காஷ்மீர்

அரசியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை நிர்மல் என் குரு. ஆயிரம் பக்க புத்தகங்களையெல்லாம் அனாயாசமாக ஒரு வாரத்தில் படித்து அதன் சாரத்தை எனக்கு சொல்லுவார். ஆனால் காஷ்மீர் விஷயத்தில் அவர் என்ன சொன்னாலும் ஒரு விஷயத்தில் நான் fanatic. மத, இன அடிப்படையில் விசேஷ சலுகைகள் கொடுக்கப்படலாகாது. எல்லோரும் சமம். எல்லா மதமும் சமம். ஒரு அறிவுக் கொழுந்து என் காமெண்ட் பாக்ஸில் என்னென்னவோ வாய்க்கு வந்ததை எழுதியிருந்தது. 1947இல் இரண்டு நாடுகள் பிரிந்தது ஜின்னாவுக்கும் நேருவுக்கும் இடையில் நடந்த அதிகாரப் போட்டி. ஒரு பகடையாட்டம். அந்த ஆட்டத்தில் காந்தி தோற்றார். நேரு, ஜின்னா என்ற இரண்டு அதிகாரப் போட்டியாளர்கள் வென்றார்கள். ஜின்னாவுக்கு காச நோய் இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரிந்திருந்தால் இந்தியா பாகிஸ்தான் வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும் என்பார்கள். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து ஒரே வருடத்தில் அவர் காச நோய் முற்றி இறந்து விட்டார்.

இந்தப் பிரிவினை பற்றியெல்லாம் யாரும் எந்த மக்களின் கருத்தையும் கேட்கவில்லை. நம் கூத்தாநல்லூர் முஸ்லீமும் இஸ்லாமாபாத் முஸ்லீமும் ஒன்று அல்ல. இன்னும் சொல்லப் போனால் கராச்சி முஸ்லீமும் இஸ்லாமாபாத் முஸ்லீமுமே ஒன்று அல்ல. பாங்க்ளாதேஷ் முஸ்லீமும் துனீஷியா முஸ்லீமும் ஒன்று அல்ல. உஸ்பெகிஸ்தானைப் பார்த்தால் ரஷ்யா மாதிரியே இருக்கிறது. யாருமே தொழுவதில்லை. திருமணம், மையத்து போன்ற சடங்குகளில்தான் தொழுகை செய்கிறார்கள். ஆனால் நம்மூர் முஸ்லீம் அப்படி இல்லை. ஐந்து வேளை தொழுகிறார்கள். இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம் செய்யும் காட்சியை பிரும்மாண்டமான தேர் வடிவம் செய்து வைத்திருக்கிறார்கள். மிகப் பிரம்மாண்டமான சிலை அது. அப்படி இங்கே செய்தால் மோடியைத் தொலைத்துக் கட்டி விடுவார்கள். நானே அதைத் திட்டி கட்டுரை எழுதுவேன். இங்கே செக்கூலரிஸம் என்றால் இந்துவைத் திட்டுவது என்று பொருள்.

சொல்ல வந்த விஷயத்திலிருந்து ரொம்ப தூரம் வந்து விட்டேன். காஷ்மீர் விஷயத்தில் 1947-இல் நடந்ததெல்லாம் இரு தனிமனிதர்களுக்கு இடையே நடந்த ஒப்பந்தமே தவிர எந்த மக்களும் அதில் சம்பந்தப்படவில்லை.

மக்கள் விருப்பமே ஜனநாயகம் என்றால் முதலில் தமிழ்நாட்டைப் பிரித்துக் கொடு என்றுதான் கேட்பார்கள். பஞ்சாபைக் கேட்பார்கள். ஏற்கனவே சத்தீஸ்கரில் பாதிப் பகுதி நக்ஸல்பாரிகள் வசம் இருக்கிறது.

நான் அகண்ட பாரத ஆதரவாளன் அல்ல. மாகாணங்கள் அனைத்துக்கும் இப்போது இருப்பதை விட அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும். யு.எஸ். மாதிரி. சில ஐரோப்பிய நாடுகள் மாதிரி. ஆனால் அப்படிப்பட்ட மாகாண சுயாட்சிக்கு நம் மாநிலங்கள் தயாராக இல்லையே? உதாரணமாக, என்னிடம் எக்கச்சக்கமாக சொத்து இருக்கிறது. எனக்கு நான்கு பிள்ளைகள். ஒருத்தன் ரேப்பிஸ்ட். ஜெயிலில் இருக்கிறான். இன்னொருத்தன், பெண் குழந்தைகளைக் கடத்தி பிராத்தலில் விற்ற கேஸில் ஜெயிலில் இருந்தான். இப்போது ஜாமீனில் வந்து தலைமறைவாக இருக்கிறான். இன்னொருத்தன், வங்கிக் கொள்ளை கேஸில் உள்ளே இருக்கிறான். இன்னொருத்தன், ரொம்ப புத்திசாலி. கள்ள நோட்டு அடித்த கேஸில் போலீஸில் மாட்டாமல் இப்போது லண்டனில் இருக்கிறான். இவன்களிடம் என் சொத்தைப் பிரித்துக் கொடு என்று கேட்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் அறிவு கிறிவு இருக்கிறதா? கோட்பாட்டு அளவில் மாகாண சுயாட்சிக்கு நான் ஆதரவாளன் தான், வைகோ சொல்வது போல யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்பதே சரி. ஆனால் கொள்ளைக்காரர்களை என் தேசத்தின் பிரதம மந்திரியாக என்னால் ஏற்க முடியாது.

மொத்தத்தில் காஷ்மீரும் மற்ற மாநிலங்களைப் போல் இருக்க வேண்டியதுதான். இதை பாகிஸ்தானும் சீனாவும் ஐநாவுக்கு எடுத்துப் போனால் அது மோடிக்கும் அமீத் ஷாவுக்கும்தான் நல்லது. இதை வைத்தே தேச பக்திக் கனலில் ஐந்து ஆண்டுகளை ஓட்டி விடுவார்கள். சீனாக்காரனை அமீத் ஷா கன்னத்திலேயே அறையலாம். முதலில் நீ திபெத் என்ற மகா பெரிய தேசத்தையே திருடி வைத்திருக்கிறாயே யாரடா நீ என்று…