ஒரு வித்தியாசமான வாழ்த்து

வணக்கம் சாரு,

கீழே இருப்பது என்னுடைய நண்பன் – உங்களுடைய தீவிர வாசகன் – ஒருவன் இன்று எழுதியது. இலங்கையில் இருக்கும் உங்களுடைய ஒரு தீவிர வாசகக் கும்பல் பற்றி உங்களிடம் ஏலவே சொல்லியிருக்கிறேன். அந்தக் கும்பலில் ஒருவன். அதிகம் படிப்பவன். உங்கள் எழுத்துக்களைக் கொண்டாடும் எங்கள் தலைமுறையின் முக்கியமான வாசகன். இது உங்கள் கவனத்தில் கிட்டவேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காகத்தான் இதை இங்கு காவிக்கொண்டு வருகிறேன்.

அன்புடன்,

அமல்.

2010. வெள்ளவத்தையில் ஒரு புத்தகசாலை! இப்போது மூடிவிட்டார்கள். உருப்படியான புத்தகங்களை விற்றதால் கூட இருக்கலாம். அங்கே புத்தகம் ஒன்றைக் கண்டேன். புத்தகத்தின் பெயரை விட அந்த எழுத்தாளரின் பெயர்தான் எப்போதிலிருந்தோ நினைவில் நின்றுகொண்டிருந்தது. குமுதத்திலோ , குங்குமத்திலோ, ஆனந்தவிகடனிலோ அந்த எழுத்தாளரின் பெயரை கண்டிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பத்திகளை வெறித்தனமாய் வாசித்திருக்கிறேன். ஆனால் அது சிறுவயதுகளில் . எப்படியோ அந்த எழுத்தின் தாக்கத்தின் வழி அவரின் பெயரும் மனதில் அப்போதிலிருந்தே தங்கியிருக்கிறது போலும்.

சாரு நிவேதிதா !

எப்படியோ ஃபேஸ்புக் வழி தலைவனை கண்டுபிடித்தால் , நட்பில் இணையமுடியதபடிக்கு அனேகம் பேர் இருந்தார்கள். சரியென்று வாசகர் வட்டத்தில் இணைய விண்ணப்பம் அனுப்பினேன். அவரின் அட்மின்களில் யாரோ ஒருவர் இன்பாக்ஸ்சில் வந்து யாருவை எப்படி தெரியும் ? சாருவின் எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள்? இத்யாதி இத்யாதி கேள்விகள். ஒன்றிற்கும் பதில் சொல்லவில்லை. அப்போதுதான் கோணல்பக்கங்களே படிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் எப்படியோ இணைத்துவிட்டார்கள். Mean While சாரு விமர்சகர் வட்டத்திலும் யாரோ இணைத்துவிட கடும் ரகளையாய் இருந்தது அந்த நாட்கள். எழுதுவதில் இருக்கும் ஆர்வமும் , சாருவின் கொண்டாட்டமான எழுத்தும் என்னை நிறைய எழுத தூண்டியது. விளைவு… சாருவின் ஒவ்வொரு நாள் பத்திகளையே அவர் பாணியில் ஸ்பூப் செய்து விமர்சகர் வட்டத்தில் தினமும் பதிவாய் போடுவேன். அதற்கு , அப்போது சாரு என்ற எழுத்தாளனை சரியாய் கவனிக்காமல் ,சாரு என்ற தனிமனிதனை கவனித்ததன் விளைவால் வந்த காழ்ப்புணர்ச்சியும் ஒரு காரணம். ஃபேஸ்புக்கில் யாருக்கு கமன்டு அடிப்பதாய் இருந்தாலும் சாருவின் பாணியிலே கமன்டுவேன். மைந்தன அண்ணா, தோழி இரோஷன் , தோழி சாஜ் ஆகியோர் இதற்கு தக்க சாட்சிகள். அத்தனைக்கும் சாரு என்ற ஆழுமை , அந்த ராட்சசனின் எழுத்துக்கள் எனக்குள், என்னையும் அறியாமல் , வெறுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த எனது மனத்தையும் உடைத்துக்கொண்டு இறங்கிக்கொண்டிருந்ததை அறிந்திருக்கவில்லை. விமர்சகர் வட்டத்தில் அட்மின் ஆக்கவா என்று ஒரு அட்மின் என்னிடம் கேட்கும் அளவுக்கு வெறித்தனமாய் இயங்கிக்கொண்டிருந்தேன். அதன் காரணமாகவே வாசகர் வட்டத்தில் இருந்து தூக்கியும் எறியப்பட்டேன். ஆனால் அந்த காலம் எல்லாம் ரணகளம்.

பின்னாளில் என்னை முற்றிலும் ஆட்கொண்ட ஒரு சமகால எழுத்தாளராய் சாரு மாறிப்போனார். தமிழில் சு.ரா , அசோக மித்திரனுக்கு பிறகு சாருவைத்தவிர கொண்டாட்டமாய், தெளிவாய், காட்சிகள் கண்முன் கொண்டுவர, குழப்பம் இல்லாமல் எந்த எழுத்தாளராலும் எழுதமுடியாது என்பேன். சாரு ஒரு எழுத்து ராட்சன்! எர்னஸ்ட் ஹெமிங்வேயின் எழுத்துக்களைப் படிப்பது போல இருக்கும் சாருவை படிப்பது. சமரசம் செய்யாத சாருவின் மனநிலை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சாருவிடம் இருந்து கற்றுக்கொண்டதும் கூட. சமரச மனநிலை மட்டும் சாருவுக்கு இருந்திருந்தால், விருதுகள், சினிமா வாய்ப்புக்கள் என்று ஒரு ரவுண்டு வந்திருக்கலாம். பாவம் பொழைக்க தெரியாத மனுஷன். ஆனாலும்… அது தான் சாரு! அது தான் கெத்து. நான் இப்பிடித்தான் கொம்மாளே… என்ற ஒரு திமிர் தொனி இருக்கும் சாருவிடம். அது ஒரு எழுத்தாளனுக்கு அவசியம்.

சாருவைப் போல் என்னை ஆட்கொண்ட சமகால எழுத்தாளர் யாருமிலர். உண்மையை சொன்னால் சாருவைப்படித்து விட்டு அவரின் சமகால எழுத்தாளர்களின் எழுத்தைப் படித்தால் கொட்டாவி வந்துவிடுகிறது. எழுத்து ஒரு கொண்டாட்டமான சமாச்சாரம். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் என்பதை சொல்லித்தந்தவன், அதையே பின்பற்றுபவன். கணித பாடத்தைக்கூட சாரு எழுதினால் அத்தனை பேரும் 100 விழுக்காடு எடுக்கலாம் என்று நண்பர்களிடம் அடிக்கடி கூறுவேன். உணமையும் அதுதான். சாருவின் எழுத்து அத்துணை இலகுவானது, சுழுவானது. எரிக்காமல் தொண்டையில் இறங்கி போதையூட்டி ஆனால் ஹாங்ஓவர் தராத உயர்ந்த மதுவை ஒத்தது. கொண்டாடித் தீர்க்கலாம்!

மற்றைய எழுத்தாளர்களைப் போல் தன்னைத்தானே மார்க்கெட்டிங் பண்ண தெரியாததால் இன்னமும் அவர் இருக்கவேண்டிய இடத்தை அடையாமலே இருக்கிறார். நான் பெருமைப்பட்டுக்கொள்வேன். சாரு வாழ்ந்த சமகாலத்தில் நான் வாழ்ந்தேன் என்று.

மெஸ்ஸி , சங்கா , யுவன் வரிசையில் நேரில் கண்டு கட்டியணைத்து முத்தமிட விரும்பும் நாலாவது ஆள் சாரு!

லவ் யூ தலைவா! இந்த பிறந்தநாள் மட்டுமில்லாமல் இன்னும் நிறைய பிறந்தநாள் நீ செம்மையா வாழணும்!

Kishoker Stanislas