பூச்சி 57

அழகராஜா நேற்று கேரளா பற்றி ஒரு கேள்வி கேட்டார்.  அதற்கு நான் கேரளத்தில் ஆணாதிக்கம் அதிகம் என்றேன்.  உடனே அவர் “இலக்கிய வாசிப்பு மிகுந்த அந்த நாட்டில் எப்படி ஆணாதிக்கம்?” என்ற சந்தேகத்தை எழுப்பினார். 

அதற்கு நான் சொன்ன பதில்: தமிழ்நாடு அளவுக்குக் கேரளத்தில் சீரழிவு மோசம் இல்லை.  அவ்வளவுதான்.  இலக்கியம் ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. இலக்கியம் நெருப்பைப் போல.  காட்டையும் அழிக்கும்.  காட்டில் பயணம் செய்ய வெளிச்சமாகவும் விளங்கும்.  நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது.  ஆனால் ஒட்டு மொத்த சமூகமும் இலக்கிய வாசிப்பை நோக்கி நகர்ந்தால் அந்த சமூகம் மிக நிச்சயமாக இலக்கிய வாசிப்பு இல்லாத சமூகத்தை விட மேம்பட்ட நிலையில்தான் இருக்கும்.  மேற்கு ஐரோப்பிய சமூகத்தையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டால் நீங்கள் இதைப் புரிந்து கொள்ளலாம்.  மேற்கு ஐரோப்பாவின் அரசியல் தமிழ்நாட்டைப் போலவா இருக்கிறது?  

*** 

என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் எம்.எம். அப்துல்லா அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தப் பதிவை முதலில் படியுங்கள்:

என் அன்பிற்குரிய‌ முஸ்லிம் ச‌முதாய‌த்துக்கு ஒரு ம‌ன‌ம் திற‌ந்த‌ மடல்.

நீண்ட‌ நாட்க‌ளாக‌ நான் சொல்ல‌ நினைத்தை, சொல்ல‌ வேண்டுமா என்று ப‌ல‌முறை யோசித்த‌தை, இன்று உங்க‌ளோடு ப‌கிர்கிறேன்‌, கால‌த்தின் தேவை க‌ருதி. நீண்ட‌ ப‌திவுதான், சில‌ நிமிட‌ங்க‌ள் எனக்காக‌ ஒதுக்க‌ நேர‌மிருந்தால், அவ‌சிய‌ம் ப‌டியுங்க‌ள்.

ஓரிறை, ஓர் ம‌றை, ஒரு ந‌பி என்ற‌ க‌ட்டுப்பாடான‌ “தீன்” வ‌ழியில் நட‌க்கும் ஒரு மார்க்க‌ம் இந்த‌ ச‌முதாய‌த்தில் எத்துணை உய‌ர‌த்தில் கொலுவீற்றிருக்க‌ வேண்டும்..? உண்மையில் அப்ப‌டி இருக்கிற‌தா உங்க‌ள் நிலை..?

இன்றைய‌ இந்த‌ இழிநிலை உங்க‌ள் ச‌முதாய‌த்துக்கு ஏன், எப்ப‌டி நேர்ந்த‌து என்று கொஞ்ச‌மேனும் நீங்க‌ள் சிந்திக்க‌ வேண்டாமா..?

அன்பிலும், அறிவிலும், க‌ருணையிலும், ச‌மூக‌ அந்த‌ஸ்திலும் உச்சத்தில் இருந்த‌ உங்க‌ள் ச‌முதாய‌ம் “வாங்க‌ பாய்” என்று மரியாதையோடு அழைக்கப்பட்டு , கெள‌ர‌வ‌மாக‌ மாற்று மதத்தாராலும் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட உங்க‌ள் ச‌முதாய‌ம்…
இன்று சர்வ‌ சாத‌ர‌ண‌மாய் “துலுக்க‌ப் ப‌ய‌லுக‌ள்” என்று சில‌ அரசியல் மேடைக‌ளிலேயே பேச‌ப்ப‌டும் நிலைமை வ‌ர‌ கார‌ண‌ம் என்ன‌..?

நான் சொல்வ‌தை கொஞ்ச‌ம் கோபப்ப‌டாம‌ல் சிந்தித்துப்பாருங்க‌ள். த‌மிழ் முஸ்லிம் என்ற‌ ஒற்றை அடையாள‌த்தோடு உலா வ‌ந்த‌ காலம் வ‌ரை உங்க‌ள் வாழ்விய‌ல் அழ‌கான‌தாக‌வே இருந்த‌து. ஆனால் இன்றோ, எத்த‌னை கூறுக‌ளாக‌ பிரிந்து சித‌றுண்டு கிடக்கிறீர்க‌ள் நீங்க‌ள்..?
மாம‌ன் ம‌ச்சான் என்று கால‌ம் கால‌மாய் உங்க‌ளோடு உற‌வு பாராட்டி வாழ்ந்திருந்த இந்து ச‌முதாய‌ம், இன்று கொஞ்ச‌ம் அச்சத்தோடும், கொஞ்ச‌ம் வெறுப்போடும் உங்க‌ளைப் பார்க்கும் நிலைமை வ‌ர‌ கார‌ண‌ம் என்ன‌..?

உட‌னே, ஆர்எஸ்எஸ் தான் கார‌ண‌ம் என்று ஒற்றை குர‌லில் உர‌க்க‌ கூறுவீர்க‌ள், அவ‌ர்க‌ளும் ஒரு கார‌ண‌ம் என்ப‌தை நான் மறுக்கவில்லை. ஆனால் அவ‌ர்க‌ள் ம‌ட்டும்தான் கார‌ண‌மா..? ஒரு கை ம‌ட்டும் வீசினால் ஓசை வ‌ருமா, கொஞ்ச‌ம் யோசித்து பாருங்கள்..?

ஒரு நாத்திக‌ இட‌துசாரி க‌ம்யூனிஸ்ட் த‌ந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிற‌ந்த‌வ‌ன்தான் நான். ந‌ம்பிக்கையின் இரு பக்கங்களையும் நேர‌டியாகப்‌ பார்த்து அனுப‌வித்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன். என‌வே இதை வெளியில் இருந்து க‌ற்ப‌னை செய்து க‌ருத்து சொல்ல‌வில்லை. என் வாழ்வில் நான் க‌ண்டு வ‌ள‌ர்ந்த‌ மாற்றங்களை, என் உள்ளக் குமுற‌ல்க‌ளைத்தான் உங்க‌ள் முன் வைக்கிறேன்.

நூற்றாண்டுக‌ள் க‌ட‌ந்தும் இண‌க்க‌த்தோடும், இன்முக‌த்தோடும் ந‌ம் இந்து ச‌கோத‌ர‌ர்க‌ளோடு நீங்க‌ள் குடும்ப‌மாய் வாழ்ந்து வ‌ர‌ முக்கிய‌ கார‌ண‌ம் என்ன‌ தெரியுமா..? உண்மையிலேயே அவ‌ர்க‌ள் உங்க‌ள் ப‌ல்லாண்டு கால‌ குடும்ப‌ம் ம‌ற்றும் உற‌வு என்ப‌தால்தான்.

ஆம், நீங்க‌ள் என்ன‌ அரேபியாவில் இருந்தா இற‌க்கும‌தி ஆனீர்கள்..? ந‌ம் பாட்ட‌ன் கொள்ளுப்பாட்ட‌ன்க‌ள் முதற்கொண்டு ஆண்டாண்டு கால‌மாய், த‌லைமுறை த‌லைமுறையாய், இந்த‌ மண்ணில் வாழ்ந்து ம‌டிந்த‌வ‌ர்க‌ள்தானே ந‌ம் முன்னோர்கள். இந்துக்களாக இருந்தவர்கள்தானே அவர்கள்?

அத‌னால்தான் அந்த‌ இர‌த்த‌ உற‌வுக‌ளும் குடும்பப்‌ பாரம்பரியங்களும் நிலைத்த‌ன‌, இன்னும் நிலைக்கின்ற‌ன‌. உங்க‌ள் முன்னோர்க‌ள்கூட‌ ம‌த‌ ந‌ம்பிக்கையில் மாறுப‌ட்டிருந்தாலும், வணக்க‌ வ‌ழிபாட்டு முறைக‌ளில் வேறுப‌ட்டிருந்தாலும், கலாச்சாரத்திலும் ப‌ண்பாட்டிலும் த‌மிழ் ம‌ண்ணோடு நீக்க‌ம‌ற‌ நிறைந்து வேரூன்றியிருந்த‌ன‌ர்.

ஒவ்வொரு ஊரிலும் அட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டிருக்கும் சூபி ஞானிகளின் பாட‌ல்க‌ளையும் அவ‌ர்க‌ளின் வாழ்க்கையையும் படித்தால் உங்க‌ளுக்கே அது புரியும்.

இருப‌து, முப்ப‌து ஆண்டுக‌ளில் நிறைய‌ மாற்ற‌ங்க‌ள் உங்க‌ள் சமுதாய‌த்தில். அரேபியா என்ற‌ ம‌ந்திக்‌ க‌த‌வு திற‌ந்த‌தும் எண்ணை வ‌ள‌த்தில் புதுப்பொலிவு க‌ண்ட‌ அரேபியா நோக்கி படையெடுத்தீர்க‌ள்.

இள‌ம் சிறார்க‌ள்கூட‌ விடுமுறையில் வ‌ரும் அப்பா மாமா-க்க‌ளின் அத்த‌ர் ம‌ண‌த்தில் ம‌ய‌ங்கிப்போக‌, ஏற்க‌ன‌வே ப‌டிப்ப‌றிவில் பின்தங்கியிருந்த‌ முஸ்லிம் ச‌முதாய‌ம் மேலும் ச‌ரிந்துபோன‌து. பத்தாம் வ‌குப்பு பாஸாகும் முன்பே விசாக்க‌ள் ரெடியாகிவிட‌, அரேபிய‌ க‌ன‌வான‌து அர‌சு வேலை முத‌ற்கொண்டு அனைத்து துறைக‌ளிலும் முஸ்லிம் ச‌முதாய‌த்தின் அடையாள‌த்தையும் பங்களிப்பையும் அற்றுப்போக‌ வைத்துவிட்ட‌து.

காவ‌ல்துறை முத‌ல் க‌ல‌க்ட‌ர் அலுவ‌க‌ங்க‌ள் வ‌ரை, ப‌ஸ் கண்டக்டர்கள் முத‌ல் ர‌யில்வே ஊழிய‌ர்க‌ள் வ‌ரை, அர‌சுப் ப‌ணியில் இருக்கும் எத்த‌னை முஸ்லிம்க‌ளை உங்க‌ளுக்கு தெரியும்..?

இதில் வேத‌னை என்ன‌வென்றால், சென்ற‌ மூன்று தசாம்சங்களாகத்தான் த‌மிழ‌க‌த்தில் அர‌சு உத‌வியோடு ப‌ல‌ பின்தங்கிய‌ ச‌மூக‌ங்க‌ள் அதிக‌ம் முன்னேற்ற‌ங்க‌ள் க‌ண்ட‌ன‌, அர‌ப் பணிக‌ளிலும், க‌ல்வி எழுச்சியிலும், ச‌மூக‌ மேம்பாட்டுலும்.

இதை முற்றாகத்‌ தொலைத்துவிட்ட‌ முஸ்லிம் ச‌முதாய‌ம், அத‌ற்கு மாற்றாகக் க‌ண்ட‌டைந்த‌து என்ன‌?
அரேபியாவின் ப‌ண‌ம் ம‌ட்டும‌ல்ல‌, அர‌பு க‌லாச்சார‌மும், அங்கு வழக்கில் இருக்கும் வ‌காபிய‌ சித்தாந்த‌மும் தான். அவை ந‌ம்முள் மெல்ல‌ திணிக்க‌ப்ப‌ட்ட‌து. அதுவ‌ரை ந‌ம் ம‌ண் சார்ந்து வாழ்விய‌ல் கண்ட‌ த‌மிழ் முஸ்லிம்க‌ளிடையே க‌றுப்பு ப‌ர்தாக்க‌ள் மிக‌ப் பரவலாக‌ வ‌ல‌ம்வ‌ர‌ துவ‌ங்கிற்று.

அரேபியாவில் ப‌ணிபுரிந்த‌ ஆண்க‌ள், அங்குள்ள‌ பெண்க‌ள் அணியும் ஆடைக‌ளுக்குள் இங்குள்ள‌ த‌ம் வீட்டு பெண்க‌ளைப் புகுத்திய‌ போதிலும், தாமும் அரேபிய‌ ஆண்க‌ளின் ஆடைக‌ளை அணிய‌வேண்டும் என்று எண்ணாம‌ல் போன‌து ந‌கைமுர‌ணா..?

மாற்ற‌ம் ஆடையில் ம‌ட்டும் வெளிப்ப‌ட்டு விட‌வில்லை, சிந்தனையிலும் செய‌ல்பாட்டிலும் கூட‌த்தான். அதுவ‌ரை “ல‌கும் தீனுக்கும் வ‌லிய‌தீன்” என்ற‌ குரான் வ‌ச‌ன‌த்தின்ப‌டி “உங்க‌ள் வ‌ழி உங்க‌ளுக்கு, எங்க‌ள் வ‌ழி எங்க‌ளுக்கு” என்று அமைதியாக‌ வாழ்ந்திருந்த‌ முஸ்லிம்க‌ள், த‌ம் வ‌ழியில் இருந்து ச‌ற்றே பிறழத்துவங்கின‌ர்.

ஆர‌ம்ப‌த்தில் உங்க‌ள் ம‌த‌த்துக்கு உள்ளேயே இருந்த‌ பார‌ம்ப‌ரிய‌ (வகாபி அல்லாத‌) முஸ்லிம்க‌ளை முஷ்ரிக்குக‌ள் (இறைவ‌னுக்கு இணை க‌ற்பிப்ப‌வ‌ர்க‌ள்) என்று ப‌ட்ட‌ம் சூட்டுவ‌தில்தானே அனைத்தும் துவ‌ங்கிய‌து..?

சூபி ஞானிக‌ள் கூட‌ அச்சில் ஏற்ற‌ முடியாத‌ வார்த்தைக‌ளால் படுகேவ‌ல‌மாக‌ விம‌ர்சிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். அது சார்ந்த‌ துண்டுப் பிரசுரங்க‌ள் ச‌க‌ட்டு மேனிக்கு ஊரெங்கும் வினியோகிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

இந்த‌ பிர‌ச்சார‌ம், அடிப்ப‌டையில் ஒட்டு மொத்த‌ த‌மிழ்நாட்டு முஸ்லிம்க‌ளையும் இருகூறுக‌ளாக‌ அல்ல‌வா பிரித்த‌து? இர‌ண்டு மைய‌வாடி, இர‌ண்டு ஜ‌மாத், இர‌ண்டு ப‌ள்ளிவாச‌ல் என்று உங்களுக்குள்ளேயே பிரிவுக‌ள் தோன்ற‌… ஒன்றாக‌ இருந்த‌ ப‌ல‌ ஊர்க‌ளும் இரண்டுப‌ட்ட‌ன‌.

கூத்தாடிக்குக் கொண்டாட்ட‌மாக‌ முடிந்த‌ இந்த‌ இரண்டு ப‌டுத‌லுக்கு அச்சார‌ம் போட்ட‌தும் இதே முஸ்லிம் ச‌முதாய‌ம்தான். ம‌க்க‌ளைக் கவ‌ரும் ப‌ல‌ பேச்சாள‌ர்க‌ள் இந்தக்‌ குழுக்க‌ளில் உருவாக‌, எதிர்ப்பின் எல்லை இஸ்லாத்துக்கு வெளியேயும் நீண்ட‌து.

பிற‌ ம‌த‌ க‌ட‌வுள‌ரும், க‌ட‌வுள் கொள்கையும் ச‌க‌ட்டு மேனிக்கு விமர்சிக்க‌ப்ப‌ட்ட‌து. க‌ட‌வுள் கொள்கை ஆய்வு, ஒப்பீடு என்ற‌ பெயரில் இந்து ம‌ற்றும் பிற‌ ம‌த‌ க‌ட‌வுள‌ர் மிக‌வும் த‌ர‌க்குறைவாய் விம‌ர்சிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

விவாத்துக்கு அழைக்கிறோம் என்ற‌ போர்வையில் “தில் இருந்தால் வாருங்க‌ள்” என்ற வ‌கையில் ஊருக்கு ஊர் அறைகூவ‌ல் விடப்பட்டது. “நீங்க‌ள் பிற‌ர் வ‌ண‌ங்கும் க‌ட‌வுள‌ரை விம‌ர்சிக்காதீர்க‌ள்” என்று குரான் மிக‌த்தெளிவாக‌ சொல்லியிருக்க‌, அதையே தொழிலாக‌க்கொண்டு க‌ள‌மிற‌ங்கிய‌து உங்களில் ஒரு கூட்ட‌ம்.

இத‌ன் விளைவாய் பிற‌ ம‌த‌த்தின‌ர் ம‌த்தியில் ஒரு வெறுப்பு க‌ல‌ந்த‌ அன்னிய‌த்தை நீங்க‌ளே விதைத்தீர்க‌ள். குருட்டுத்த‌ன‌மான‌ வ‌ற‌ட்டு விவாத‌த்தால் வெறுப்ப‌ன்றி அன்பா விளையும்..?

இப்ப‌டி நீங்க‌ள் அமைத்துக்கொடுத்த‌ இந்தத்‌ த‌ள‌த்தை அடிப்படையாகக்‌ கொண்டுதான் ஆர்எஸ்எஸ் ம‌ற்றும் பிற‌ இந்துத்துவா அமைப்புக‌ள் நேர்த்தியாய்த் திட்ட‌மிட்டு க‌ள‌ம் இறங்கின‌. “பார்த்தீர்க‌ளா… பொது இட‌த்தில்கூட‌ மேடை போட்டு இந்த‌ துலுக்க‌ர்க‌ள் நாம் கால‌ம் கால‌மாய் வ‌ண‌ங்கும் க‌ட‌வுள‌ரை எப்ப‌டி அசிங்க‌ப்ப‌டுத்துகிறார்க‌ள்” என்று ப‌ர‌ப்புரை செய்த‌ன‌ர்.

இந்துக் க‌ட‌வுள‌ரை ஒப்பீட்டாய்வு செய்கிறோம் என்ற‌ பெய‌ரில் நீங்க‌ள் வெளியிட்ட‌ கொச்சைப்ப‌டுத்தும் காணொளிக‌ளை, புத்தகங்க‌ளை, பிர‌சுர‌ங்க‌ளைக் காட்டி, த‌ம் இருப்பை ப‌ல‌மாக‌ ஸ்தாபித்துக்கொண்ட‌ன‌ர்.

முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌மே ந‌ட‌க்க‌வில்லை என்று நான் சொல்ல‌வில்லை. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பாலான‌ இந்துக்க‌ளே உங்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ கொதித்தெழுந்தார்க‌ள். இன்னும் சொல்ல‌ப்போனால் மித‌வாத‌ இந்துக்க‌ளுக்கு அஞ்சியே இந்துத்துவா அமைப்புக‌ள் அட‌க்கி வாசித்த‌ன‌.

இன்றோ, மித‌வாதிக‌ளில் ப‌ல‌ரும்கூட‌ க‌ண்டும் காணாம‌ல் ஒதுங்கி போகும் நிலைதானே நில‌வுகிற‌து? என‌க்கு மிக‌வும் நெருக்க‌மான‌ சில‌ இந்து, கிருஸ்த‌வ‌ ந‌ண்ப‌ர்க‌ளே இது போன்ற‌ பேச்சுக்க‌ள் மற்றும் காணொளிக‌ளை என்னிட‌ம் ப‌ல‌முறை காண்பித்து வருத்தப்ப‌ட்டிருக்கிறார்க‌ள்.

சில‌ த‌னி ந‌ப‌ர்க‌ள், த‌ம்மை பேச்சாள‌ர்க‌ளாக‌வும் த‌லைவ‌ர்க‌ளாக‌வும் உய‌ர்த்திக்கொள்ள‌, ஒட்டுமொத்த‌ முஸ்லிம் ச‌முதாய‌த்தையே ஒரு மிக‌ப்பெரும் இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டார்க‌ள்.

திக‌ போன்ற‌ நாத்திக‌ அமைப்புக‌ள் ம‌தக்‌ கொள்கைக‌ளை விமர்சிப்பது வேறு, ஒரு ம‌த‌ம் சார்ந்த‌ அமைப்பு பிற‌ர் ம‌த‌ க‌ட‌வுள் கொள்கைக‌ளை விம‌ர்சிப்ப‌து என்ப‌து வேறு.

ஒரு ம‌த‌த்தைப் பின்ப‌ற்றிக்கொண்டே, க‌ட‌வுள் ந‌ம்பிக்கையைச் சுமந்துகொண்டே, பிற‌ ம‌த‌ங்க‌ளை, பிற‌ர் க‌ட‌வுள‌ரை விம‌ர்சிப்ப‌து அறிவுடைமை ஆகுமா..? “உங்க‌ள் க‌ட‌வுள் ந‌ம்பிக்கை உங்க‌ளுக்கு, அவ‌ர்க‌ள் ந‌ம்பிக்கை அவ‌ர்க‌ளுக்கு” என்ற‌ இஸ்லாத்தின் அடிப்படைப் புரித‌ல்கூட‌ இல்லாம‌ல் போன‌தால் ஏற்ப‌ட்ட‌ விளைவுதான் இது.

யானை ப‌ல‌ம்கொண்ட‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளாலேயே மரியாதையோடும் க‌ண்ணிய‌த்தோடும் ந‌ட‌த்தப்ப‌ட்ட‌ முஸ்லிம் சமுதாய‌ம், இன்று சாதார‌ண‌ லெட்ட‌ர்பேட் க‌ட்சிக‌ளால்கூட‌ நக்கலடிக்க‌ப்ப‌ட்டு உதாசீன‌ம் செய்ய‌ப்ப‌டும் நிலையில் இருக்கிற‌து.

இது ஒன்றும் எதேச்சை நிக‌ழ்வ‌ல்ல‌, நீங்க‌ளே உங்க‌ள் க‌ர‌ங்க‌ளால் எழுதிக்கொண்ட‌ விதி..!
தம்முடைய‌ ஒற்றுமையின்மையாலும், தொலைநோக்குப் பார்வை இல்லாததாலும், சு‌ய‌ந‌ல‌ம் வேரூன்றிப்போன‌ த‌லைவ‌ர்க‌ளாலும், முஸ்லிம்க‌ள் த‌ம‌க்குதாமே ஏற்ப‌டுத்திக்கொண்ட‌ இழிநிலை..

இவ்வ‌ள‌வு ந‌ட‌ந்த‌ பிற‌கும்கூட‌ சுய‌ப‌ரிசோத‌னை செய்து த‌ன்னைத் திருத்திக்கொள்ள‌ இந்த‌ ச‌முதாய‌ம் த‌வ‌றினால்… குஜ‌ராத் மாட‌ல் தேச‌மெங்கும் ந‌டைபெறுவ‌தை யாராலும் நிறுத்த‌முடியாது. “அதெல்லாம் அல்லா பார்த்துக்கொள்வான்” என்று உங்க‌ளில் ப‌ல‌ர் ந‌ம்புவ‌து போன்றுதான் அன்று அந்த‌ குஜ‌ராத் முஸ்லிம்க‌ளும் ந‌ம்பி இருந்த‌ன‌ர் என்ப‌தை ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள். நான் உங்க‌ள் நம்பிக்கையைக் குறை சொல்ல‌வில்லை, அது இந்தக்‌ க‌ட்டுரையின் நோக்க‌மும் அல்ல‌. உங்க‌ள் செய‌ல்பாடுக‌ளைத்தான் விமர்சிக்கிறேன்.

ஒருவேளை அப்ப‌டியான‌தொரு ப‌ய‌ங்ர‌வாத‌ சூழ‌ல் ஏற்ப‌ட‌ நேர்ந்தால், அப்போதும் உங்க‌ளுக்கு ஆத‌ரவுக்க‌ர‌ம் நீட்ட‌ வ‌ருவ‌து, நீங்க‌ள் வெறுக்கும் நாத்திக‌ர்க‌ளும், நீங்க‌ள் ஒதுக்கும் இடதுசாரிகளும், வ‌காபிக‌ள் ந‌க்க‌ல‌டிக்கும் மித‌வாத‌ இந்து சொந்தங்க‌ளுமாக‌த்தான் இருப்ப‌ர்.

இஸ்லாம் உங்க‌ள் ந‌ம்பிக்கையாக‌ இருக்க‌லாம்; ஆனால் த‌மிழ் உங்க‌ள் ப‌ண்பாட்டு, க‌லாச்சார‌ அடையாள‌ம் என்ப‌தை மறக்காதீர்க‌ள்.

அர‌புக் க‌லாச்சார‌ம் வேறு, இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கை வேறு என்ப‌தை புரிந்துகொள்ளுங்க‌ள்..!

தோழ‌மையுட‌ன்,

Dr. Fazil Freeman Ali, PhD.

மேற்கண்ட பதிவை 23 ஏப்ரல் அன்று அப்துல்லா பகிர்ந்துள்ளார்.  இதில் உள்ள அத்தனை வார்த்தைகளையும் நான் பல முறை எழுதியிருக்கிறேன்.  உதாரணமாக, நாகூர் தர்ஹாவைத் தெரியாத தமிழர்கள் இல்லை.  நான் நாகூரில் வாழ்ந்த காலத்தில் – 1980 வரை – அங்கே நான் ஒரு கருப்புத் துப்பட்டியைக் கூட பார்த்ததில்லை.  துப்பட்டி என்றாலே வெள்ளைதான்.  ஆனால் இன்று வெள்ளைத் துப்பட்டியையே பார்க்க முடியவில்லை.  எங்கும் கருப்புதான்.  அரபு செல்வாக்கு.  முன்பு அரபி எழுத்தை அதிகம் பார்த்ததில்லை.  இன்று தமிழையே பார்க்க முடியவில்லை.  எல்லா இடத்திலும் அரபி.  முன்பு நாகூரில் இந்துவும் முஸ்லீமும் அண்ணன் தம்பி.  இப்போது அண்ணன் தம்பி மாதிரி நடிக்கிறார்கள்.  உள்ளுக்கும் அச்சம் பயம் வெறுப்பு.  தனியாக இருக்கும் நேரத்தில் சலிப்புடனும் வேதனையுடனும் முன்ன மாதிரி இல்லை என்கிறார்கள். 

இங்கே சென்னையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  ஆனால் பலரும் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்றும் என்னுடைய பகுதியில் வேண்டுமானால் அப்படி நடந்திருக்கலாம் என்றும் எழுதினர்.  இல்லை.  எல்லா இடத்திலும் அப்படித்தான் நடக்கிறது.  நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மைலாப்பூரில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஒரு தெருவில் வசித்து வந்தேன்.  பணக்கார முஸ்லீம்கள். ஒருத்தருக்கு ரெண்டு மூணு கல்லூரி இருந்தது.  ஒருத்தர் துபயில் ஒரு மால் வைத்திருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் ஏ.ஆர். ரஹ்மானுக்குச் சொந்தக்காரர்.  ரஹ்மானை அவர் வீட்டு பால்கனியில் சில வேளை பார்த்திருக்கிறேன்.  பணக்காரர்களுக்குப் பொதுவாக மத வேறுபாடு கிடையாது என்பது உங்களுக்கே தெரியும்.  தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகிக் கொண்டிருந்தோம்.  ஒவ்வொரு ரம்ஸானுக்கும் பக்ரீதுக்கும் பிரியாணி வரும்.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரியாணிக்கு பதிலாக கிராண்ட் ஸ்வீட் கடையில் வாங்கிய ஸ்வீட் பாக்கெட் வந்தது.  நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டது போல் உணர்ந்தேன்.  பாயை போனில் கூப்பிட்டு என்ன விஷயம் என்றேன்.  இதோ வர்றேன் என்று சொல்லி நேரிலேயே வந்து விட்டார்.  மசூதியில் மதப் பெரியவர்கள் இந்துக்களின் வீடுகளுக்கு நம்முடைய பண்டங்களைக் கொடுத்தனுப்பாதீர்கள் என்று கண்டிப்பாகச் சொன்னார்கள் சார்.  அவர்களைப் பகைத்துக் கொண்டால் அப்புறம் வீட்டு விசேஷம் எதுவும் செய்ய முடியாது இல்லையா?  அவங்க வந்து ஃபாத்திஹா ஓதாம எதுவுமே நகராதே?  பரவால்ல சார்.  நீங்க மட்டும் எக்ஸெப்ஷன்.  இதோ பிரியாணி குடுத்தனுப்பறேன் என்று சொல்லிச் சென்றவர் ஒரு பக்கெட் நிறைய கொடுத்து அனுப்பினார்.  கொஞ்சம் எடுத்துக் கொண்டு தெருவில் உள்ள எல்லா வாட்ச்மேன்களுக்கும் கொடுத்தேன்.  இதுதான் எதார்த்தம்.

இன்னொரு சம்பவம்.  இதைச் சொன்ன நபர் ஒரு பிராமணப் பெண்.  அந்தப் பெண் சிறுமியாக இருக்கும் போது எதிர்வீட்டில் ஒரு முஸ்லீம் குடும்பம்.  இந்தப் பெண் அங்கே உள்ள சிறுமிகளோடு விளையாட அடிக்கடி போவாள்.  அந்த வீட்டுச் சிறுமிகளும் இவள் வீட்டுக்கு வருவார்கள்.  எல்லா சிறுமிகளும் சேர்ந்து கொண்டு மாடிக்கு ஏறும் படிக்கட்டின் கைப்பிடியில் மேலே இருந்து கீழே சறுக்கு மரம் மாதிரி இறங்குவது ஒரு விளையாட்டு.  சிறுமியின் பாட்டி திட்டுவாள்.  பொம்பளப் பசங்க இப்படியெல்லாம் விளையாடலாமா?  தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக வரும் எதிர்வீட்டு பாயிடமும் சொல்வாள் பாட்டி.  சின்ன பசங்கதானே ம்மா என்று சொல்லி சிரித்துக் கொண்டே போய் விடுவார் பாய்.  ஒருநாள் இந்த இந்துச் சிறுமி முஸ்லீம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது – பசங்களுக்குள் ஓடிப் பிடித்து விளையாட்டு – இந்தச் சிறுமி சட்டென்று அடுக்களைக்குள் சென்று விட அங்கே அந்த வீட்டு பாயம்மா கோழியை எடுத்து அரிவாள் மனையில் வைத்து நறுக்கும் காட்சி.  சிறுமி அலறி அடித்துக் கொண்டு வெளியே வர – பாய் தன் மனைவியிடம், ”ஏம்மா, பிராமின் வீட்டுக் கொழந்தைங்க விளையாட்றது கூட தெரிலியா ஒனக்கு?  கதவை சாத்திட்டு பண்ணக் கூடாதா?” என்று திட்டியிருக்கிறார்.  ஆனால் அதற்குப் பிறகும் அந்தச் சிறுமி பாய் வீட்டுக்குப் போய் விளையாடத்தான் விளையாடியிருக்கிறாள்.  அந்தப் பெண் என்னிடம் இப்போது கேட்டார், ஏன் சாரு, இப்போது இந்தக் காலத்தில் ஒரு இந்து பிராமண வீட்டுக்கும் முஸ்லீம் வீட்டுக்கும்  இப்படி ஒரு உறவு இருந்ததா?  என் குழந்தையால் அங்கே போய் அப்படி விளையாட முடியுமா?  அந்த வீட்டு பாய் சர்வ சுதந்திரமாக என் வீட்டுக்குள் நுழைந்து தன் குழந்தையை அழைத்துக் கொண்டு போக முடியுமா? 

இப்படியெல்லாம் கேட்டு விட்டு அந்தப் பெண் இன்னொரு சம்பவம் சொன்னார்.  அதுதான் எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  இந்தப் பெண் ஃப்ரெஞ்ச் மாணவி.  பொதுவாக பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர்.  நான் அரபி மொழி பற்றிப் பேசிப் பேசியோ அல்லது அவருக்கே உள்ள ஆர்வத்தினாலோ அரபி மொழி கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டிருந்தார்.  அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் ஒரு சக மாணவர் முஸ்லீம்.  நல்ல நண்பரும் கூட.  மேட்டுக்குடி.  இங்கே மேட்டுக்குடி என்பது முக்கியம்.  அந்த இளைஞனுக்கு சமீபத்தில் திருமணம்.  இந்தப் பெண்ணை அழைக்கவில்லை.  வகுப்புத் தோழியாக இருந்தும்.  சரி, அது முக்கியம் இல்லை இங்கே.  ஒருநாள் அந்தப் பையன் ஏதோ மெஸேஜ் செய்த போது “சிராஜ் (பெயர் மாற்றியிருக்கிறேன்), எனக்கு அரபி கற்றுக் கொள்ள வேண்டும்.  உனக்கு யாரையாவது நல்ல ஆள் தெரியுமா?” என்று கேட்கிறார் இந்தப் பெண்.  சிராஜ் உடனே என் அப்பாவைக் கேட்டுச் சொல்கிறேன் என்று போனவன், ஒரு நிமிடம் கழித்து வந்து “என்ன காரணம்?” என்று கேட்கிறான்.  மேட்டுக்குடி.  அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் ஃப்ரெஞ்ச் படித்தவன்.  தன் வகுப்புத் தோழி அரபி படிக்க வேண்டும் என்றால், அவள் இந்து பிராமணப் பெண் என்பதால் “என்ன காரணம்?” என்று கேட்கிறான்.  இவர் உடனே அதிர்ச்சியாகி “என்ன சிராஜ் கேட்கிறாய்?  ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள காரணம் எதுவும் வேண்டுமா?” என்று பதில் மெஸேஜ் அனுப்ப அந்தப் பையனிடமிருந்து அப்புறம் எந்த மெஸேஜும் வரவில்லையாம்.  இந்து முஸ்லீம் ஒற்றுமை எப்படி இருக்கிறது பாருங்கள்.

எனக்கு 66 வயது ஆகி விட்டது.  இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடக்கும் மதச் சண்டைகளையும் பிணக்குவியல்களையும் பார்க்க நான் இருக்க மாட்டேன் என்பது எனக்கு ஆறுதலாக இருக்கிறது.  இஸ்லாமியர்கள் தங்களை சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திக் கொண்டே போகிறார்கள்.  ஏற்கனவே அவர்கள் அரசு வேலையில் இல்லை.  போலீஸில் இல்லை.  அவர்களிடம் பத்திரிகை இல்லை.  தொலைக்காட்சி இல்லை.  எந்த வித ஊடக பலமும் இல்லை.  அதிகாரம் என்பதிலிருந்து அவர்கள் வெகு தூரத்தில் இருக்கிறார்கள்.  காரணம், அவர்கள்தான்.  உதாரணமாக, கேரளத்தில் வரும் மாத்யமம் ஒரு இஸ்லாமிய கலாச்சார அமைப்பினால் நடத்தப்படுகிறது.  அதில்தான் நான் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து எழுதினேன்.  அது ஒரு இஸ்லாமிய அமைப்பினால் நடத்தப்படும் பத்திரிகை என்பதே அதைப் படிக்கும்போது தெரியாது.  ஆனால் அதே அகில இந்திய இஸ்லாமிய அமைப்பின் தமிழ்ப் பிரிவினால் நடத்தப்படும் தமிழ்ப் பத்திரிகை ஸ்ரீவைஷ்ணவர்களால் நடத்தப்படும் ந்ருஸிம்ஹப்ரியா என்ற பத்திரிகையின் இஸ்லாமிய வடிவமாக இருக்கிறது.  அதை எந்த இந்து வாங்குவான்?  இப்படித்தான் அதிகாரம் கையை விட்டுப் போகிறது.  இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.  கருணாநிதியை சோ கலைஞர் என்று அழைப்பார்.  கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்துக் கொண்டிருந்த ஞாநி கூட கலைஞர் என்றே எழுதுவார்.  ஆனால் கருணாநிதியின் வலது கரமான மாறனின் புதல்வர்கள் நடத்தும் சன் டிவியில் கருணாநிதியை கலைஞர் என்று குறிப்பிட மாட்டார்கள்; கருணாநிதி என்றுதான் குறிப்பிடுவார்கள்.  இதுதான் வணிகத்தின் அடிப்படை.  இப்படி நடத்தினால் மட்டுமே இஸ்லாமியரால் இந்த இந்துப் பெரும்பான்மை தேசத்தின் அதிகாரத்தில் ஊடுருவலைச் செயல்படுத்த முடியும்.  அதுவரை அந்நியப்பட்டே இருக்க வேண்டியதுதான். 

நான் இந்தப் பக்கங்களில் கிறித்தவத்தை விமர்சித்தேன்.  ஒரு கிறித்தவர் கூட அது குறித்து எதிர்வினை ஆற்றவில்லை.  ஆனால் இஸ்லாமியர் பற்றி எழுதிய போது நூற்றுக்கணக்கான கடிதங்கள்.  ஏதோ நான் மோடியின் கையாள் போல் நினைத்துக் கொண்டு.  இப்படி தோழமை சக்திகளையும் நீங்கள் பகைத்துக் கொண்டால் வேறு என்னதான் செய்வது?  சுய பரிசோதனையும் செய்ய மாட்டேன்; விமர்சனம் செய்பவனையும் திட்டுவேன் என்றால், நானும் வாயை மூடிக் கொள்ள வேண்டியதுதான்.  வேறு வழியே இல்லை. 

நேற்று வேல்முருகன் கேட்டிருந்தார் இல்லையா, எப்படி நீங்கள் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்கிறீர்கள் என்று.  ஒரே ஒரு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டுதான் வாழ்கிறேன்.  இஸ்லாம் பற்றியோ, இந்து மதத்தில் சில குறிப்பிட்ட ஜாதிகளைப் பற்றியோ எழுதுவதில்லை.  பிராமணனைத் திட்டலாம்.  கண்டு கொள்ள மாட்டார்கள்.  மற்றபடி மேலே சொன்ன இரண்டு விஷயங்களைத் தொட முடியாது.  சுதந்திரம் இல்லை.  முதலில் உயிர் இருந்தால்தானே சமரசம் செய்து கொண்டோ சமரசம் இல்லாமலோ வாழ முடியும்? 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai