கேக்

நேற்றைய பதிவைப் படித்தீர்களா?  அதில் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர் – பணத்தையும் நகைகளையும் ஒதுக்கித் தள்ளியவர் – அவரது பிற்காலத்தில் பணத்துக்காக எத்தனை கஷ்டப்பட்டார், வாழ்நாள் பூராவும் சிங்கம் போல் வாழ்ந்தவர் முதிய வயதில் பணத்துக்காக எவ்வளவு சமரசங்களை மேற்கொண்டார் என்பதையெல்லாம் அவரது நெருங்கிய நண்பர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன்.  கேட்டிராதவர்களுக்குக் கூட அவருடைய நேர்காணல்களையும், நடவடிக்கைகளையும் பார்த்தே தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். அவர் மீது எந்தத் தவறும் இல்லை.  முதுமையில் வறுமை என்பது யாராலும் தாங்க முடியாதது.  ஏனென்றால், இளமையின் வறுமையை திமிரும் வயதும் அடக்கி விடும்.  கொஞ்சம் பெருமையாகக் கூட இருக்கும்.  நாமும் பாரதியும் ஒன்று என்ற இறுமாப்பு வரும்.  அதனால்தான் அவருக்கு அவர் வாசகர் கொடுத்த பணத்தையும் செல்வத்தையும் ஒதுக்கச் சொன்னது.  ஆனால் முதுமையில் தொடரும் வறுமை தன்னோடு சேர்த்து தன் மனைவி மக்களையும் படுத்தும்.  மகன் வேலையில்லாமல் திண்டாடுவான்.  மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும்.  கையில் ஒரு பைசா இருக்காது.  இதுவரை ஒருத்தனிடமும் உதவி என்று போகாத சிங்கம் இறங்கி வரும்.  உதவி கேட்கும்.  மனமெல்லாம் கூனும்.  என்ன செய்வது?  இளமையின் திமிர் இப்போதும் உண்டு.  ஆனால் என்னை நம்பி வாழும் என் குடும்பமும் வாடுகிறதே?  என்ன செய்ய? 

நாமோ ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்த எழுத்தாளன் தனக்குக் கிடைத்த செல்வத்தை உதறி எறிந்தான் என்று ஒரு பேச்சாளன் பேசினால் கரகோஷம் செய்கிறோம்.  பிணத்தைப் புசிக்கும் வல்லூறுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம்?  மேன்மக்களெல்லாம் பட்டினியில் சாக வேண்டும்.  நாம் அதைக் கொண்டாடி கை தட்டுவோம்.  என்ன சமூகம் ஐயா இது!

இப்போது என்ன ஆகும் தெரியுமா?  அந்தப் பேச்சாளரைத் திட்டி எழுதி விட்டேனா?  முடிந்தது கதை.  அவர் ரொம்ப செல்வாக்கானவர்.  அவரது சிஷ்யர்கள் அத்தனை பேரும் என்னை இனி ஆயுள் முழுவதும் கரித்துக் கொட்டுவார்கள்.  இன்னொரு துன்பம் என்னவென்றால், என்னுடைய நலத்தையே எப்போதும் நாடும் என் நண்பர்கள் “இதையெல்லாம் எழுதி ஏன் வெறுப்பைச் சம்பாதிக்கிறீர்கள்?” என்று கேட்டு வருத்தமடைவார்கள்.  அப்படித்தான் சமீபத்தில் வருத்தமடைந்தார்கள்.  ஒரு அன்பரின் பெயர் குறிப்பிட்டு எழுதி விட்டேன்.  அந்த அன்பருக்கு அதனால் வருத்தம்.  இதில் என்ன பிரச்சினை என்றால், அந்த அன்பரை நான் “திட்டி” எழுதி விட்டேன் என்பதால், எல்லோரும் என்னைத்தான் திட்டுவார்கள்.  அன்பர் பெயர் எக்ஸ் என்று வைத்துக் கொள்வோம்.  எக்ஸுக்கு முகநூலில் ரொம்ப நல்ல பெயர்.  நிறைய நண்பர்களும் உண்டு.  நான் எக்ஸைத் திட்டி எழுதிவிட்டேன்.  இப்போது எல்லோரும் “பாவம் எக்ஸ்.  அப்புராணியான அவரைத் திட்டி விட்டார் சாரு.  சாருவுக்கு வேறு வேலையே இல்லை.  அவர் எப்போதுமே இப்படித்தான்.  எதிர்மறையான ஆள்.  Cynic.  எப்போதும் எல்லோரையும் திட்டிக் கொண்டே இருப்பார்.  அவரைப் படிக்கவே கூடாது.  மோசமான ஆள்” என்று சொல்வார்கள்.  அதனால் ஏற்கனவே பாழ்பட்டுக் கிடக்கும் என் இமேஜ் மேலும் பாழாகும்.  இது என் நண்பர்களின் அன்பான கருத்து.  கவலை என்றே சொல்லலாம். 

இந்த விஷயத்தைப் பற்றி நான் அதிகம் யோசித்தேன்.  உண்மையில் இப்படியெல்லாம் எனக்கு நானே தடைகளைப் போட்டுக் கொண்டால் என்னால் எழுதவே முடியாது என்றுதான் தோன்றியது.  அதுதான் எனக்கு முதலில் தோன்றிய விஷயம்.  கெட்ட மூச்சோ நல்ல மூச்சோ, மூச்சு விடுவதுதானே எனக்கு முக்கியம்?  பயந்து கொண்டும், எதை எழுதினால் என்ன பொல்லாப்பு வருமோ என்று தயங்கிக் கொண்டும் எழுதினால் எழுத்தா வரும்?  எழுத்து என்பது மற்ற கலைகளுக்கும் மற்ற லௌகீக வாழ்க்கைக்கும் மிகவும் தூரத்திலிருந்து உருவாவது.  மற்ற விஷயங்களின் இலக்கணங்களை எழுத்தில் பொருத்தினால் எழுத்து உருப்படாது. 

ஜெயமோகன் திட்டி எழுதாத நபரே தமிழ்நாட்டில் இல்லை.  எம்ஜியார் சிவாஜியைக் கூட நக்கல் செய்து எழுதி, திரையுலகத்தினர் சிலர் ஜெயமோகனுக்கு எதிராக அறிக்கை விட்டு… எல்லாம் நடந்தது.  துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு எம்ஜியார் பேசுவதைப் பற்றி நக்கலடித்து எழுதியிருந்தார்.  அதையெல்லாம் கேரளா மாதிரி ஒரு சமூகம்தான் சகிக்கும்.  இங்கே கிளர்ந்து விட்டார்கள்.  இப்படி அவர் திட்டாத ஆளே தமிழ்நாட்டில் இல்லை.  ஆனால் எனக்கு இருக்கும் எதிர்மறை இமேஜ் அவருக்கு இல்லையே?  ஏன்?  அவர் எழுதுவது மகாபாரதம்.  நான் எழுதுவது காமரூப கதைகள்.  இப்படித்தான் சென்ற ஆண்டு வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் சமூகம் வேறு மாதிரி நினைக்கிறது.  மளிகைக்கடையில் ஜெயமோகன் தாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழகம் அதை எதிர்கொண்ட விதத்தைப் பார்த்த போதுதான் எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.  மகாபாரதமே எழுதினாலும் நீ சமூக விரோதிதான் என்றே பார்க்கிறது சமூகம். காரணம், எழுத்தாளன் என்றாலே சமூக விரோதிதான்.  அதுதான் தமிழ்ச் சமூகத்தின் கருத்து.  எனவே நான் எப்படி எழுதினாலும் திட்டுபவர்கள் திட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.  எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான் விதிவிலக்கு.  ஏனென்றால், அவர் ஜெயமோகன் மாதிரி, என்னை மாதிரி யாரையும் விமர்சிப்பது இல்லை.  அவ்வளவுதான் விஷயம்.  நான் எப்படி ராமகிருஷ்ணன் ஆக முடியும், சொல்லுங்கள்?

இன்னொரு விஷயம்.  இது மிகவும் முக்கியம்.  என் எழுத்தைப் படித்து விட்டு என்னோடு பழகும் நண்பர்கள் ஒரு சாரார். என்னோடு நேர்ப் பழக்கம் இல்லாமல் என் எழுத்தை மட்டுமே வாசிப்பவர்கள் இன்னொரு சாரார்.  இதில் முதல் ரகத்தினர் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால், மாலை ஏழு மணியிலிருந்து அதிகாலை ஐந்து மணி வரை நான் பேசுவதை எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்றால், ஆயிரம் பக்கம் காணும்.  உங்களுக்குச் சொல்ல என்னிடம் ஆயிரம் விஷயம் இருந்தால், அதில் ஒரு பத்தைத்தான் இதுகாறும் எழுதியிருக்கிறேன்.  அதுதான் என்னுடைய நூறு புத்தகங்கள்.  அதனால்தான் நம்முடைய ஆசான்கள் மூவாயிரம் ஆண்டுகளாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள்.  பேச்சிலும் நேர்ப்பழக்கத்திலும் பல nuances கிடைக்கும்.  அதெல்லாம் எழுத்தில் வராது.  ஆனால் என்னுடைய பள்ளி ஒரு ஜென் குருவின் பள்ளி போன்றது.  அவ்வப்போது அடிகள் விழும்.  முகநூலில் விழும்.  பெயர் போட்டு விழும்.  அப்படி விழும்போது அதைத் தாங்கிக் கொண்டு வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.  இல்லையேல் எழுத்தை மட்டும் படித்துக் கொண்டு போகலாம். 

இந்த விஷயத்தில் என் சுதந்திரத்தில் குறுக்கிடாமல் – என் பெயரைப் போடாதே அதைப் போடாதே இதைப் போடாதே என்றெல்லாம் நிபந்தனை விதிக்காமல் பழகுபவர்கள் ஒருசிலர்தான்.  சீனி, ஸ்ரீராம், காயத்ரி. இப்போது அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்.  ஒருமுறை ஒரு நண்பர் என்று போட்டு விமர்சித்து எழுதியதற்கு இரண்டு பேர் எனக்கு ஃபோன் செய்து ஏன் பெயரைப் போடவில்லை என்று கோபித்துக் கொண்டார்கள்.  சீனியும் அமலும்தான் அது.  அந்த உரிமையை எனக்குக் கொடுத்தால் என்னால் சுதந்திரமாக இயங்கவும் எழுதவும் முடியும்.  இல்லாமல் நான் ஏதேனும் தவறைச் சுட்டிக்காட்டி முகநூலில் எழுதினால் அதை ஏதோ வாழ்க்கையின் மிகப் பெரிய அவமானமாக எடுத்துக்கொண்டு மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டால் உங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று போய் விடுவேன்.  நஷ்டம் எனக்கு இல்லை.  உங்களுக்குத்தான்.  என் பள்ளியில் ஆசிரியர் – மாணாக்கர் என்ற அதிகாரப் படிநிலை ஏதும் கிடையாது.  எல்லோரும் நண்பர்களே.  ஆனால் தவறைக் கண்டித்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  With me, everything; without me, nothing என்ற கதைதான்.  முகநூலில் எழுதாதீர்கள்; நேரடியாகச் சொல்லுங்கள் என்று ஒரு பிராது.  பெயரைப் போடாமல் எழுதுங்கள்.  அடுத்த பிராது.  இப்படியெல்லாம் நிர்ப்பந்தம் கொடுத்தால் உங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  தப்புக்கு மேல் தப்பு,  அதைச் சரி கட்டுகிறேன் என்று அதற்கும் மேல் தப்பு.  பிறகு இன்னொரு தப்பு.  தப்புக்கு மேல் தப்பு.  அழுகை. பிலாக்கணம்.  கடைசியில் எல்லாமே தப்பு.  ஓடிப் போ என்று துரத்தி விடுவேன்.  அவ்வளவுதான்.  ஏம்ப்பா தம்பி, சாரு என் தகப்பன்.  அவர் என்னைத் திட்ட அவருக்கு உரிமை உண்டு என்று சொல்ல வேண்டியதுதானே?  அதை விட்டு விட்டு ஏன் எல்லோரிடமும் போய் அழுது புலம்புகிறாய்?  அப்படியானால் நான் அல்லவா ஏதோ தப்பு செய்து விட்டது போல் ஆகிறது?  பண்ணினதெல்லாம் நீ.  அதை உன் பெயர் போட்டு எழுதி விட்டேன். கடைசியில் அது அல்லவா பெரிய இமாலயத் தவறு போல் ஆகி விட்டது?  நீ என்ன சொல்லியிருக்க வேண்டும்?  மேலே படி. 

ஒரு குரு தன் சிஷ்யனிடம் இங்கேயே நின்று கொண்டு இரு என்று சொன்னார்.  மாணவரும் நின்றார்.  வெட்ட வெளி.  பனி கொட்டியது.  குளிரில் உடல் விறைத்தது.  மலஜலம் கூடப் போகவில்லை.  நீர் அருந்தவில்லை.  நின்ற இடத்திலேயே நின்றான் சிஷ்யன்.  பகல் கடந்து இரவு வந்தது.  மீண்டும் பகல்.  மீண்டும் இரவு.  மீண்டும் பகல்.  மீண்டும் இரவு.  மூன்று தினங்கள் கடந்து விட்டன.  காலையில் அங்கே வந்த குரு என்னோடு வா என்று அவனை அழைத்துச் சென்றார்.  முதல் சோதனை, அவனுக்குத் தன் வார்த்தையில் நம்பிக்கை இருக்கிறதா?  அதற்குப் பிறகுதான் அவனுடைய மனோபலம், தேகபலம். இந்த மூன்றும் அவனிடம் இருந்தன.  யோகியின் சுயசரிதை நூலில் இந்தச் சம்பவம் வருகிறது.  அந்த சிஷ்யன் தான் பின்னாளில் உலகப் புகழ் பெற்ற பரமஹம்ஸ யோகானந்தா.  அப்படிப்பட்ட நம்பிக்கை என்னோடு பழகுபவர்களுக்கு என் மீது இருக்க வேண்டும்.  இல்லையெனில், உங்களுக்கு என் பள்ளியில் இடம் இல்லை.     

இவ்வளவு பீடிகையும் எதற்கு என்றால், இப்போது ஒரு நண்பரைப் பற்றி எழுதப் போகிறேன்.  பெயர் வேண்டாம்.  பாருங்கள்.  பெயரைப் போட்டுத்தான் எழுதியிருப்பேன்.  பெயரைச் சொன்னால் என் பெயர் கெட்டு விடும் என்கிறார்கள்.  என் கைகள் கட்டப்படுகின்றன.  சரி, நண்பர் என்றே வைத்துக் கொள்வோம்.  நண்பர் எனக்காகப் பல உதவிகள் செய்திருக்கிறார். எனக்கு பத்து கரங்கள் உண்டு என்றால், அதில் அவர் ஒரு கரம்.  நேற்று என் word fileஇல் தட்டச்சு செய்வதில் ஒரு இடைஞ்சல்.  அதைச் சரி செய்யாவிட்டால் வேலை செய்ய முடியாது. கொரோனாவின்போது யாரும் யாரையும் சந்திக்கக் கூடாது.  ஆனால் இதைச் சரி செய்யாவிட்டால் என்னால் எதுவுமே செய்ய முடியாது. நண்பரிடம் வர முடியுமா என்று கேட்டேன்.  நண்பரும் வந்தார். ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்குப் போய் குளித்து விட்டு வந்தேன் என்றார்.  ஆகா என்று பாராட்டினேன்.  அவர் கை வைத்ததும் பிரச்சினை சரியாகி விட்டது. 

கிளம்பும் போது கேக் பாக்கெட் ஒன்றைக் கொடுத்தார். ஆகா, இதைப் பற்றித்தானே பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறேன்?  சமீபத்தில் கூட எனக்காக ஒரு பேனா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த அன்பர் ஒருவரைப் பற்றி எழுதியிருந்தேனே?  எல்லாமே தஸ்தயேவ்ஸ்கியின் அழையா விருந்தாளி கதைதான். சாப்பிடும் போது உங்களுக்கு அராத்துவைப் பிடிக்குமா சாரு என்று கேட்ட அன்பரின் கதையும் இதேதான்.  எல்லோரும் நல்லவரே.  ஆனால் அந்த நல்லவர்களால்தான் பிரச்சினையே.  அதுதான் தஸ்தயேவ்ஸ்கியின் அழையா விருந்தாளி கதை.  ஆங்கிலத்தில் A Nasty Story என்ற தலைப்பில் கிடைக்கும். அதைப் படித்துப் பாருங்கள்.  நல்லவர்களாக வாழ்ந்து, நாம் நல்லது செய்கிறோம் என்று நினைத்து மற்றவர்களுக்கு எத்தனை மன உளைச்சல் கொடுக்கிறோம் என்று தெரியும்.  நண்பர் கேக் பாக்கெட்டைக் கொடுக்கும்போதே தெரிந்து விட்டது இது தஸ்தயேவ்ஸ்கி கதைதான் என்று. 

எனக்குக் கேக் அவ்வளவாகப் பிடிக்காது.  மேலும் எல்லா வகை கேக்குகளையும் வளைத்துப் போட்டு சாப்பிட மாட்டேன்.  சென்னையில் ஒரே ஒரு இடத்தில் செய்யும் கேக் மட்டும்தான் சாப்பிடுகிறாற்போல் இருக்கும்.  சிஐடி காலனியில் உள்ள பத்மஸ்ரீ கேக்.  சென்னையில் வேறு எந்த கேக்கையும் தொட மாட்டேன். இங்கே செய்யப்படும் கேக் எதுவும் வாஸ்தவத்தில் கேக்கே இல்லை.  இட்லி என்ற பெயரில் ஒரு ரைஸ் கேக் கொடுக்கிறார்கள் இல்லையா, அதே மாதிரிதான் இந்த கேக்கும்.  என்னுடைய கவலை அது அல்ல; இந்த கேக்குக்கு செலவான நூறு ரூபாய் வீணாகி விட்டதே என்பதுதான்.  என்னைப் பொறுத்தவரை, என் பணம் உங்கள் பணம் எல்லாம் ஒரு பணம்தான்.  அதாவது, என் நண்பர்களின் பணம்.  மேலும், அந்த நூறு ரூபாய்க்கு வேறு எத்தனையோ காரியங்களைச் செய்யலாம்.  எனக்கு அடிக்கடி மருந்து தீர்ந்து போய் விடுகிறது.  Cadmet XL 25 என்று ஒரு மாத்திரை.  இதை நான் ஆயுள் பரியந்தம் சாப்பிட்டாக வேண்டும்.  ஆனால் இங்கே என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அப்பல்லோவில் எப்போதுமே இல்லை என்ற பதில்தான் வரும்.  டாக்டர் சிவகடாட்சத்திடம் சொன்னேன்.  அவர் ஒரு மெடிகல் பிரதிநிதியின் நம்பர் கொடுத்தார்.  அவரிடம் கேட்டேன்.  நேராக உங்களுக்குக் கொடுக்க இயலாது; மெடிகல் ஷாப்பிலிருந்து கேட்டால் கொடுக்கிறேன் என்றார்.  உடனே அப்பல்லோவுக்குப் போய் நம்பரைக் கொடுத்து கேட்கச் சொன்னேன்.  இதோ அதோ.  இதோ அதோ.  எப்போது போன் பண்ணிக் கேட்டாலும் ஆர்டர் போட்டிருக்கிறோம் சார்.  இதுதான் ஒரே பதில். 

ஸ்ரீராமிடம் சொன்னேன்.  இத்தனைக்கும் மாத்திரை தீர்வதற்கு ஒரு வாரம் முன்பே நடவடிக்கையில் இறங்கி விட்டேன்.  அப்போதும் இந்த லட்சணம்.  ஒரு நாளைக்குத்தான் மாத்திரை இருந்தது.  ஸ்ரீராம் கேட்மெட் இல்லை; ஆனால் அதற்கு சமமான மாத்திரை இருக்கிறது; வாங்கி எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றார்.  ஐயோ, தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைச் சந்திப்பவர்; அவரை நேரில் சந்திப்பதா என்ற பயம் கிளம்பியது.  அதனால் முத்துக்குமாரிடம் கொடுத்து அனுப்புங்களேன் என்றேன்.  சரி என்றார்.  ஆனாலும் எனக்கு மனம் ஒப்பவில்லை.  முத்து அண்ணா நகரில் இருப்பவர்.  அங்கிருந்து ஜார்ஜ் டவுன் போய் மாத்திரையை வாங்கிக் கொண்டு சாந்தோம் வர வேண்டும்.  திரும்பவும் அண்ணா நகர் போக வேண்டும்.  அப்போதுதான் சீனியின் உதவியால் Dunzoவின் அறிமுகம் கிட்டியது.  சீனி மட்டுமே எனக்கு சீனியாய் இனிப்பது எப்படி என்றால் இந்தக் காரணம்தான்.  சீனிதான் எனக்கு இந்த Dunzo பற்றிச் சொன்னார்.  இந்த Dunzoவைப் பயன்படுத்தினால் எவ்வளவு நேரம் மிச்சமாகிறது தெரியுமா?  ஒரு நண்பர் கோடம்பாக்கத்தில் நண்பரின் அறையில் இருந்தார்.  எதிர்பாராமல் நண்பரின் அறையிலேயே தங்கும்படியான சூழல்.  உடனே தன் மனைவியிடம் டூத் பிரஷ், போன் சார்ஜர், துண்டு, வேஷ்டி, இதுபோல் இன்னும் ஒன்றிரண்டு சாதனங்களை எடுத்துப் பையில் போட்டு, இப்போது அங்கே வரும் ஆளிடம் கொடுத்து அனுப்பு என்றார் போனில்.  சாமான்களும் ஒரு மணி நேரத்தில் வந்து சேர்ந்தன.  நாற்பது ரூபாய் கட்டணம். அதனால் முத்துக்குமார் மூலம் அனுப்ப வேண்டாம்; டன்ஸோ மூலம் அனுப்புங்கள் என்றேன். மாத்திரைகள் வந்து சேர்ந்தன.  ஆனால் 140 ரூபாய் கட்டணம்.  பிறகு காயத்ரியிடமும் இந்த டன்ஸோ பற்றி விசாரித்ததில் ராயப்பேட்டையிலிருந்து ஆர்.ஏ. புரம் கொண்டு வந்து கொடுப்பதற்கும் 140 ரூ. கட்டணம்; எங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை என்பதால் விட்டுவிட்டோம் என்றார்.  சீனியிடம் கேட்டேன்.  நாற்பது ஐம்பது ரூபாய்க்கு மேல் எனக்கு ஆனதே இல்லையே என்றார்.  சரி, விசாரியுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். 

ஆனால் ஸ்ரீராம் கொடுத்து அனுப்பியது கேட்மெட் இல்லை; அதற்கு இணையான Revelol XL 25 மாத்திரை.  ஆனால் அப்புறம்தான் தெரிந்தது, கேட்மெட் அமேஸான் மூலமே கிடைக்கிறது. 

இது எல்லாமே அந்த கேக்கைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது.  அதை எழுதாதே, இதை எழுதாதே என்கிறீர்களே, இப்போது நான் உங்களுக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லப் போகிறேன்.  ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருந்தால் இதை நீங்கள் கடந்து போய் விடலாம்.  ஆனால் நான் பார்த்தவரை நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு இந்த விஷயம் தெரியவில்லை.

நாம் யாருக்காவது எதையாவது நம்முடைய அன்பின் நிமித்தமாகக் கொடுக்க விரும்பினால் அது அவர்களுக்குப் பிடித்தமானதா என்று தெரிந்து கொண்டு கொடுக்க வேண்டும்.  என்னைப் பொறுத்தவரை நீங்கள் என்னிடமே கேட்டு விடலாம்.  அந்த நண்பர் எனக்கு போன் செய்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருந்தால் ஒரு பூனை உணவு பாக்கெட் என்று சொல்லியிருப்பேன்.  நூறு ரூபாய்க்குக் கூட சின்ன சின்ன பாக்கெட்டுகள் உள்ளன.  ஏனென்றால், பல சமயங்களில் பூனை உணவு தீர்ந்து போய், மிக மிக மிக இக்கட்டான சூழ்நிலைகளில் பூனை உணவு தேடி கடை கடையாக அலைந்திருக்கிறேன்.  அலைந்து கொண்டும் இருக்கிறேன்.  ஞாயிற்றுக் கிழமை மாலை பூனை உணவு தீர்ந்து போகும்.  அப்போது எந்தக் கடையும் இருக்காது.  இதையெல்லாம் பார்த்து திட்டமிட்டு முன்கூட்டியே அமேஸான் மூலம் ஆர்டர் கொடுக்க வேண்டும்.  ஆனால் அப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தால் நான் சுத்தமாக எழுத்தையே விட்டு விட வேண்டியதுதான்.  ஒரு வார்த்தை கூட எழுத முடியாது.  மேலே என் வீட்டில் ஐந்து பூனைகளும் கீழே தரைத்தளத்தில் பத்து பூனைகளும் உள்ளன. 

சரி, இவ்வளவு வேண்டாம்.  எனக்குத் தினந்தோறும் இரவு உணவாக இருக்கும் மாதுளை வாங்கி வரலாம்.  ம்ஹும்.  மாதுளையில் மட்டும் எல்லோரும் தோற்று விடுகிறார்கள்.  இங்கே மைலாப்பூர் பகுதியில் ஒரு மாதுளை 80 ரூபாய் விற்கிறது.  நன்கு குண்டாக சிவப்பாக இருக்கும்.  ஆர்வத்துடன் வாங்கி வருவார்கள் நண்பர்கள்.  உரித்துப் பார்த்தால் பாதி கெட்டுப் போய் இருக்கும்.  அது ஏம்ப்பா, உன் நண்பர்களுக்கு மாதுளையே வாங்கத் தெரியவில்லை என்று ஆச்சரியத்துடன் கேட்பாள் அவந்திகா.  ஒரே ஒருத்தருக்குத் தெரியும்; ஆனால் அவருக்கு நீ நிரந்தரமாக வீஸா தடை செய்திருக்கிறாயே என்று நினைத்துக் கொள்வேன்.  சொல்ல மாட்டேன்.  ஆம்; எங்கள் வாசகர் வட்ட சந்திப்புகளில் சீனிதான் மாதுளை வாங்கி வருவார். ஒன்று கூட கெட்டுப் போனதாக இருக்காது.  அதை விடுங்கள்; டன்ஸோ என்று ஒரு நிறுவனம்.  அவன் ஸ்ரீராமுக்கும் காயத்ரிக்கும் 140 ரூபாயும் சீனியிடம் 40 ரூபாயும் வாங்குகிறான் என்றால் இது ஏதோ அதிர்ஷ்ட ஜாதகம்தான்.  இது இலக்கியத்திலும் வேலை செய்து அவர் பெருமாள் முருகன் போல் ஆனால் எனக்குக் கொஞ்சம் ஆதாயமாக இருக்கும். 

நான் வாங்கும் மாதுளையும் எப்போதும் சோடை போனதில்லை.  ஏனென்றால், நான் இதில் நிறைய சோதனை முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறேன்.  இங்கே மைலாப்பூர் பகுதியில் சேமியர்ஸ் ரோட்டில் உள்ள பழமுதிர் நிலையம் கடையில் மட்டுமே அழுகாத மாதுளை கிடைக்கிறது.  விலை அதிகம்.  ஒரு பழம் வாங்கினால் 90 ரூபாய்.  பத்து பழம் வாங்கினால் எடைக்குத் தகுந்தாற்போல் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் ஆகி விடுகிறது.

மாதுளையில் இந்த அழுகல் விவகாரம் தலையெடுப்பதால் மாதுளை வாங்குவது சிலாக்கியம் அல்ல.  சரி, இந்த கேக்கை என்ன செய்யலாம் என்றாள் அவந்திகா.  இப்படி கொரோனா வைரஸ் ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கும்போது யாராவது கேக் வாங்குவார்களா என்றும் கேட்டாள்.  ”பாவம்மா, அன்பு மிகுதியில் செய்து விட்டார்.  என்ன செய்வது?” என்றேன்.  ஏன் உன் நண்பர்களும் உன்னைப் போலவே இருக்கிறார்கள் என்றாள்.  இல்லை என்றேன்.

கேளுங்கள்.  இதுதான் இன்று நான் உங்களுக்கு அளிக்கும் பரிசு.  அசோகமித்திரனைப் பார்க்கச் செல்லும்போது சார், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பேன். 

ஒன்னும் வேண்டாம், வாங்கோ போதும் என்பார். 

ம்ச்ச்… சொல்லுங்க சார்.

ஒன்னும் வேண்டாம்.

சார்.  நீங்கள் இப்போது சைக்கிள் எடுத்துக் கொண்டு வெளியே போவதில்லை.  வீட்டிலேயேதான் இருக்கிறீர்கள்.  நானோ வெளியிலிருந்து வருகிறேன்.  வரும்போது உங்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை வழியில் வாங்கிக் கொண்டு வரப் போகிறேன். இதில் என்ன எனக்கு சிரமம்?

சரி, அப்படியானால் ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கி வாங்கோ.

ஒன்னா, ரெண்டா, நாலஞ்சா சார்.

ஒன்னே ஒன்னு போறும்.  அதுக்கு மேலே சாப்பிட மாட்டேன். 

அழகிய சிங்கருக்கு போன் போட்டு ”என்னங்க இது, ஒரே ஒரு மிளகா பஜ்ஜி போதுங்கிறார்?”  என்பேன். அவர் சிரித்துக்கொண்டே, ஆமா ஆமா அவர் ஒன்னுக்கு மேல சாப்பிட மாட்டார் என்பார்.

இன்னொரு நாள் தென்னமரக்குடி எண்ணெய் வாங்கி வரச் சொன்னார்.  சொல்லும் போதே அஞ்சு ரூபா தான் இருக்கும்; கடைக்கும் ரொம்ப அலைய வேண்டாம். எங்க வீடு இருக்கோல்யோ, அந்தத் தெரு முனைல கிடைக்கும் என்றார்.  கிடைத்தது.  அஞ்சு ரூபாய்தான். 

குழந்தைகளாக இருந்தாலும் சரி, மனைவியாக, கணவனாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எது விருப்பமோ, அவர்களுக்கு அது தேவையோ அதை வாங்கிக் கொடுங்கள்.  உங்கள் இஷ்டத்துக்கு வாங்கிக் கொடுத்து அந்தப் பணத்தை, அந்தப் பொருளை வீணடிக்காதீர்கள்.

இப்படி அடிக்கடி நடப்பதால்தான் நான் இதை இத்தனை விலாவாரியாக எழுத வேண்டியுள்ளது.  சென்ற மாதம் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நண்பரான ஒரு அன்பர் 500 ரூ. விலையுள்ள பார்க்கர் பேனா ஒன்று வாங்கிக் கொடுத்தார்.  என்னிடம் ஏகப்பட்ட பேனாக்கள் உள்ளன.  இந்த 500 ரூபாய்க்கு பூனைக்கான உணவை வாங்கியிருக்கலாம்.  அல்லது பணமாகவே கொடுத்திருந்தாலும் நான் அதை நல்ல முறையில் செலவு செய்திருப்பேன்.  நல்ல செலவு என்ன?  எனக்கு மருந்து அல்லது பூனை உணவு. 

அவரது செயலைக் கண்டிக்கலாம் என்று பார்க்கிறேன்; பேனாவைக் கொடுத்து விட்டு ஆள் காணாமல் போய் விட்டார்.  ஒரு மாதமாக ஆளைக் காணோம்.  இப்படித்தான் நாம் நம்முடைய அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எல்லோரையும் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறோம்.  ஏதாவது நிகழ்ச்சிக்குப் போனால் புத்தங்களைப் பரிசாகக் கொடுக்கிறார்கள்.  இதை விட விஷம் வைத்துக் கொல்லலாம் ஐயா.  எந்தப் புத்தகம் படிக்க வேண்டும் என்று நான் தானே முடிவு செய்ய வேண்டும்?  சிங்கப்பூர் போயிருந்தேன்.  பல நண்பர்கள் அன்புடன் தாங்கள் எழுதிய புத்தகங்களைக் கொடுத்தார்கள்.  ஒரே ஒருவரிடம்தான் நானே புத்தகத்தைக் கேட்டு வாங்கினேன்.  மொத்தம் 20 புத்தகங்கள்.  அவர்கள் எல்லோருக்குமே நான் நேராக இந்தியா திரும்பவில்லை; கோ சுமாய் (தாய்லாந்து) தீவுக்குப் போகிறேன் என்று மிக நன்றாகத் தெரியும்.  அதற்கு நான் சிங்கப்பூரிலிருந்து பாங்காக் போய் அங்கிருந்து இன்னொரு விமானம் பிடித்து கோ சுமாய் போய் அங்கிருந்து பஸ், படகு, கார் என்று அது ஒரு மிக நீண்ட பயணம்.  20 புத்தகத்தில் பாதியை சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே எடை அதிகம் என்று சொல்லிப் பிடுங்கித் தூக்கிப் போட்டு விட்டார்கள்.  அதுவும் அது ஒரு ஆளில்லா விமான நிலையம்.  எல்லாவற்றுக்குமே எந்திரம்தான்.  என்னிடம் என்ன பிரச்சினை என்று கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.  பிறகு உமா கதிர்தான் உள்ளே வந்து எடையைக் குறைத்தார்.  மீதி புத்தகங்களை கோ சுமாய் கடலில் தூக்கி எறியும்படி நேர்ந்தது.  ஏனென்றால், அந்த மிகப் பெரிய படகின் மேல் தளத்துக்கு என்னால் அவ்வளவு எடையைத் தூக்க முடியவில்லை.  மிகக் கோபத்துடன் எல்லாவற்றையும் கடலில் தூக்கி எறிந்தேன்.  ஏன் ஐயா, இப்படியா சுமையைத் தூக்கச் செய்வது?  நீங்கள் உருவாக்கிய சிலுவையை நான் ஏன் சுமந்து திரிய வேண்டும்?  நீங்கள் என்ன செய்ய வேண்டும்?  என்ன செய்திருக்க வேண்டும்?  என்னுடைய முகவரியைக் கேட்டுக் கொண்டு என் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதானே?  அடுத்தவரின் கஷ்டத்தை உணர வேண்டிய எழுத்தாளர்களே இப்படி இருக்கலாமா? 

என் மீது இதற்காகக் கோபப்படுவீர்களா?  எஸ்.ரா.விடமும் இதையேதான் செய்திருப்பீர்கள்.  சிங்கப்பூருக்கு வரும் எல்லா எழுத்தாளர்களிடமும் இதையேதான் செய்திருப்பீர்கள்.  எல்லோரும் உங்களைத் திட்டிக் கொண்டே உங்கள் சிலுவையைச் சுமந்திருப்பார்கள்.  நான் மட்டுமே உங்கள் தவறைச் சுட்டிக் காட்டுகிறேன், இனிமேல் செய்யாதிருங்கள் என்று. அதற்காக நீங்கள் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். 

எனவே என்னிடம் ஒரு வார்த்தை கேளுங்கள்.  கூச்சம் வேண்டாம்.  என்ன வேண்டும் என்று சொல்கிறேன்.  வாங்கி வாருங்கள்.  நண்பர் கொடுத்த கேக்கை அவந்திகா வாட்ச்மேனிடம் கொடுத்து விட்டாள்.  அடப்பாவி, வாட்ச்மேனிடம்தானே கொடுத்தீர்கள், அதற்கு ஏன் இத்தனை திட்டு என்று அதிராதீர்கள்.  வாட்ச்மேனுக்கு எதைக் கொடுத்தாலும் அதை நான் கொடுப்பேன்.  கொடுத்துக் கொண்டும் இருக்கிறேன்.  நீங்கள் எனக்கு அன்போடு வாங்கி வந்ததை நான் உபயோகப்படுத்திக் கொள்ள முடியாமல் போயிற்றே என்பதும், மற்ற சிலதும்தான் இங்கே முக்கியம்.  குறிப்பாக, எனக்கு சில விஷயங்கள் மிகவும் தேவையாய் இருக்கின்றன.   

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai