பூச்சி – 12

எழுதும் வேகத்தில் பல நுணுக்கங்கள் விடுபட்டு விடுகின்றன.  அதெல்லாம் புத்தகமாக வரும்போதுதான் சரி செய்யப்படும்.  இப்போது எல்லாமே அவசரம்.  ந. முத்துசாமி தன்னுடைய ஒவ்வொரு கதையையும் பல முறை திரும்ப எழுதுவாராம்.   பல முறை என்றால் என்ன அர்த்தம்?  உங்கள் மனதில் என்ன எண்ணிக்கை வருகிறது?  அஞ்சு?  பத்து?  ம்ஹும்.  திருப்தி வரும் வரை எழுதிக் கொண்டே இருப்பாராம்.  நீர்மை கதையை அவர் அப்படி 70 முறை திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார்.  இப்போதோ நாம் ஹாயாக தட்டச்சு செய்து விட்டு, தட்டச்சு செய்ததைக் கூடத் திரும்ப ஒருமுறை படித்துப் பார்க்க மனமில்லாமல் அதை அப்படியே பதிவேற்றி விடுகிறோம். 

வேலைக்குச் சேர்ந்த இரண்டே வாரத்தில் மூவாயிரம் ரூபாய்க்கு சுடிதார் வாங்கிக் கொடுத்ததும் ஒரு பணிப்பெண் அந்த மாதமே நின்று போய் விட்டது பற்றி எழுதியிருந்தேன்.  எனக்கு 1980 வாக்கில் முற்பகுதியில் ஆர்.கே. புரத்தில் உள்ள ஒரு டாபாவில் நடந்த சம்பவம் ஞாபகம் வருகிறது.  எனக்குத் தயிர் ரொம்பப் பிடிக்கும்.  அதிலும் டெல்லித் தயிர் உயிர்.  தந்தூரி ரொட்டி, சப்ஜி இரண்டும் இருந்தது.  கடையில் தயிர் இல்லை.  ”தயிர் வேணுமே? சோட்டூவிடம் பணம் கொடுத்து அனுப்பினால் பக்கத்துக் கடையில் வாங்கி வரச் சொல்கிறீர்களா பையா?” என்று கேட்டேன் கடைக்காரரிடம்.  ஓ, தாராளமாக என்றார் டாபாக்காரர்.  பத்து ரூபாய் கொடுத்து அனுப்பினேன்.  அவ்வளவுதான் சோட்டூவைக் காணவில்லை.  ஓடி விட்டான்.  உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவனுடைய கிராமத்துக்கு பஸ்ஸில் போக டிக்கட் பத்து ரூபாய்க்குள்தான் இருக்க வேண்டும்.  இப்படி என் கடை ஆள் ஒருத்தனை பணம் கொடுத்து கிராமத்துக்கு அனுப்பி விட்டீர்களே மதறாஸி பாபு என்றார் கடைக்கார சர்தார்ஜி.  பத்தே ரூபாயில் பையனுக்கு விடுதலை கிடைத்து விட்டது.  அப்படி அந்தப் பணிப்பெண் 3000 ரூபாய்க்கு சுடிதாரை வாங்கிக் கொண்டு ஓடி விட்டார்.  வேலை செய்தது ஒரே மாதம்.  இந்த மூவாயிரம் ரூபாய் வந்தது எப்படித் தெரியுமா? கதையைத் திரும்பவும் படியுங்கள்.  மார்கழி என்று சொன்னேன்.  மார்கழி மூன்றாம் தேதிதான் என் பிறந்த நாள்.  டிசம்பர் 18.  அன்றைய தினம் சென்னை கிரிக்கெட் கிளப்பில் நண்பர்கள் கூடினோம்.  கொஞ்சமாக ஒயின் அருந்தினேன்.  ஒரு நண்பர் என் பாக்கெட்டில் ஒரு கவரை வைத்தார்.  பிறந்த நாள் பரிசு.  கவர் கனமாக இருந்தது.  சரி, பூனைகளுக்கு ரெண்டு மூணு மாசத்துக்குக் கவலையில்லாமல் இருக்கலாம் என்று ஆசுவாசப்பட்டேன்.  பொதுவாக இப்படிக் கிடைக்கும் கவர்களை மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டு ஒளித்து வைத்து விடுவேன்.  அன்றைய தினம் ஒயின் அருந்தியிருந்ததால் அப்படியே பேண்ட்டை மாட்டி விட்டுத் தூங்கி விட்டேன்.

மறுநாள் காலையில் பார்த்தால் கவரைக் காணோம்.  சரி, அவந்திகா எடுத்து வைத்திருப்பாள் என்று விட்டு விட்டேன்.  கேட்டேன்.  ஆமாம், எடுத்து வைத்தேன் என்றாள்.  அதற்கு மேல் பேச முடியவில்லை.  ஆள் கொலை பிஸி.  ரொம்பக் கேட்டால் கோவித்துக் கொள்வாள்.  மூணு நாள் சென்று அவள் அபூர்வமாக ஓய்வாக இருந்த வேளையில் கவர் பற்றிக் கேட்டேன்.  ஆமாம்ப்பா, இதோ எடுக்கிறேன் என்று எடுத்துப் பார்த்தாள்.  பத்தாயிரம் இருந்தது.  அப்பாடா, எனக்கு டிரெஸ் எடுக்க பணத்துக்கு என்னா பண்றதுன்னு இருந்தேம்ப்பா, இதை எடுத்துக்கவா என்றாள்.  அவந்திகா வேலையில் இருந்திருந்தால் ஒன்றரை லட்சம் ரூபாய் மாத ஊதியம்.  அக்கவுன்ட்ஸ் ஆஃபிஸர் போஸ்டிங்குக்காகக் காத்திருந்த போது விருப்ப ஓய்வு கொடுத்து விட்டாள்.  ஆன்மீக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக.  ஆடை, அணிகலன், வீடு, ஓட்டல், சினிமா, வெளியே செல்வது, ஷாப்பிங் எதுவுமே அவளுக்குப் பிடிக்காது.  காந்தி மாதிரி எளிமை.  அவள் டிரெஸ் எடுத்தும் நாலைந்து ஆண்டுகள் ஆகின்றன.  அதனால் அவள் கேட்டவுடன் ஓ எடுத்துக்கம்மா என்று சொல்லி விட்டேன்.  “உனக்கு எதாவது செலவு இருந்தா சொல்லு, வச்சுட்றேன்.”  “இல்லை இல்லை ஒரு செலவும் இல்லை.”

என்ன பிரச்சினை என்றால், அந்தப் பத்தாயிரத்தையும் பிரித்துப் பிரித்து இங்கே உள்ள உழைப்பாளிகளுக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்கும் கொடுத்து விடுவாள்.  அதில்தான் 3000 ரூபாய்க்கு பணிப்பெண்ணுக்கு சுடிதார். 

(நண்பா, டிசம்பர் 18-ஆம் தேதியிலிருந்து இதை நான் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  நீ அந்தப் பணத்தை ராம்ஜியிடம் கொடுத்திருந்தால் கூட அது என்னிடம் பத்திரமாகச் சேர்ந்திருக்கும்.  அவந்திகாவுக்குக் கொடுக்கக் கூடாது என்று இல்லை.  அவந்திகாவுக்குக் கொடுத்தால் அது அவளுக்குச் சேராது.  அவ்வளவுதான். இனிமேல் கொடுத்தால் ராம்ஜியிடம் கொடுத்து விடு.  அல்லது, எனக்கு கூகிள் பே மூலம் அனுப்பி விடு.  இப்படிக் கையில் கொடுத்தால் அது என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் வங்காள விரிகுடாவில்தான் போய் விழும்!) 

இப்படித்தான் ஒரு பத்திரிகையிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக் வந்தது.  வீட்டு முகவரிக்கு.  சென்ற ஆண்டு எழுதிய கட்டுரைக்கான சன்மானம்.  அது எப்படி அவந்திகாவின் காந்தி கணக்கில் போய்ச் சேர்ந்தது தெரியுமா?  (அதற்கு முன் இந்த காந்தி கணக்கு பற்றி:  நானுமே பலரையும் போல் இந்த காந்தி கணக்கு என்ற வார்த்தை பற்றித் தவறாகவே நினைத்துக் கொண்டிருந்தேன்.  நாமம் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் அடையாளமாக இருந்தாலும் பட்டநாமம் போட்டுட்டான் என்றால் ஏமாற்றி விட்டான் என்றுதானே நினைக்கிறோம், அப்படித்தான் காந்தி கணக்கு பற்றியும் நினைத்து விட்டேன்.  அப்புறம்தான் அவந்திகாவின் கணக்கு பற்றித் தெரிந்ததும் ஓ, இப்படித்தான் காந்தி கணக்கும் என்று புரிந்தது.  காந்தியும் எல்லோரிடமிருந்தும் நன்கொடை திரட்டுவார்.  அதை வைத்து அவர் என்ன சொத்தா வாங்கினார்?  எல்லாம் சமூகத்துக்கு.  அதுபோலவே அவந்திகா.  கிடைக்கும் பணமெல்லாம் ஏழைகளுக்கு.  தெருவில் குப்பை அள்ளும் பெண்மணிகள் நாலு பேர் வாராவாரம் வந்து பணம் வாங்கிக் கொண்டு போவார்கள்.  அப்புறம் வாட்ச்மேன்.  இப்படி அது பெரிய கதை.  அதெல்லாம் அவளுடைய பென்ஷன் பணம்.  அதோடுதான் இப்படி எனக்குக் கிடைக்கும் சன்மானம், பிறந்த நாள் பரிசு எல்லாமும் சேர்ந்து விடும். அதனால்தான் அவள் கண்ணில் நான் பணத்தையே காட்டுவதில்லை. நானே ஒரு விளிம்பு.  எனக்குக் கொடுப்பவனும் விளிம்பு.  இதை எடுத்து இன்னொரு விளிம்புக்குக் கொடுக்கணுமா? என்னங்கடா இது!)

ஆயிரம் ரூபாய் செக் பல நாட்களாக அப்படியே கிடந்தது.  எனக்கு அதை வங்கியில் போட இஷ்டமில்லை.  போக வர ஒரு மணி நேரம் செலவாகும்.  என்னுடைய ஒரு மணி நேரம் பத்தாயிரம் ரூபாய்க்குச் சமம்.  தேவையெனில் அவந்திகாவே கொண்டு போய் போடட்டும்.  எப்படியோ அது ஒரு விளிம்புக்குத்தான் போய்ச் சேரும்.  அதற்கு ஏன் என்னுடைய ஒரு மணி நேரத்தைச் செலவிட வேண்டும்?  ஆனாலும் அந்தப் பத்திரிகை நண்பர்கள் மீது கோபம் கோபமாக வந்தது.  விடுங்கள்.  ஆனால் அவந்திகாவுக்கு நேரமே இல்லை.  அதனால் ஒருநாள் நீ போய் வா சாரு என்றாள்.  அவள் சொல்லி விட்டால் அதற்கு மேல் அப்பீலே இல்லை.  கிளம்பினேன்.  செலான் எல்லாம் எழுதி நிரப்பி விட்டாள்.  நேராக ஆக்ஸிஸ் வங்கிக்குப் போய்க் கொடுத்தேன்.  ஏனென்றால், எனக்கு வங்கி என்றால் அதுதான் ஞாபகத்தில் இருக்கும்.  என் கணக்கு அங்கே இருப்பதால்.  ஆனால் வங்கிக்காரர் செலானைப் பார்த்து விட்டு, நீங்கள் சி.யூ.பி. போகவும் என்று சொல்லி விட்டார்.  சி.யூ.பி.யில்தான் காந்தி கணக்கு இருக்கிறது.  அதை மறந்து போனேன்.  கிளம்பு அதே ஆட்டோவில்.  சி.யு.பி. மந்தவெளியில் இருக்கிறது.  எல்லாம் முடிந்து திரும்ப ஒரு மணி நேரம் ஆகி விட்டது.  என் பணமும் நூறு ரூபாய் செலவு, ஆட்டோவுக்கு.  அடப் பாவிகளா!  கட்டுரையும் எழுதிக் கொடுத்து, அதற்காக ஒரு மணி நேரமும் செலவு பண்ணி, நூறு ரூபாய் செலவு வேறே?  என்னங்கடா அந்யாயம்!)

பாத்திரம் தேய்ப்பதில் இன்னுமொரு ‘நுவான்ஸ்’ விடுபட்டு விட்டது.  எனக்குக் கஞ்சத்தனம் பிடிக்காது.  சிக்கனமும் பிடிக்காது.  அவந்திகா எனக்கும் மேலே.  அதனால் அது சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களே எங்களிடம் எழுந்ததே இல்லை.  தக்காளி வாங்கி வா என்றால் நான் மூணு கிலோ வாங்குவேன்.  அவளோ நாலு கிலோ வாங்குவாள்.  அன்று ஒருநாள் வாஷிங் மெஷினில் போடும் சோப்புப் பாக்கெட் வாங்கி வர சொன்னாள்.  ஒரு பாக்கெட் மூணு ரூபாய்.  அந்தப் பாக்கெட்டை அவள் அடிக்கடி வாங்குவது போல் தெரிந்தது.  பார்த்தேன்.  ஒரு 200 பாக்கெட் வாங்கிக் கொண்டு போய் நீட்டினேன்.  மிரண்டு விட்டாள்.  அப்படிப்பட்டவள் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் இருக்கிறதல்லவா, அதில் நீரை கன்னாபின்னா என்று கலந்து வைத்துக் கொண்டிருந்தாள்.  பார்த்தால் பாத்திரங்களை வெறும் தண்ணீரில் கழுவுவது போல் கடினமாக இருந்தது.  உயிரை விட்டு அழுத்த வேண்டியிருந்தது.  ஓ, இதனால்தான் பணிப்பெண்கள் ஓடி விட்டதுகளோ என்று சம்சயம் கொண்டேன்.  ஆனால் நான் எத்தனுக்கு எத்தன்.  அந்தத் தண்ணீரில் மேலும் லிக்விட்டைக் கலந்தே பாத்திரம் தேய்ப்பேன்.  ஒருநாள் அவந்திகா என்னப்பா சாரு, லிக்விட் எல்லாம் தீர்ந்துடும் போல இருக்கே, இவ்வளவு செலவு பண்றே என்றாள்.  ஆ, இப்படிப்பட்ட கேள்விகளை நாம் கேட்டதே இல்லையே டார்லிங் என்றேன். 

அட லூசு, இப்போ உனக்கு எங்கே கடை திறந்து வச்சுருக்கான்?

ஏன், எதிர்த்தாற்போல் மளிகைக்கடை இருக்கிறதே?

இருக்கு.  அங்கே போய் வாங்கினால் கொரோனா வராதா? 

அதாவது அவர் அல்லது அவள் தொட்ட பாக்கெட்டில் ஒட்டிக்கொண்டு இருக்குமாம்.  அவள் ஏற்கனவே வெளியிலிருந்து வரும் ரூபாய் நோட்டுகளைக் கூட ஹேண்ட் வாஷ் போட்டுக் கழுவி கொடியில் க்ளிப் போட்டுக் காய வைத்துத்தான் உபயோகப்படுத்துகிறாள்.  ரூபாய் நோட்டுகளில் கொரோனா இருந்தால் என்னய்யா செய்வது?