பழுப்பு நிறப் பக்கங்கள்

பின்வரும் அறிவிப்பைப் போட்டு நாலைந்து நாள் ஆயிற்று. மூன்று பேர் பதில் எழுதியிருக்கிறார்கள். காலையில் நாகேஸ்வர ராவ் பூங்கா வாசலில் நின்று கொண்டு டெக்கான் க்ரானிக்கிளும், ஹிண்டுவும் இலவச பிரதி கொடுத்தால் தயங்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற முக்கியமான தொகுதியை அனுப்புகிறேன்; அதை உங்கள் ஊர் நூலகத்தில் வையுங்கள் என்றால் மூணே பேர் பதில். என்ன நாடு ஐயா இது!!!

***

ஒரு நண்பர் பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி மூன்றும் ஐம்பது பிரதிகளுக்குப் பணம் தருவதாகச் சொன்னார். சுமாராக 50000 ரூ. ஆகும். ஐம்பது பிரதிகளையும் கல்லூரி நூலகங்களுக்கு அனுப்பினால் ஒரு பிரதியை குறைந்த பட்சம் பத்து மாணவராவது படிப்பார். இல்லையா?

எந்தெந்த கல்லூரிகள் என்று வாசகர்கள் எனக்குப் பரிந்துரை செய்யலாம். எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது என்பதால் கேட்கிறேன். தனிநபர் படிப்பதை விட ஒரு நூலகத்தில் வைத்தால் பலரும் படிக்கலாம். நானெல்லாம் நூலகங்களால் உருவானவன் தான். இன்னமும் ஸ்ரீவில்லிபுத்தூர் நூலகத்தில் பல நூறு மாணவர்கள் படித்துப் பயனடைவதை நேரில் பார்த்திருக்கிறேன். இப்படி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, ஈரோடு, கோயம்பத்தூர் போன்ற ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள் அந்தந்த ஊர் கல்லூரிகளைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசிய பிறகு எனக்கு எழுதுங்கள். அதேபோல் அந்தந்த ஊர் அரசு நூலகங்களையும் தொடர்பு கொண்ட பிறகு எனக்கு எழுதலாம்.

தனிநபர்களுக்கு வேண்டாம். நூலகங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். இதெல்லாம் அரசும் இன்னபிற கலாச்சார நிறுவனங்களும் செய்ய வேண்டிய வேலை. பழுப்பு நிறப் பக்கங்கள் நூலைப் பொறுத்த வரை எனக்கு ஜெயமோகனின் உதவியும் எஸ். ராமகிருஷ்ணனின் உதவியும் கூடத் தேவைப்படுகிறது. அந்த நூல் சமகால இலக்கிய முன்னோடிகளில் முக்கியமானவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தியிருப்பதால் ஜெயமோகனும் ராமகிருஷ்ணனும் அந்த நூலை தமிழ்ச் சமூகத்தில் அறிமுகப்படுத்துவதில் உதவி செய்ய வேண்டும் என்று கோருகிறேன். அவர்களே அவ்வகையில் பல நூல்களை எழுதியிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

ஜெயமோகன் எழுதிய இலக்கிய முன்னோடிகள் என்ற நூலும் இவ்வகை நூல்தான். அந்த நூல்களும் பழுப்பு நிறப் பக்கங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன. அதை பழுப்பு நிறப் பக்கங்களிலேயே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். பெருமாள் முருகன், கவிஞர் சுகுமாரன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் கட்டுரைகளும் ஆய்வு நூல்களும் பழுப்பு நிறப் பக்கங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன என்பதையும் பழுப்பு நிறப் பக்கங்களில் பதிவு செய்திருக்கிறேன்.