பூச்சி – 13

சரி, இப்போதாவது இந்த எழுத்தாளர் மேட்டருக்கு வருவோம்.  அது ஒன்றுமில்லை.  முகநூலில் பிரபலமாக இருக்கும் நம் ராஜ் சிவா இருக்கிறாரே, அவர் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  என் குடும்பத்தில் ஒருத்தர்.  அவரோடுதான் இப்போது பஞ்சாயத்து.  அதை அவர் எழுதிய அன்றே போட்டிருக்க வேண்டும்.  நேரம் கிடைக்கவில்லை. 

”இப்போ புரிகிறதா?
எந்தவொரு இலக்கியவாதியோ, எந்தவொரு எழுத்தாளனோ, எந்தவொரு நடிகனோ, எந்தவொரு அரசியல்வாதியோ, எந்தவொரு மதத் தலைவனோ, எந்தவொரு ஆன்மீகச் சாமியாரோ, எந்தவொரு கோடீஸ்வரனோ…

யாருமே பெரியவனில்லை. நீ அவன் காலைக் கழுவும்படி எதிலும் அவன் உன்னிலும் உயர்ச்சியில்லை. நீ தூக்கும் பல்லக்கில் உட்காரவே அவனுக்குத் தகுதியில்லை.

உன்னைப் போலவே அவனும் பயத்தில் வீட்டினுள் ஒளிந்திருக்கிறான். உனக்கு உதவியென்று வெளிவரத் தயங்குகிறான். பயத்தில் சாகிறான்.

எந்த விதத்திலும் அவன் உன்னைவிட உயர்ந்தவனில்லை என்பதை இன்றுள்ள சூழ்நிலை உனக்கு உணர்த்தி இருக்கிறது. கொரோணா கற்றுத் தந்த பெரும் பாடம் இது.”

ராஜ் சிவா பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.  விஞ்ஞானம் சார்ந்து எழுதுபவர்கள் தமிழில் ஒன்றிரண்டு பேர்தான் இருப்பார்கள்.  அவர்களில் முதன்மையானவர் ராஜ் சிவா.  என் மதிப்புக்குரிய நண்பர்.  அறிவியலில் நான் பூஜ்யம்.  ஆர்க்கிமிடீஸ் விதி கூடத் தெரியாது.  எனக்கு மிகவும் பிடித்த தாமஸ் பிஞ்ச்சன் (Thomas Pynchon) எழுதிய The Crying of Lot 49 என்ற நாவல் Entropy என்ற அறிவியல் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிந்ததுமே அந்த நூலை தூர வைத்து விட்டேன்.  எனக்கு அத்தனை அலர்ஜியான அறிவியலை திருநெல்வேலி அல்வா போல் சொல்லிக் கொடுப்பவர் ராஜ் சிவா.  அவரது முகநூல் பக்கத்திலும் அவர் தன்னை எழுத்தாளன் என்றே குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.  ஆனால் கொரோனாவைப் பற்றியும் அதன் காரணமாக மானுட குலத்தைப் பீடித்திருக்கும் பயம் பற்றியும் எழுதப் புகுந்தவர் எடுத்த எடுப்பில் இலக்கியவாதியின் கொட்டையில் போடுகிறார்.  சாகவில்லை என்று தெரிந்ததும் இன்னும் விடாமல் அவனது மற்றொரு எழுத்தாளன் எனக் கண்டு இன்னும் ரெண்டு போடுகிறார்.  செத்தானா சாகவில்லையா பார். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமே எழுத்தாளன் என்றால் கொலைவெறி கொண்டு அலைகிறது என்பதை நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கொடுத்து விளக்கி எழுதிக் கொண்டே இருக்கிறேன்.  அந்தப் பொருளில் வாரம் ஒரு கட்டுரையாவது எழுதத் தவறுவதில்லை.  அதில் ஒன்றைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கட்டையை எடுத்து கொட்டையிலே போடுகிறார் சிவா.  கோவிட் 19 கிருமி உருவாகி மனித குலம் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் அதற்கு எழுத்தாளன் என்ன ஐயா செய்வான்?  ஏன் எதற்கு எடுத்தாலும் எழுத்தாளனிடமே வருகிறீர்கள்?  நீங்கள் ஜெர்மனியில் வசிக்கிறீர்கள்.  அங்கே உள்ள வதைமுகாம்களையெல்லாம் பார்வையிட்டிருப்பீர்கள்.  Holocaust  படங்களையெல்லாம் பார்த்திருப்பீர்கள்.  90 லட்சம் யூதர்கள் கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.  அதன் சாட்சியங்கள் ஜெர்மனியிலும் மற்ற சில ஐரோப்பிய நகர்களிலும் இன்னமும் இருக்கின்றன.  படங்களாகவும் புத்தகங்களாகவும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.  இப்போது ஒருத்தர் வந்து ”இத்தனை மனிதப் படுகொலைகள் நடந்துள்ளன, ஏ எழுத்தாளர்களே, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?  உங்களால் இந்த மானுட குலத்துக்கு ஒரு பயனும் இல்லை.  நீங்கள் எழுதுவதெல்லாம் வீண்.  ஒழிந்து போங்கள்” என்று சொன்னால் அது எத்தனை அபத்தமோ அதே போன்றதுதானே நீங்கள் கேட்பதும்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?  கோவிட் 19 உலகமெல்லாம் பரவியதற்கு சீன அரசின் பொறுப்பற்ற தனமே காரணம்.  இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.  இத்தாலியிலும் ஸ்பெயினிலும் நடந்த மனித இழப்புகளுக்குக் காரணம், அங்கே மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை.  மற்ற காரணங்களும் இருக்கலாம்.  இதற்கெல்லாம் எழுத்தாளன் என்ன செய்வான்?  அவன் என்ன உலகைக் காக்கும் கடவுளா?  கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க முடியாத மருத்துவமும் அறிவியலும் தண்டம், எல்லாவற்றையும் ஏறக் கட்டுங்கள் என்று எவனாவது சொன்னால் அவனைப் போன்ற முட்டாள் யாரேனும் உண்டா? 

நடிகன், அரசியல்வாதி, மதத் தலைவன், ஆன்மீகச் சாமியார், கோடீஸ்வரன் ஆகியவர்களுக்கு எல்லாம் முன்னால் இலக்கியவாதியும் எழுத்தாளனும் உங்களிடம் அடி வாங்குகிறான்.  நடிகனும் எழுத்தாளனும் ஒன்றா? குறைந்த பட்சம், தமிழ்நாட்டில்?  இங்கே சி.சு. செல்லப்பா என்று ஒருத்தர் இருந்தார். தன் சொத்தையெல்லாம் விற்று எழுத்து என்று ஒரு பத்திரிகை நடத்தினார்.   மூட்டையில் கட்டி தோளில் போட்டு எடுத்துக் கொண்டு போய் கல்லூரி கல்லூரியாக விற்றார்.  ஒரு பேராசிரியர் ஒரு எழுத்தாளரிடம் திருச்சி செயிண்ட் ஜோஸஃப் கல்லூரியில் உள்ள ஒரு திண்ணையைக் காண்பித்து இந்தத் திண்ணையில்தான் செல்லப்பா ஓய்வெடுப்பார் என்றாராம்.  எழுத்து பத்திரிகையைத் தோளில் போட்டு அலைந்து ஜோஸஃப் கல்லூரி மாணவர்களிடையே விற்றுவிட்டு அந்தத் திண்ணையில் படுத்து இளைப்பாறி இருக்கிறார் செல்லப்பா.  அவர் காலத்தில் வாழ்ந்த நடிகரும், அரசியல்வாதியுமான எம்ஜியாரும் செல்லப்பாவும் ஒன்றா? பாரதியின் படிப்புக்கு அவர் அந்தக் காலத்தில் கலெக்டர் ஆகி இருக்கலாமே?  ஆனால் அவர் பட்டினி கிடந்தபடி கவிதை அல்லவா பாடினார்?  ஏன் பட்டினி கிடந்தார் தெரியுமா?  அப்போதும் உங்களைப் போன்றவர்கள் எழுத்தாளன் கிடக்கிறான் Assdick என்று சொல்லிக் கொண்டு திரிந்திருப்பார்கள்.  அவர்கள் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளாகவும் காந்தியின் நண்பர்களாகவும் கூட இருந்திருப்பார்கள், யார் கண்டது?  எழுத்தாளன் என்பதற்கு உலகம் பூராவும் உள்ள அர்த்தம் வேறு.  தமிழ்நாட்டில் அதன் அர்த்தம் வேறு.  உலகம் பூராவும் எழுத்தாளன் என்றால் சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவன்.  தூதராக இருப்பான்.  அல்லது, நாட்டின் அதிபர் அவனைத் தன் எதிரி என்று நினைத்து சிறையில் தள்ளியிருப்பார்; அல்லது விஷம் கொடுத்துக் கொன்றிருப்பார்.  என்ன விஷயம் என்றால், அதிபர் ஒரு எழுத்தாளனைத் தன் எதிரி என நினைக்கிறார்.  அந்நாளைய சவூதி அதிபர் தன் நண்பராக இருந்த அப்துர்ரஹ்மான் முனீஃப் ஒரு நாவல் எழுதி அதில் தன்னையும் கதாபாத்திரமாக ஆக்கியதும் முனீஃபை நாடு கடத்தினார்.  பேரீச்சம் பழத்தையும் பெட்ரோ டாலரையும் தவிர வேறு ஒன்றும் தெரியாதவர்கள் என்று கருதப்படும் சவூதியிலேயே ஒரு எழுத்தாளனின் அடையாளம் அப்படி இருந்தது.  ஆனால் தமிழ் மண்ணில் எழுத்தாளர்கள் மூவாயிரம் ஆண்டுகளாகத் தங்கள் வயிற்றுப்பாட்டுக்குக் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படிப்பட்டவர்களும் கோடி கோடியாய் சம்பளம் வாங்கிக் கொண்டு சமூகத்தைக் கெடுத்துக் கொண்டு திரியும் நடிகனும் ஒன்றா?  இந்தியா இப்படி ஒரு பிச்சைக்கார நாடாக இருப்பதற்கு முழுமுதற் காரணம் அரசியல்வாதி.  அப்படிப்பட்ட அரசியல்வாதியும் தன் மொழிக்காகவும் தன் கலாச்சாரத்துக்காகவும் தன் சமூகத்துக்காகவும் தன் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளனும் ஒன்றா?  கோபி கிருஷ்ணன் என்ற எழுத்தாளரின் ஒரு கதையையேனும் நீங்கள் படித்திருந்தால் இப்படி ஒரு வாக்கியத்தை எழுதியிருப்பீர்களா?  அவனுக்குத் தேவை மாதம் ஐநூறு ரூபாய்.  தேநீருக்கும் சிகரெட்டுக்கும். அந்த ஐநூறு ரூபாய் இல்லாமல் செத்துப் போனான் கோபி கிருஷ்ணன்.  பாரதிக்குப் பிறகு தமிழ் மொழியை செழுமைப்படுத்தியவர்களில் சிலர் புதுமைப்பித்தனும் தர்மு சிவராமுவும்.  இவர்களும் பஞ்சத்திலும் பட்டினியிலும்தான் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள்.  ஜெயமோகனின் அறம் என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.  அதைப் படிக்கும் போது ஜெயமோகனை மறந்து விடுங்கள்.  அதில் வரும் எழுத்தாளன் எம்.வி. வெங்கட்ராம்.  அவர் இந்தத் தமிழ் சமூகத்தை சபித்திருப்பார் பாருங்கள் அப்படி ஒரு சாபம்.  படிக்கும் போது ரத்தம் கொதிக்கும்.  ஜெயமோகன் அல்ல, அங்கே இருப்பது, பட்டினி கிடந்த எம்.வி. வெங்கட்ராமின் கண்ணீரும் சாபமும்தான் அது.  எனக்குத் தெரிந்து எத்தனையோ எழுத்தாளர்கள் திருமணம் கூட செய்து கொள்ளாமல் எழுத்தையே தவம் என நினைத்து எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  தங்கள் வாழ்வையே பலியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கைதான் அவர்களின் எழுத்து.  அதற்காக அவர்கள் தங்களை பலியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  நாற்பது ஆண்டுகளாக நான் இலவசமாக எழுதிக் கொண்டிருந்தேன்.  இப்போதுதான் குமுதத்தில் காசு கொடுக்கிறார்கள்.  இலக்கியப் பத்திரிகைகளே ஆசிரியரின் தியாகத்தில் நடக்கிறது என்கிற போது அவர்கள் எப்படி எழுத்தாளருக்குக் காசு கொடுப்பார்கள்?  எத்தனை கட்டுரைகள், எத்தனை ஆய்வுகள், எத்தனை எத்தனை… எல்லாமே இலவசம், தமிழ்நாட்டில்.  இங்கே வேசி கூட இலவச சேவை செய்ய மாட்டாள்.  எழுத்தாளனின் எழுத்து மட்டுமே இலவசம். 

”உன்னைப் போலவே அவனும் பயத்தில் வீட்டினுள் ஒளிந்திருக்கிறான். உனக்கு உதவியென்று வெளிவரத் தயங்குகிறான். பயத்தில் சாகிறான்” என்று எழுதியிருக்கிறீர்கள்.  வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட படித்திராத ஒரு பாமரன் மட்டுமே இப்படி எழுத முடியும்.  ஆனால் நீங்கள் அப்படி அல்ல.  படித்தவர்.  ஆக, ஒரு பாமரன் சொல்வதை எப்படி நீங்கள் சொல்கிறீர்கள்?  யாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் என்று பாடியவன் ஐயா எழுத்தாளன்.  அவன் ஏன் இந்தக் கொசுவுக்கு அஞ்ச வேண்டும்?  அவன் மூலமாக மற்றவருக்குப் பரவி விடுமே என்றுதான் அவனும் உங்களைப் போல் வீட்டில் அடைந்திருக்கிறான்.  இன்னொரு விஷயம் சிவா.  அவன் வேலையே அவன் வீட்டுக்குள்ளேதான்.   ஒரு ரிஷி, ஒரு துறவி எங்கே இருப்பார்?  மல்ட்டி நேஷனல் கம்பெனி அலுவலகத்திலா?  அவர் அவருடைய குகையில்தானே இருப்பார்?  பூகம்பமாக இருந்தாலும் சரி, தேசத்தில் புரட்சி நடந்தாலும் சரி, அவர் குகையில்தான் அவர் இருப்பார்.  அவரைப் போய் நீங்கள் கம்பெனி மீட்டிங்குக்கு அழைத்தால் எப்படி வருவார்?  அப்படியாகத்தான் எழுத்தாளனும் தன்னுடைய எழுத்துப் பட்டறையான அறைக்குள்ளே அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான்.  அது கொரோனாவாக இருந்தாலும் சரி, கொரோனாவின் அப்பனாக இருந்தாலும் சரி. 

ஒரு மொழி, அந்த மொழியைச் சார்ந்த கலாச்சாரம் போன்றவை நூற்றாண்டு நூற்றாண்டுகளாக சங்கிலித் தொடரைப் போல் மானுட குலத்தின் சாட்சியமாக விளங்குவதை செயல்படுத்துபவன் எழுத்தாளன். அப்படியாகத்தான் நமக்கு 3000 ஆண்டுகளின் சங்கிலி சங்க இலக்கியத்தின் மூலம் கிடைத்திருக்கிறது.  அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்களின் மூஞ்சியில் மூத்திரம் பெய்யலாமா?  இதையா உங்கள் அறிவியல் சாஸ்திரம் சொல்லிக் கொடுத்தது? 

நீங்கள் மட்டும் எழுதியிருந்தால் நான் இத்தனை நீண்ட பதிலை எழுதியிருக்க மாட்டேன்.  தமிழ்நாட்டில் நான் வெகுவாக மதிக்கும் புத்திஜீவிகளில் முதன்மையானவர் டி. தர்மராஜ்.  மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் Folklore and Culture Studies துறையின் தலைவர்.  அவரது பதிவை கீழே தருகிறேன்:

30-03-2020

”சமூகத் தொடர்புகளை விலக்கி, தனிமைப்படுத்திக் கொள்ளும் தருணம், சில பேர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெளிப்பட்டு கைகளைத் தட்டிக் கொள்கிறார்கள். என்றால், இன்னும் சில பேர், மனித மாண்புகளையும் கீழ்மைகளையும் சரிசமமாகச் சித்தரிக்கும் (என்று சொல்லப்படும்!) உலக இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆல்பெர் காம்யு, டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி, செகாவ் மாதிரியான இலக்கியங்களில் தஞ்சமடைவது ஆசுவாசமாய் இருக்கிறது என்றாலும் ….

நெருக்கடியான இந்த நேரத்தில் வாழ்வது எந்தவொரு உன்னத இலக்கியத்தையும் விட குழப்பமாக இருப்பதையும் கொஞ்சம் கவனியுங்கள். இந்தக் குழப்ப மனநிலையை எந்த இலக்கியமாவது பதிவு செய்திருக்கிறதா என்றால், இல்லை!

இலக்கியமும், வரலாற்றைப் போலவே தான். எல்லாம் நடந்தேறியதும் சாவகாசமாக மானுட உளவியலை அலசத் தொடங்குகிறது. வரலாறு கண்ணுக்குத் தெரிந்ததை அலசுகிறது என்றால், இலக்கியம் கண்ணுக்குத் தெரியாததை. ஆனால், இரண்டுமே, மரணத்திற்குப் பின் எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்புகள்.

இன்றைக்கு, பக்கத்திலுள்ள கண்ணன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்குப் பொருட்கள் வாங்கப் போயிருந்தேன். பயம் ஒரு பக்கம். கடைக்காரர்கள், ‘சீக்கிரம், சார். சீக்கிரம், சார்’ என்று பதட்டத்தைக் கூட்டினார்கள். கணிசமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். எல்லோரும் விதவிதமான முகமூடிகளோடு. இடையே ஒரு பணியாளர், மூகமூடி அணியாதவர்களையும் அணியும் படி சொல்லிப் போனார். கர்ச்சீப்பையாவது கட்டிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வெளியே அனுப்பி விடுவோம். உடனே, அணியாதவர்கள் கூட அணிந்து கொண்டனர். பரபரவென்று தேவையான பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, பணத்தை செலுத்தி விட்டு வெளியேறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. டிவியில் காட்டப்படும் ஷாப்பிங் சேலஞ்ச் மாதிரியிருந்தது. ஒரு மரண பயம், அதை ஒட்டியே ஒரு கேளிக்கை மனம். விழுவதற்கு முன் உருண்டு கொண்டிருக்கும் தாயக்கட்டை போல இருக்கிறது இந்த கணம். இந்தக் கொரோனா காலம் பேரழிவைத் தந்தது என்றால், இந்த நிமிடத்தின் மரண பயமே ஞாபகத்தில் எஞ்சியிருக்கப் போகிறது. இல்லை, பெரிதாக எல்லோரும் நம்புவது போல் கொரோனா காலம் வந்தது போலவே சென்று விட்டால், கேளிக்கை மனமே மேலோங்கப் போகிறது. நிச்சயமாய், இந்த நிமிட அலைபாய்ச்சலை இலக்கியத்தால் வெளிப்படுத்திவிட முடியும் என்று நான் நம்பவில்லை. இலக்கியம், ஒட்டுமொத்த விளையாட்டும் முடிந்த பின்பே தனது கமென்ட்ரியை ஆரம்பிக்கிறது.

அதனால், இந்த நெருக்கடியான நேரத்தில் இலக்கியம் நமக்கு எந்த வெளிச்சத்தையும் தந்து விடாது என்றே நான் நினைக்கிறேன். மானுடம் கீழ்மை, மாண்பு என்ற பண்புகளுக்குள் இல்லை. அப்படியென்றால் என்னவென்று வரையறுக்க முடியாத சிக்கலில் உளன்று கொண்டிருக்கிறது.”

மேலே கண்ட பத்தியை எந்தவொரு இலக்கியப் பிரதியையுமே படிக்காத ஒருவர் சொல்லியிருந்தால் அதுதான் தமிழ் மரபு; அந்த மரபுக்கேற்றபடி பேசியிருக்கிறார் என்று கடந்து விடுவேன்.  ஆனால் பேசியிருப்பவர் ஒரு புத்திஜீவி.  அதிலும் வலதுசாரிகளும் மதவாத ஃபாஸிஸமும் தலையோங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கலைக்காகவும் எழுத்தாளர்களுக்காகவும் பேச வேண்டிய, அவர்கள் தோளோடு தோள் கொடுக்க வேண்டிய ஒருவர் வலதுசாரிகளின் சொல்லாடலை எடுத்துக் கொண்டிருக்கிறார்.  எழுத்தையும் கலையையும் ஃபாஸிஸ்டுகள் என்றுமே தங்களுடைய எதிரியாக நினைத்து வந்தவர்கள்.  அதனால்தான் மோடியின் ஆட்சியில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் பதற்றம் கொள்கிறார்கள்.  அந்த எழுத்தாளர்களின், கலைஞர்களின் சமூக ஸ்தானத்தை நன்றாக அறிந்திருப்பதாலேயே அவர்களை ஒடுக்குவதிலும், அவர்களின் குரலை நசுக்குவதிலும், தேவையானால் அவர்களின் பௌதீக இருப்பையே இல்லாமல் ஆக்குவதிலும் முனைகிறார்கள் ஃபாஸிஸ்டுகளும் அவர்களின் ஆதரவாளர்களும்.  ஆக, எழுத்தாளர்களின் அடையாளமும்,  முக்கியத்துவமும், செயல்பாடும் ஃபாஸிஸ்டுகளுக்குப் புரிகிறது. அப்படிப் புரிந்ததால்தான் தென்னமெரிக்க சர்வாதிகாரிகள் அத்தனை பேரும் அங்கே உள்ள எழுத்தாளர்களையும் புத்திஜீவிகளையும் சிறையில் தள்ளினார்கள்?  பினோசெத் ஆட்சிக்கு வந்த கையோடு பாப்லோ நெரூதாவுக்கு விஷ மருந்து கொடுக்கப்பட்டதற்கு அதுதானே காரணம்?  ஃபாஸிஸ்டுகள் துப்பாக்கிகளை விட எழுத்துக்கு அச்சமடைகிறார்கள்.  ஃபாஸிஸ்டுகளால் அவ்வளவு ஆபத்தானதாகக் கருதப்படும் எழுத்து  தர்மராஜ் போன்ற புத்திஜீவிகளுக்கு ஏன் அர்த்தமற்றதாகத் தெரிகிறது? 

நெருக்கடியான நேரத்தில் இலக்கியம் எந்த வெளிச்சத்தையும் தந்து விடாது.  இது தர்மராஜ்.  இலக்கியம் தராது என்றால், வேறு எது தரும்?  எத்தனையோ விஷயங்கள் வெளிச்சத்தைத் தரலாம்.  இலக்கியம் ஒன்றுதான் வெளிச்சம் தரும் என்று நான் சொல்ல மாட்டேன்.  ஒருவருக்கு அவர் கடவுள் மீது கொண்ட பக்தி வெளிச்சத்தைத் தரலாம்.  பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானி John of the Cross-ஐ ஒரு இருட்டுச் சிறையில் அடைத்த போது அவருக்கு இயேசுவின் மீதான நம்பிக்கையே ஒளியாக இருந்தது.  அந்த அனுபவத்தை அவர் ஒரு கவிதையாக்கினார்.  ஆனால் அதை எழுத அவரிடம் காகிதம் இல்லை.  மனதில் தோன்றியதையெல்லாம் மனனப்படுத்திக் கொண்டார்.  அதுதான் Dark Night of the Soul.  எப்படி விஷமே விஷ முறிவாகவும் இருக்கிறதோ – எப்படி ஒரு கொலைக்கருவி தியாகத்தின் குறியீடாக மாறி பல கோடி பேரால் வணங்கப்படுகிறதோ அதேபோல் ஜான் ஆஃப் தெ க்ராஸ் அந்த ஸ்பானிய சிறையில் கழித்த இருண்ட பகல்களும் இரவுகளும் நமக்கு இந்தக் கொரோனா காலத்தைக் கடந்து வர மிகவும் உதவிகரமாக இருக்கும். 

மேலும், தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட படித்திராத மூடர் கூட்டம்தான் வீட்டுத் தனிமையில் மாட்டிக் கொண்டு மனநோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இலக்கியத்தாலேயே உருவாகி இலக்கியத்தின் மற்றொரு துறையான கலாச்சாரத்திலும் நாட்டார் கலையிலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு புத்திஜீவிக்கு என்ன வந்தது?  நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என நினைக்கிறேன்.  இலக்கியமும் உதவாது என்றால் பயமும் பீதியும் பீடித்துத் தற்கொலை செய்து கொள்ளவா?

என்னிடமிருந்து இலக்கியத்தைப் பறித்தால் நான் அந்தக் கணமே மரித்துப் போவேன்.  எல்லோருக்கும் இப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால் தனித்து விடப்படும் போது ஒரு மனிதனுக்கு இலக்கியத்தைத் தவிர வேறு வெளிச்சம் எதுவுமே கிடையாது.  அதனால்தான் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஆயுள் தண்டனைக் கைதிகள் – ஏன், மரண தண்டனைக் கைதிகள் கூட ஒரு கல்லூரி மாணவனைப் போல் புத்தகம் புத்தகமாகப் படித்துத் தள்ளுகிறார்கள்.  அதன் காரணமாகத்தான் அந்த நாடுகளில் சிறை நூலகங்கள் என்பவை மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.   

நான் இது பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்து விட்டேன்.  நீங்கள் எந்த வெளிநாட்டுக்குப் போனாலும் இந்தியாவைப் பற்றி மிகுந்த மனவருத்தம் கொள்வீர்கள்.  இந்தியா எந்த அளவுக்கு வாழத் தகுதியற்ற நாடாக ஆகி விட்டது என்பதை நீங்கள் நம் தினசரிகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.  வெளிநாட்டு மண்ணைத் தொட்டாலே அது உங்களுக்குப் புரிந்து விடும்.  இப்படி வாழத் தகுதியற்ற நாடாக ஆனதற்குக் காரணமே இங்குள்ளவர்கள் இலக்கியம் படிக்காததுதான்.  நாம் என்ன மிருகமா?  மிருகங்கள்தானே தின்கின்றன; உறங்குகின்றன; இனப்பெருக்கம் செய்கின்றன.  சாகின்றன.  மனிதனும் அப்படி வாழ்ந்தால் அவன் மிருகம் என்கிறார் பர்த்ருஹரி.  மனிதப் பதர்கள் என்கிறார் பாரதி.  வேடிக்கை மனிதரைப் போலே என்ற கவிதை தெரியாத யாருமுண்டோ நம்மில்? 

தேடிச்சோறு நிதந் தின்று – பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக வுழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடி கிழப்பருவமெய்தி – கொடும்

கூற்றுக் கிரையென பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரை போலே – நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

”நிச்சயமாய், இந்த நிமிட அலைபாய்ச்சலை இலக்கியத்தால் வெளிப்படுத்திவிட முடியும் என்று நான் நம்பவில்லை. இலக்கியம், ஒட்டுமொத்த விளையாட்டும் முடிந்த பின்பே தனது கமென்ட்ரியை ஆரம்பிக்கிறது.”

இல்லை தர்மராஜ், விளையாடிக் கொண்டிருக்கும்போதே உருவாக்கப்படுவதுதான் இலக்கியம்.  மேலே கூறிய ஜான் ஆஃப் தெ க்ராஸ் ஒரு உதாரணம்.  ஜானைக் காப்பாற்றியது யேசுவின் மீதான நம்பிக்கை மட்டும் அல்ல.  கவிதையின் வழியேதான் அவர் வெளிச்சத்தைக் கண்டார்.  கவிதைதான் அவரது சுவாசம்.  அப்படிப்பட்ட சுவாசமாக இருப்பதுதான் இலக்கியம். 

நீங்கள் பேசுவது என் கடவுள்தான் கடவுள், நீ நம்பும் கடவுள் வீண் என்று சொல்லும் மதத் தீவிரவாதியின் பேச்சைப் போல் இருக்கிறது.  உங்களுக்கு இலக்கியம் உதவவில்லை.  அது நீங்கள் மட்டுமே விசாரித்துத் தீர வேண்டிய தனிப்பட்ட பிரச்சினை.  ஆனால் அதை நீங்கள் பொதுமைப்படுத்தும் போது எல்லோருடைய அனுபவங்களையும் காலால் உதறி அடிக்கிறீர்கள்.  சீலே போன்ற தென்னமெரிக்க நாடுகளில் – நம்மை விட வறுமையும் கல்வி அறிவின்மையும் நிலவும் நாடுகளில் – இன்னமும் அவர்களை மனிதர்களாக வைத்துக் கொண்டிருப்பது கலையும் இலக்கியமும்தான்.  இந்தியாவை விட வறுமையான சீலேவில் எந்த ஒரு பெண்ணும் நள்ளிரவில் நடமாட முடிகிறது.  குற்றங்களே இல்லை.  எல்லோருடைய கையிலும் அப்போதுதான் வெளிவந்த நாவல் கையில் இருக்கிறது.  அவர்களுக்கு ஸ்பானிஷ் தவிர வேறு எந்த மொழியும் ஒரு வார்த்தை தெரியவில்லை.  கல்வியின் தரம் மிக மிகக் கீழே கிடக்கிறது.  ஆனால் என் வழிகாட்டியின் கையில் Jose Donosoவின் நாவல் புத்தகம் புத்தம் புதிதாக இருந்தது.  இலக்கிய வாசிப்பு ஒன்றே அவர்களுக்கு வெளிச்சமாக இருக்கிறது.  இலக்கியம் ஒன்றே மானுடத்தைக் காப்பாற்றும்.  இலக்கியம் ஒன்றே நம் சக உயிர்களை நேசிக்கக் கற்பிக்கிறது.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடியது கவிஞனா, சாமியாரா?  இலக்கியம் ஒன்றே என் சக மனிதனையும், என் சக உயிர்களையும், இந்த பூமியையும், இந்த நிலவையும் நட்சத்திரங்களையும் இந்தப் பிரபஞ்சத்தையும் நேசிக்க எனக்குக் கற்பித்தது.   இந்த உண்மையை அறிந்து கொள்ளாதவர்களே தனிமையில் கிடந்து உழல்கிறார்கள்.  அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.  ஏனென்றால், அவர்கள் தங்கள் கண்களைத் தாங்களே கட்டிக் கொண்டு இருளில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.  கட்டை அவிழ்த்துக் கொண்டு சாளரத்தைத் திறப்பது மட்டுமே அவர்களுக்கான விடுதலை.  அந்த விடுதலை உங்கள் கையிலும் இல்லை; என் கையிலும் இல்லை.  அவர்களின் தளைகளை அவர்களேதான் அவிழ்த்துக் கொள்ள வேண்டும்.  அதையும் நான் சொல்லத்தான் செய்கிறேன்.  நகர்ந்து மூடா என்று என்னைத் திட்டி விட்டு மீண்டும் மீண்டும் இருளிலேயே உழல்கிறார்கள்.  அது இருள் அல்ல.  முழு வெளிச்சம்.  கண்களை மட்டுமே திறக்க வேண்டும்.  அவ்வளவுதான்.