பிக் பாஸ் (3) – 5

மரியாதைக்குரிய சாரு அவர்களே           

சற்று நேரம் முன்பு தான் தாங்கள் எழுதிய பிக் பாஸ் கட்டுரைகளைப் படித்தேன். இப்படிப்பட்ட கேவலமான, தேவையற்ற மன விசாரணைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் தேவையா? ஏன் இந்தப் பெரிய அளவிலான நிறுவனங்கள் இப்படி குரூரமாக சிந்திக்கிறார்கள்?       ‌‌‌‌

ப.லட்சுமி நாராயணன்.

அன்பு நண்பருக்கு…

நீங்கள் என் எழுத்தை இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாசித்தால் உங்களுடைய இந்த மேலோட்டமான கவலைக்கு அதிலேயே பதிலைக் கண்டு பிடித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இப்போது உங்கள் கேள்வியை ஒரு தோதாகக் கொண்டு இதை எழுதுகிறேன்.

நிகழ்ச்சி நடத்துபவர்களின் மீது எந்தத் தவறும் சொல்ல முடியாது. உண்மையான கலாச்சார சீரழிவு என்பது சீரியல்களால்தான் நடந்து கொண்டிருக்கிறது. சினிமாவில் அதை விட அதிகமாக நடக்கிறது. எதையென்று தடை செய்வது? தாலிபான் ஆட்சியில்தான் அதெல்லாம் நடக்கும். மேலும், பங்கேற்பாளர்கள் காட்டுமிராண்டிகளைப் போல் நடந்து கொண்டால் அதற்கு தயாரிப்பாளர் என்ன செய்ய முடியும்? அந்த நிகழ்ச்சியில் இருப்பவர்களிலேயே மிக ஆபத்தானவராக இருப்பவர் சேரன் தான். ஆனால் வெளிப்படையாக மக்களின் வெறுப்புக்கு ஆட்பட்டிருப்பவர் வனிதா. அதனால்தான் சொல்கிறேன், சேரம் மிக மிக ஆபத்தானவர் என்று. ஏனென்றால், அவருடைய மதிப்பீடுகளின் சமூக விரோதத்தன்மை என்னவென்று அவருக்கே தெரியாது. அவரை வியந்தோதுபவர்களுக்கும் தெரியாது. அவர் பேசுவது அனைத்துமே நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் சார்ந்தவை. நூறு ஆண்டுகள் பழமையானவை. அதனால்தான் இளைஞர்களின் வெறுப்புக்கு ஆளாகிறார். அவருடைய மதிப்பீடுகள் மிகவும் ஆபத்தானவை.

மற்றபடி கஸ்தூரி, மோகன், சாக்‌ஷி, வனிதா போன்றவர்கள் மேட்டுக்குடியினரின் அத்தனை ஆபாசங்களையும் உள்ளடக்கியவர்கள். இப்படிப்பட்ட ஆபாசமான, அவலமான சமூகத்திலா வாழ்கிறோம் என்பதை எனக்குக் காண்பித்த விஜய் டிவிக்கு நான் தினம் தினம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை மட்டும் நான் பார்த்திராவிட்டால் நான் வாழும் இந்தச் சமூகத்தின் நோய் பற்றி எனக்குத் தெரிந்திராது. என் சக மனிதர்களின் கலாச்சார அவலம் குறித்து நான் ஏதும் அறிந்திருக்க மாட்டேன். எதிராளியிடம் போய் இப்போ உன் நாய்க்குட்டி செத்துப் போச்சுன்னு வச்சுக்கோ என்று யாரும் ஜோக் சொல்ல ஆரம்பிக்க மாட்டார்கள். மிகப் பயங்கரமான ஆஃப்ரிக்க ஆதிவாசிக் காட்டுமிராண்டிச் சண்டைகளின் போதுதான் (உ-ம்: துத்சி, ஹூத்தூ) இப்படிப்பட்ட வன்முறையை நாம் காண முடியும்.

எனவே தயாரிப்பாளரைக் குறை சொல்ல முடியாது. நம் சமூகத்தில் நல்ல மனிதர்களை எப்படி உருவாக்குவது? அப்படி உருவாக்கினால் இது போன்ற நிகழ்ச்சிகள் இன்னும் சிறப்பாகவும், இன்னும் சுவாரசியமாகவும் இருக்கும். வெறுமனே நாடி பிடித்துப் பார்க்க 800 ரூபாய் வாங்கும் டாக்டர்கள் உலவும் மைலாப்பூரில் நான் வசிக்கிறேன். இவர்களை விட சமூக விரோதிகள் யாரும் இருக்கிறார்களா என்ன?