இப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…

நான்கைந்து நாட்களாக நாகேஸ்வர ராவ் பூங்காவில் தனியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.  ராகவன் வெளியூர் போய் விட்டார்.  அப்படித்தான் சொல்லுவார்.  எந்த ஊர் என்று சொல்ல மாட்டார்.  நானும் கேட்க மாட்டேன்.  ஆனால் மனசுக்குள் நினைத்துக் கொள்வேன், இதெல்லாம் மகா பெரிய ராணுவ ரகசியம் போல என்று.  ஆனால் இன்னொரு நண்பர் இதை விட பயங்கரம்.  சாய்ந்தரம் சந்திப்போமா என்று போன வாரம் கேட்டேன்.  நான் ஊர்ல இல்லியே சாரு என்றார்.  ஆஹா ஆஹா என்று மனசு குதியாட்டம் போட்டது.  வெளியூர் போகிறேன் என்பதை விட இது இன்னும் ஒரு படி மேலே.  ஊரில் இல்லை.  அப்புறம் முகநூலில் நண்பரின் போஸ்டில் ”இங்கே கோவையில் கிளைமேட் சூப்பரா இருக்கு” என்பதைப் பார்த்து ஓ, கோவையில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.  இதெல்லாம் உப்பு பெறாத சமாச்சாரம்.  இருந்தாலும் பலருடைய சிந்தனைப் போக்கே இப்படித்தான் இருக்கிறது.  நான் யாரிடமும் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்க மாட்டேன். அதை நான் ஒரு சம்பவத்தின் மூலம் பழகிக் கொண்டேன்.  ஒரு நண்பருடன் காலை ஒன்பது மணி அளவில் காரில் சென்று கொண்டிருந்தேன்.  நண்பருக்கு ஒரு போன்.  எடுத்தார்.  அவர் பேசினது இது:  எங்கியா?  தேவ்டியா வூட்ல இருக்கேன்.  ஊம்பிட்டு இருக்கா…  ம்… அப்றம்?

வைத்து விட்டார்.  பிறகு என்னைப் பார்த்து “வேற என்னா சொல்றது தலைவரே?  காலங்காத்தால போனைப் போட்டு எங்க இருக்கீங்கன்னு கேக்குறான்.  லூசுக் கூதி” என்றார். நண்பர் என்னைப் போலவே ஒரு சேரியிலிருந்து முன்னேறி வந்தவர்.  அதிலிருந்துதான் நான் யாரையும் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்பதில்லை.  ஆனால் அவந்திகா எனக்கு போன் செய்தால் அவள் கேட்கும் முதல் கேள்வி அதுதான்.  எங்கே இருக்கே சாரு?  அந்தக் கேள்வியை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம் எனக்கு அந்தக் காலை நேரமும் நண்பரின் பதிலும் ஞாபகம் வரும். 

இதையெல்லாம் மீறி சில சமயங்களில் அந்தக் கேள்வியைக் கேட்க நேர்வதுண்டு.  அப்படித்தான் ஒரு நண்பரிடம் மதிய உணவுக்கு வருகிறீர்களா என்று கேட்க வேண்டும்.  நான் அவருடைய வீட்டின் அருகே இருந்தேன்.  போன் செய்து, “நான் உங்கள் வீட்டின் அருகேதான் இருக்கிறேன், மதியம் சாப்பிடப் போகலாமா?” என்று நீட்டி முழக்குவதை விட அவர் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்று தெரிந்து கொண்டு விடுவோம் என நினைத்து, “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.  வெளீல இருக்கேன் என்றார்.  செம கடுப்பாகி விட்டது.  நான் என்ன பாகிஸ்தான் பிரதமர், நீர் என்ன இந்தியப் பிரதமரா, நாம் ரெண்டு பேரும் என்ன எல்லைப் பிரச்சினை பற்றியா பேசப் போகிறோம்?  ஓகே என்று சொல்லி போனை வைத்து விட்டு மறுநாள் ஏன் எப்போதும் எல்லோரும் – நீங்கள் உட்பட – எல்லாக் கேள்விக்கும் பூடகமான பதிலையே சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.  அவருக்குப் புரியாததால் முந்தின நாள் நடந்ததை, அவர் சொன்ன பதிலை விளக்கினேன்.  அவர் சொன்னார், நான் நேற்று டிவி வாங்கப் போனேன்.  அதைச் சொன்னால், ஏற்கனவே ஒரு டிவி  இருக்கிறதே, அதை என்ன செய்வீர்கள், அது என்ன ஆச்சு என்ற கேள்வியெல்லாம் வரும்; அதையெல்லாம் விளக்க வேண்டும்.  அதனால்தான் ஒரே பதிலில் எல்லாவற்றையும் முடித்து விடுவது என்றார். 

புரிந்தது.  ஆனால் என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் புரியாதது என்னவென்றால், நான் ஒரு லௌகீக மனிதன் இல்லை என்பதுதான்.  குறைந்த பட்சம் என்னிடம் அப்படிப் பேச அவசியம் இல்லை என்பதுதான்.  இப்படியெல்லாம் பூடகமாகப் பேசி எதைச் சாதித்தோம்?  வாழ்க்கையையாவது மகிழ்ச்சியாக வாழ்கிறீர்களா?  அதுவும் இல்லை. ஒரு நண்பர் எனக்கு மிகப் பெரிய உதவி ஒன்றைச் செய்தார்.  பிறகு ஒரு சமயம் எனக்கு ஒரு உதவி கேட்டு கடிதம் எழுதினார்.  என்ன உதவி என்று எழுதவில்லை.  உதவி தேவை என்று மட்டும் தெரிந்தது.  வேலைப்பளுவின் காரணமாக இரண்டு நாட்கள் ஆகியும் நான் பதில் எழுதவில்லை.  மூன்றாம் நாள் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவராகவே ஏதேதோ அனுமானம் செய்து கொண்டு, நான் ஒன்றும் உங்களிடம் உதவிக்கு வரவில்லை, உதவி என்று சொன்னவுடனேயே பயந்து விட்டீர்களா, அப்படி இப்படி என்று.  அவரால் என் பதிலுக்காக ஒரு இரண்டு நாட்கள் கூடக் காத்திருக்க முடியவில்லை. சில சமயம் குடும்ப வேலைகளின் காரணமாக பல நாட்கள் கூட நான் மின்னஞ்சல் பக்கமெல்லாம் வர வாய்ப்பில்லாமல் போனதுண்டு.  இனிமேல் உங்களோடு என்னால் சகவாசம் வைத்துக் கொள்ள முடியாது என்று எழுதி விட்டேன்.  ஏனென்றால், நண்பருக்கு என்னை யார் என்று தெரியவில்லை.  பணத்தின் மேல் ஆசை இல்லை; புகழின் மேல் ஆசை இல்லை; உறவு பந்தம் பாசம் எதன் மீதும் ஆர்வமோ பற்றுதலோ இல்லை. மரணத்தின் மீதும் பயமில்லை. பயணத்தையும் எழுத்தையும் தவிர உலக வாழ்க்கையோடு வேறு எந்த உறவும் இல்லை.  இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனிடம் பேசுகிற பேச்சா அது?

இப்போது ஒரு வருடம் கழித்து நண்பரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.  மிகவும் அன்பான கடிதம்.  உங்கள் எழுத்தை என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை என்பது போல.  ரொம்பவும் அன்பான கடிதம்.  அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.  ஆனால் நண்பருக்கு இன்னமும் நான் யார் என்று தெரியவில்லை.  முதல் கடிதத்தைத் தொடர்ந்து இரண்டாவது கடிதம். This mail is not a pretext to ask you any favor.  எப்படி இருக்கிறது கதை?  என்னய்யா இது?  திரும்பத் திரும்ப அதே கதைதானா?  என் பொருட்டு உங்கள் நேரத்தை எனக்கு செலவழித்திருக்கிறீர்கள்.  அப்படி இருக்கும்போது என்னால் முடிந்ததை நான் உங்களுக்குச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்?  திரும்பத் திரும்ப “உதவி” “favour” என்ற ரீதியிலேயே ஏன் யோசிக்க வேண்டும்? 

நான் வாசகர்களிடம் சந்தா அனுப்புங்கள் என்று எழுதினேன்.  மோடிதான் காரணம்.  அவருடைய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் என்னுடைய இரண்டு நண்பர்களின் பிஸினஸில் கொஞ்சம் முடக்கத்தை ஏற்படுத்தி விட்டது.  இருவரும் இன்னமும் தீவிர மோடி ஆதரவாளர்கள்.  அந்த இரண்டு நண்பர்களும்தான் என் லௌகீக வாழ்க்கையில் நான் அதிகம் சிரமப்படாமல் கவனித்துக் கொண்டவர்கள்.  அவர்களின் உதவி 2019 ஜனவரியிலிருந்து நின்று போனதும்தான் நான் வாசகர்களிடம் சந்தா அனுப்பச் சொல்லி விண்ணப்பம் வைத்தேன்.  மொத்தம் பத்து பேர் அனுப்புகிறார்கள்.  சிலர் 500 ரூ.  சிலர் 2000 ரூ.  அந்த ரெண்டாயிரத்தில் ஒருத்தர் என் நெருங்கிய நண்பர்.  ஜாலியான மனிதர்.  நீண்டகால நண்பர்.  அவர் முகநூலில் என்னைப் பற்றி ஒரு தவறான கருத்தைப் பதிவு செய்திருந்தார்.  அதைப் படித்ததுமே எனக்கு நீங்கள் 2000 ரூபாய் அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  என்னுடைய மாத வருமானமே பத்தாயிரம் ரூபாய்.  அதில் ரெண்டாயிரம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன் என்பதை கவனியுங்கள்.  இன்னும் எட்டு நாளில் எனக்கு 67 வயது ஆகப் போகிறது.  ’இத்தனை வயது வரை சமரசம் செய்யாமல் வாழ்ந்து விட்டோம்; இந்த வயதிலா சமரசம்?’ என்று நினைத்தே அந்த ரெண்டாயிரத்தை வேண்டாம் என மறுத்து விட்டேன்.

இதை எதற்குச் சொன்னேன் என்றால், “உதவி” என்றும் “favour” என்றும் பேசுகின்ற நண்பரின் கடிதத்தை நினைத்துத்தான்.  இந்த விளக்கம் கூட நண்பருக்குப் புரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.  நாம் என்ன தவறாக எழுதி விட்டோம் என்றுதான் அவர் இன்னமும் நினைப்பார். விலை மதிக்கவே முடியாத என் எழுத்தை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.  விலை மதிப்பே இல்லாத நண்பரின் நேரத்தை அவர் எனக்கு அளித்தார். இங்கே எப்படி வந்தது உதவி, favour என்ற வார்த்தைகள்?  நான் வாசகர்களிடம் யாசகம் பெற்று பூனைகளுக்கு உணவிடுகிறேன்.  இது நான் பூனைகளுக்குச் செய்யும் உதவியா?  என் வாசகர்கள் பத்து பேர் எனக்கு அனுப்பும் பணமோ அல்லது பூனை உணவோ எனக்குச் செய்யும் உதவியா?  நான் எழுதுவது காற்று வீசுவதைப் போல.  பறவைகள் பறப்பது போல.  நான் பூனைகளுக்கு உணவிடுவதும் காற்று வீசுவதைப் போலவேதான்.  மழை பெய்வதைப் போலவேதான். மழையும் காற்றும் உங்களுக்கு உதவியா செய்கிறது?  உங்களில் பத்து பேர் அனுப்பும் பணத்தைக் கூட நீங்கள் எனக்குச் செய்யும் உதவி என்றோ – ஏன், தட்சணை என்றோ கூட – சொல்ல மாட்டேன். மழை பெய்வதற்கு மரம் நடுகிறீர்கள்.  மரம் இல்லாவிட்டால் மழை இல்லை.  எத்தனையோ எழுத்தாளர்கள் தமிழில் லௌகீக வாழ்வுக்கான குறைந்த பட்ச வசதி இல்லாமல் கதறிக் கதறி சாகவில்லையா?  அதைப் போல மரங்கள் இல்லாவிட்டால் மழை இல்லை.  நான் மழை போல் எழுதுகிறேன் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையானதுதான் நீங்கள் அந்த மழை வேண்டி நடும் மரங்களும் ஆகும்.

சரி, விட்ட இடத்துக்கு வருகிறேன்.  ராகவன் வெளியூர் போய் விட்டார்; ராமசேஷன் கோவில்பட்டி போய் விட்டார்.  கோவில்பட்டி, ராஜபாளையம், அவர் வளர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் (ஆமாம், ராமசேஷனுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்தான்) எல்லாம் ஒரு சுற்று.  அதனால் நாலைந்து தினங்களாக நாகேஸ்வர ராவ் பூங்காவில் தனியாகத்தான் நடந்தேன்.  அதில் ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால், தனியாகவே போய்ச் சாப்பிட வேண்டும். ரொம்ப நாள் ஆயிற்றே என்று நேற்று மஹாமுத்ரா போனேன்.  மஹாமுத்ரா எட்டு மணிக்குத்தான் திறப்பார்கள்.  ஆனால் எட்டு மணிக்குத்தான் துப்புரவுப் பணியாளர் பெண் அங்கே வருவார்.  அதனால் எதற்கும் இருக்கட்டும் என்று எட்டரைக்குப் போனேன்.  ஆனால் இட்லி கிடைக்க ஒன்பது மணி ஆகும் என்றார் பணியாளர் மணி.  அரை மணி நேரம் காத்திருக்கும் போது இனிமேல் மஹாமுத்ரா வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.  தமிழ்நாட்டில் வேலைக்கு ஆட்களே கிடைப்பதில்லை.  மஹாமுத்ராவில் பரிசாரகர்களும் இரண்டு பேர்தான்.  அதில் ஒருவர் வடகிழக்கு.  ரெண்டு இட்லி சாப்பிட்டு விட்டு இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என்று கேட்க ஆள் இல்லை.  வடகிழக்கு எங்கோ மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்தது.  நான் என்ன கத்தியும் அதன் கவனம் சிதறாமல் மோட்டுவளையில் இருந்தது. பிறகு நான் எச்சில் கையுடன் எழுந்து போய் மணியிடம் இன்னும் ரெண்டு இட்லி என்று சொல்லி விட்டு வந்தேன். 

இன்று ராமசேஷன் வந்து விட்டார்.  ராகவன் இன்னும் வரவில்லை.  அதற்குள் அவர் சென்றிருந்த ஊரும் தெரிந்து விட்டது.  பெங்களூராம்.  அம்மாவுக்கு திவசமாம்.  எனக்கெல்லாம் திவசம், அமாவாசை எதுவுமே தெரியாது.  எந்தச் சடங்கையும் பின்பற்றியதில்லை. 

சேஷன் எனக்காக கோவில்பட்டி கடலை மிட்டாய் கொண்டு வந்திருந்தார்.  கோவில்பட்டி கடலைமிட்டாய் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  அதே பெயரில் சென்னையில் கடைக்குக் கடை கிடைப்பதெல்லாம் போகஸ்.  ரெண்டு பேரும் வழக்கம் போல் பாரதி மெஸ் போனோம்.  பாரதி மெஸ்ஸில் எல்லாமே நன்றாக இருக்கும்.  காஃபிதான் மோசம்.  வாயில் வைக்க வழங்காது.  கொஞ்சூண்டு சாப்பிடுங்க என்று கொடுத்தார் சேஷன்.  காஃபி அல்ல அது.  சர்பத்.  இப்படி யாராவது கொடுத்தால் அதை அந்த க்ஷணமே மறுத்து விடுவதுதான் என் இயல்பு.  இன்று பேச்சு சுவாரசியத்தில் வாங்கிக் குடித்து விட்டேன்.  மீறி யாராவது வற்புறுத்திக் கொடுத்தால், அவர்கள் காப்பியை ஆற்றுவதற்குள் பிடுங்கி டம்ளரில் பாதியை எடுத்துக் கொண்டு மீதியைக் கொடுத்து விடுவேன். அப்போதுதான் சர்க்கரை அதிகம் கலக்காத காப்பி கிடைக்கும்.  சர்க்கரையெல்லாம் டம்ளரின் அடிப்பகுதியில் தங்கியிருக்கும் என்பதால் அந்தத் திட்டம்.  அவர்களுக்கு அந்த சர்க்கரைதான் அளவு.  பொதுவாக இந்தியாவில் பானகத்தைத்தான் காப்பி, டீ என்று சொல்லிக் குடிக்கிறார்கள்.  அந்த அளவு சர்க்கரை எனக்குப் பிடிக்காது.  மேலும், காப்பியை ஆற்றுவது பஞ்சமா பாதகங்களில் ஒன்று.  மைலாப்பூரில் நல்ல காப்பி கிடைக்கும் இடங்களைக் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சங்கீதா, காவேரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒக்கடே, கபாலி மாட வீதிக்கு எதிரே உள்ள சங்கீதா.  மற்ற இடங்களெல்லாம் காப்பிக்கு லாயக்கு இல்லை.  ஆனானப்பட்ட ராயர் கஃபே காப்பியே டொங்காகி விட்டது. 

பாரதி மெஸ்ஸிலிருந்து வீடு ஒரு கிலோமீட்டர் இருக்கும்.  நடக்கலாம் என்று நடந்தே வரும் போது வழியில் மாமி மெஸ் தட்டுப்பட்டது.  மாமி உயிரோடு இருந்த போது இருந்த ருசி இப்போது இல்லை. இருந்தாலும் அங்கே ஒருமுறை போக வேண்டும்.  மைலாப்பூரிலேயே 15 ஆண்டுகளாக வசிக்கும் ஒரு தோழியை அழைத்து மாமி மெஸ் தெரியுமா என்றேன்.  போனதில்லை என்றாள்.  ம்.  இந்தியாவில் பெண்களுக்கான சுதந்திரமான வாழ்க்கை இவ்வளவுதான்.  மாமி மெஸ், ஜன்னல் கடை, ராயர் கஃபே, காளஹஸ்தி ரோஸ்மில்க், சித்திரைக்குளம் அய்யங்கார் போண்டா – இதெல்லாம் மைலாப்பூரின் அடையாளங்கள் இல்லையா? அந்தச் சித்திரைக்குளம் அய்யங்கார் போண்டா பற்றி மட்டும் விளக்கி விடுகிறேன்.  சித்திரைக் குளத்திலிருந்து அப்பு முதலித் தெருவை நோக்கி வரும் போது இரண்டாவது வலது திருப்பத்தில் ஒரு தெரு உள்ளது.  அதன் பெயர் தாட்சி அருணாசலம் தெரு.  இந்தத் தாட்சி அருணாசலம் யார், இது தாட்சியா தாச்சியா, எதுவும் தெரியாது.  ஆனால் இந்தத் தெருவின் முனையில் பல ஆண்டுகளாக ஒரு அய்யங்காரும் அவரது தர்மபத்தினியும் மாலை மூன்றரை அளவில் தேருவோரத்தில் தரையில் அமர்ந்து போண்டா விற்றுக் கொண்டிருப்பார்கள். வீட்டில் போட்டு எடுத்துக் கொண்டு வந்து விற்பது.  அங்கேயே போடுவது அல்ல.  அய்யங்காருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும்.  மாமிக்கும் அதற்குத் தோதாக.  மழைக் காலத்தில் கூடப் பார்த்திருக்கிறேன்.  இதையெல்லாம் பார்க்காமல் மைலாப்பூரில் வாழ்வதும் மன்னார்குடியில் வாழ்வதும் ஒன்றுதான். 

கபாலி தெப்பக்குளத்தைச் சுற்றி இப்போது சமீபத்தில்தான் இரும்புக் கிராதி போட்டிருக்கிறார்கள்.  அப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம்.  அங்கே உள்ள படிக்கட்டுகளில்தான் தி.ஜா.வும் அவரது சகாக்களும் ராப்பகலாக இலக்கியம் பேசிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.  அதிகாலை வரை கூடப் பேசுவோம் என்று எழுதியிருக்கிறார் தி.ஜா.  இப்போது என்றால் சந்தேகக் கேஸில் உள்ளே தள்ளி விடுவார்கள்.  அப்போதைய நிலைமை வேறு.  திருட்டும் பித்தலாட்டமும் கம்மியாக இருந்த காலம் அது.  எழுத்தாளர்களுக்கு இப்போது மது என்றால், தி.ஜா.வுக்கும் அவரது சகாக்களுக்கும் வெற்றிலையும் புகையிலையும், காப்பியும்.  நள்ளிரவில் காப்பி கிடைக்காதாயிருக்கும்.  ஆனால் பெட்டி பெட்டியாக வெற்றிலையும் புகையிலையும் வைத்திருப்பார்கள்.  அந்தக் காலத்தில் 35 வயதிலேயே 65 வயது தோரணை வந்து விடும்.  இப்போதெல்லாம் நோய்கள் மிகுந்து போனாலும் முதுமைத் தோற்றம் தள்ளிப் போகிறது என்றே நினைக்கிறேன். 

தாட்சி அருணாசலம் தெருவெல்லாம் போகாமல் நேராக நடந்தால் அப்பு முதலித் தெரு வந்து விடலாம்.  ஆனால் அப்பு முதலித் தெரு வந்து விட்டால் அப்பு முதலி முதல் தெருவைத் தாண்டி என் வீட்டுக்கு வந்து விடலாம். ஆனால் அதற்கு சாந்தோம் நெடுஞ்சாலையைத் தாண்ட வேண்டும். அது ஹராகிரி செய்து கொள்வதைப் போல.  ஸீப்ரா க்ராஸிங் எதுவும் கிடையாது. தாட்சி அருணாசலம் தெரு வழியாக மாதா சர்ச் ரோடு வந்து சாந்தோம் நெடுஞ்சாலையைப் பிடித்தால் அங்கே ஸீப்ரா க்ராசிங் உண்டு.  ஏனென்றால், அங்கே எம்.எஸ்.விஸ்வநாதன் வீடு உள்ளது.  அதற்காக அந்த இடத்தில் ஸீப்ரா க்ராஸிங் போட்டிருக்கிறார்கள்.  அந்த வழியாக வந்து மீண்டும் வடக்கு நோக்கி நடந்தால் என் வீடு வந்து விடும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அக்ரஹாரம்
புகைப்படம்: ராமசேஷன்

வெளிநாடுகளில் பார்த்திருக்கிறேன், யாராவது சாலையைக் கடக்க வேண்டுமென்றால், வாகனங்கள் நின்று போகும்.  இங்கெல்லாம் அதை எதிர்பார்ப்பதே முட்டாள்தனம்.  அதனால் அப்பு முதலித் தெருவை விட்டு விட்டு தாட்சி அருணாசலம் தெரு வழியாகவே நடந்து மாதா சர்ச் ரோட்டை அடைந்தேன்.  மாதா சர்ச் ரோட்டில் ஆவின் பூத் கண்ணில் பட்டது.  ஆவினில் பால்கோவா நன்றாக இருக்கும்.  எனக்கு பால்கோவா ரொம்ப இஷ்டம்.  பால்கோவா என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு ஈடு இணை கிடையாது.  ஆமாம், எனக்கு ஒரு சந்தேகம்.  அமெரிக்காவில் – வேண்டாம், அமெரிக்கா ஒரு கண்டம் – ஒரு சின்ன ஊரை எடுத்துக் கொள்வோம்.  நார்த் டக்கோட்டாவில் பார்க் ரிவர் என்ற ஒரு ஊர் உண்டு.  அங்கே இந்த மைலாப்பூர் மாதிரி ஏதேனும் nuances உண்டா?  ஓ, இந்த உதாரணம் தவறோ?  அவ்வளவு சின்ன ஒரு ஊரில் என்ன நுவான்ஸஸ் இருக்க முடியும்?  சரி, நியூ ஜெர்ஸி பெரிய ஊர்தானே?  அதன் நுவான்ஸஸை எனக்கு எழுதுங்களேன்.  அல்லது, ஊர்களைப் பற்றி ஏதேனும் நாவல்கள் வந்துள்ளனவா?  அல்லது, புத்தகங்கள்?  ஊர்களைப் பற்றிய புத்தகங்களிலேயே ஆகச் சிறந்தது இஸ்தாம்பூல்தான்.  ஆனால் ஓரான் பாமுக் ஒரு அதிர்ஷ்டசாலி.  உலகத்திலேயே சிறந்த ஊர் இஸ்தாம்பூல்.  அதனால் அப்படி ஒரு புத்தகத்தை அவர் எழுதினார்.  சிறந்த ஊர் என்பதை “வசிப்பதற்கு வசதியான” என்ற அர்த்தத்தில் வாசிக்க வேண்டாம்.  ”பாரம்பரியச் சிறப்பு மிக்க” என்று வாசியுங்கள்.  தில்லியையும் அப்படிச் சொல்லலாம்.  தில்லி பற்றி ஆயிரம் பக்கம் அனாயாசமாக எழுதலாம்.  12 ஆண்டுகள் அங்கே இருந்தேன்.  ஆனால் தில்லியைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை.  வருத்தமில்லை.  நான் அங்கே இருந்த காலகட்டம் ஒரு சர்வகலாசாலையில் இருந்தது போல.  உலக சினிமா, நாடகம், நடனம், சங்கீதம் இது அனைத்தையும் அங்கேதான் நான் கற்றேன்.  ஊரைப் பார்த்திருந்தால் அந்தக் கல்வி எனக்குக் கிடைத்திருக்காது. மும்பை நகரைப் பற்றி நியூயார்க் நகரில் வசிக்கும் சுஹேது மேத்தா Maximum City: Bombay Lost and Found என்ற ஒரு அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார்.  இன்னும் முழுசாகப் படிக்கவில்லை.  அதைப் படித்தபோதுதான் பம்பாய் ஒரு தீவு என்ற விஷயமே எனக்குத் தெரிந்தது. 

சென்னையைப் பற்றிக் கூட என்னால் எதுவும் எழுத முடியாது.  மைலாப்பூரைத் தவிர நான் வேறு இடங்களை இங்கே சரியாகப் பார்த்ததில்லை.  வட சென்னையின் மண்ணைக் கூட மிதித்தது இல்லை.  உலகப் புகழ் பெற்ற காசி மேடு பகுதியைப் பார்க்காமல் சென்னையைப் பற்றி எழுத முடியுமா என்ன? 

ஆனால் நான் பரவாயில்லை.  மைலாப்பூரை இஞ்ச் இஞ்சாகப் பார்த்து ரசித்திருக்கிறேன்.  மைலாப்பூரிலேயே வாழ்ந்து கொண்டு கேசவ பெருமாள் கோவிலைக் கூட பார்க்காத ஜென்மங்களெல்லாம் இன்னமும் மைலைவாசி என்று சொல்லிக் கொண்டு திரிகின்றன.  ஒரு விஷயம் சொல்கிறேன்.  மாலை ஆறரை மணிக்கு கச்சேரி ரோட்டை வெட்டும் பஸார் தெருவில் ஒரு நடை போய் வாருங்கள்… அப்படியே ஆட்டுக்கால் சூப் வாசம் ஒரு பக்கமும் பஸார் தெருவுக்கு எதிர்த்தாற்போல் உள்ள தேவடி தெருவில் போண்டா வாசமும் ஆளையே தூக்கும். 

ம்ஹும்… இப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை. வீட்டின் சுவர்களுக்குள்ளேயும் அலுவலக சுவர்களுக்குள்ளேயும்தான் வாழ்கிறார்கள்.  முக்கியமான காரணம்?  யாரும் நடப்பதே இல்லை.  மோட்டார் சைக்கிளிலும் காரிலும் போனால் ஊரைப் பார்க்க முடியாது.  நாம் வாழும் நான்கு சுவர்களுக்குள்ளே சடுதியில் போய்ச் சேர்ந்து விடலாம்.   

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai