காஷ்மீர் (5)

ராணுவத்தோடு படுப்பதுதான் தேச பக்தியா என்று காஷ்மீர்ப் பெண் ஒருவர் கேட்டதை தலைப்புச் செய்தியாக சில பத்திரிகைகள் போட்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் வலியையும் துயரத்தையும் புரிந்து கொண்டே இதை எழுதுகிறேன். ஒரு நிலப்பகுதிக்கு ராணுவம் ஏன் போகிறது? எல்லையைத் தாண்டி தினந்தோறும் தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறது பாகிஸ்தான். படிப்பு இல்லாமல் பல காஷ்மீர் சிறார்கள் தீவிரவாதிகளாக ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். அல்லது, தீவிரவாத சிந்தனையோடுதான் வளர்கிறார்கள். இந்தியாவை அந்நியநாடு என்றே பார்க்கிறார்கள். காஷ்மீரும் மற்றொரு இந்திய மாநிலத்தைப் போல் இருந்தால் அங்கே இந்திய ராணுவம் ஏன் போகிறது? காஷ்மீரில் இருக்கும் ராணுவத்தினரில் பலர் தமிழர்கள். அவர்களால் ஒரு அவசரத்துக்குக் கூட விடுப்பு எடுக்க முடியாது. எல்லையைக் கடந்து வரும் ஆடு மேய்ப்பவர்கள் அவர்களைச் சுட்டால் இவர்களால் பதிலுக்கு சுடக் கூட முடியாது. பாராளுமன்ற ஒப்புதல் வேண்டுமாம். இல்லாவிட்டால் கண்ணையா லால் கோவித்துக் கொள்வார். இதை என்னிடம் சொன்னது எல்லைப் புறத்தில் நிற்கும் ஒரு இந்தியச் சிப்பாய். தமிழர். எப்போது சிவில் பகுதிகளைப் பாதுகாக்க ராணுவம் அனுப்பப்படுகிறதோ அப்போதே அங்கே எதுவுமே சரியில்லை என்றுதான் ஆகிறது. எப்போது ராணுவம் காஷ்மீரிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுகிறதோ அப்போதுதான் காஷ்மீரில் உண்மையான அமைதி திரும்பும். ஆனால் அது காஷ்மீர் மக்களிடமும் – முக்கியமாக தீவிரவாதிகளிடமும்தான் இருக்கிறது. தீவிரவாதி இறக்குமதி ஆக ஆக ராணுவமும் இருந்துகொண்டுதான் இருக்கும். இதையெல்லாம் மாற்றுவதற்கு இப்போது அமீத் ஷா செய்திருக்கும் காரியம்தான் முதல் முன்னேற்றம்.

அந்தப் பெண்ணின் துயரமான கேள்விக்கு பதிலாக ஒரு கேள்விதான் இருக்கிறது. என் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் தீவிரவாதி ஆக்குவதுதான் தேசபக்தியா?