பூச்சி – 15

மோடி மஸ்தான் வேலை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே?  அது ஒரு எழுத்தாளனையும் பாதித்து விட்டது.  இல்லாவிட்டால் பாருங்களேன், ப்ளாட்ஃபார்ம் படத்தில் வரும் நாயகன் கையில் வைத்திருப்பது ஒரு நாவல்.  அதுவும் எப்படிப்பட்ட நாவல், அதைப் போன்ற புகழ்பெற்ற ஒரு நாவல் உலகிலேயே இலை.  செர்வாந்தேஸ் எழுதிய தோன் கெஹோத்தே (Don Quixote).  அதைப் போய் மறந்து விட்டு, அவன் கையில் வைத்திருந்தது மெழுகுவர்த்தி என்று எழுதியிருக்கிறேன்.  மோடி வித்தையின் பலம் புரிகிறதா?  இதைத்தான் மஸ்தான் சாதிக்க நினைக்கிறார்.  சாதித்தும் விட்டார்.  மேலே நம் வேலையை கவனிப்போம். 

சென்ற அத்தியாயத்தில் ”இலக்கியத்தினால் எந்தப் பயனும் இல்லை; ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு நான் நாற்பது ஆண்டுகளாக பதில் சொல்லிக்கொண்டு வந்தாலும் எனக்கு இன்னும் சரியான பதிலை சொல்லி விட்டதாகத் தோன்றவில்லை.  ஒரே வார்த்தையில் சொல்கிறேன்” என்று நேற்று சவடலாக எழுதி விட்டு இப்போது படித்துப் பார்த்தால் அந்த ஒரே வார்த்தையைக் காணோம்.  அந்த ஒரே வார்த்தை ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.  வாசிப்பினால் காலத்தையும் (Time) இடத்தையும் (Space) கடக்கலாம்.  தனிமையில் நீங்கள் வாழ நேர்ந்திருப்பதால் நீங்கள் அனைவரும் சிரமப்படுகிறீர்கள்.  இத்தனைக்கும் குடும்பத்தினரெல்லாம் கூடவேதான் இருக்கிறார்கள்.  ஆனாலும் தனிமைதான்.  இங்கே இதுகாறும் நீங்கள் எதிர்கொண்டிராத இரண்டு பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  மேலே குறிப்பிட்டவைதான்.  காலமும் இடமும்.  நேரத்தை என்ன செய்வது?  உங்களுக்குத் தெரியவில்லை.  இதுவரை நேரம் இப்படி நமக்குப் பிரச்சினை கொடுத்ததில்லை.  ஏனென்றால், நாம் ஓடிக் கொண்டே இருந்தோம்.  நாற்பது ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.  ஐம்பது ஆண்டுகளாக… அறுபது ஆண்டுகளாக… ஓட்டம் ஓட்டம் ஓட்டம்.  இப்போதுதான் நின்றிருக்கிறோம்.  நிற்க வைக்கப்பட்டிருக்கிறோம்.  நிறுத்தியிருப்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு பூச்சி.  அந்தப் பூச்சியோடு சம்பந்தம் வைத்துக் கொண்டால் நாம் இல்லை.  நம் முன்னே இப்போது இருக்கும் இரண்டு பூதங்கள்.  காலம் மற்றும் பூச்சி. காலம் கொடுக்கும் சவாலை எதிர்கொள்ளலாம் என்றால் நமக்கு இதுவரை இருந்த ஒரே வழி, இடம்.  இருக்கின்ற இடத்திலிருந்து வேறு இடம் போவது.  அலுவலகம், நண்பர்களின் அறை, உணவுக் கூடம், கேளிக்கைக் கூடங்கள், தோழி/தோழனின் இருப்பிடங்கள், மதுக் கூடங்கள்… இப்படி எண்ணற்ற இடங்கள் நமக்கு காலத்தின் தாக்குதலிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருந்தன.  இப்போது கொரோனா பூச்சி அந்த இடங்களை நம்மிடமிருந்து விலக்கி வைத்து விட்டது.  காலமும் நாமும்தான் எதிரெதிரே நிற்கிறோம்.  நம் வாழ்வில் முதல் முறையாக நடந்திருப்பது இந்தச் சந்திப்பு.  இப்போது காலத்தை வெல்ல நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் புத்தகங்கள் என்கிறேன் நான்.  எந்த இடத்தில் என்னைக் கொண்டுபோய் விட்டாலும் என் கையில் புத்தகமோ அல்லது என் கைபேசியோ இருந்தால் சாகும் வரை என்னால் வாசித்துக் கொண்டே வாழ்ந்து முடித்து விட முடியும்.  என் அலைபேசியில் முன்னூறு ஆண்டுகள் படித்தாலும் தீர்த்து விட முடியாத ஒரு மாபெரும் நூலகம் உள்ளது.  அது ஒன்றே போதும்.  அதனால்தான் தனிமை கொல்கிறது, நேரம் போக மாட்டேன் என்கிறது என்று சொல்லும் அன்பர்களைப் பார்த்து மிகவும் பரிதாபப்படுகிறேன்.  கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறார்களே என்று வருத்தமாக இருக்கிறது. 

நேற்று எனக்கு வந்த ஒரு கடிதம் இது:

அன்புள்ள சாரு அவர்களுக்கு,

என்னுடைய பெயர் மா.பொன்ராஜ். வயது 24. உங்களுடைய எழுத்தின் மிகத் தீவிரமான வாசகன். தற்பொழுது நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தில் பதிவேற்றிக் கொண்டிருக்கும் பூச்சி என்ற தலைப்பிலான அனைத்துக் கட்டுரைகளும் அற்புதம். உங்களுடைய அனைத்து நாவல்களையும் இரு முறை வாசித்துள்ளேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அதிலிருந்து புதுப்புது அனுபவங்கள் கிடைக்கின்றன. என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் எனும் கிராமம். இப்பொழுது சென்னையில்தான் வேலை செய்கிறேன்.  நான் 144 தடை அன்றிலிருந்தே என்னுடைய சொந்த ஊருக்குச் செல்லாமல் இங்கு சென்னையில்தான் தனியாக என்னுடைய அறையில் இருக்கிறேன். என்னுடைய சக அறை வாசிகள் அனைவரும் அவர்களுடைய சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.எனக்கு மற்றவர்கள் சொல்கிற மாதிரி நேரம் போகவில்லை என்று சொல்ல முடியவில்லை. ஏனெனில், என்னிடம் நீங்கள் அறிமுகப்படுத்திய தமிழ் இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் சுமார் 100 உள்ளன. தினமும் புத்தகப் படிப்பும் மற்றும் நீங்கள் அறிமுகப்படுத்தின நெட் ஃபிளிக்ஸ் சீரிஸ் பார்ப்பதால் நேரம் போவதே தெரியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு நேரம் போதவில்லை. உங்களுடைய எழுத்து மட்டும் எனக்கு அறிமுகப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் எனக்குத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. இதற்கு நான் கடவுளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். நான் தினமும் தனிமையை அறியாமல் இருப்பதற்கு உங்களுயை எழுத்து மற்றும் நீங்கள் அறிமுகப்படுத்தின இலக்கியம் மட்டுமே காரணம். உங்களால் வீட்டு வேலைகள், பூனைகளுக்கு உணவிடுதல் போன்றவற்றால் அதிக நேரம் எழுத முடியவில்லை என்று அடிக்கடி தங்களுடைய வலைத்தளத்தில் பதிவு செய்கிறீர்கள். எனக்கு மட்டும் என் தாய், தந்தை மற்றும் என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இல்லாமல் இருந்திருந்தால்  நான் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களுடைய தேவைகளெல்லாம் பூர்த்தி செய்யும் ஒரு வேலைக்காரனாக உங்களுடனேயே இருப்பதற்கு ஆசையாக உள்ளது. இதை நான் உணர்ச்சிவசத்தால் எழுதவில்லை. ஆகச் சிறந்த எழுத்தாளன் கூடவே இருப்பதற்கு எத்தனை பேருக்குக் கொடுத்து வைத்திருக்கும்?  அது ஒரு வரம். எனக்கு உங்களை நேரில் சந்தித்து நீங்கள் பேசுவதைக் கேட்பதற்கு மிகுந்த ஆசை. நீண்ட காலம் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதற்கு நான் கடவுளிடம் தினமும் பிரார்த்திப்பேன். நன்றி.

இப்படிக்கு உங்களுடைய வாசகன்.

மா.பொன்ராஜ்

ஏன் இலக்கியம்?  இலக்கியம் என்ன செய்யும்?  இதுதான் பலன்.  புத்தகங்கள் இருந்தால் காலமும் இடமும் நம் ஏவலாட்கள்.  பொன்ராஜ், வேலையெல்லாம் செய்ய வேண்டாம்.  இந்தக் கொரோனா பொரோனா எல்லாம் போன பிறகு நாம் ஒருநாள் காஃபி ஷாப்பில் சந்திப்போம்.  வீட்டில் வேண்டாம்.  வீட்டில் சந்தித்தால் முதல் சந்திப்பிலேயே நட்பு முறிந்து விடும்.  நிச்சயம் வெளியில் சந்திப்போம்.  மற்றபடி வீட்டுக்கு அருகிலேயே கூடித் தேரிழுக்க நண்பர்கள் இருக்கின்றனர்.  இன்று நம் வீட்டுப் பூனைகள் ஐந்துக்கும் மீன் தீர்ந்து விட்டது.  ஏன் நேற்றே சொல்லவில்லை என்றாள் அவந்திகா.  முறைத்தேன்.  போய் விட்டாள்.  மேல் வீட்டு (முன்னாள்) கலெக்டரின் உதவியாளரை நாடினேன்.  அவசரத்துக்கு அவர்தான் போய் வருவார். இன்று அவருக்கும் வேலை.  அதனால் பாக்யராஜுக்கு ஃபோன் செய்தேன்.  வந்தார்.  மீனும் வாங்கி வந்தார்.  நான் கூட போகலாம்.  நடை நல்லதுதான்.  ஆனால் கனத்தைத் தூக்கிக் கொண்டு திரும்புவது கஷ்டம்.  வண்டி ஓட்டத் தெரியாது.  ஆட்டோவும் இல்லை.  நம்மூர் போலீஸ் நன்றாகத்தான் கடமையாற்றுகிறார்கள் போல.  பாக்யராஜை நிறுத்தி விட்டார்களாம்.  என் நண்பர்கள் எல்லொரும் மகாத்மா.  மீன் வாங்கப் போகிறேன் என்று உண்மை பகர்ந்திருக்கிறார்.  போலீஸ் கடுப்பாகி விட்டாராம். ”ஏன்யா, ஊரே லோல்பட்டுக்கிட்டு இருக்கு; ஒனக்கு மீன் கேக்குதா?”  அப்புறம் பாக்யராஜ் ”எழுத்தாளர் சாரு நிவேதிதா பத்து பூனை வளர்க்கிறார், அதெல்லாம் மீன் இல்லாமல் பட்டினி கிடக்கு; வாங்கப் போறேன்” என்றதும் விட்டு விட்டாராம்.  அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது. 

***

இதுவரை நான் காஃப்கா படித்ததில்லை.  தமிழிலோ அந்தக் காலத்தில் காஃப்கா படிக்கவில்லையானால் நீங்கள் இலக்கியவாதியே இல்லை.  அதனால் ஆரம்பிப்பேன்.  பத்து பக்கத்துக்கு மேல் முடியாது.  விட்டு விடுவேன்.  இப்படியே பலமுறை ஆகியிருக்கிறது.  அந்த அளவுக்கு காஃப்கா எனக்கு அலுப்பூட்டும் எழுத்து.  ஆனால் இப்போது படித்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறேன்.  ஏனென்றால், நானே ஒரு அலுப்பூட்டும் வேலையைச் செய்தாக வேண்டியிருக்கிறது.  அதனால்தான் நம் தலைவர் என்ன பண்ணியிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டி மெட்டமார்ஃபஸிஸ் குறுநாவலை எடுத்திருக்கிறேன்.  ஆனால் இதைப் பல பேர் ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  இதில் Susan Bernofsky-இன் மொழிபெயர்ப்பே சிறந்ததாக இருக்கும் என்று நினைத்து இதை கிண்டிலில் வாங்கியிருக்கிறேன்.  மற்ற மொழிபெயர்ப்புகள் இலவசமாகவே கிடைக்கின்றன.  இதை எதற்குச் சொன்னேன் என்றால், முதலிலிருந்து நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.