இந்தப் புத்தக விழாவில் என்னைக் கவர்ந்த புத்தகம்

அந்தப் புத்தகத்தின் பெயர் கடலெனும் வசீகர மீன்தொட்டி. கவிதைத் தொகுப்பு. ஆனாலும் ஒரு நாவலுக்குரிய உள்ளடக்கத்துடன் இருக்கிறது. ஒரு நாவலைப் படிப்பது போல் படிக்க முடிகிறது. சுபா செந்தில்குமார் எழுதிய கவிதைகள். முந்தாநாள் வரை கூட இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. எதேச்சையாக இந்த நூல் என் கவனத்துக்கு வந்தது. மிகுந்த அவநம்பிக்கையுடன் படிக்க முனைந்தேன். ஒரே வாசிப்பில், ஒரே பக்கத்தில், ஒரே கவிதையில் என்னை சரக்கென்று உள்ளே இழுத்துக் கொண்டது. கவிதைகள் கூட இத்தனை வசீகரமாகவும் காந்த சக்தி கொண்டதாகவும் இருக்க முடியுமா?

மேலும், ஒரு வார்த்தை கூட விரயம் செய்யப்படாத, மிகச் செறிவான கவிதைகள். அடர்த்தியான கவிதைகள். யார் படித்தாலும் அவரை சுலபத்தில் தன் வசப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட கவிதைகள். அந்தக் காலத்தில் தேவதச்சன், தேவதேவன் கவிதைகளைப் படித்தபோது எம்மாதிரி மன உணர்வுகளை அடைந்தேனோ அப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுத்த கவிதைகள். இன்னும் விரிவாக எழுத நினைத்தேன். இப்போது அவசரமாக புத்தக விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருப்பதால் எழுத இயலவில்லை. நாளை எழுதுகிறேன்.

சுபா செந்தில்குமார் எழுதிய கடலெனும் வசீகர மீன்தொட்டி. யாவரும் பதிப்பகம். புத்தகமும் மிக மிக வசீகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. யாவரும் பதிப்பகத்தின் அரங்கு எண் எனக்குத் தெரியவில்லை. போன் நம்பர் 9042461472 & 98416 43380

விலை 120 ரூ.