புத்தக விழா 7

அராத்துவின் ப்ரேக் அப் குறுங்கதைகள் புத்தகத்தின் பின்னட்டையில் பின்வரும் வாசகத்தைக் கண்டேன்.

“பித்துப் பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்களை அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கிறது.”

மேற்கண்ட வாக்கியத்தில் இரண்டு இலக்கணப் பிழைகள் உள்ளன. ஒரு பிழையை நானே சொல்லி விடுகிறேன். அது சுலபம். எழுதப்பட்டிருக்கின்றன. இதை சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். இன்னொரு பிழையை இதை விட சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம் என்றுதான் நினைத்தேன். மேலும், இப்போதெல்லாம் பின்னட்டையில் பிழை இல்லாத ஒரு புத்தகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. எழுத்தாளர்களே இப்படிப் பிழைகளோடு எழுதிக் கொடுப்பதால் பதிப்பகங்களும் அதை அப்படியே போட்டு விடுகின்றன. இப்போதெல்லாம் பெரும் பெரும் எழுத்தாளர்களே பிழைகளோடுதான் எழுதுகிறார்கள் என்பதால் சீக்கிரம் தமிழ் செத்து விடும் என்று நினைத்தபடி என்னைப் போன்றவர்கள் உயிரை விட வேண்டியதுதான். தமிழ் இருந்தால் என்ன, செத்தால் என்ன? வெறும் ஒற்றை ஆளான நான் என்ன செய்ய முடியும்? என்ன இருந்தாலும் மனித குலத்தை விட ஒரு மொழி இருப்பதோ சாவதோ பெரிய விஷயமா என்ன? ஆனானப்பட்ட சம்ஸ்கிருதமே செத்து விட்ட பிறகு வேறு என்ன சொல்ல?

போகட்டும். பின்னட்டையை எடுத்துக் கொண்டு போய் அராத்துவிடம் காட்டி என்ன பிழை சொல்லுங்கள் என்றேன். ஒருமை பன்மை பிழையைச் சுட்டினார். வேறு என்ன பிழை? தெரியவில்லை. அடுத்து, காயத்ரியிடம் கொண்டு போய்க் காட்டினேன். அவளும் ஒருமை பன்மை பிழையைச் சுட்டினாள். வேறு என்ன பிழை? தெரியவில்லை. போச்சு. உனக்கும் தெரியவில்லையா? இல்லை, இல்லை. ஐந்து நிமிடம் கொடுங்கள். கொடுத்தேன். தெரியவில்லை. பக்கத்திலிருந்து அய்யனார் விஸ்வநாத்தை அழைத்துக் காண்பித்தேன். அவரும் ஒருமை பன்மை பிழையைச் சுட்டினார். அப்புறம்? ம்ஹும். அவருக்கும் தெரியவில்லை.

’டேய் பசங்களா, தப்பு இருப்பது தப்பே இல்லை. தப்பு இருக்கிறது என்று சொல்லியும் தப்பைக் கண்டு பிடிக்க முடியாதது ரொம்பத் தப்புடா’ என்று நினைத்துக் கொண்டேன்.

இப்போது உங்களுக்கு சவால். அது என்ன தப்பு? முதலில் சரியாகச் சொல்பவருக்கு நாளை புத்தக விழாவில் என் கையிலிருந்து ஒரு பரிசு காத்திருக்கிறது.