சாம்நாதன் பற்றிய ராஸ லீலா கலெக்டிபிள் குறிப்பு கீழே:

சாம்நாதனோடு நீங்கள் பேசுவதே இல்லை; நேரிலும் அடிக்கடி பார்ப்பதில்லை. இருந்தாலும் சாமுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தீவிரமான பிடிப்பும் நேசமும் பற்றுதலும் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன என்று ஒருமுறை என்னைக் கேட்டாள் காயத்ரி. உண்மைதான். இந்தப் பத்து ஆண்டுப் பழக்கத்தில் ஓரிரு முறைதான் ஃபோனில் பேசியிருப்பேன். வாசகர் வட்ட சந்திப்புகளில் பல மணி நேரம் பேசியதுண்டு. பல மணி நேரம் என்றால் ஒரு இரவு முழுக்க என்று பொருள். அப்படி இரண்டுமூன்று இரவுகள் போகும். இமயமலைக்குப் போனபோது பனிரண்டு இரவுகள் கண் விழித்துப் பேசியிருக்கிறோம். என் எழுத்தை விட என் வாழ்க்கையிலிருந்து ஒருவன் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் அது சாம்தான்.

சாமுக்கு ஈகோவே கிடையாது. முழுக்க முழுக்க ஒரு ஹெடோனிஸ்ட். இதெல்லாம் என்னிடமிருந்து அவன் பெற்றுக் கொண்டது. பணம் மட்டுமே கொடுக்கக் கொடுக்க சிறுக்கும். ஞானம் கொடுக்கக் கொடுக்கப் பெருகும் இல்லையா? அவனுக்குக் கொடுத்ததன் மூலம் என்னிடமிருந்த உள்ளங்கை ஞானம் இரட்டிப்பாகப் பெருகியது.

முழுக்க முழுக்க அன்பே உருவானவன் சாம். உண்மையான கிறிஸ்தவன். அந்த வகையில் சாமைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கோபி கிருஷ்ணனின் ஞாபகமே வரும். கோபி, கிறிஸ்து நாதரைப் போல் வாழ்ந்தவர். எனக்கு ரத்த உறவுகள் கிடையாது. ஆனால் நான் பெறாத பிள்ளையாக என்னோடு எப்போதும் இருப்பவன் சாம். நான் ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் இருந்த போது இரவு பகலாக என் உடன் இருந்து சிசுருக்ஷை செய்தவர்களில் முக்கியமானவன் சாம். கொஞ்சம் புரண்டு படுத்தால் போதும், என்ன வேண்டும் சாரு என்று கேட்பான். அது நள்ளிரவாக இருக்கும். ஒரு தாய் கூட தன் பிள்ளையை இப்படி கவனித்துக் கொண்டிருக்க மாட்டாள். அப்படி என்னை கவனித்துக் கொண்டவன் சாம். சாம் என் ரத்தம். அவனுக்கு இந்தப் பிரதியை அளிக்க நேர்வது என் கொடுப்பினை.