அய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை

முள்ளம்பன்றிகளின் விடுதி
அய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு அடியேனின் முன்னுரை

’சிறுகதையில்தான் எல்லாவற்றையும் எழுதி முடித்தாயிற்றே, இனிமேல் என்ன இருக்கிறது?’ என்பதுதான் என் பொதுவான நினைப்பாக இருந்தது. ’சிறுகதை செத்துப் போய் விட்டது’ என்றெல்லாம் கூட நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். அந்தக் கருத்து ஹாருகி முராகாமியின் Man-Eating Cats, The Strange Library போன்ற சிறுகதைகளைப் படித்த போது மாறியது. சிறுகதை குறித்த என் எண்ணத்தையே மாற்றிய அம்மாதிரியான கதைகளையே அய்யனார் விஸ்வநாத் எழுதியுள்ள இந்த முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற தொகுப்பில் படித்துத் திளைத்தேன். அந்த அளவுக்கு இச்சிறுகதைகளில் பல தமிழ்ச் சிறுகதை உலகத்துக்குப் புதியவையாக இருந்தன.

எதார்த்த ரீதியான கதைகளை முடிவில்லாமல் எழுதிக் கொண்டே போகலாம். வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உண்டோ அத்தனை எதார்த்தச் சிறுகதைகளை எழுதலாம். ஒவ்வொரு கணமும் கதைதான். ஒவ்வொரு அனுபவமும் கதைதான். உலகில் வாழும், வாழ்ந்த, வாழ வருகின்ற அத்தனை பேரிடமும் கதைகள் இருக்கின்றன. சுற்றியுள்ள நாய்களை விரட்டி விட்டு குப்பைத்தொட்டிக்குள் தலையை விட்டு சோற்றுப் பருக்கைகளைத் தேடும் அனாதைச் சிறார்களிலிருந்து பெண் சுகம் கிடைக்காமல் அல்லலுறுபவர்கள் வரை எதார்த்தக் கதைகள் எண்ணிலடங்காமல் கொட்டிக் கிடக்கின்றன. இதையெல்லாம் எத்தனையோ ஆயிரம் பக்கங்களில் எழுதித் தீர்த்தாயிற்று. இதையே இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எழுதிக் கொண்டிருப்பது? எனவே எதார்த்த வகைக் கதை சொல்லலுக்கான காலம் முடிந்து விட்டது. இந்த மகத்தான செய்தியைத் தன்னுடைய அதிசாகசப் புனைவுகளாலும் விஞ்ஞானக் கற்பனைகளாலும் அமானுஷ்யமான சம்பவங்களாலும் பறைசாற்றுகிறது முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு.

முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற தலைப்புக் கதை ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன். ஆங்கிலத்தில் சயன்ஸ் ஃபிக்ஷன் ஜாம்பவான்களைப் படித்து ரசித்திருக்கிறேன். அதிலும் ரே ப்ராட்பரியின் அதிதீவிர ரசிகன் நான். அவருடைய பெடஸ்ட்ரியன் என்ற சிறுகதையை யாராலும் மறக்க இயலுமா? 1951-இல் எழுதப்பட்ட அந்தச் சிறுகதையைப் போலெல்லாம் தமிழில் படிக்க முடியும் என்று நான் நினைத்தது கூட இல்லை. இப்போது இந்தத் தொகுப்பில் உள்ள முள்ளம்பன்றிகளின் விடுதி கதையைப் படித்த போது என் மனம் நிறைவடைந்தது. ஆனால் அப்படி ரே ப்ராட்பரியை நான் ஞாபகம் கொண்டாலும் இக்கதைகள் இவை எழுதப்பட்டுள்ள genre-இல் இதற்கு முந்தைய எந்த எழுத்தாளரையும் பின்பற்றியிருக்கவில்லை; அவர்களது பாணியைத் தொடரவில்லை என்பது இத்தொகுதியின் ஆகப் பெரிய பலம். அந்த வகையில் இக்கதைகள் தமிழுக்கு மிகவும் புதியவை.

தொகுப்பில் உள்ள பல கதைகள் என்னைக் கதிகலங்க அடித்தன. ஒரு உதாரணத்தோடுதான் விளக்க வேண்டும். சில வெப்சீரீஸைப் பார்க்கும் போது அதன் ’த்ரில்’ தாங்க முடியாமல் எனக்கு நெஞ்சு வலி வந்து விடும். கொஞ்ச நேரம் பார்ப்பதை நிறுத்தி விட்டுத் தொடர்வேன். சிலதைப் பார்க்கவே முடியாது. கடைசி எபிசோடைப் பார்த்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வேன். நெஞ்சு வலி வராது. வாசிக்கும் போது அநேகமாக இப்படி நடப்பதில்லை. காட்சி ரூபக் கலைக்கும் வாசிப்புக்குமான வித்தியாசம் அது என்று நினைக்கிறேன். காட்சிகளில் சாத்தியமாகும் விறுவிறுப்பை எழுத்தில் கொண்டு வருவது கடினம் போல் இருக்கிறது. விதிவிலக்காக மரியோ பர்கஸ் யோசாவின் Neighbourhood என்ற நாவலைப் படிக்கும் போது அப்படி ஆனது. தொடர்ந்து வாசிக்க முடியாமல் நெஞ்சு வலித்தது. அது தந்த ’த்ரில்’லை என்னால் தாங்க முடியவில்லை. ஒரு கோடீஸ்வரனைக் கொண்டு போய் கொலைக் குற்றம் சாட்டி சிறையில் தள்ளி விடுவார்கள். பெரூ போன்ற தென்னமெரிக்க நாடுகளின் சிறையில் பணக்காரர்களுக்குத் தனி மரியாதை கிடையாது போல் இருக்கிறது. சிறையில் ஒருத்தன் இந்தக் கோடீஸ்வரனை ”எனக்கு ப்ளோஜாப் செய்து விடு” என்பான். இவனோ கோடீஸ்வரன். மிரண்டு விடுவான். உடனே அந்தக் கைதி ”டேய் ..ன்னி, உன் அதிர்ஷ்டம் என்னிடம் மாட்டினாய், நான்தான் இந்தச் சிறையின் தாதா. எல்லாரும் இங்கே என் அடிமைகள். வேறு எவனிடமாவது நீ மாட்டியிருந்தால் உன்னை வரிசையில் நின்று சூத்தடித்திருப்பான்கள். உன் சூத்து கிழிவது மட்டுமல்ல; இங்கே உள்ள பல தேவடியாப் பயல்களுக்கு எயிட்ஸ் வேறு இருக்கிறது. எயிட்ஸோடுதான் நீ வெளியே போவாய். நான் ஏதோ உன்னைப் பிடித்திருக்கிறது என்பதற்காக ப்ளோஜாப் செய்யச் சொல்லவில்லை. இன்றைக்கு எனக்கு மூட் நன்றாக இருக்கிறது. அவ்வளவுதான். நீ எனக்கு ப்ளோஜாப் செய்து விட்டால் அதற்குப் பிறகு உன்னிடம் ஒரு பயல் வர மாட்டான். என் மனம் மாறுவதற்குள் ஊம்புடா என்னை” என்பான். இவனும் அதைச் செய்வான்.

இந்தச் சம்பவம் நாவலின் இரண்டாவது அத்தியாயத்திலேயே வரும். அதைப் படித்ததுமே “ஐயோ, இந்தக் கோடீஸ்வரனின் கதி என்ன ஆகும்!” என்று நினைத்து என் மனம் நடுங்கி நெஞ்சு வலி வந்து விட்டது. உடனே கடைசி அத்தியாயத்தைப் படித்து விட்டுத்தான் மீண்டும் ஆரம்பித்தேன். அப்படித்தான் இந்தத் தொகுதியின் பல கதைகளில் ஆனது. காட்சிப் பிழை என்ற கதையில் கதைசொல்லியும் தணிகாசலம் சாமியாரும் மாறி மாறி கதைகளைச் சொல்லி கடைசியில் கதையை வாசிக்கும் நாமே தணிகாசலம் சாமியாராக மாறும் தருணத்தில் ஒரு அதிபயங்கர அமானுஷ்யத்தில் போய் விழுகிறோம். கினோகுனியா, சமவெளி மான், நீலகண்டப் பறவை, எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறை போன்ற பல கதைகள் இதேபோன்ற psychedelic அனுபவத்தைத் தருகின்றன. அதேபோல் முள்ளம்பன்றிகளின் விடுதியும், சரக்கொன்றையின் கடைசி தினம் என்ற கதையும் சயன்ஸ் ஃபிக்ஷன் சிறுகதைகளில் பெரும்பாய்ச்சல் என்று சொல்லலாம். அவை மிகத் தீவிரமான அரசியல் கதைகளும் கூட.

கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும் தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொடர்கள் அதற்கு உதாரணம். இந்த narrative புரட்சி தற்காலத்திய எழுத்தில் அவ்வளவாக நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது.

மைலாப்பூர்
சென்னை 4
5.12.2019.
சாரு நிவேதிதா