கொரோனா நாட்கள் – 4

இதைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.  கொரோனாவினால் என் அன்றாட வாழ்வில் எந்த மாற்றமுமே இல்லை.  நாகேஸ்வர ராவ் பார்க் நடையும் மொட்டை மாடி நடையாக மாறி விட்டது.  கையை ஹேண்ட் வாஷினால் கழுவுவது?  ம்ஹும்.  அதில் கூட மாற்றம் இல்லை.  நீங்கள் இப்போது ஒரு நாளில் எத்தனை முறை ஹேண்ட் வாஷ் மூலம் கழுவுகிறீர்களோ அத்தனை முறை கொரோனாவுக்கு முந்தின காலத்திலும் நான் கழுவிக் கொண்டிருந்தேன்.  வெளியில் செல்லும்போது ஹேண்ட் வாஷ் இல்லாமல் போனால் பக்கத்தில் உள்ள பெண்களிடம் சானிடைஸர் வாங்கிப் பயன்படுத்திக் கொள்வேன்.  ஓ. உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.  ஸானிடைஸர் பயன்படுத்தாத பெண்களிடம் நான் பழகுவதில்லை.  அல்லது, எனக்குப் பரிச்சயப்பட்ட பெண்களிடம் எப்போதும் ஸானிடைஸர், மவ்த்வாஷ் போன்ற சாதனங்கள் இருக்கும். யாரும் இதைச் செய் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தது இல்லை.  நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இதை நான் செய்வதில்லை.  இது ஒரு பழக்கம்.  இப்படி நான் செய்து கொண்டிருந்தேன் என்பதே இப்போதுதான் என் கவனத்துக்கு வருகிறது.  ஒருமுறை என் நண்பர் வீட்டுக்குச் சென்றேன்.  போனதும் வாஷ்பேசினுக்குப் போய் ஹேண்ட் வாஷைத்தான் தேடினேன்.  அங்கே இல்லை என்றதும் பாத்ரூமுக்குப் போய்த் தேடினேன்.  அங்கேயும் இல்லை என்றதும் ஷாம்பூவைப் போட்டுக் கை கழுவினேன்.  எல்லோரும் மலஜலம் சென்றால்தான் கை கழுவுகிறார்கள்.  மலம் கழித்தால் கை கழுவலாம்.  ஆனால் உச்சா போனாலும் ஏதோ மதச் சடங்கைப் போல் கை கழுவுவதை சினிமா தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன்.  இந்த ஆட்கள் வேறு எந்த சமயத்திலும் கை கழுவுவதில்லை.  சாப்பிட்ட பிறகு கூட தாளில் துடைத்துக் கொள்கிறார்கள்.  அவர்கள் ஏன் உச்சா போனவுடன் அத்தனை religious –ஆக கை கழுவுகிறார்கள்? இவர்கள் கை கழுவும் வேகத்தைப் பார்த்தால் கை வழியாகப் போனார்களா என்று கூட வியந்திருக்கிறேன். இந்து மதத்திலும் அப்படி ஏதும் சொல்லவில்லையே?  இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, தெரியும். 

சில பேர் இப்போது கை கழுவுவதால் மன உளைச்சல் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.  பொறுத்திருந்து பாருங்கள்.  கொரோனாவுக்குப் பிறகு கொரோனாவை விட ஆபத்தான இரண்டு பயங்கரங்கள் நிகழ இருக்கின்றன.  ஒன்று, பொருளாதார வீழ்ச்சி.  இரண்டு, மனிதர்களின் மனப்பிறழ்வு.  ஏற்கனவே இலக்கியம் படிக்காததால் ஸைக்கோ போல் திரிந்து கொண்டிருந்த மனிதக் கூட்டம் இப்போது தாங்கள் பிறந்ததிலிருந்தே பழக்கப்பட்டிராத வீட்டுத் தனிமையின் காரணமாக முழு ஸைக்கோக்களாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்த மனிதக் கூட்டத்தைப் பற்றி நான் எப்போதுமே அக்கறை கொண்டதில்லை.  எப்போதுமே இவர்கள் என் சிந்தனையில் இல்லை.  ஏனென்றால், எனக்கு மனிதர்களைப் பிடிக்காது. என்ன காரணம்? 

இந்த மனிதக் கூட்டம் இதுகாறும் என்ன செய்து கொண்டிருக்கிறது?

ஒருவன் ஐந்து வயதுச் சிறுமியை வன்கலவி செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று விட்டான்

இன்னொருவன் நாலாவது மாடியிலிருந்து நாயைத் தூக்கிப் போட்டு விளையாடி அதை விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் சுற்றுக்கு விடுகிறான்.

இன்னொருவன் – இல்லை, பெண் – இரவு முழுவதும் குடித்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பும்போது ரோட்டைக் கடந்த ஒரு நைட்வாட்ச்மேன் மீது காரை ஏற்றிக் கொன்று விட்டாள்.  வேண்டுமென்று செய்யவில்லை, போதையில் ஆகி விட்டது என்று சொல்கிறாள்.

இன்னொரு பையனும் அதேபோல் குடித்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பும்போது ரோட்டோரம் தூங்கிக் கொண்டிருந்த ஏழைபாழைகள் மீது வண்டியை ஏற்றி நாலைந்து பேரை முடமாக்கி விட்டான்

ஒரு பெண் தன் கள்ளக்காதலனுக்காகத் தன் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டாள்.

நாங்கள் அப்படியெல்லாம் கிரிமினல்கள் இல்லை என்பது மற்றவர்களின் கட்சி. உண்மைதான். அவர்கள் எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போனதில்லை.  ஆனால் அவர்கள் தம் வாழ்க்கையில் செய்ததெல்லாம் வீடு கட்டியதைத் தவிர வேறு எதுவும் இல்லை.  ஒரு ஆள் மாதம் ஐயாயிரம் டாலர் சம்பாதிக்கிறான். அவன் மனைவி ஐயாயிரம் டாலர் சம்பாதிக்கிறாள். சாதாரண மிடில் கிளாஸ்.  தமிழ்நாட்டில் இதுவரை நாலு வீடு வாங்கியாயிற்று.  இன்னொரு வீடும் வாங்குவான்.  பாரஸைட் என்ற கொரியப் படம் பார்த்தீர்களா? அதில் வரும் மேல்நடுத்தர வர்க்கத்தைப் போலவேதான் எல்லா இந்திய நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடியும் வாழ்கிறது.  இவர்களைப் பற்றியெல்லாம் நான் ஏன் கவலைப்பட வேண்டும்?  இவர்கள் தனிமைச் சிறையில் இருந்தால் என்ன?  வெளியில் அலைந்தால் எனக்கு என்ன?     

இந்த உலகத்துக்கு, இந்த பூமிக்கு, சக மனிதர்களுக்கு, மொழிக்கு, தன் தேசத்துக்கு, சக உயிர்களுக்கு இவர்கள் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருப்பார்களா?  மரம் நட்டேன் என்கிறார்கள்.  நட்டால் போதுமா?  அது வளரும் வரை தண்ணீர் ஊற்றுவது யார்? ங்ப்பொனா? யாரையேனும் கேளுங்கள்.  உன் வாழ்நாளில் ஒரு மரம் வளர்த்திருக்கிறாயா. உன் வாழ்நாளில் நீ இந்த உலகத்துக்கு இந்த சமுதாயத்துக்கு ஒரு காரியம் செய்திருக்கிறாயா?  மரம் நட்டால் கூட வேளாவேளைக்கு அதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும்.  குழந்தையை வளர்ப்பது போல் வளர்க்க வேண்டும்.  அதோடு உரையாட வேண்டும்.  ஒரு கர்ப்பிணிப் பூனை குறுக்கே வந்து விட்டது என்று அதை உதைக்கிறான்.  அவன்தான் என் சக மனிதன். அவனோடு வாழத்தான் நான் சபிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இம்மாதிரி மனிதர்கள்தான் தம் வாழ்நாளில் எந்தக் குற்றமும் செய்ததில்லை என்கிறார்கள்.  டேய், நீ மூச்சு விடுவதே குற்றம்டா என்கிறேன் நான். Yes, I mean it. கோபத்தில் சொல்லவில்லை.  மூச்சு விடுகிறாய் அல்லவா?  அது உன் தாய் கொடுத்தது.  உன் தாய்க்கு என்ன செய்தாய்?  வாழ்நாள் பூராவும் அவளை உன் வேலைக்காரியாக நடத்தியதைத் தவிர வேறு என்ன செய்தாய் நீ?  அதனால் நான் பெண்களின் பக்கம் என்று நினைக்காதீர்கள்.  இந்த சமுதாயம் இப்படிக் கேடு கெட்டு இருப்பதற்கே தாய்மார்கள்தான் காரணம்.  அவர்கள்தான் முதல் சமூக விரோதிகள்.  ஒவ்வொரு குழந்தையையும் சமூக விரோதிகளாக வளர்த்து வளர்த்து இந்தா சமூகமே பெற்றுக் கொள் என்று விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தாய் தகப்பன் ரெண்டு பேருமே கிரிமினல்கள்தான்.  சென்ற மாதம் ஒருநாள், ராமசேஷனும் நானும் பாக்யராஜும் நாகேஸ்வர ராவ் பார்க்கிலிருந்து தெற்கு மாட வீதி முனையில் உள்ள சங்கீதா உணவகத்துக்கு வந்தோம்.  அங்கே நடைபாதையில் ஒரு சிறிய உணவு விடுதி உள்ளது.  அங்கே நடைபாதையிலேயே நின்று சாப்பிடும் வசதியும் உண்டு.  அங்கே ஒரு நாற்பது வயதுத் தடிமாடு, தன்னுடைய ஐந்தே முக்கால் அடி உயரம் உள்ள, பள்ளிச் சீருடை அணிந்த தடிமாட்டுக்கு பொது இடம் என்று கூடப் பாராமல் இட்லியை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சின்னத் தடிமாடு எப்படியும் பத்தாம் வகுப்பு படிக்கும் என்று நினைக்கிறேன்.  கையைக் காண்பித்தே ராமசேஷனிடம் அந்த அவலக் காட்சியைக் காண்பித்தேன்.  இந்தச் சின்னத் தடிமாடு பெரிதாக வளர்ந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்போது என்ன செய்யும்?  சாமானை எடுத்து நீயே வச்சுக்கோ என்றுதானே சொல்லும்?  அதற்கு அம்மா அப்பா வர முடியாது இல்லியா? நம் கலாச்சாரம் அனுமதித்தால் அதையும் செய்யத் தயாராக இருப்பார்கள் நம் பெற்றோர் என்று நினைக்கிறேன்.  இப்படி ஐந்தே முக்கால் அடி உயரம் வளர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்கின்ற தடிமாட்டுக்கே இட்லியை எடுத்து வாயில் ஊட்ட தாயோ தகப்பனோ தேவைப்படும் சமூகத்தில் – அதுவும் பொது இடத்தில் என்பதுதான் இங்கே முக்கியம், வீட்டுக்குள்ளே என்ன கருமத்தையாவது செய்து கொள்ளுங்கள் – கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நுண்ணுயிரி புகுந்தால் அந்த சமூகம் என்ன ஆகும்? 

என் நண்பரின் நண்பர்கள் பனிரண்டு பேர். 12 பேரும் மருத்துவர்கள்.  எம்.டி. படித்தவர்கள்.  ஆறு ஆண், ஆறு பெண்.  நண்பரின் வகுப்புத் தோழர்கள்.  திருமணம் செய்து கொண்டார்கள்.  ஆறு ஜோடியும் அடுத்தடுத்து மூன்று ஆண்டுகளில் விவாகரத்து.  இனிமேல்தான் கதையே.  ஆறு பெண்களும் சொன்ன கதைகள் ஒரே மாதிரி இருந்தன.  அவன் சிகரெட்டால் என் முலையைச் சுட்டான், அடித்தான், உதைத்தான்.  இன்ன பிற.  எல்லாவற்றையும் நீங்கள் அராத்துவின் பொண்டாட்டி நாவலில் விலாவாரியாகக் காணலாம். அராத்துவுக்கு என் நண்பர் சொன்னவை அல்ல அவை.  அவர் எழுதியதெல்லாம் அவர் ”களப்பணி” புரிந்து அறிந்தவை.  எல்லாம் எம்.டி. படித்த மருத்துவர்கள்.  இவன்களுக்கெல்லாம் கொரோனா வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?  பெண்களெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொல்ல மாட்டேன்.  அவர்கள் படுத்தும் ஆக்கினைகள் வேறு கதை.  ஆண் பெண் உறவில் ஒன்று, ஆண் ஆதிக்கவாதியாக இருக்க வேண்டும்.  அல்லது, பெண் லத்தியைத் தன் கையில் எடுக்க வேண்டும்.  இவர்களெல்லாம்தான் குற்றச் செயல்களில் ஈடுபடாத நடுத்தர வர்க்கத்தினர்.  இவர்கள்தான் இன்று வீட்டில் தனிமையில் இருக்க முடியாமல் தவிக்கிறார்கள்.  இவர்களை எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன?    

நான் பூனைகளுக்கு உணவு கொடுக்கும்போது எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவல்காரன் சொல்கிறான், சார் பூனைக்கு சாப்பாடு குடுக்காதீங்க, எல்லாரும் புகார் பண்றாங்க.  புகார் யார் பண்ணுகிறார் என்று என்னிடம் சொல்லுங்க, கை காலை முறிச்சுட்டு ஜெயிலுக்குப் போறேன் என்றேன்.  அவன் அதற்கு மேல் என்னிடம் பேசவில்லை.  அவந்திகாவிடம்தான் முறையிட்டுக் கொண்டிருக்கிறான்.  என் பக்கத்து வீட்டுக் கோடீஸ்வரன் இனிமேல் பூனைகளுக்கு நீங்கள் சாப்பாடு போட்டால் போலீஸில் புகார் கொடுப்பேன் என்கிறான்.  இவர்கள்தான் மனிதர்கள்.  நாடி பிடித்துப் பார்த்து விட்டு 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார் மருத்துவர்.  மைலாப்பூர் முழுவதும் இந்தக் கதைதான்.  ஒரு மருத்துவர் அல்ல.  எல்லோரும்.

மொத்த மனிதக் கூட்டத்தில் நூற்றுக்கு ஒருத்தர் தேறுகிறார். அல்லது ஆயிரத்தில் ஒருத்தர்.  அந்த நூற்றில் ஒருத்தருக்கு அல்லது ஆயிரத்தில் ஒருத்தருக்காகத்தான் நான் எழுதுகிறேன்.  அல்லது  எனக்காகத்தான் எழுதுகிறேன் என்றும் சொல்லலாம்.  பிரபஞ்சத்தில் எத்தனையோ நட்சத்திரங்களும் கிரகங்களும் உள்ளன.  அதையெல்லாம் வானசாஸ்திர வல்லுனர்கள் விவரித்துக் கேட்க வேண்டும்.  அந்த சராசரத்தில் பூமி என்ற இடத்தில் நாம் வாழ்வதற்கு உண்டான காற்றையும் ஒளியையும் ஆகர்ஷ்ண சக்தியையும் (அது இல்லாவிட்டால் காணாமல் போய் விடுவோமே?) வெப்பத்தையும் விருட்சங்களையும் நாம் தனிமையில் வாடாமல் இருக்க மிருகங்களையும் நதியையும் வனங்களையும் படைத்திருக்கிறார் கடவுள்.  கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்படிப்பட்ட பூமியில் கோடுகளைப் போட்டு தேசமெனப் பிரித்து மண்ணுக்காக போரிட்டுக் கொண்டிருக்கிறது மனிதக் கூட்டம்.  திபெத் என்ற மாபெரும் தேசத்தையே கபளீகரம் செய்து வைத்திருக்கிறது சீனா.  கேட்க ஒரு நாதி இல்லை. இதற்கிடையில் மதச் சண்டை.  கலவரம்.  பிரதமரை ஒரு சீக்கியன் கொன்றால் மூவாயிரம் அப்பாவி சீக்கியர் படுகொலை.  சிரியாவில் இஸ்லாமியரை இஸ்லாமியரே தீர்த்துக் கட்டுகிறார்கள். இப்படிப்பட்டதான உலக மாந்தர் ஒரு நுண்ணுயிரியால் அல்லல்படுவதைக் கண்டு நான் வருந்த வேண்டுமோ?  தினை விதைத்தவன் தினை அறுக்கிறான்.

***   

எந்த விதத்திலும் எனக்கு இந்தத் தனிமை வாழ்க்கை புதிதாக இல்லை.  எப்போதாவது ஒரு சமயம் சலிப்பாக இருக்கும்.  அப்போது நெட்ஃப்ளிக்ஸ் பார்ப்பேன்.  அவ்வளவுதான்.  அல்லது, வரப் போகும் வாராந்திர சந்திப்புக்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருப்பேன்.  ஒருநாள் அப்படிப்பட்ட வாராந்திர சந்திப்பு ஒன்று.  புதன்கிழமை.  சந்திக்க வேண்டிய நண்பரிடமிருந்து போன் இல்லை.  மறுநாள் கேட்டபோது அடடா, மறந்தே போனேன் என்றார்.  நிஜமான வருத்தத்துடன்தான்.  நான் அந்த புதன்கிழமைக்காக ஒரு வாரம் காத்திருந்தேன்.  ஒரு வாரம் என்பது உங்களுடைய ஒரு வாரம் அல்ல. அந்த ஒரு வாரத்தில் நீங்கள் நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள்.  பிச்சைக்காரன், எதிரே போகும் பஸ்ஸில் தொற்றிக் கொண்டு போகும் கல்லூரி மாணவர்கள், ஸ்கூட்டரில் கறுப்புக் கோட்டு அணிந்து கொண்டு போகும் ஜூனியர் வக்கீல் (கொஞ்ச நாளில் அவர் கார் வாங்கி விடுவார்; அப்புறம் அவரை நீங்கள் பார்க்க முடியாது.  காரின் சைட் விண்டோவில் சன்ஷேட் போட்டு விடுவார்.  உள்ளே இருப்பவர்களை வெளியிலிருந்து பார்க்க முடியாது.  அப்படிப் போடுவது இங்கே தடை செய்யப்பட்டிருந்தாலும் வக்கீலை யார் கேட்க முடியும்?), குப்பை அள்ளும் தொழிலாளர்கள், பெட்டிக்கடையில் நின்று புகைத்துக் கொண்டிருப்பவர்கள், வாகனங்களில் ஜோடியாகவும் தனியாகவும் செல்பவர்கள், உங்கள் அலுவலகத்தின் சக பணியாளர்கள்… இந்தியாவில் எங்கேதான் மனிதர்கள் இல்லை?  உங்களுக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ மனிதர்களை நீங்கள் பார்த்துக் கொண்டேதான் இருக்க வேண்டும்.  அது இந்தியாவின் தலைவிதி.  ஆனால் பல நாட்களில் நான் காலை ஒன்பது மணியிலிருந்து அடுத்த நாள் காலை ஏழு மணி வரை அவந்திகாவைத் தவிர வேறு ஒரு மனிதரைக் கூட பார்க்காமல்தான் இருந்து வருகிறேன்.  காலை ஏழு மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போகிறேனா?  ஆட்டோ டிரைவரிலிருந்து ஆரம்பிக்கும்.  பிறகு பார்க்.  அங்கிருந்து ஒன்பது மணிக்கு வீட்டில் அடைந்து விட்டால் அடுத்த நாள் ஏழு மணி வரை என் அறைதான் என் இருப்பிடம்.  பூனைகளையும் அவந்திகாவையும் தவிர வேறு ஒரு மனித உயிரைக் கூட பார்க்க இயலாது.  இது பற்றி எனக்கு எந்தப் புகாரும் இல்லை.  முக்கால்வாசி எழுத்தாளர்களின் வாழ்க்கை இப்படித்தான்.  குறைந்த பட்சம் இது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இத்தனை விலாவாரியாக எழுதுகிறேன்.  இது பற்றி நான் நண்பர்களிடம் சொல்லும்போது ஒருவர் கூட நான் சொல்வதைப் புரிந்து கொண்டதாக எனக்குத் தெரிந்ததில்லை.   முதலில் நான் சொல்வது புரிந்தால்தான் என் அனுபவத்தின் உள்ளே செல்ல முடியும்.  திரும்பவும் சொல்கிறேன்.  இது பற்றி எனக்கு எந்தப் புகாரும் இல்லை.  புகார் என்னவென்றால், இது பற்றிய பிரக்ஞை – ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை பற்றிய பிரக்ஞை – குறைந்த பட்சம் ஓரிருவருக்காவது தெரிந்திருக்க வேண்டாமா? சொல்லப் போனால், நானெல்லாம் ஒரு நெருக்கமான கூட்டத்தில் வாழ்பவன்.  என் வீட்டு மொட்டைமாடிக்குப் போனால் நூற்றுக்கணக்கான மனிதர்களை சாந்தோம் நெடுஞ்சாலையில் பார்க்கலாம்.  அல்லது, குறைந்த பட்சம் வாகனங்களின் சப்தமாவது என் அறையில் கேட்கும்.  காலை ஒன்பதரை மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்துக்குப் போகும்போது சைரன் ஒலித்தபடியே செல்லும் அவரது கார்.  ஏன் அனாவசியமாக அந்த சத்தம்?  நான் முதலமைச்சராக இருந்தால் அந்த சத்தத்தை நிறுத்துய்யா என்றுதான் சொல்வேன்.  நிறைய ஆம்புலன்ஸ் சத்தமும் கேட்கும்.  இப்படி வாகன சப்தம் கூட இல்லாமல் வாழும் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஹென்றி டேவிட் தோரோ வாழ்ந்தார் இல்லையா, வால்டன் என்ற கானகத்தில்?  அப்படி பல எழுத்தாளர்கள் இன்றும் தனிமையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாவ்லோ கோய்லோ இப்போது ஜெனீவாவில் வசிக்கிறார்.  இதற்கு முன்பு அவர் ஃப்ரான்ஸின் தென் மூலையில் உள்ள Pyranees மலையடிவாரத்தில் வசித்தபோதும் ஒரு ரிஷியைப் போல் தனியாகத்தான் வாழ்ந்தார்.  அதனால்தான் எழுத்தாளர்களை நான் எப்போதும் இந்தியத் துறவிகளுடனேயே ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai