அற்புதம்

கடந்த ஐம்பது ஆண்டுகளில் வாழ்ந்த இசைக் கலைஞர்களில் மேதை என்று சொல்லத்தக்க அத்தனை பேரையும் நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.  பண்டிட் ஜஸ்ராஜ், மல்லிகார்ஜுன் மன்ஸூர், கான் ஸாஹிப் என்று ஏராளமான பெயர்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.  நான் அடிக்கடி சொல்வதுண்டு, தியாகய்யர் திருவையாற்றின் தெருக்களில் ராம பிரானைத் துதித்தபடி பாடி நடந்து சென்ற போது அவர் காலடி பட்ட ஒரு புழுவாகவோ பூச்சியாகவோ நான் இருந்திருக்கிறேன்; அதனால்தான் இசையின் மீது இத்தனை பித்து என்று. 

மைலாப்பூர் என்ன அத்தனை உசத்தியா என்று என்னிடம் அசோகமித்திரன் அடிக்கடி கேட்பதுண்டு.  அப்படி ஒரு ஊர் உலகத்திலேயே இல்லை சார் என்பேன். 

இன்று காலை ராமசேஷன் வீதி பஜனை என்ற பெயரில் ஒரு யூட்யூப் விடியோவை அனுப்பியிருந்தார்.  அதில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க பெண் பஜன் பாடிக் கொண்டிருக்கிறார்.  ஒருத்தர் ஹார்மோனியம்.  ஒருத்தர் மிருதங்கம்.  சுற்றி வர முப்பது பேர்.  மைலாப்பூர் வடக்கு மாட வீதியில் நடக்கும் தெரு பஜனை.  கிழக்கே சூரியன் தெரிவதால் காலை என்று அனுமானிக்கிறேன்.  ஆறரை இருக்கலாம்.  நாம் சாதாரணமாகப் பார்க்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றம்.  கொஞ்சம் ஆண் குரல்.  ஆனால் அந்தப் பெண் பாடும் போது நான் ஏதோ ஒரு ஜென்மத்தில் கேட்ட ஏதோ ஒரு மகானின் குரல் என் செவிகளில் ஒலித்தது. 

அவந்திகாவிடம் சொல்வதுண்டு, என் இறுதி நாள் வரை மைலாப்பூர் தான்.  கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் இந்த மண்ணை விட்டுப் பிரிய மாட்டேன்.  அற்புதத் தருணம்.  அற்புத வாழ்க்கை.  

மேற்கண்ட பதிவை காலையில் முகநூலில் எழுதி அந்த யூட்யூப் இணைப்பையும் கொடுத்திருந்தேன். அதற்கு இரண்டு பதில்கள் கிடைத்தன. ஒன்று, ராமசேஷன்.
”தங்கள் வீட்டின் அருகில் உள்ள பாபநாசம் சிவன் தெருவில் வாழ்ந்த தமிழ் தியாகராஜர் என்று சங்கீத உலகில் அழைக்கப்படும் பாபநாசம் சிவன் மயிலை மாடவீதிகளில் தவறாமல் ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் நாமசங்கீர்த்தனம் செய்வார் என்று படித்துள்ளேன் . நீங்கள் சொல்வது போல் மயிலை மண்ணுக்கு ஒரு தனி மகத்துவம் இருக்கிறது என்றால் மிகை இல்லை!

முகநூல் லிங்க்

Maargazhi Bhajanai, Mylapore..Ahaa..what a singing.. Hare Krishna 🙏 🌹

Posted by Chinthamani on Wednesday, 15 January 2020

இன்னொரு பதில் S.P. தேவராஜன் எழுதியது:

குருஜி ஹரிதாஸ் ஸ்வாமிக்குப் பிறகு தென்னாங்கூர் ஸ்ரீ ஞானானந்தா கிரி பீடத்தை அலங்கரித்த ஸ்ரீ நாமானந்த கிரி மஹராஜ் அவர்களின் பூர்வாஸ்ரம பேத்திதான் பாடுகிறார். அருகில் பிரபல வித்வான் மதுரை G. S. மணி அவர்கள். அருகில் இருப்பது ஞானானந்த மண்டலியின் உறுப்பினர்கள்…

ஆக, பஜன் பாடியது சாதாரண ஆள் அல்ல என்று தெரிகிறது. விபரம் மேலே இருக்கிறது. ஆயெ கிரிதர் த்வாரே என்ற இந்தப் புகழ்பெற்ற பஜனை இயற்றியது ஸ்வாதித் திருநாள்.