18-ஆம் தேதி சந்திப்பு

ஜெயமோகனின் நண்பர் கடலூர் சீனு 18-ஆம் தேதி சந்திப்பு பற்றி ஒரு முக்கியமான கடிதத்தை எழுதியிருக்கிறார். ஆம், அதில் அவர் சொல்லும் விஷயங்கள் உண்மைதான். எழுத்தாளர் முற்றம் சந்திப்பு இடம் ஆண் பெண் கழிப்பறைகளின் அருகேதான் இருக்கிறது. பொதுவாகவே எழுத்தாளர் என்றால் எல்லா இடத்திலும் அவமானப்படுத்துவதுதானே இயல்பு என்ற சொரணை கெட்ட தோல் வந்து விட்டதால் எனக்கு அது உறைக்கவில்லை. மற்றபடி தினசரி அந்த எழுத்தாளர் முற்றத்தை நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். என்ன இது, கக்கூஸ் பக்கத்தில் என்று நினைப்பேன், ஆனாலும் மேலே சொன்ன காரணத்தால் அந்த நினைப்பை உதறி விட்டு விடுவேன். இப்போது கடலூர் சீனுவின் கடிதம்:

சாருநிவேதிதா அவர்களுக்கு
எழுத்தாளர் முற்றம் நிகழ்வுக்கு உங்களின் அழைப்பை உங்களது தளத்தில் கண்டேன். ஒரு சிறிய விண்ணப்பம். ஒரு முறை முன்கூட்டியே சென்று, எழுத்தாளர் வாசகர் சந்திப்புக்கு நிர்வாகம் அமைத்திருக்கும் அந்த அறையை ஒரு முறை பார்க்கவும்.  விழா மூலையில் ஒரு பிளவு. மேலே அவசர வழி எனும் பதாகை. நுழைந்தால் ஒரு சிறிய திடல். பத்து அடி இடைவெளியில் மூன்று அரங்குகள்.அல்லது மறைப்புகள்.ஒன்று ஆண்களின் அவசரத்துக்கு. இன்னொன்று பெண்களின் அவசரத்துக்கு. எழுத்தாளர் வாசகர் அவசரத்துக்கான முற்றம் மூன்றாவது. இதுதான் நிலை.
எழுத்தாளர் வாசகர் சந்திப்பு என்பது விழா நேர சொறிதல் அல்ல.அது ஒரு கலாச்சார நிகழ்வு.பண்பாட்டு அசைவின் ஒரு துளி. அது நிகழ நிர்வாகம் ஒதுக்கிய இடம் ஒரு வாசகனாக என்னால் ஒப்புக் கொள்ள இயலாத இடம்.  ஜெயமோகன் சொல்வார் மூத்திர சந்தில் ஒட்டப்படும் போஸ்டரை ஊரில் கவனிக்காத ஒரு ஆள் இருக்க முடியாது என்பார். அந்த நிலையை நிர்வாகம் கைக்கொள்ளுகிறது.
நிர்வாகத்தால் விழா அரங்கின்  மத்தியில் அரங்கம் அமைக்க முடியாது.அந்த இடத்தில் ஒரு கடை போட்டால் காசு வரும். ஆகவே காசு வராத அரங்கங்கள் எங்கே இருக்குமோ அங்கே சேர்த்து விட்டார்கள் எழுத்தாளர் முற்றத்தை.ஆகவே ஒரு முறை அரங்கை பார்வை இட்டு. அது உங்களுக்கு ஏற்புடயதுதானா என ஒரு முறை சரிபார்த்துக்  கொள்ளுங்கள். [இது பதினோராம் தேதி நான் விழா வந்த போது இருந்த நிலை. எவரேனும் மட்டுறுத்தி முற்றம் மாற்றப் பட்டிருக்கவும் கூடும்].
ஒரு தமிழ்  எழுத்தாளராக எந்த தமிழ் எழுத்தாளரும் எங்கே எவ்விதம் திகழ வேண்டும் என்றொரு கனவு வாசகனாக எனக்கு உண்டு.  அத்தகு மாண்பு கொண்ட அரங்கு அல்ல நிர்வாகம் முற்றம் அமைத்திருக்கும் இடம். என் பார்வைக்கு வரும் எந்த முற்றம் நோக்கிய எழுத்தாளர்அழைப்பையும் நட்பு எதிர்ப்பு தாண்டி நான் மட்டுறுத்தவே செய்வேன். இரண்டு எழுத்தாளர்களை முன்பே மட்டுருத்தினேன். நீங்கள் மூன்றாவது.
நன்றி 
தங்கள் உண்மையுள்ள கடலூர் சீனு.