ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது…

பின்வரும் கட்டுரையை 2014-ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி எழுதியிருக்கிறேன். நியூஸ் சைரன் என்ற பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. இக்கட்டுரை பிறகு கடைசிப் பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து யாருமே படிக்காமல் காணாமல் போய் விட்டது. 200 பிரதி விற்றிருந்தால் அதிகம். இந்தப் புத்தக விழா முடிவதற்குள் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும். இன்று இந்நூலின் பிழை திருத்தம் செய்து முடித்து விட்டேன். ஓரிரு தினங்களில் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கிடைக்கும். அரங்கு எண் 376 மற்றும் 377. இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எதுவுமே கடந்த ஆறு ஆண்டுகளில் மாறவில்லை என்பது எதார்த்தம்.

***

37வது புத்தகக் காட்சி சென்னையில் நடக்க உள்ளது. வழக்கம்-போல் இந்த ஆண்டும் எக்கச்சக்கமாக கூட்டம் கூடும். பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் மகிழ்ச்சி அடைவர். ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை. ஏன் என்று பார்ப்போம்.

நாவல்கள் பிற நாடுகளில், ஏன், பிற மாநிலங்களில்கூட லட்சக்கணக்கில் விற்கின்றன. உதாரணமாக, ‘ஓநாய் குலச்சின்னம்’ (Wolf Totem) என்ற நாவல் சீனாவில் வெளியாகி இரண்டே வாரத்தில் 50,000 பிரதிகள் விற்றது. ஒரு ஆண்டில் 40 லட்சம் பிரதிகள். இன்று வரை இரண்டு கோடி பிரதிகள். சரி, சீனாவின் ஜனத்தொகை 130 கோடி. தமிழ்நாடு எட்டு கோடி. கணக்குப் போட்டால் இங்கே ஒரு நாவல் 13 லட்சம் விற்க வேண்டும். இந்தியாவிலேயே பல மாநிலங்களில் இப்படி விற்கிறது. கேரளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நாலுக்கட்டு’ என்ற நாவல் பத்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. ஆனால், தமிழில் மட்டும் ஆயிரத்தைத் தாண்டுவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அதற்குள் அப்படி ஒரு நாவல் வந்ததும் மறந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? நான் சிறு வயதில் கல்கி, சாண்டில்யன் என்று தலையணை சைஸ் புத்தகங்களை வைத்துக்கொண்டு நாள் கணக்கில் படிப்பது வழக்கம். அதன்பிறகு வெளிநாட்டு நாவல்கள். தஸ்தயேவ்ஸ்கி, ஆஸ்கார் ஒயில்டு, தாமஸ் ஹார்டி, மாப்பஸான் என்று ஏராளமான எழுத்தாளர்கள். ஆனால், இப்போது மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் போய்-விட்டது. பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில்லை. படிக்க நேரமும் இல்லை. நேரம் இருந்தாலும் பெற்றோர் அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் டி.வி., கம்ப்யூட்டர், முகநூல் என்று 24 மணி நேரமே போதவில்லை. பெரியவர்களுக்கே வாசிப்புப் பழக்கம் இல்லாதபோது குழந்தைகளை எப்படி அனுமதிப்பார்கள்? சில நண்பர்கள் என்னிடம் பிராது சொல்கிறார்கள். “நான் குடித்தால்கூட என் மனைவி ஒன்றும் சொல்வதில்லை. படித்தால் திட்டுகிறாள்.” இப்படி ஒருவர் இருவர் அல்ல. பலர். ஆண்கள் மட்டும் அல்ல. பெண்களும் இதேபோல் சொல்கிறார்கள். ஐந்து பவுனுக்கு நகை வாங்கித் தருகிறார் கணவர். ஆனால், நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் வாங்க அனுமதி இல்லை. “குடும்பத்தை கவனிக்காமல் என்ன படிப்பு வேண்டிக் கிடக்கிறது?” இவ்வாறாக, படிப்பு என்பதை குற்றமாகப் பார்க்கும் சமூகமாக நாம் உருவாகி-விட்டோம்.

ஆறு வயது குழந்தைகூட இன்று முகநூலில் இருக்கிறது. ஏற்கெனவே சினிமாவுக்கும், தொலைக்காட்சிக்கும் அடிமையாகிக் கிடந்த தமிழ்ச் சமூகம் இப்போது முகநூலுக்கு அடிமையாகிக் கிடக்கிறது. அலைபேசியிலேயே இண்டர்நெட் வசதி இருப்பதால் கழிப்பறையில்கூட முகநூலில் நமக்கு எத்தனை பேர் லைக் போட்டிருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் முகநூலினால் புரட்சியும் அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தன என்றால் இங்கே சமூக வலைத்தளங்கள் மனநோயாளிகளின் கூடாரம் போல் தென்படுகின்றன. கண்காணிப்பு, காவல் என்று எந்தப் பிரச்சினையும் இல்லாததால் இந்த வலைத்தளங்களில் வெட்டு, குத்து என்று ரத்த ஆறு ஓடுகிறது. நிஜ ரத்தம் அல்ல என்பதுதான் ஒரே ஆறுதல். கிழக்காசிய நாடுகளிலும் ஐரோப்பாவிலும் நான் பயணம் செய்யும் பொழுது ரயில்களிலும், பேருந்துகளிலும் மக்கள் எந்நேரமும் படித்துக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். சமீபத்தில் நான் இமயமலைக்கு இரண்டு வாரம் சென்றிருந்தேன். கூட வந்தது என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த 12 இளைஞர்கள். இரண்டு வாரப் பயணம். என்னைத் தவிர வேறு யார் கையிலும் புத்தகமே இல்லை. என் மாணவர்களே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல? ஆனால், இமயமலையில் அவர்கள் ஒரு ஆச்சரியத்தைக் கண்டார்கள். ஒரு மலைமுகட்டில் அமர்ந்து ஒரு இளம்பெண் அமைதியாகப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் ஒரு ஐரோப்பியப் பெண்.

சரி, ஏன் இலக்கியம் படிக்க வேண்டும்? படிக்காவிட்டால் மொழியையும், கலாசாரத்தையும் இழப்போம். முகநூலில் இன்று எழுதுபவர்களைப் பார்த்தால் தமிழ் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் வெறும் பேச்சு மொழியாகவே தேங்கிவிடும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு நாவல் படித்தேன். ரத்தக் கண்ணீர்விட்டேன். தமிழே எழுதத் தெரியாமல் அப்படி ஒரு கொலை செய்திருக்கிறார் எழுத்தாளர். இன்றைய இளைஞர்கள் அப்படித்தான் தமிழ் எழுதுகிறார்கள்.

இந்த இடத்தில் கனடாவில் வசிக்கும் அ.முத்துலிங்கம் எழுதிய ஒரு கட்டுரை ஞாபகம் வருகிறது. முத்துலிங்கம் ஒரு சலூனுக்குப் போகிறார். சலூன்காரர் முடிவெட்டிக் கொண்டே ஏதோ ஒரு புரியாத மொழியில் தனக்குத் தானே பேசுவதைப் பார்த்து, இது என்ன மொழி என்று கேட்கிறார். அராமிக் என்கிறார் கடைக்காரர். பிறகு அதைத் தனக்குத் தானே பேசிக் கொள்வதன் காரணத்தையும் சொல்கிறார். “இயேசு பேசிய மொழி அராமிக். உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான அது இன்று வெறும் ஆயிரம் பேரால் மட்டுமே பேசப்படுகிறது. அதுவும் ஒரு இடத்தில் அல்ல. அராமிக் பேசுபவர்கள் உலகில் அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கிறார்கள். என் மனைவிக்கும் அராமிக் தெரியாது. அதனால்-தான் மொழி மறந்துவிடாமல் இருக்க எனக்கு நானே பேசிக் கொள்கிறேன்.” தமிழின் நிலை அந்த அளவுக்குப் போய்விடாது என்றாலும் வெறும் பேச்சு மொழியாகவே தேங்கிவிடும் அபாயம் இருக்கிறது.

கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டால், அது இன்னமும் வேதனை. சங்க இலக்கியத்தில் (நற்றிணை) இப்படி ஒரு காட்சி வருகிறது. தலைவன் தலைவியைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வருகிறான். வீட்டில் யாருமில்லை. தோட்டத்தில் புன்னை மரத்தின் அருகே அவளை அழைத்துச் செல்கிறான். அவளோ, “இந்தப் புன்னை மரத்தை என் இளம் வயதிலிருந்து வளர்த்து வருகிறேன். இது என் தங்கை. இங்கே உம்மைச் சந்திப்பது லஜ்ஜையாக இருக்கிறது,” என்கிறாள். ஒரு மரத்தைத் தன் சகோதரியாக நினைத்த சமூகம் இது. ஆனால் இன்று? மரங்களை இழந்தோம். மழையை இழந்தோம். நதியை இழந்தோம். நம் நேரத்தையெல்லாம் சினிமாவும், தொலைக்காட்சியும், இண்டர்நெட்டும் எடுத்துக்கொண்டது. உள்ளங்கை அகல மொபைல் போனுக்கு அடிமையாகி நம் இயல்பான வாழ்க்கையையே இழந்துவிட்டோம். இதைத்தான் கலாசார வறட்சி என்கிறேன்.

இவ்வளவு ஏன்? சுமார் 60 – 70 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நம்முடைய முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’ என்ற நாவலில் வரும் அன்னவாசல் என்ற கிராமத்தின் காட்சி இது:

“ஊருக்கு ஒரு கல் மேற்கே காவிரியின் கிளை ஒன்று இரு கிளைகளாகப் பிரிந்து தெற்கும் வடக்குமாக ஊருக்கு ஓரம் கட்டிப் பாய்கிறது. ஈராற்றுப் படுகை. பூமி கொள்ளை சாரம். அதனால் ஊரெல்லாம் சோலை; நிழல்; ஒரு கல் கிழக்கே இரண்டு ஆறுகளும் சூல் கொண்டவள் களைத்து மல்லாந்து கிடப்பது போல விலகி விடுகின்றன. அதுவரையில் நிழல், படுகை வளம்.” அன்னவாசலின் ஒரு தெரு எப்படி இருந்தது என்ற விபரம் இது: “காலை வேளை வெள்ளையாக முற்றாமல், சூடு பிடிக்காமல் கொழுந்து வெயில் படர்ந்த காலை. தெருவில் இரு மருங்கிலும் தென்னை மரங்கள் உண்டு. சில வீடுகளுக்கு முன்னால் பன்னீர் மரம், வேப்ப மரம். தினைச்சிட்டுகள், வீட்டுக் குருவிகள் எல்லாம் கீச்சிட்டுத் தத்துகிற மரங்கள். ஓரிரண்டு வீட்டு ஒட்டுக்கூம்பில் பேசும் குருவி, பேச்சுமில்லாத பாட்டுமில்லாத ஏதோ சொல்கட்டைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கும். கொல்லைப் புறங்களில் காட்டுப்புறா கூவுகிற வேளை. தூரத்தில் செக்கு பாடும் வேளை. லேசாகக் குளிர்ந்த காற்று வீசும் வேளை.”

இதெல்லாம் 1945-இன் தமிழ்நாடு. இப்போதைய தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை. தினசரிகளைப் புரட்டினால் நூற்றுக்கணக்கான குற்றச் செய்திகள்தான் பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? படிப்பு இல்லை என்பதுதான் முக்கிய காரணம். படிப்பு என்றால் தொழில்நுட்பக் கல்வி இல்லை. இன்றைய படிப்பு அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஞானத்தை அல்ல. ஞானத்தை அடைய வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இலக்கியம்தான்.

மென்பொருள் துறையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞன், பிறந்து சில தினங்களே ஆன தன் குழந்தையைத் தூக்கிக் கிணற்றில் வீசிய செய்தியை நாம் படித்தோம். அவன் ஏன் இதைச் செய்தான்? வேலைக்குப் போய் பணம் ஈட்டும் மனைவி அந்தக் குழந்தையின் காரணமாக வேலைக்குப் போக முடியவில்லை. பணம் கிடைக்காது. இவ்வளவுக்கும் அவன் சம்பளமே ஒரு லட்சம். எவ்வளவு பணம் இருந்தாலும் திருப்தி இல்லை. மனிதர்கள் இப்படிக் காட்டு-மிராண்டிகளாக மாறியதற்குக் காரணம், கலாச்சாரத்தை இழந்ததுதான். இழந்துவிட்ட கலாச்சாரத்தை மீட்டெடுப்பதற்கு இலக்கியம் மட்டுமே உதவ முடியும். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும் பெரும்பாலானவர்கள் வேடிக்கை பார்க்க வருபவர்களாகவே இருக்கிறார்கள். புத்தகக் கடைகளைவிட அங்கே உள்ள சிற்றுண்டி விடுதிகளில்தான் கூட்டம் அலை மோதுகிறது. இல்லாவிட்டால் சமையல், ஜோதிடம், அகராதி, கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகங்களை வாங்குகிறார்கள். யாருமே இலக்கிய நூல்களை வாங்குவதாகத் தெரியவில்லை. இலக்கிய நூல்களை வெளியிட ஏராளமான பதிப்பகங்கள் உள்ளன.

என் தேர்வில் நீங்கள் வாங்கக் கூடிய எழுத்தாளர்கள்: தி.ஜானகிராமன், தி.ஜ.ரங்கநாதன், நகுலன், கோபி கிருஷ்ணன், ஆதவன், ஆ.மாதவன், ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, க.நா.சு., அசோகமித்திரன், ப.சிங்காரம், கரிச்சான் குஞ்சு, கு.ப.ராஜகோபாலன், எம்.வி.வெங்கட்ராம், சார்வாகன்.

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai