புகிறேன் என்றாராம்.  அப்படியா, இதோ நானும் வருகிறேன் என்று சொல்லி, அவரோடு அவர் வீட்டுக்குப் போய் மேலும் ஒருநாள் பேசியிருக்கிறார்.  நண்பருக்குத் தாங்க முடியாமல் போய் அவர் தங்கையை ஜெ.விடம் பேசச் சொல்லி விட்டு வயல்காட்டுக்கு ஓடிப் பதுங்கி விட்டாராம்.  இப்படி அசாதாரணமாய் வாழ்பவர்கள் தோசை மாவை விட்டுத்தான் எறிவார்கள்.  அதை இந்தச் சமூகம் பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.   

அப்படியானால் என் ஆரோக்கியம்? நான் ஏபிசி ஜூஸ் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதினேன்.  யாருமே அதைப் பின்பற்றுவதில்லை என்று எனக்குத் தெரியும்.  ஆனால் அதைக் குடிக்காமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை.  அவந்திகாவை செய்யச் சொல்லி வதை பண்ணுவதில்லை.  பீட்ரூட், கேரட், ஆப்பிள் மூன்றையும் தோல் சீவி துண்டுகளாக ஜூஸரில் போட்டு ஜூஸ் பண்ணுவது வரை என் வேலை.  இதற்கே அரை மணி நேரம் ஆகி விடும்.  ஜூஸரைக் கழுவி சுத்தம் செய்வது அவந்திகா.  இதில் இன்னொரு சிரமத்தையும் புகுத்தினாள் அவந்திகா.  ஆப்பிள் சதையெல்லாம் ஜூஸரில் போய் விடுகிறது.  ஆப்பிளை மட்டும் நான் மிக்ஸியில் போட்டு எடுத்து இதோடு கலந்து விடுகிறேன் என்று கலந்து கொண்டிருக்கிறாள்.  எனவே அவந்திகாவின் பொருட்டு, உங்களின் பொருட்டு, என் எழுத்தின் பொருட்டு இந்தக் காரியங்களையெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.  எனவே எழுத்தாளன் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள்.

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான் ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற என் சிறுகதையை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்?  சமூகத்தின் மனப்பிறழ்வை எனக்குள் சுமந்து எழுதிய கதை.  அதை ராஜேஷ் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது தினமும் ஒரு ஃபுல் பாட்டில் மது அருந்த வேண்டியிருந்தது; இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்திருக்கும் என்றார்.  அதை எழுதும் போது எனக்குமே அப்படித்தான் இருந்தது.  ஆனால் இலக்கியம் ஒரு ஔஷதம்.  உங்களிடம் மனப்பிறழ்வு இருந்தால் அந்தக் கதையைப் படித்தால் மனப்பிறழ்வு அகன்று விடும்.  நோயே நோய்க்கு மருந்தும்.  சாதாரண, சராசரி மனநிலையில் வாழ்பவர்களால் இப்படிப்பட்ட கதைகளை எழுத முடியாது.  ஒரு உதாரணம், எஸ். சம்பத்தின் இடைவெளி, எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் இரண்டையும் சாதா மனநிலை கொண்டவர்களால் எழுத முடியுமா? 

இருந்தாலும் உங்கள் அன்புக்காக இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க முயற்சி செய்கிறேன்…   

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai