அரசனாக வாழ்தல்… – பிச்சைக்காரன்

என் அன்பு நண்பர் பிச்சைக்காரன் சற்று நேரம் முன்பு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் உள்ள விஷயத்தை ரொம்பப் பெருமைக்குரிய ஒன்றாக பலரும் என்னிடம் வியந்து சொல்வதுண்டு. எனக்கோ, ”எல்லோருமே இப்படித்தானே இருக்க வேண்டும்? இதில் சிறப்பாகச் சொல்ல என்ன இருக்கிறது?” என்று தோன்றும். அந்தக் கடிதத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மேலும், இதெல்லாம் மிகவும் அபூர்வமான குணமாக இல்லாமல் ’எல்லோருமே இப்படித்தானே, இதில் என்னய்யா பெரிய வெங்காயத்தைக் கண்டீர்?’ என்று பிச்சைக்காரனைக் கடிந்துரைக்கும் நிலையில் சமூகம் மாற வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.

அன்புள்ள சாரு…
அரசனைப் போல வாழ்தல் என்பது ஒரு மனநிலை… அது பொருளாதாரம் சார்ந்தது அல்ல. பணக்கார உறவினர் சாப்பாட்டை வீணாக்க மனமின்றி ஊசிப்போன சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவதை தஞ்சை பிரகாஷ் ஒரு சிறுகதையில் பதிவு செய்திருப்பார்…
சில ஆண்டுகள் முன்பு ஒரு சாதாரண வாசகனாக உங்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் வியந்து பார்க்கும் ஒரு விஐபி உங்களைப்பார்க்க வந்தார்…  நாம் எகஸ்ட்ரா லக்கேஜாக இருப்பது சரியல்ல என நினைத்து, சரி சாரு… மீண்டும் சந்திப்போம் என சொல்லி விட்டு கிளம்ப ஆயத்தமானேன். உட்காரும்படி சைகை காட்டினீர்கள். சற்று சங்கோஜத்துடன் கிளம்புகிறேன் என்றேன். சற்று கடுமையாக அமரும்படி சொன்னீர்கள்.  அமரந்தேன். அந்த விஐபியுடன் பேச ஆரம்பித்தீர்கள். என்னை அறிமுகம் செய்தீர்கள்.. இவர் என் நண்பர் என்றதும் நானும் அவரும் கைகுலுக்கிக்கொண்டோம்..  நீஙகள்”யார்.. உங்கள் அனுபவம் என்ன .. உங்கள் உயர்மட்ட தொடர்புகள் என்ன.. அதைஎல்லாம் தாண்டி முதல்முறையாக பார்க்கும் ஒருவனை விஐபியை பாரத்ததும் வெளியே போக சொல்லாமல் ஒரு நண்பன் என அழைத்த பெருந்தன்மை இருக்கிறதே..  அந்த உயரம் சராசரி மனதுக்கு புரியாது..
ஜெயமோகன் தன் நாவலில் எழுதுகிறார்−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−நான் அணுக்கமெனக் கண்ட அரசர் நான் அவரை சந்தித்த நாளில் அனைத்தும் பேசி முடித்தபின் எழுந்து கூட்டமாக விருந்தறைக்குச் செல்லும்போது அங்கரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கையில் இயல்பாக என் கைகளைப் பற்றிக்கொண்டவர்

ஒரு தொடுகை. நான் அவருடைய இளையோன் என அக்கணம் உறுதி அடைந்தேன். உணவறைக்குள் புகுந்தபோது அதை கௌரவர் நூற்றுவரும் அறிந்திருந்தனர். கிளர்ச்சியுற்ற குரலில் கிருதவர்மன் சொன்னான். “அவருடைய அன்பு அவரால் வெளிப்படுத்தப்படுவது அல்ல. அவராகவே திகழ்வது அது. அவர் அரசர் அல்ல, அவர் பெருந்தந்தை. கௌரவ நூற்றுவருக்கும் அவர் மைந்தருக்கும் எனக்கும் என்னைப்போல் பல்லாயிரவருக்கும் அவர் தந்தை மட்டுமே. பாண்டவ மைந்தருக்கும் அவரே முதற்தந்தை. விருந்தமர்வில் பேசிச்சிரித்து உண்டுகொண்டிருக்கையில் மிக இயல்பாக பெரிய ஊன்துண்டு ஒன்றை எடுத்து என் தாலத்தில் வைப்பார். அவ்வாறு அவருடைய கை செய்வதை அவரே அறிந்திருக்க மாட்டார். ஓரவிழியால் அவர் முகத்தை நோக்குவேன். அப்போது…” கிருதவர்மன் குரல் உடைந்து உதடுகளை இறுக்கிக்கொண்டான். மூச்சுத்திணற “அவர் முகத்தின் அழகு!” என்றான்
−−−−−−−−−−−−−−−−−+
இவை அனைத்தையும் உங்களிடம் உணர்ந்திருக்கிறேன்..
ரஜினியும் உங்கள் நண்பர்… ஓர் எழுத்தாளரும் நண்பர்..  ஆனால் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை…
அதேநேரத்தில் பிடிக்கவில்லை என்றால் அந்த தொடர்பு தரும் லாபத்தை கணக்கில் கொள்ளாமல் தூக்கி எறியவும் தயஙக மாட்டீர்கள்..  கொஞ்சம் அடஜஸ்ட் செய்து கொண்டு போகலாமே என நானேகூட நினைத்ததுண்டு..  ஆனால் சாரு அப்படி இருக்க மாட்டார் , இருக்கவும் முடியாது
இலக்கியம் பேச ஆரம்பித்தால் வேறொரு மனிதனாக மாறி ஞானத்தை பொழிவீர்கள்..   
உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் வாழ்வது அவர்களுக்குதான் இழப்பு
எனறென்றும் அன்புடன்பிச்சைக்காரன்