பூச்சி – 14

இல்லை, இன்னமுமே பதில் சொல்லி முடித்து விட்டதாகத் தோன்ற மாட்டேன் என்கிறது.  ஏனென்றால், இலக்கியத்தினால் எந்தப் பயனும் இல்லை; ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு நான் நாற்பது ஆண்டுகளாக பதில் சொல்லிக்கொண்டு வந்தாலும் எனக்கு இன்னும் சரியான பதிலை சொல்லி விட்டதாகத் தோன்றவில்லை.  ஒரே வார்த்தையில் சொல்கிறேன்.  நேற்று நான் எழுதிய மூன்று கட்டுரைகளின் மொத்த வார்த்தைகள் 4267.   இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இன்னும் நாலாயிரம் வார்த்தைகளை எழுதியிருப்பேன்.  இத்தனை வார்த்தைகளை எந்தச் சூழ்நிலையில் எழுதுகிறேன்?  விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.  எடுபிடி வேலை, சமையல் வேலை, பாத்திரம் கழுவும் வேலை, பூனைக்கு இரண்டு வேளை சாப்பாடு போடும் வேலை (அரை மணி ப்ளஸ் அரை மணி – மொத்தம் ஒரு மணி நேரம்), வாக்கிங் ஒரு மணி நேரம், அப்புறம் குளியல் சாப்பாடு இத்யாதி.  பூனை சாப்பாட்டுக்கு ஏன் ஒரு மணி நேரம் என்றால் சாப்பாட்டை வைத்து விட்டு வந்து விட்டால் என்ன பசி இருந்தாலும் அவை ஓடி விடுகின்றன.  ஆள் பக்கத்தில் இருக்க வேண்டும்.  அப்போதுதான் பாதுகாப்பாக உணர்கின்றன.  மாலை நான்கு மணி ஆனால், ஐயோ இன்னும் ஐந்து மணி நேரம்தானே எழுத முடியும், சே என்னடா வாழ்க்கை என்று கவலைப்படுவேன்.  இப்படியே ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மணி பார்த்துப் பதற்றம்.  ம்…?  உங்களுக்கு நேரத்தை எப்படிப் போக்குவது என்று தெரியவில்லை?  ஒத்துக் கொள்கிறேன்.  எல்லோருக்கும் எழுத முடியாது.  சரி, நெட்ஃப்ளிக்ஸில் சீரீஸ் பார்க்க வேண்டியதுதானே?  எழுதியிருந்தேனே, தினம் எட்டு மணி நேரம் பார்த்தாலும்  உங்கள் வாழ்நாள் முழுவதும் பார்த்துத் தீர்க்க முடியாத அளவுக்கு வெப்சீரீஸ் இருக்கின்றன.  நீங்கள் பார்க்கப் பார்க்க வந்து கொண்டே இருக்கும்.  ஆனால் வெப்சீரீஸ் என்பது போதை மாத்திரை மாதிரி.  (கஞ்சா மாதிரி என்று சொல்ல மாட்டேன்.  அது உடம்புக்கு நல்லது.  அதற்கு அடிக்ட் ஆகிவிட்டால்தான் பிரச்சினை.)  Myth of Sisyphus கதையில் வரும் சிஸிஃபஸ் மன்னன் பாறையை உருட்டிக் கொண்டு போய் மலை உச்சியில் வைக்கிறான், உச்சிக்குப் போனதும் பாறை கீழே விழுகிறது, மீண்டும் பாறையை உச்சிக்கு உருட்டுகிறான் – இப்படியே அவன் வாழ்நாள் கழிந்து போகிறது.  அவன் ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கிறான்தான்; இல்லையென்று சொல்லவில்லை.  ஆனால் எத்தனை அபத்தமான வேலை.  அதே மாதிரிதான் நீங்கள் வெப்சீரீஸ் பார்ப்பதும்.  அதனால் உங்களுக்கு நேரம் போவதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை.  சும்மா மோட்டுவளையைப் பார்த்துப் பார்த்துப் பைத்தியம் பிடிப்பதற்கு இது பரவாயில்லை என்று நினைத்தால் பரவாயில்லைதான்.   

தமிழர்களுக்கு வாசிக்கும் பழக்கம் இல்லை என்பதால்தான் வெப்சீரீஸ் பற்றிச் சொன்னேன்.  சரி, வெப்சீரீஸும் அலுப்படிக்கிறது என்றால், உலக சினிமா பார்க்கலாம்.  என்னென்ன படங்கள் என்று ஒரு நூறு படங்களைப் பற்றி என் தளத்தில் எழுதியிருக்கிறேன்.  பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அமிர்தம்.  சரி, அதுவும் முடியவில்லை என்றால், நமீதா மாதிரி தெருப்பூனைகளுக்கும் நாய்களுக்கும் உணவு கொண்டு போய் கொடுக்கலாம்.  அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும்.  பாருங்கள், படிப்பு பற்றி நான் எழுதவே இல்லை.  காது கேளாதவர்களிடம் போய் நான் சங்கீதம் கேளுங்கள் என்று சொல்வேனா?  வேண்டாம், நீங்கள் படிக்கவே வேண்டாம்.  புத்தக விழாவில் ஜம்பத்துக்கு அள்ளிக் கொண்டு வந்திருக்கும் புத்தகங்களைப் படிக்கவே உங்களுக்குப் பத்து ஆண்டுகள் பிடிக்கும்.  அதையெல்லாம் எடுத்துக் கொஞ்சம் தூசியாவது தட்டி வைக்கலாம் இல்லையா?  அதற்கே ரெண்டு நாள் ஆகி விடுமே?  என்ன புத்தகம் படிக்கலாம் என்று நான் சொன்னேன் என்றால், என்னைப் போன்ற பெவகூஃப் வேறு எவனும் கிடையாது.  வேண்டாம், நீங்கள் படிக்காதீர்கள்.  தமிழனின் மரபணுவிலேயே இந்தக் கோளாறு இருப்பதாக எண்ணத் தொடங்கி விட்டேன்.  எழுத்தாளன் என்றால் வெறுக்கிறான்.  இலக்கியம் என்றால் எட்டிக்காய்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  ஒரு நண்பர் ராமாயணக் கதைகளை எழுதியிருந்தார்.  படித்தேன்.  மிக நல்ல புத்தகம்.  இன்னும் பிரசுரம் ஆகவில்லை.  இதை ஜெயமோகனைக் கொண்டு வெளியீட்டு விழா நடத்துங்கள்; நல்ல அறிமுகமாக இருக்கும் என்றேன்.  உடனே அங்கே அமர்ந்திருந்த ஒரு நண்பர் வேளுக்குடி கிருஷ்ணன் தான் அதற்கு சரியாக இருப்பார் என்றார்.  அதில் எனக்கும் ஆட்சேபணை இருக்கவில்லை.  வேளுக்குடி நல்ல சாய்ஸ்தான்.  ஆனால் நண்பர் அதோடு நிறுத்தாமல் வேறு ஒன்றும் சொன்னார்.  ”ஜெயமோகனையெல்லாம் அழைத்தால் அது நன்றாக இருக்காது.  (அதாவது நீங்கள் நினைக்கும் விளம்பரம் கிடைக்காது.)  அது அப்புறம் ஒங்க எழுத்தாளர் வட்டத்துக்குள்ளயே போய்டும்” என்றாரே பார்க்கலாம்.  மிரண்டு போய் விட்டேன்.  ஆக, எழுத்தாளர் என்றாலே அவன் சமூகத்திலிருந்து அந்நியமானவன்.  நாம்தான் ஜெ. வலதுசாரி, அது இது என்கிறோம்.  ஆனால் காமன்மேனைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்றாலே நக்ஸலைட்டுதான்.  அது ஜெயமோகனாக இருந்தாலும் சரி, சாருவாக இருந்தாலும் சரி.  என் கண்களைத் திறந்த ஒரு தருணம் அது.   

இந்த ஆண்டில் இனி ஒரு மணி நேரம் கூட வெப்சீரீஸ் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.  நான் முடிவு செய்தால் அதை எக்காரணம் கொண்டும் மீற மாட்டேன்.  முடிவெடுத்து விட்டு மீறும் பழக்கம் எனக்கு எப்போதுமே இல்லை.  இரண்டு முக்கியமான பணிகள் உள்ளன. அவற்றை முடிக்க வேண்டும்.  எப்படியும் டிசம்பர் ஆகும். 

இடையில் நேற்று தக்ஷிணாமூர்த்தி பூனை உணவுக்காக ஆயிரம் ரூபாய் அனுப்பி இருந்தார்.   முதலில் திருப்பி அனுப்பி விடலாமா என்று நினைத்தேன்.  கோபத்தினால் அல்ல; எனக்கு யார் மீதும் கோபம் வராது.  வந்தாலும் க்ஷண நேரம்தான்.  இந்தக் கொரோனா காலத்தில் அவருக்கு வேலை கிடைப்பதே அரிது.  அவர் தொழில் தச்சு.  யார் வீட்டுக்கு இப்போது தச்சு வேலைக்கு அழைப்பார்கள்?  உங்களுக்கு இந்தப் பஞ்ச காலத்தில் ஏது பணம் என்றேன்.  ரேஷன் கடையில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்; அந்தப் பணம் சார் என்றார்.  இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?  ”ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்குத்தான் அடுத்தவரின் கஷ்டம் தெரிகிறது; உதவி என்று செய்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினரோ கீழ்நடுத்தர வர்க்கத்தினரோதான்; பணக்காரர்களில் மிகச் சிலர்தான் உதவி செய்கிறார்கள்” சுதா மூர்த்தியின் Here, There and Everywhere என்ற புத்தகத்தில் ஒரு வாக்கியம் படித்தேன்.  அது உண்மைதான் என்பதை என் வாழ்வின் பல தருணங்களில் அனுபவம் கொண்டிருக்கிறேன்.   

என் எழுத்து இயக்கம் தேர் இழுப்பது போன்ற செயல்.   அவந்திகாவுக்குக் கிடைக்கும் பணம் ஏழைபாழைகளுக்குப் போய் விடும். ரேஷன் கடையில் அவளுக்கும் ஆயிரம் ரூபாய் கிடைத்து, உடனடியாக அது நான்கு பாகமாகப் பிரிந்து நான்கு வாட்ச்மேன்களுக்கும் போய் விட்டது.  பூனை உணவுக்கு ஆகுமேம்மா என்று சொல்ல வாயெடுத்து அடக்கிக் கொண்டேன்.  பணம் பற்றிப் பேசினாலே, “நீ ரொம்ப மாறிட்டே சாரு, முன்னேல்லாம் பணத்தைப் பத்தி கவலையே பட மாட்டே… இப்போல்லாம் பணத்துக்குக் கணக்குப் பார்க்கிறியே?” என்பாள்.  அதற்கு மூன்று காரணங்கள்.  முன்பு என்னைப் பணம் பற்றியே யோசிக்க விடாமல் என் லௌகீக வாழ்வை கவனித்துக் கொண்ட இரண்டு நண்பர்கள் மோடியின் பொருளாதாரக் கொள்கையால் வியாபாரம் கீழே இறங்கி தங்களின் தர்ம காரியங்களை நிறுத்தும்படி ஆகி விட்டது.  இரண்டாவது, 15 பூனைகளுக்குச் சாப்பாடு போட வேண்டிய பொறுப்பு.  மூன்றாவது, பயணத்துக்குப் பணம் வேண்டும்.  அவந்திகா சொல்வது உண்மைதான்.  முன்பெல்லாம் பணம் பற்றி நினைத்ததே இல்லை.  இப்போது நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து வீட்டுக்கு தினமும் நான் பைக்கில் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறேன் என்று நண்பர் பாக்யராஜ் சொன்னதும் சம்மதித்து விட்டேன்.  ஆட்டோ செலவு ஐம்பது ரூபாய் மிச்சமாகும்.  இப்படியெல்லாம் நான் இருந்ததே இல்லை.  மோடி போய் காங்கிரஸ் வந்தால் கொஞ்சம் பணத்தைப் பற்றி யோசிக்காமல் வாழலாம் என்று கனவு கண்டேன்.  ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகள் செய்வதைப் பார்த்தால் மீண்டும் மோடி ஆட்சிதான் போல் இருக்கிறது.  இவர்களின் மதவாதம் அதிகரிக்க அதிகரிக்க அது மோடியின் கரங்களை வலுப்படுத்துவதை இவர்கள் உணர மாட்டேன் என்கிறார்கள்.  இல்லாவிட்டால் பண நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இத்தனை பெரிய வெற்றியை மோடி அடைந்திருக்க முடியுமா?  சில இஸ்லாமிய அமைப்புகளின் நடவடிக்கைகள் தேசம் பூராவிலும் வசிக்கும் இந்துக்களை ஒன்றிணைக்கிறது.  நான் சொல்வது புரிகிறதா?  சாதாரண நிலையில் இருந்த இந்துக்கள் கூட தப்லிக் ஜமாத் போன்ற அமைப்புகளின் காரணமாக ஒன்றிணைகிறார்கள்.  இதன் மூலம் மோடி பலனடைகிறார்.  இந்த கொரோனா நோய்ப் பரவலையும் இதைத் தொடர்ந்த தனிமைப்படுத்தலையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாத மோடியின் நடவடிக்கைகள், இதற்கு முன்பான அவரது மிக மோசமான பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக இந்தியா இதுவரை கண்டிராத பொருளாதார வீழ்ச்சியை, பொருளாதார நசிவை அனுபவிக்கப் போகிறது.  இது விளிம்புநிலை மக்களையும் கீழ்நடுத்தர, நடுத்தர வர்க்கத்தினரையும் மிகக் கடுமையாக பாதிக்கப் போகிறது.  கொரோனாவினால் ஏற்படும் மரணம் இந்திய அளவில் ஆயிரங்களில்தான் இருக்கும்.  ஏனென்றால், இந்தியர்கள் தெருநாயை ஒத்தவர்கள்; மேற்கத்தியர் வீட்டுநாயை ஒத்தவர்கள்.  தெருநாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.  வீட்டு நாய் வெளி உணவைச் சாப்பிட்டால் ஒரே வேளையில் செத்து விடும்.  யோசித்துப் பாருங்கள், அமெரிக்காவிலிருந்தோ வேறு எந்த மேற்கத்திய நாடுகளிலிருந்தோ இந்தியாவுக்கு வரும் இந்தியரோ, அந்த நாட்டுக்காரர்களோ இங்கே வந்து இறங்கிய மறுநாளே காய்ச்சலில் படுத்து விடுவார்கள். அமெரிக்காவில் வசிக்கும் என்னுடைய நூற்றுக்கணக்கான நண்பர்களை முப்பது ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  குடும்பத்தோடு வருவார்கள்.  வந்த அடுத்த நாள் அவர்களின் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போய் விடும்.  பதினைந்து நாள் விடுப்பும் உடம்பை சரி பண்ணுவதிலேயே போய் விடும்.  நாங்கள் தெருநாய்கள்.  என்ன சாப்பிட்டாலும் என்ன குடித்தாலும் தாங்கும்.  உங்களுக்கு அப்படி அல்ல.  நாங்கள் ரெண்டுக்குப் போனால் மட்டுமே கை கழுவுவோம்.  எனக்கெல்லாம் கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை ஸானிடைஸர் என்றால் என்னவென்றே தெரியாது.  ஆனால் மேற்கத்தியர் படு சுத்தம்.  இங்கே நாங்கள் சுவாசிக்கும் விஷக் காற்றையும் விஷத் தண்ணீரையும் விஷ மதுவையும் அனுபவித்தால் அடுத்த நாளே காய்ச்சலில் படுத்து விடுவார்கள்.  நமக்கு இதெல்லாம் immune ஆகி விட்டது.  எனவே இந்தக் காரணத்தினால் இந்தியர்களுக்கு அத்தனை பாதிப்பு இராது.  ஒரு அமெரிக்க-இந்திய விஞ்ஞானி சொன்னார், இந்தியாவில் அறுபது கோடி பேருக்கு கொரோனா தொற்றும்; இரண்டு கோடி பேர் மரணம் அடைவார்கள் என்று.  அதெல்லாம் ஒன்றும் நடக்காது.  அதெல்லாம் மேற்கத்திய கணக்கு; மேற்கத்திய மூளை.  இங்கே உள்ளவர்கள் மந்திரித்தே பாம்புக் கடி விஷத்தை இறக்கியவர்கள்.  இங்கே உள்ள வாழ்வியலே வேறு.  அதை மேற்கத்தியர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.  சரி, மோட்டார் சைக்கிள் என்ற சாதனம் கண்டுபிடித்த காலத்திலிருந்து இன்று வரை ஹெல்மெட் போடாமலேயே தமிழ்நாடு என்ற மாநிலத்தவர் வாழ்கின்றனரே, இப்படி வாழ்ந்தால் இந்த எட்டு கோடியில் ரெண்டு கோடி பேர் போய்ச் சேர்ந்திருக்க வேண்டுமே?  நான்கு குழந்தைகளையும் ஒரு குண்டு மனைவியையும் வைத்துக் கொண்டு கணவன் மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறான், இதை விடவா ஒரு உலக அதிசயம் இருக்கிறது?  இருக்கிறது.  அதுவும் மோட்டார் பைக் விஷயம்தான்.  பைக்கிலோ ஸ்கூட்டரிலோ ஆறு மாதக் குழந்தை மூணு மாதக் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பெண்கள் பைக்கின் ஒரு பக்கத்திலேயே இரண்டு கால்களையும் வைத்துக் கொண்டு செல்கிறார்களே, உலக அதிசயம் என்பதெல்லாம் சாதாரண வார்த்தை.  இந்த அதிசயம் எப்படி ஐயா சாத்தியம்?  மேல்நாடுகளில் காரின் முன்பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக்கொள்ளக் கூடாது.  இன்னும் ஏகப்பட்ட கெடுபிடிகள்.  நீங்களெல்லாம் இங்கே நடக்கும் பைக் வித்தைகளை நேரில் பார்க்க வேண்டும்.  இதையே சாதிப்பவர்களுக்குக் கொரோனா எல்லாம் சும்மா.  மேலும், இந்தியர்களிடம் இடைவெளி என்பதே சாத்தியம் இல்லை.  அவர்களின் வாழ்க்கையிலேயே அது இல்லை.  ஒரு நகரத்துப் பெண் – எனக்குத் தெரிந்தவர் – தன்னுடைய ஒரே ஒரு பெண் குழந்தையுடன் கிராமத்துக்குப் போனார்.  பஸ்ஸில் ஒரு மூதாட்டி இந்த நகரத்துப் பெண்ணிடம் எல்லோரும் கேட்கிறாற்போல் “ஒரு பொண்ணா தாயி?” என்று கேட்க, ஆமாம் என்று நகரம் பதில் சொல்கிறது.  மூதாட்டி உடனே, ஒரே ஒரு பொண்ணுதானா என்று கேட்க நகரம் மீண்டும் ஆமாம் சொல்கிறது.  ஏம் பொண்ணு, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கிட்டியா என்று கேட்டதாம் அந்த மூதாட்டி.  இப்படிப்பட்டவர்களிடம் போய் நீ தூர உட்கார் என்று சொன்னால் அடச்சீ போ நாயே என்றுதான் திட்டுவார்கள்.   

மோடியின் ஜாலி ஆட்சியாலும் நடப்பு கொரோனா வைரஸாலும் ஏற்படப் போகும் பொருளாதார சீர்குலைவினால் பல்லாயிரக் கணக்கான பேர் உயிரிழக்கவும் பிச்சைக்காரர்களாகவும் ஆக நேரிடும்.  இந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இத்தனை சீர்கேடுகள் நடந்திருக்காது.  எனவே ஒருவகையில் “நீங்கள்தானே இந்த நபரைத் தேர்ந்தெடுத்தீர்கள், அனுபவியுங்கள்” என்றும் எனக்கு குரூரமாகத் தோன்றுகிறது.  காங்கிரஸை நான் பிஜேபியை விடவும் அதிகம் வெறுப்பவன் என்றாலும் இப்போது காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் பொருளாதாரம் இந்த அளவு வீழ்ச்சி அடைந்திருக்காது.  குறைந்த பட்சம் அதிகாரிகளின் ஆட்சியாவது நடந்திருக்கும்.  இப்போது நடப்பது கொள்கைவாதிகளின் ஆட்சி.  அது என்ன கொள்கை என்று பார்த்தால் சுத்த மதவாதம்.  உருப்படுமா தேசம்?  ராகுல் மக்குதான்.  மோடி அளவு புத்திசாலி இல்லைதான்.  ஆனால் கொரோனா காலகட்டத்திலும் அதை அடுத்து வரும் காலகட்டத்திலும் தேசம் இந்த அளவு படுபாதாளத்தை நோக்கிப் போயிருக்காது.  ராகுலுக்குப் பொருளாதாரத்தில் அட்சரம் கூடத் தெரியாமல் இருந்தாலும் அவரைச் சுற்றி பல பொருளாதார நிபுணர்கள் இருந்திருப்பார்கள்.  இப்போதுபோல் எதுவுமே தெரியாத அகல்விளக்கு தேசபக்திக் கும்பல் இருந்திருக்காது.

இந்த அகல்விளக்கு விஷயமாகவும் எனக்கு சொல்ல இருக்கிறது.  விளக்கு ஏற்றுவது இந்தியப் பாரம்பரியம்.  ஒளி நம்முடைய மனநோயை, மனச் சிதைவை, மன உளைச்சலைப் போக்கக் கூடியது.  கடவுளுக்கு அதனால்தான் தீபாராதனை காட்டுகிறார்கள்.  அது மக்களின் moraleஐ வலுப்படுத்துவதில் உதவி செய்யும்.  ஆனால் மோடி அதை மட்டும்தானே சொல்கிறார்?  இந்த கொரோனாவை எப்படிக் கடப்பது?  என்னென்ன திட்டங்கள்?  என்னென்ன நிவாரணங்கள்?  போயும் போயும் WWF குத்துச்சண்டைக் களத்தில் ரவுடிகளோடு ரவுடியாக நின்று கொண்டு விசிலடித்துக் கொண்டிருந்த ட்ரம்ப் கூட கொரோனா எதிர்ப்பில் மோடியை விட பரவாயில்லை என்பது போல் செயல்படுகிறார்.  இந்தக் காரணத்தினால்தான் மோடி கிண்டல் செய்யப்படுகிறார்.  ஆனால் எத்தனை பேர் கிண்டல் செய்தாலும் மோடிக்கு வெற்றிதான்.  ஏனென்றால், கொரோனாவோ என்னவோ, அவர் விளக்கை வைத்து அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.  அவர் சொன்னவுடன் எல்லோரும் தீப்பந்தத்தை ஏந்தி வெடி வெடிக்கிறார்கள் பாருங்கள்.  ஃபாஸிஸ்டுகளின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.  இதற்கு மிகப் பெரிய பலத்தைத் தாங்கள் அறியாமலேயே கொடுப்பது இஸ்லாமிய அமைப்புகள்.   

மீண்டும் அவந்திகாவின் தானதர்மத்துக்கு வருவோம்.  இம்மாதிரி தனிப்பட்ட தானதர்மத்தில் – அதாவது, ரேஷன் கடையில் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை வாட்ச்மேன்களுக்குப் பிரித்துக் கொடுப்பது, பணிப்பெண்ணுக்கு 3000 ரூபாயில் சுடிதார் எடுத்துக் கொடுப்பது இத்யாதி –  இது போன்ற காரியங்களில் எனக்குக் கொஞ்சமும் மரியாதை இல்லை; நம்பிக்கையும் இல்லை.  ஏன் என்றால், நாம் யாருக்குக் கொடுக்கிறோமோ அவர்கள் மற்றவரைச் சுரண்டுவார்கள்.  உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், Viridiana என்ற படத்தைப் பாருங்கள்.  அதுதான் ஏழைகளின் உளவியல்.  1961-இல் லூயிஸ் புனுவேல் எடுத்த படம்.  எல்லோரும் அப்படி என்று சொல்லவில்லை.  சுதா மூர்த்தியெல்லாம் எத்தனையோ ஏழைகளுக்கு உதவி செய்கிறார்; படிக்க வைக்கிறார்.  ஆனால் அவந்திகாவிடம் உதவி பெறுபவர்களை அப்படி நான் பார்க்கவில்லை.  இந்தக் கையால் உதவி பெற்றுக் கொண்டு அடுத்த கையால் அடுத்தவரைச் சுரண்டுகிறார்கள்.  நாம் செய்யும் உதவியை அவர்கள் உதவியாக நினைப்பதில்லை.  நீ ஒரு ஏமாளி என்றே நம்மைப் பற்றி நினைக்கிறார்கள்.  ஒரு பெண்மணி தன் வீட்டுப் பணிப்பெண்ணின் மகளுக்குக் கல்லூரிக் கட்டணம் கட்டினார்.  25000 ரூபாய்.  ஆனால் அந்தப் பணிப்பெண்ணுக்கு தன் வீட்டு முதலாளியம்மாள் தீபாவளிக்குத் தனக்குப் புடவை வாங்கித் தரவில்லையே என்று குறை.  வாயை விட்டே சொன்னாராம் பணிப்பெண். 

ஆனால் எனக்குக் கிடைக்கும் பணத்தை நான் இப்படியான காரியங்களில் செலவழிப்பதில்லை. நேரடியாக பூனைகளுக்கும் காகங்களுக்கும் உணவாக மாறுகிறது.  விலங்குகள் மனிதர்களைப் போல் ஏமாற்றுப் பேர்வழிகள் அல்ல.  நன்றியோடு எல்லாம் இருக்க வேண்டாம்.  கிரிமினலாக இல்லாமல் இருந்தால் போதும்.  நான் உங்களிடம் சொன்னேன்,  என் எழுத்தையும் இது போன்ற என்னுடைய ”மனித விரோத” கருத்துக்களையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் தயவுசெய்து The Platform என்ற படத்தைப் பாருங்கள் என்று.  ஒருத்தர் கூடப் பார்க்கவில்லை.  சென்ற ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் படம்.  நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.  சரி, நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்பதால் கதையைச் சொல்லி விடுகிறேன்.

ஒரு சிறைச்சாலை.  ஆனால் அதன் அமைப்பு நாம் இதுவரை பார்த்த சிறை மாதிரி இருக்காது.  இது சயன்ஸ் ஃபிக்‌ஷன் கதை.  சிறைச்சாலை என்றால், நீள அகலத்தில்தானே இருக்கும்?  அல்லது, பாதாளச் சிறை பூமிக்கு அடியில் இருக்கும்.  ஆனால் இந்தச் சிறை கீழிருந்து மேலே.  செங்குத்தாக இருக்கும்.  நடுவில் ஒரு திறப்பு.  அந்தத் திறப்பின் வழியே மேலேயிருந்து கீழே ஒவ்வொரு அடுக்காக உணவுப் பொருட்கள் வரும்.  சுமார் 100 அடுக்குகள் என்று வைத்துக் கொள்வோம்.  (ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன்) ஒவ்வொரு அடுக்கிலும் இரண்டு இரண்டு பேர்.  ஆக மொத்தம் 200 கைதிகள்.  மேலே உள்ள நூறாவது அடுக்கில் சாப்பாட்டு மேஜை வரும்போது அதில் மாமன்னர்கள் சாப்பிடுவது போன்ற உணவுப் பதார்த்தங்கள் நிறைந்திருக்கும்.  200 பேருக்கும் அந்த உணவு தாராளமாகப் போதும்.  மீதி கூட இருக்கும்.  பெரிய பெரிய ஜார்களில் பழரசம், ஐஸ்க்ரீம், பழங்கள் எல்லாமே இருக்கும்.  ஆனால் ஒரு நிபந்தனை என்னவென்றால், பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி அதில் எதையும் எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது.  வைத்துக் கொண்டால் உங்கள் அறையில் மைனஸ் முப்பது நாற்பது என்று குளிர் அடிக்கும்.  குளிரில் விறைத்து மரணம் சம்பவிக்கும்.  எனவே யாராவது அப்படி எடுத்தாலும் குளிர் வந்ததும் எடுத்த பொருளைத் தூக்கிப் போட்டு விடுவார்கள். 

இப்போது சொல்லுங்கள்.  என்ன நடக்கும்?  பத்து கோடி பேரில் ஒரே ஒரு யேசு.  பத்து கோடி பேரில் ஒரே ஒரு காந்தி.  மற்றவர்கள்?  ஒரு சம்பவம் சொல்கிறேன்.  ஒருநாள் லாக் டவுன் அறிவித்த அன்று காலை, மருந்து வாங்குவதற்காக பக்கத்தில் உள்ள அப்பல்லோ மெடிக்கல்ஸ் போயிருந்தேன்.  ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஏழெட்டு ஸானிட்டரி நாப்கின்ஸ் பண்டல்களைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து பில் போட்டார்.  எனக்கு இதில் ஜென்ரல் நாலட்ஜ் ரொம்பக் கம்மி.  ஒரு பண்டலில் எத்தனை பாக்கெட்டுகள் இருக்கும்?  ஒரு பண்டல் ஒரு பெண்ணுக்கு எத்தனை மாதம் வரும்?  நான் இதில் பூஜ்யம்.  ஆனாலும் ஆச்சரியமாக இருந்தது.  அவர் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு போய் விட்டார்.  எனக்கு மருந்துகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது இன்னொரு பெண் வந்தார்.  ஸானிட்டரி நாப்கின் கேட்டார்.  அப்போது கடையிலிருந்த பெண் நக்கலாகச் சிரித்தபடி, ”இப்பதாம்மா ஒரு லேடி வந்து ரேக்கையே காலி பண்ணிட்டுப் போனாங்க, ஸ்டாக் தீர்ந்துடுச்சு”  என்றார்.  சீனி சொன்னார், அவர் ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோருக்குப் போனாராம்.  அங்கே எல்லா பொருட்களும் இருந்திருக்கிறது.  ஆனால் சிறுபிள்ளைகள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் எதுவுமே இல்லாமல் அந்த அடுக்குகளே காலியாக இருந்ததாம்.  அடப்பாவிகளா, வெறும் முறுக்கும் தட்டையுமாகவே காலி பண்ண ஆரம்பித்து விட்டீர்களா? 

சரி, நாம் ப்ளாட்ஃபார்முக்கு வருவோம்.  நூறாவது அடுக்கில் உள்ள இரண்டு பேரும் கன்னா பின்னா என்று சாப்பிட்டு விட்டு மீதியில் எச்சிலைத் துப்பி விடுவார்கள்.  ஒவ்வொரு அடுக்கிலும் சாப்பாட்டு மேஜை குறிப்பிட்ட நேரம் நிற்கும்.  பிறகு கீழே உள்ள அடுத்த அடுக்குக்குப் போய் விடும்.  அடுத்த அடுக்கில் உள்ளவன் அந்த எச்சிலைப் பார்ப்பான்.  அந்த இடத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற பாகங்களில் உள்ளதைச் சாப்பிட்டு விட்டு ஒன்றுக்கு அடிப்பான்.  ஆறு அடுக்கு வரைதான் சாப்பிடக் கிடைக்கும்.  அதற்கு மேல் வெறும் சாக்கடைதான்.  இருபது அடுக்குக்கு மேல் குப்பைத் தொட்டியிலிருந்து நாய்கள் சாப்பிடுமே அப்படித்தான்.  இந்தப் படத்தை பலராலும் பார்க்க முடியவில்லை என்றார்கள்.  (நமக்கெல்லாம் இது ஜுஜுபி.)  ஐம்பது அடுக்குக்கு மேல் குப்பையும் இருக்காது.  எழுபது அடுக்குக்கு மேல் காலிப் பாத்திரங்கள், மலம் மூத்திரம்.  எழுபது அடுக்குக்கு மேல் உள்ளவர்கள் தன் சக கைதியையே அடித்துத் தின்பார்கள்.  இந்த நரகத்தில் வந்து மாட்டிக் கொள்வான் ஒருவன்.  அவன் யார் என்றால், மேலே சொன்னேன் இல்லையா, கோடியில் ஒருத்தன், அவன்.  அவனைக் கட்டிப் போடும் சகா உன் உடம்பைப் புசிக்கப் போகிறேன், எங்கிருந்து ஆரம்பிக்கட்டும் என்று கேட்கிறான்.  ஆனால் படம் த்ரில்லர்.  இந்தச் சூழ்நிலையிலிருந்து அந்த ஆள் எப்படித் தப்பிக்கிறான்?  வழியே இல்லை அல்லவா?  ஒரே ஒரு வழி இருக்கிறது.  சாப்பாட்டு மேஜை மேலேயிருந்து கீழே வருகிறது அல்லவா?  அந்த மேஜையில் அமர்ந்து கீழே வரும் ஒரு பெண் அந்தக் கொலைகாரனைக் கொன்று விடுகிறாள்.  இடையில் பல ருசிகரமான சம்பவங்களெல்லாம் நடந்தேறுகின்றன.  மேலே உள்ள ஒருவன் கீழே உள்ளவனிடம் நீ மேலே வருகிறாயா என்று கேட்கிறான்.  ஏனென்றால் கீழே உள்ளவனிடம் நீண்ட கயிறு இருக்கிறது.  (சொல்ல மறந்து விட்டேன், கைதிகள் தாங்கள் விருப்பப்பட்ட ஏதேனும் ஒரு பொருளை தாங்களுடன் சிறைக்கு எடுத்துச் செல்லலாம்.  அதன்படி அந்தக் கைதி ஒரு கயிறை எடுத்துப் போயிருப்பான்.  மற்ற கைதிகள் பெரும்பாலும் கத்தியை எடுத்துக் கொண்டிருப்பார்கள்.  நம் ஆள் மெழுகுவர்த்தி வைத்திருப்பார்.)  கயிற்றின் மூலம் ஏறி மேல் தளத்தைத் தொடும்போது மேலே அவனை அழைத்தவன் கயிற்றில் வந்து கொண்டிருப்பவன் முகத்தில் மலம் கழிப்பான்.  கயிற்றுக்காரன் கீழே விழுந்து நல்லவேளையாக துளையின் மூலம் அதலபாதாளத்துக்குப் போய் விடாமல் அடுத்த அடுக்கிலேயே விழுந்து உயிர் பிழைப்பான்.  மேலே மலம் கழித்தவன் வெள்ளைத்தோல்காரன்.  கயிற்றுக்காரன் கறுப்பன். 

இதை நீங்கள் மேலைநாடுகள், மூன்றாம் உலக நாடுகள் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.  90இலிருந்து 100ஆவது அடுக்கு வரை மேலைநாடுகள்.  30ஆவது அடுக்குக்குக் கீழே உள்ளவை ஆஃப்ரிக்க நாடுகள்.  முப்பதிலிருந்து தொண்ணூறு இந்தியா போன்ற நாடுகள்.  ஆனால் அது இருக்கட்டும், மனித இயல்பு என்ன என்பதற்காக இந்தப் படத்தைக் குறிப்பிட்டேன்.  இலக்கியம் படிக்காவிட்டால் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.  அந்த 300 பேரில் (கடைசியில்தான் தெரியும், அந்தச் சிறையில் 150 அடுக்குகள் உள்ளன என்று) ஒரே ஒருத்தன்தான் என் எழுத்துக்கான நம்பிக்கை ஒளி.  அந்த மெழுகுவர்த்திக்காரனுக்காகத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நீங்கள்தான் அந்த மெழுகுவர்த்திக்காரன்.  இந்த உலகில் யாரொருவர் இலக்கியம் வாசிக்கிறார்களோ அவரெல்லாம் அந்த மெழுகுவர்த்திக்காரனை ஒத்தவர்கள்தான்.  தமிழ்நாட்டின் எட்டுக் கோடி பேரில் உங்களின் விகிதாச்சாரம் எத்தனை இருக்கும்? 

ஆனால் மனித இயல்பு எப்படி இருக்கிறது பாருங்கள்.  300 பேருக்கான உணவை பத்தே பேர் சாப்பிட்டு விட்டு மீதி 290 பேரை மிருகமாக மாற்றுகிறார்கள் அந்தப் பத்து பேர். ஒட்டு மொத்த மனித இனமே எனக்குப் பிடிக்கவில்லை; எனக்குப் பிடித்ததெல்லாம் விலங்குகளே என்று நான் ஏன் சொல்கிறேன் தெரிகிறதா?  அந்தச் சிறையில் வேறொரு விதி இருக்கிறது.  திடீர் திடீரென்று உங்களுடைய இடம் மாறும்.  உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயக்கம் தெளிந்ததும் 99-ஆவது அடுக்கில் இருந்த நீங்கள் மூன்றாவது அடுக்குக்கு வருவீர்கள்.  அங்கே உள்ளவன் உங்களை அடித்துத் தின்ன கத்தியோடும் கொலைப்பசியோடும் காத்திருப்பான்.  ஏனென்றால், ஆள் கிடைக்காத போது சிலர் தங்கள் கை விரல்களையே வெட்டித் தின்பார்கள்.  99-ஆவது அடுக்குக்காரன் மூன்றாவது அடுக்குக்கு வரும்போது மூன்றாவது அடுக்குக்காரன் 99-ஆவது அடுக்குக்குப் போவான் இல்லையா?  அவன் அங்கே போனதும் சாப்பிட்டு விட்டு மீதி உணவில் மூத்திரம் போவான்.  இதைத்தான் இந்த உலகின் மனித இயல்பு என்கிறேன்.  இதைத்தான் Viridiana படத்தில் லூயிஸ் புனுவேல் சொல்கிறார்.  அதனால்தான் தில்லி நிர்பயா ரேப் நடந்த பஸ்ஸில் இருந்த ஐந்து பேருக்குப் பதிலாக வேறு நபர்கள் இருந்தாலும் அதேதான் நடந்திருக்கும் என்றேன்.  வேறு நபர்கள் என்றால் நீங்களோ நானோ அல்ல; நிர்பயாவை குதறித் தள்ளிய அந்த ஐந்து பேரும் எப்படி எந்தச் சூழலில் வளர்ந்தார்களோ அதே சூழலில் நீங்களும் நானும் வளர்ந்திருந்தால் நீங்களும் நானுமே அப்படித்தான் இருந்திருப்போம்.  இல்லை, ப்ளாட்ஃபார்ம் படத்தில் வரும் மெழுகுவர்த்திக்காரன் மாதிரிதான் இருப்பேன் என நீங்கள் நம்பினால் உங்களால்தான் இந்த உலகம் பிரபஞ்ச இயக்கத்தில் அடித்துக் கொண்டு போய் விடாமல் நிலையாகத் தொங்குகிறது.   

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai