புத்தக விழா

நேற்று திரைப்படழாவின் போது ஒரு நண்பர் கேட்டார், என்ன புத்தகத் திருவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா என்று. அவருக்கு சுருக்கமான சொன்ன பதிலை இங்கு சற்றே விரிவாக எழுதுகிறேன். ஆனால் இந்த விஷயத்தை சுமாராக 1008 தடவை எழுதி சலித்து விட்டேன். உங்களுக்கும் படித்துச் சலித்திருக்கும். ஆனாலும் எத்தனை முறை நான் இந்தக் கேள்வியை எதிர்கொண்டாலும் அத்தனை முறை இதற்கு நான் பதில் சொல்லியே ஆவேன். அதுதான் என் மனோதர்மம்.

இந்தத் தமிழ் சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன இடம் இருக்கிறது? நான் கடவுள் படத்தில் வரும் பிச்சைக்காரனைப் போன்றவன் எழுத்தாளன். எழுத்தாளர் என்றால் சமூகத்தில் ஒரு மதிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? சொல்வீர்களா? என்ன செய்கிறீர்கள்? எழுத்தாளர். ”சரி, வருமானத்துக்கு?” என்றுதானே அடுத்த கேள்வி வருகிறது? என் புத்தகங்கள் எத்தனை பிரதிகள் விற்கின்றன? 200. நாவல் என்றால் 2000. அவ்வளவுதான். எனக்கு எவ்வளவு ராயல்டி வருகிறது? ஒன்றரை லட்சம். அதுவும் காயத்ரி, ராம்ஜி புண்ணியத்தில். அவர்கள் ஆரம்பித்த ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் என் புத்தகங்களை மீண்டும் பிரசுரித்ததன் காரணமாக. இல்லாவிட்டால் இதுவும் இல்லை. இந்த ஒன்றரை லட்சமும் என்னுடைய 60 புத்தகங்களின் விற்பனையில். புத்தகங்கள் அச்சடிப்பதே 200 தான். விற்பது அம்பது அறுபது பிரதிகள். ஆக, ராயல்டி மூலம் வரும் மாத வருமானம் பனிரண்டாயிரம் ரூபாய். இஸ்திரி போடும் தொழிலாளரின் சம்பளமே 20000 ரூ. இந்த லட்சணத்தில் நான் எப்படி புத்தகத் திருவிழாவுக்குத் தயாராவது?

சமீபத்தில் என் பிள்ளை லக்ஷ்மி சரவணகுமாரின் ரூஹ் பற்றி முகநூலில் பார்க்கிறேன். தமிழில் இதுவரை இந்த நாவலுக்கு நடந்த ப்ரமோஷன் மாதிரி நான் பார்த்ததில்லை. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படித்தான் புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். லக்ஷ்மிக்கு முகநூலில் சுமார் 30000 நண்பர்கள் இருப்பார்கள். புத்தகத்தின் கிண்டில் விலை 50 ரூ. சரி, 10,000 பேராவது வாங்கியிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆக, லக்ஷ்மிக்கு எப்படியும் அம்பதாயிரம் ரூபாய் ராயல்டி கிடைத்திருக்கும் என்று மகிழ்ந்திருந்தேன். கடைசியில் பார்த்தால் 1000 டவுன்லோடுதான் ஆகியிருக்கிறதாம். அதிலும் 800 பேர் இலவச டவுன்லோடாம். லக்ஷ்மியிடம் பேசவில்லை. அவர் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன். அடப்பாவிகளா! நான் சொன்னேன், வாங்காத எல்லாரையும் ப்ளாக் செய்து விடலாமே என்று. செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை.

புத்தகத் திருவிழாவில் என்ன நடக்கிறது? என்ன நடந்தது? பதிப்பாளர் அனைவரும் அவரவரது புத்தக அரங்கில் அமர்ந்து ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நானும் போய் ஸீரோ டிகிரி அரங்கில் அமர்ந்து அதைச் செய்கிறேன். சனி, ஞாயிறில் மட்டும் அதிலும் மாலை நேரத்தில் ஐந்து மணியிலிருந்து எட்டரை வரை விற்பனை ஆகிறது. அவ்வளவேதான்.

புத்தகத் திருவிழாவில் பெருங்கூட்டம் கூடுகிறதுதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எல்லாம் டிக்ஷனரி வாங்கும் கூட்டம். இல்லாவிட்டால் பொன்னியின் செல்வன். அதிலும் இந்த ஆண்டு மணியின் புண்ணியத்தில் பொன்னியின் செல்வன் மட்டுமே பத்து லட்சம் காப்பி நிச்சயம் போகும். செத்தும் கொடுக்கிறார் கல்கி.

ஆனாலும் எனக்கு அவ்வப்போது வரும் சில கடிதங்கள் உற்சாகம் அளிக்கின்றன.

Dear Charu,
Greetings.

I had a chance to read your (unfortunately only two) books this year. Oliyin Perunchalanam, Nilavu Theyadha Desam. A recent read was Nilavu Theyadha Desam. My initial assumption was that this book would provide a brief insight into Turkey and not more than that. I am not sure if I could use “I was surprised” in this context as I was expecting something unusual (because it was from you) and I was not surprised. The insight the book gave about the Literature, People, Place, History and most importantly the experience pushed me to write this mail to you.

This book will always be special to me, not only because I have that Autographed by you, not because of that I am a big fan of books fo this Genre, but because of the experience, you gave me whilst reading it.

I am, and will always be a proud fan of you and your works. Eagerly waiting to meet you again this time in Bookfair ( this time without the feat that I had last time) and to buy experience your next set of books.

Wishing you a healthy and prosperous life which will allow you to read and write more

Thanks and Regards
R.Alagaraja

இது போன்ற வாசகர்கள் சிலரை புத்தகத் திருவிழாவில் சந்திக்க நேர்வதும் அவர்கள் வாங்கும் புத்தகங்களில் கையெழுத்திடுவதும் மகிழ்ச்சியான, நிறைவான தருணங்கள்.

எதிர்மறையான விஷயங்களைச் சொல்வது போல் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் கூடப் பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லவா? சமீபத்தில் அப்படி நெகிழ்ந்த ஒரு தருணம் உண்டு. மோடி இரண்டாவது தடவையாகவும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காவிட்டால் நான் சந்தா கேட்டு எழுதியிருக்க மாட்டேன். 15 ஆண்டுகள் என் லௌகீக வாழ்வைப் பற்றி கவலைப்படாத அளவுக்கு என்னை கவனித்துக் கொண்ட இரண்டு நண்பர்கள் மோடியின் பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்டதால் எனக்கு அளித்து வந்த உதவியை நிறுத்திவிட நேர்ந்ததால்தான் இந்த சந்தா/நன்கொடை ஏற்பாட்டில் இறங்கினேன். ஆனாலும் சில சமயங்களில் மோடிக்குப் பதிலாக காங்கிரஸோ வேறு ஏதாவது கருமாந்திரக் கூட்டணி ஆட்சியோ வந்திருந்தால் இப்படி சில வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் சிரமம் கொடுக்காமல் இருந்திருக்கலாமே என்று யோசிப்பேன்.

சென்ற வாரம் ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் ஏற்பட்டது. ஒரு வாசகர் இப்படி எழுதியிருந்தார்:

அப்பா, நம்பர் சொல்லுங்க.
பணம் அனுப்பணும்.

அப்பா என்றாலே நான் கொஞ்சம் நெகிழ்ந்து விடுவேன். அதனால் நம்பரோடு அவரை விசாரித்தும் பதில் எழுதினேன். கூகிள் பே மூலம் பணம் அனுப்ப நம்பர் தேவைப்படும்.

அவர் எழுதிய பதிலை கீழே தருகிறேன்:

என் பெயர் கிருஷ்ணன், அப்பா.
சென்னையில் வசிக்கிறேன். வயது 29. 10 வரை, படித்தேன், அரசு பள்ளி.
20 வயதில் உங்களை அடைந்தேன். பல வேலைகளை செய்திருக்கிறேன்.
தற்போது ஓட்டுநர் வேலை. வரும் காலம் எனக்கு என்ன வேலை வைத்துள்ளது எனத் தெரியவில்லை. என்னை மனிதன் ஆக்கியதே நீங்கள்தான் அப்பா… உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை…
நிறைய பேச வேண்டும் போல இருக்கிறது… அழுதுவிடுவேன்…
அதனால்தான்…
நேரம் இருப்பின் அழையுங்கள் அப்பா…

இந்தக் கடிதத்துக்கு நான் இன்னும் பதில் எழுதவில்லை. அவருடைய போன் நம்பர் தெரியாததால் அழைக்கவும் இல்லை. திரைப்பட விழாவில் தற்சமயம் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

இது ஒரு நெகிழ்ச்சியான கடிதம் மற்றும் தருணம். இதில் என்ன நெகிழ்ச்சி என்று உங்களுக்குத் தோன்றலாம். எனக்கு சந்தா அல்லது நன்கொடை அனுப்பும் பத்து பேரில் இந்த கிருஷ்ணனும் ஒருவர் என்பதே மகிழ்ச்சிக்குக் காரணம். ஏன் என்று விளக்குகிறேன். ஒரு லாரி கம்பெனி ஓனர் என் நண்பர், வாசகர். என் வீட்டுக்கு வந்து என்னோடு ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு என் புத்தகங்களில் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டு போவார். என் ஒரு மணி நேரத்துக்கு எந்த வெகுமதியும் இல்லை. இலவசம். கையெழுத்தும் இலவசம். இதேபோல் இன்னொரு செல்வந்தர். நகரில் இரண்டு மூன்று சினிமா தியேட்டர்களின் சொந்தக்காரர். வருவார். பேசிக் கொண்டிருப்பார். புத்தகங்களில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு போவார். இப்படி இன்னும் இரண்டு மூன்று பேர். இவர்கள் அனைவரும் என்னோடு அவ்வப்போது போனில் பேசுவர். தினமும் வாட்ஸப் மெஸேஜ் அனுப்புவர். ஆனால் சந்தா பற்றி, நன்கொடை பற்றி நான் எழுதும் எதற்கும் இந்த செல்வந்தர்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இருக்காது. ஆனால் தினந்தோறும் என் ப்ளாகைப் படிக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரியும். அதில் உள்ள விஷயங்கள் பற்றி அவர்கள் விவாதிப்பதால். ஒருவேளை, சந்தா/நன்கொடை பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை போல என்று நினைத்து அவர்கள் இருவரிடமும் சந்தா கேட்டிருந்தேன், படித்தீர்களா என்றும் நேரடியாகவே கேட்டேன். ஓ, அனுப்புகிறேன் சாரு என்றே சொல்லி வைத்தது போல் சொன்னார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால் எவ்வளவோ நாட்கள் ஆகியும் எதுவும் ஆகவில்லை. வழக்கம் போலவே வாட்ஸப் மெஸேஜ் அனுப்பினார்கள். வீட்டுக்கு விருந்தினனாக அழைத்தார்கள். அதிலெல்லாம் எந்த மாற்றமும் இல்லை.

இரண்டு மாதம் பொறுத்து விட்டு அவர்களை வாட்ஸப்பில் ப்ளாக் செய்து விட்டேன். அதற்குப் பிறகு அவர்களும் போனில் என்னைத் தொடர்பு கொள்வதில்லை. லட்சங்களெல்லாம் அவர்களுக்குத் துச்சம். ஆனால் படிப்பதற்குக் காசு கொடுக்க மாட்டோம். அது அவர்களின் சுதந்திரம். அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. என்னோடு நட்பு கொள்ள வேண்டாம் என்று ஒதுங்கி விட்டேன். நான் பார்த்த நூற்றுக்குத் தொண்ணூறு பணக்காரர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கிருஷ்ணனின் 400 ரூபாய் சந்தாவை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன். அவருடைய கடிதத்தில் ஒரு வாழ்க்கையே அடங்கி இருக்கிறது. வயது 29. பல வேலைகள் பார்த்திருக்கிறார். அரசுப் பள்ளி. ஓட்டுனர் வேலையில் 20,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவருக்கு 400 ரூபாய் சந்தா கட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்குக் கண்கள் கலங்கி விட்டன. அப்போதுதான் மோடி பற்றியும் சமீபத்திய பொருளாதார வீழ்ச்சி பற்றியும் அது என்னுடைய வாசல் கதவைக் கூட தட்டி விட்டது பற்றியும் நினைத்தேன்.

சமீபத்தில் முகநூலில் தேனீ பா. வடிவேல் என்ற வாசகர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
சாரு நிவேதிதா எனக்குக் கடவுள். இன்னொரு தகப்பன். ராஸ லீலா படிக்கத் தொடங்கியது முதல் இப்போது வரை சாருவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். சாரு எனும் பொக்கிஷத்தை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.
குமுதத்தில் சாருவின் ‘சொல் தீண்டிப் பழகு’ என்று ஒரு சுவாரசியமான தொடர் வெளியாகிறது. இந்த வார இதழில் இருந்து சில வரிகள்…..
“’எங்கேயாவது கொண்டுபோய் விட்டு விடுங்கள், பூனைகள் நாய்களைப் போல் அல்ல; அவைகளுக்கு survival instinct அதிகம். எப்படியாவது பிழைத்துக்கொள்ளும்’ என்று என் நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேரும் யோசனை சொன்னார்கள். சரி சரி என்று தலையாட்டினேனே தவிர எனக்குள் தோன்றிய கேள்வியை மட்டும் கேட்கவே இல்லை. மகனுக்கு 30 வயது ஆகி இரண்டு குழந்தைகள் பெற்றுவிட்டாலும் அந்த தடிமாட்டுக்கு அவன் மனைவியின் எதிரிலேயே சோறு ஊட்டி விடுகின்ற தாய்மார்களை எனக்குத்தெரியும். 18 வயது ஆனாலும் ஹாஸ்டலுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அநேகம்.

குழந்தையை வளர்க்க முடியவில்லை என்று யாராவது கோயில் திருவிழாவில் கொண்டுபோய் விடுவார்களா? பூனையும் நாயும்கூட நம்மோடு நம் குழந்தைகளைப் போலவேதான் பழகுகின்றன. இரண்டுக்கும் வித்யாசமே இல்லை. அதனால் தான் ஆரம்பத்திலேயே சொன்னேன், எல்லா உயிர்களிடத்தும் நான் பிரம்மத்தைப் பார்க்கிறேன் என்று.”

மேலே உள்ள கடவுள் என்ற வார்த்தையையெல்லாம் அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். எனக்கு தி.ஜா.வும், லா.ச.ரா.வும், அசோகமித்திரனும் கடவுள் என்று நான் அடிக்கடி சொல்வது போலத்தான் இதுவும்.

தமிழ் எழுத்தாளனின் பிச்சைக்கார வாழ்வில் இப்படிப்பட்ட அற்புதத் தருணங்களும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

***

கடந்த இரண்டு மாதங்களாக சந்தாத் தொகை எதுவும் வரவில்லை. நானும் ஒன்றும் ஞாபகப்படுத்தி எழுதவில்லை என்பதால் இருக்கலாம். கவனியுங்கள்.

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai