மீண்டும் ஒரு கடிதம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று போட்டு அதற்கு அடுத்து என் பெயரைப் போட்டு நேற்று ஒரு கடிதம் வந்தது. கீழே தர்மா என்று பெயர் கண்டு, நம்ம தர்மா தானே என்று கேட்டு எழுதினேன். அதற்கு வந்த பதிலை கீழே தருகிறேன். எதற்கு என்றால், முன்பெல்லாம் என் எழுத்தை யாரும் படிப்பதில்லை என்று அழுகுணியாகவே எழுதிக் கொண்டிருப்பேன் அல்லவா? இப்போது நிலைமை மாறி விட்டதாகத் தெரிகிறது. இது போன்ற கடிதங்கள் தினம் ஒன்று வருகிறது. இன்றைய திரைப்பட விழாவில், கஸீனோ தியேட்டரில் அந்த தர்மாவைப் பார்த்தேன். அவர் கடிதம் கீழே:

நான் வேறு ஒரு‌ தர்மா சாரு.

உங்களுடைய எழுத்தும்,பேச்சும் எனக்கு வாழ்க்கையின் மீது இருந்த கோணத்தையே முற்றிலுமாகத் திருப்பிப் போட்டது. தற்போது நான் வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் நீங்கள் தான் சாரு.
உங்களைத் தொடர்ந்து follow செய்து கொண்டிருக்கிறேன்.

You tubeல் நான் பார்க்காத உங்களுடைய பேச்சே இருக்க முடியாது. உங்களுடைய எழுத்தும்,பேச்சும் எனக்கு வாழ்க்கையின் மீது இருந்த கோணத்தையே முற்றிலுமாகத் திருப்பி போட்டது. இப்போது நான் வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வருடமாக தொடர்ந்து பேஸ்புக்கில் “எஸ்.பி.தர்மா” என்ற பெயரில் இருந்து உங்களுக்கு friend request கொடுத்துக் கொண்டே இருக்கிறேன் சாரு.

வரலாறு பேசப்போகும் ஆகச் சிறந்த எழுத்தாளர் என்பது ஒரு பக்கம் இருக்க, கண் தெரியாமல் இருந்த ஒருவனுக்குப் பார்வை கொடுத்த ஒரு மனிதனோடு, பேஸ்புக்கில் ஆவது நண்பராக இருக்கலாம் என்பது, அடியேனின் ஒரு வருட கால ஆசை,ஏக்கம் சாரு.

4997 பேரோடு இந்த அடியேனையும் ஒருவனாக சேர்த்து கொண்டால் அதை விட இந்த நாளில் வேறென்ன‌ மகிழ்ச்சி இருந்து விடப் போகின்றது.
உங்களை நேரில் சந்திக்கும் போது உங்களை கட்டி அனைத்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் சாரு.
முத்தம் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

அறுபத்து ஆறு முத்தங்களுடன்

எஸ்.பி.தர்மா.

முகநூலில் 4500 ஆண் நண்பர்களும் 498 பெண் நண்பர்களும் இருப்பதால் இப்போது பெண்களை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் விதிவிலக்காக உங்களைச் சேர்த்து விடுகிறேன் தர்மா. கவலை வேண்டாம்…